Sunday, August 28, 2016

ஆதலால் தோழர்களே 11


'சும்மா மத்த கட்சியோ ஊருக்குள்ள வந்த மாதிரி கம்னீஸ் கட்சியும் வந்ததுன் னு நெனச்சிராத? அதுக்கு பெரிய கதை இருக்கு. கட்சி மாறுத துன்னு முடிவு பண்ணிட்டெ. இருந்தாலும் சொல்லுதன் தெரிஞ்சுக்கெ. தெரிஞ்சுக்கிடணும் லா?' 

-பெரிய வாய்க்கால் அம்மன் கோயிலின் எதிரே உள்ள அரசமரத் திண்டில் உட்கார்நதுகொண்டு சொன்னார், அருணாச்சல மூப்பனார்.  அவரது ஆடுகள் தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. வாயில் கிடந்த வெற்றிலையைத் துப்பிவிட்டு வாய்க்காலில் கொப்பளித்துவிட்டு வந்து உட்காந்தார். பரமசிவம் தோளில் கிடந்த துண்டை எடுத்து திண்டில் உதறினான். சிதறிக்கிடந்த இலைக ளும் செத்தைகளும் பறந்தன. பிறகு சவுகரியமாக உட்கார்ந்து கொண்டான். ஒழக்கு, ஏதோ பெருங்கதைக் கேட்கும் ஆர்வத்துடன் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தான்.

'அழ்வாரிச்சுல பண்ணையாரு ஆயாம் பிள்ளைன்னு ஒருத்தர் இருந் தாரு. அவருக்குத்தான் நம்மூரு பக்கம் இருக்க, செட்டிகுளம், கல்யாணி புரம், சிவசைலம், பாப்பாங்குளம், பறம்புன்னு எல்லா பக்கமும் ஏகப்பட்ட வயக்காடுவோ. நம்மூர்ல, அந்தா பாரு, வடக்க பொத்த இருக்குலா, பொத்தை. அதுக்கு அடுத்தால இருக்க மாத்ராங்குளத்தை ஒங்களுக்கு கொளமாதான் தெரியும். அந்தக் கொளத்து பாசானம் முழுதும் பண்ணையார் ராமசாமி ஐயருக்கு. அந்தப் பக்கத்துல இருந்து இன்னா, இங்க ஒக்காந்திருக்கம்லா, இது வரை அவரு வயலுவோதான். நம்மூர்ல மொத்தம் நாலு பண்ணையாரு. இது, பண்ணை ராமசாமிக்கா, மேக்க கோவங்குளம் இருக்கு பாரு. அந்த பாசனம் பூரா, பண்ணையாரு ராசா ஐயருக்கு. அதுக்கு மேக்க பூங்குறிச்சு போற வழியில சிங்கப்பூராங்குளம்னு இருக்கு. இங்க வடக்கு கிராமத்துல சிங்கப்பூ ரய்யன்னு ஒரு பண்ணையாரு இருந்தாரு. அவரு வெவசாயம் எல்லாம் அந்தப் பக்கம். மேல பத்து வய பூரா பண்ணையாரு கொண்டை ஐயருக்கு. நம்ம ஊரு சுத்துபட்டு பூரா அவங்க ராஜ்ஜியம்தான். எங்க தாத்தா, உங்க தாத்தா எல்லாருமே அவங்ககிட்ட வேலை பாத்தவங்கதான். அவங்க கொடுக்கதுதான் கூலி. ஏன்னு ஒரு வார்த்தை கேக்க முடியாது.

பண்ணையாருவோ வீட்டு வாச முன்னால போயி நிய்க்க முடியாது. எல்லாரும் வில்லு வண்டியிலதான் போவாவோ. போற வழியில இடுப்புல துண்டைக் கட்டிட்டு எஜமான்னு கையெடுத்து கும்பிடணும். அவ்வோளு க்குன்னு ஏதும் தோணுச்சுன்னா, 'என்ன வேணும்?'னு கேப் பாவோ. இல்லன் னா, ஒரு பார்வையோட சரி, போயிருவாவோ. பிள்ளைலுக்கு ஒடம்பு சரியில்ல, பேர்காலம், கல்யாணம் காட்சின்னா, ஏதும் கொடுப்பாவோ, பிச் சைக்காரனுக்கு போடுத மாதிரி. வாங்கிட்டு வந்துதான் பண்ணணும். எதுத்து எவம் கேள்வி கேட்டலும் ஒவ்வொரு பண்ணையாரும் அடியாளு வச்சிரு ப்பாவோ. ஆழ்வாரிச்சு ஆயாம் பிள்ளைக்கு பாப்பாங்குளத்துக்கு ஆளுவோ. நம்ம ராமசாமி பண் ணையாருக்கு யாருன்னா, பாலையாதேவன் குடும்பம். சிங்கப் பூரய்யனுக்கு காசித்தேவன்... இப்படி ஒவ்வொரு பண்ணை யாருக்கும் ஒவ்வொரு ஆளு. இப்படி போயிட்டிருக்கும்போது, உழுதவனுக்கு நிலம் சொந்தங்கற விவகாரம் பூதாகரமா வெடிச்சுச்சு. அதுக்கு ஆதரவா போராட் டத்துல இறங்குன ஆளுவோளுக்கெல்லாம் வெட்டு குத்துதான். 

கெங்கமுத்துன்னு ஒருத்தன், குத்துப்பட்டு செத்தே போயிட்டாம். பெறவுதான் எல்லாரும் பொங்கி, பண்ணையார்வோளுக்கு எதிரா கொடி புடிச்சாவோ. நம் மூரு சொள்ளமுத்து நம்பியாரு, காக்கநல்லூரு மலை யரசு, வீகேபுரம் ஆர்.வி.ஆனந்தகிருஷ்ணன், பிரம்ம தேசம் நல்லசிவம்னு எல்லாரும் முன்ன நின்னு போராடுனாவோ. அப்டி கொடி புடிச்சவோ எல்லாரும் நம்மூர்ல கம்னீஸ் கட்சியை ஆரம்பிச்சாவோ. ஆரம்பிச்சது மட்டுமல்ல, பண்ணை யாரு வோகிட்ட இருந்து பாதிக்கு பாதி வயக்காடுவோள நமக்கு வாங்கிக் கொடுத்த வங்களும் அவங்கதான். அப்படி ஊரையும் மக்களையும் காக்க வந்த கட்சிதான் அது. 

இன்னைக்கு பண்ணையாருவோ, வயக்காட்டை எல்லாம் நம்மட்டயே வித்துட்டு தூராந்தேசம் எங்கயோ போயிட்டாவோ. அதுக்கு காரணமும் இந்தக் கட்சிதான். பண்ணையாருவோ சொந்தக்காரனுவ கூட எங்க இருக்காங்கன்னு தெரியல. நம்ம கல்யாணி-சைலப்பர் திருவிழாவுக்கு யாராவது வந்தா, 'இவருதான் சிங்கப்பூரய்யன் பேரன், ராசாய்யரு பேரன்'னு சொல்லுவாவோ. அப்டியான்னு கேட்டுக் கிடதுதான்' என்ற மூப்பனார், பீடியைப் பற்ற வைத்தார். 
பிறகு, 'இப்படி வளந்தக் கட்சிதான் இது. நம்ம ஊர் நன்மைக்காக ஏகப்பட்ட போராட்டங்களை நடத்தி, வெட்டுக்குத்தைப் பார்த்து வளர்ந்தக் கட்சி. இன்னைக்கு அந்த கட்சி, இந்தக் கட்சின்னு ஆயிரம் கட்சியோ இருக்கலாம். ஒவ்வொரு தெருவுல கம்னீஸ் கொடிகம்பம் இருக்கு. அதுக்கு கீழ, தோழர், தியாகி சுப்பையா நினைவுக்கம்பம், சொடலை நினைவு கம்பனு எழுதியிருக்கு. இதெல்லாம் சும்மா எழுதல. ஒரு காலத்துல தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதா இருந்துச்சு. நம்ம கீரைத்தோட்ட கெணறு இருக்கு பாரு. ஏழு நாளு அரவமில்லாம, போலீசுக்கு பயந்து அதுக்குள்ள வாழ்ந்தவங்கதான் நம்மாளுவோ. அந்த வரலாறெல்லாம் ஒங்களுக்கெங்கடா தெரிய போவுது?' என்றவர், 'செரி, இதுல நா சொல்லுததுக்கு ஒண்ணுமில்ல. எது நல்லது எது கெட்டதுன்னு நீ முடிவு பண்ணிக்கோ. நீ என்ன ஒண்ணும் தெரியாதவனா? பேச்சாளரு வேற?' என்ற மூப்பனார் ஒழக்கு தூங்கிவிட்டதைப் பார்த்தார். அவனது செவுட்டில் லேசாகத் தட்டி, 'ஏறு கோட்டிக்காரப் பயல, நான் என்ன கதையால சொல்லிட்டிருக்கேன். இப்டித் தூங்கிட்டே?' என்றார்.

திடுமென எழுந்த ஒழக்கு, 'ச்சே எப்டி தூங்குனம்ணே தெரியல, பாரேன்' என்று சொல்லிவிட்டு பெரியதாகக் கொட்டாவி விட்டான். பிறகு வாய்க்காலில் போய் மூஞ்சைக் கழுவிவிட்டு வந்தான்.

'எந்தக் கட்சில சேரப்போற?' என்று கேட்ட மூப்பனாரிடம், 'நீரு யார்ட் டயும் சொல்லாண்டாம், சின்னயா. இன்னும் முடிவு பண்ணல' என்று சொல்லிவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான் பரமசிவம். மனம் முழுவதும் தலை வர் சொன்னதுதான் நின்றிருந்தது. எப்படியாவது வேறு கட்சியில் சேர்ந்து அவர் முன் தன்னை பெரிதாக நிரூபிக்க வேண்டும் என நினைத்தான்.

'இவரு கட்சியில்லனா, வேற கட்சியா இல்லை நாட்டுல. நீக்கிரு வாராம்லா? இவரு யாரு ஒன்ன நீக்கதுக்கு, சொல்லென்? நம்ம நீக்கிட்டு போவோம் அவரை' என்ற ஒழக்கு, இன்னும் தூபம் போட்டுக் கொண்டிருந்தான். பரமசிவ த்தின் மனதுக்குள் அனல் கழன்றுக்கொண்டிருந்தது.கிழக்கே காச்மூச்சென்று சத்தம். பள்ளிக்கூடம் அருகில் இருந்து தான் வந்துகொண்டிருந்தது அந்தச் சண்டைச் சத்தம். ஆடுகளைப் பத்திக்கொண்டு போகும் கீரைத் தோட்ட ஆச்சி, சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொம் பையாவிடம், 'அங்கென்னல அவயம்?' என்று கேட்டாள்.

'ஒண்ணுமில்ல, போ போ' என்று சொல்லிவிட்டு அவன் சைக் கிளை மிதித்தான். 'ஏ மூதி' என்ற ஆச்சி, ஆடுகளை மேற்கு நோக்கி பத்திவிட்டு சத்தம் வரும் பள்ளிக்கூடம் நோக்கி நடந்தாள். அருகே நெருங்க நெருங்க சத்தம் தெளிவாகக் கேட்டது. யாரோ, யாரையோ செருப்பால் அடித்துவிட்டதாக அந்த தகவல் முதலில் தெரிவித்தது. கண்களைக் கசக்கிவிட்டு கிழக்கே பார்த் தாள். கரைச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் இன்னாரென்று தெரியவில்லை. யாரோ, யாரையோ இழுத்துத் தள்ளிக்கொண்டு போனார்கள்.

'நீ போடே, போன்னு சொல்லுதம்லா' என்ற குரல் கீழத் தெரு பசுங் கிளியின் குரலாகத் தெரிகிறது. 

'பசுங்கிளி யாரை வெரட்டுதாம்?' என்று நினைத்துக்கொண்ட ஆச்சி, நடையை வேகமாக்கினாள். எதிரில் வந்த சுப்பையா சார் வாள், 'அங்க எங்க போற, வேகவேகமா?' என்றார் ஆச்சியிடம்.

'சத்தமா இருக்கேன்னு போறேன்'

'சண்டை முடிஞ்சு போச்சு, திரும்பு' என்ற சார்வாளிடம், 'என்ன சண்டை, யாருக்கு என்ன?' என்று கேட்டாள்.

'பரம்சத்தை, சிரிச்சான் செருப்பைக்கொண்டி அடிச்சுட்டாம்'

'அடப் பாவிப்பயல' என்ற ஆச்சரியம் ஆச்சிக்கு. அவன் ஏன் பரம் சத்தை அடிக்கணும்? ரெண்டேரும் கழுத்தக் கட்டிட்டு அலைவானுவோ. அவனுவளுக் குள்ள என்ன சண்ட?'

'யாரு கண்டா? இனுமதாம் தெரியும்?

'இந்தக் கூத்த எங்க போயி சொல்ல? செருப்பை கொண்டு அடிக்க வரை என்ன நடந்து போச்சு, ரெண்டு பேருக்குள்ள?'

'தெரியலங்கேன். அதையே கேட்டுட்டு இருக்கெ?' என்ற சார் வாளுடன் மேற்கு நோக்கி நடந்தாள் ஆச்சி.

ஊரில் எங்காவது உட்கார்ந்து பேச இன்று ஒரு கதை கிடைத்து விட்டது ஆச்சிக்கு. இருந்தாலும் அவளுக்குப் பிடித்த அல்லது வேண்டிய பரமசிவம் பற்றிய கதை என்பதால் ஏன் இந்த சண்டை, எதற்கு இந்தச் சண்டை என்பதை அறியும் ஆவல் அதிக மாக இருந்தது.

ஆச்சியும் சார்வாளும் நடந்துகொண்டிருக்கும்போது, சைக்கிளில் அரிவா ளைத் தொங்கப் போட்டுக்கொண்டு, வேகவேகமாக வந்து கொண்டிருந்தார் பரமசிவத்தின் மூத்த அண்ணன். சைக்கிளின் மிதியில் கோபம் தெரிந்து கொண்டிருந்தது. அவரை மறித்தார் வாத்தியார் சுப்பையா.

'நில்லுப்பா. எங்க போற. எல்லாரும் போயிட்டாவோ. நீ திரும்பு. கட்சி ஆபிஸ்ல வெவாரமாம்?'

'என்ன மயிரு வெவாரம். செரிக்குள்ள செருப்பை கழத்தி அடிச்சி ருக்காம். அவன் தலைய எடுத்துட்டுலா வெவாரம்' என்றவர் சார்வாளின் பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு, சைக்கிளை அழுத்தினார்.

'இதெல்லாம் திருந்துத ஜென்மமா? என்னன்னு போட்டும் எனக் கென்ன மயிரு வந்திருக்கு' என்ற சார்வாள், டப்பியில் இருந்து கொஞ்சம் பட்டணம் பொடியை ஆட்காட்டி விரலையும் பெரு விரலையும் ஒன்றாக்கி அள்ளி, உதறிவிட்டு மூக்குக்குள் திணித்தார். உதறிய பொடி காற்றில் கலந்து ஆச்சிக்குத் தும் மலைத் தந்தது. 

சிறிது நேரத்துக்குப் பிறகு, 'என்ன சார்வாளு, எதுக்கு அடிச்சா னாம்?' என்று மீண்டும் கேட்டாள் ஆச்சி. அவருக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்பதால்தான் திரும்பவும் கேட்டாள்.

'நீ யாருட்டயும் நா சொன்னேன்னு சொல்லிராத... சிரிச்சாம் பொண்டாட்டிட்ட என்னமோ எடக்கு பண்ணியிருக்காம் பரம்சம். அதை யாரோ அவன்ட சொல் லிருக்காவோ. அதுக்குத்தாம் இப்படி அடிச்சானாம்?'

'இது என்ன கொடுமயா இருக்கு? அவன் பொண்டாட்டி என்ன அப் படி பேரழவியா? கொடுக்கு மாரி அலைஞ்சுட்டிருக்கவ. அவாட்ட போயி இவன் என்னத்த எடக்குப் பண்ணியிருப்பான்?' என்ற ஆச்சி யிடம் தனது மூக்கின் மேல் விரல் வைத்துக் காட்டி, 'நான் சொன் னேன்னு மூச்சுவிடக் கூடாது, சொல்லிட்டேன். அந்தப் பேச்சை அப்டியே விட்டுரு' என்றார் சார்வாள்.

'நா ஏம் சொல்லப் போறேன்?' என்ற ஆச்சிக்கு, அது பற்றிய சிந்த னையே அதிகமாக இருந்தது.

'பரம்சம் பேசுத பேச்சுக்கு ஊரு, ஒலகத்துல பொம்பளயா இல்லை, இந்த கேணச் செரிக்கிட்ட எடக்கு பண்ணுனாம்னு சொல்லுதியல' என்று திரும்பவும் கேட்டுக்கொண்டே வந்தாள் ஆச்சி. அவளுக்கு நம்ப முடியவில்லை. 

'இது இப்டியே முடிஞ்சு போவும்னா நெனக்க?'

'அதெப்படி முடியும். இன்னா, அண்ணங்காரன் அருவாளைத் தூக்கிட்டாம். சின்ன அண்ணன்காரன் சும்மாவே கொலகாரப் பய. அவனுக்கு தெரிஞ்சு என்ன நெல நிக்க போறானோன்னு தெரிய லயே?' என்றார் சார்வாள்.

'என்னத்த இருந்தாலும் செருப்ப கழத்தியா அடிப்பான்?' என்ற ஆச்சியிடம், அங்கும் இங்கும் பார்த்துவிட்டு சொன்னார் சார்வாள். 'அவனாது செருப்பை கழத்தி அடிச்சான். இன்னொருத்தம்னா, ரெண்டு பேரையும் வெட்டிருப் பானாங்கும்'

'எடக்கு பண்ணுததுக்கா வெட்டுவாங்கெ?'

'ஒனக்கு எல்லாத்தையும் வெவரமா எழுதணும்' என்ற வாத்தியார், 'கிட்ட வா' என்று அழைத்து அவளின் காதில், 'அவளைதான் பரம்ச ம் வச்சிட்டி ருக்கானாம். சிரிச்சானோட அண்ணன் தம்பியோ சொ ல்லியும் அவன் கேக்கல யாம். அதாம் இந்த அடி, போதுமா?' என்றவர், 'இங்கரு நான் சொன்னம்னு யார்ட்டயும் சொல்லிராத. சண்டை நடக்கும்போது அங்ஙன கேள்வி பட்டதாங்கும் இது' என் றாள் சார்வாள்.

சேலையை இழுத்து வாயில் வைத்துக்கொண்டு, ஆச்சரியப்பட் டாள் ஆச்சி. இது அநேகமாக சாதி சண்டையை இழுத்துவிடுமோ என்று பயந்தாள் ஆச்சி. 

தெருக் கடந்து பரமசிவனின் வீடு இருக்கும் பகுதிக்குள் ஆச்சி வந்ததும் அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தாள். கிருஷ்ண வேணி காளியாகி கத்திக் கொண்டிருந்தாள்.

'செரிக்கி முண்ட, எங்கண்ணுல காணட்டும் அவள. தலைய மொட்டைய டிக்கணா இல்லையான்னு மட்டும் பாரு' என்று ஏசிக் கொண்டிருந்தாள்.

ஒழக்குவின் சைக்கிளில் வந்து இறங்கிய பரமசிவன், வீட்டுக்குள் போனான். பொண்டாட்டியை, நாக்கைத் துறுத்தி, 'வாயை பொத் திட்டு இருக்கணும்' என்று கோபமாகச் சொன்னான். ஒழக் குவின் பின்னால் இன்னும் நான்கைந்து சைக்கிள்கள் வந்திருந்தன. எல்லரும் வீட்டுக்குள் வந்தனர்.

'கண்ட நாயி, என்புருஷனை அடிச்சிருக்காம். நீங்கள்லாம் வெர லை சூம்பிட்டு இருந்தேளோ?' என்று கிருஷ்ணவேணி, அவர்க ளைப் பாத்து கோபமாகக் கேட்டாள். 

'ஏய், வாயப் பொத்திட்டுப் போ. இவளுக்குத் தெரியும் அஞ்சாறு மயிறு. அவயம் போடுதா' என்றார் ஆறுமுகம். அவள் மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். பரம்சிவம் வெளியே வந்து, 'வா ரிய பிஞ்சிரும். போட்டி. கோட்டிக்காரச் செரிக்கி' என்றான் அவ ளைப் பார்த்து. அவன் அவளை இப்படிப் பேசியதில்லை இதற்கு முன்.

விஷயம் கேள்விபட்டு, அவனது அம்மா, 'எம்புள்ளய எந்த பரதேசி பய அடிச்சாம்? அவன சுமமவால விட்டுட்டு வந்தே பரம்சம்?. எவம்னு சொல்லு, நாம் போயி அவன் சங்கை அறுத்துட்டு வா ரேன்' என்று சத்தம் போட ஆரம்பித்தள். வெளியே வந்த ஒழக்கும் பழனியும், 'கொஞ்சம் சும்மா இருக்கியாத்தா. உள்ள பேசிட்டிருக் கோம்லா. போ, இங்க ஒரு மயிரும் நடக்கலை' என்றனர்.

'ஒரு மயிரும் நடக்காமயால செருப்ப கழத்தி அடிச்சானாம்?'

'போன்னா போ. சொன்னா கேளு பெறவு பேசுவோம்' என்றதும் சத்தத்தைக் குறைத்தாள். இருந்தாலும் ஊருக்குள் கொந்தளிப்பு மனநிலை இருந்தது. ஒரு சின்ன தெறிப்பில் சாதி கலவரம் வெடிக்கவும் ஏராளமாக வாய்ப்புகள் இருந்தன. பலர், பல முன் பகைகளை மனதில் வைத்து இதில் குளிர் காய நினைத்தார்கள். இதற்காக இங்கு பரமசிவத்தையும் அங்கு சிரிச்சானையும் தூண் டும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. 

பிள்ளையார் கோவில் எதிரில் இருக்கும் அரசமரத்திண்டு, பஞ்சா யத்துப் போர்டு வாசல், கருவேலப்பிறை வாசல், மேலப் பிள்ளை யார் கோயில் சின்ன வாய்க்கால் பாலத்து சுவர், அம்மன் கோயி ல் படித்துறை என வழக்கமாக மாலையில் அங்கங்கு கூடும் கோஷ்டியினர் இந்தச் சம்பவத்தின் பொருட்டு, இப்போதே கூடி இந்த செருப்படிப் பற்றி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். 

போலீசில் புகார், கம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸில் நடக்க இருந்த பஞ்சாயத்து என அனைத்தையும் நிராகரித்துவிட்டார் பரமசிவம்.

'இந்தப் பிரச்னையை இத்தோட விட்டுருங்க. இதப் பத்தி வேற எதுவும் பேசாண்டாம். நான் எப்படி பாத்துக்கிடணுமோ, அப்படிப் பாத்துக்கிடுதென்' என்றான்.

'ஏய் ஒன்னய அடிச்சிருக்காம். சும்மா விட்ருவோங்கெ. பின்ன செரிக்குள் ளேலுக்கு குளிருலா விட்டுப் போவும். ரெண்டு பேரு கைய, கால எடுத்தா லாடா, நம்ம மேல பயம் வரும்' என்று சிலர் தூபம் போட்டுக் கொண்டி ருந்தனர். இதற்கு கிருஷ்ணவேணியும் ஆதரவுத் தெரிவித்துக் கொண்டிருந் தாள்.

ஆனால் பரமசிவம் மறுத்துவிட்டார். அண்ணன்களிடம், 'இது எம் பிரச்னை, நீங்க ஒங்க வேலைய பார்த்துட்டு போங்கெ. நான் பாத் துக்கிடுதென்' என்று ஒரே வார்த்தையாகச் சொன்னான். 

'அப்படிலாம் சும்மா விட்டுர முடியாதுல. கண்ட நாயிவோ அடிச்சுட்டுப் போவதுக்காக, நீ என்ன ரோட்டுல நிக்க மாடா, ஆடா ல? அவனுவ சொட்டைய மொறிக்கனா இல்லையான்னு மட்டும் பாரு' என்று பெரியண்ணன் மீசை முறுக்கினார். 

'நீ பேசாம போன்னா போ' என்றான் அவரிடம்.

ஊரே ஒரு வித பரபரப்பில் இருந்தது. அங்கே சிரிச்சானை ஊரை விட்டு வெளியூருக்கு அனுப்பும் முயற்சி நடந்துகொண்டிருந்தது. அவன் மறுத்தாலும் அவனது அண்ணன் தம்பிகள், ரயிலில் தென் காசிக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமாக இருந்தார்கள். அவனது சொந்த பந்தங்கள் அவன் வீட்டின் முன் கூடியிருந்தார்கள். அவனது பொண்டாட்டியின் பத்தினி தன்மை குறித்து, அங்கு மெதுவாக கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள் பெண்கள். அதில் அப்ப டிலா, இப்படிலா என சில பல புதுக்கதைகளும் கலந்திருந் தன. 

ஊரில் இவ்வளவு களேபரம் நடந்துகொண்டிருக்க, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தாள் சிரிச்சா னின் பொண்டாட்டி. 

(தொடர்கிறேன்)

No comments: