Sunday, June 5, 2016

ஆதலால் தோழர்களே 7

கட்சி ஆபிசில் செய்தித்தாள்களை வாசித்துவிட்டு விட்டுக்குக் கிளம்பும் போது வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. எழுந்து துண்டை உதறிய போதுதான் அயன்திருவாலீஸ்வரத்தைச் சேர்ந்த வாத்தியார் சண்முகம், சைக்கிளை விட்டு இறங்கினார். பரமசிவத் தைப் பார்த்ததும், 'என்ன எப்படியிருக்கெ?' என்ற விசாரித்துவிட்டு சைக்கிளை சுவற்றில் சாய்த்து வைத்தார்.

சண்முகம், வாத்தியார் வேலையில் இருந்தாலும் அவருக்கு வட்டித் தொழிலே பிரதானமாக இருந்தது. சண்முகம் என்பதை விட வட்டிக் காரர் என்ற பெயரால் அவர் ஊரில் அறியப்பட்டார். வட்டிக்காரர் என் றால் கொடுமையான வட்டிக்காரர் இல்லை. அவரிடம் கொஞ்சம் மனி தாபிமானமும் இருந்தது.
சைக்கிளில் தொங்கிய சாக்கு பையில் இருந்து, ஒரு சீப் வாழைப் பழத்தை எடுத்தார் அவர்.

'இந்தா பரம்சம். நம்ம வயல்ல பழுக்கப் போட்டது. நல்ல ருசியா இருக் கும்டே' என்று கையில் கொடுத்தார். தலைவர் சொள்ளமுத்து நம்பியா ருக்கும் ஒனக்கும்தான் கொண்டாந்தேன் பாத்துக்க. பஸ் ஸ்டாண்ட்ல நம்ம நடேசனை பாத்துட்டேன். கொடுக்காம இருக்க முடியுமா? அதா ன் அவருக்கு ஒரு சீப்பை கொடுத்துட்டு வாரேன்' என்று அவர் சொன் னதும் கையில் அதை வாங்கிவிட்டு, உட்கார்ந்தார் பரமசிவம்.

'வெயிலு கொளுத்த தொடங்கிட்டெ' என்று சட்டைப் பித்தான்களை அவிழ்த்துவிட்டுவிட்டு, துண்டால் வீசிக்கொண்ட சண்முகம் அலுவல கத்தின் முன் போடப்பட்டிருக்கிற கொட்டகையின் ஓரத்தில் மண்பா னையில் வைக்கப்பட்டிருக்கிற தண்ணீரை எடுத்துக் குடித்தார். பிறகு பரமசிவத்தின் அருகில் உட்கார்ந்து, 'பிள்ளேலு எப்படியிருக்குடே' என்றார்.

'நல்லாருக்குண்ணே. வீட்டுல மைனி எப்டியிருக்காவோ?'

'அவளுக்கென்ன கொற, மாராசி நல்லாருக்கா' என்றவர்,  வேனலு க்காகப் போடப்பட்டிருக்கிற கூரைக் கொட்டகையை மேலோட்டமாகப் பார்த்தார்.
'இந்தக் கட்டடம்லாம் அப்பம் கெட்டல, பாத்துக்கெ. இந்த மாதிரி சின்ன குடிசையதான் போட்டிருந்தோம், கட்சிக்குன்னு. நல்லசிவத்துக்கு பிரம்மதேசம்தான் ஊரு. கட்சி பிரிஞ்சதும் சிபிஎம்முக்குப் போயி ட்டாரு. இங்க எத்தனை நாளு வந்து தங்கியிருப்பாருங்கெ. பாதி நாளு இங்க தான இருப்பாரு. நம்ம தலைவரும் அவரும் போவாத கூட்டமா? போடாத சண்டையா? ஏம், நம்ம நல்லகண்ணும் இங்கதான் பாதி நாளு தங்குவாரு. அப்பலாம் எப்படியிருக்குங்கெ? இன் னைக்கு லா நண்டு நசுக்குலாம் நானும் அரசியல்வாதிதாம்னு வந்துட் டானு வோ. நாங்க விவசாய சங்கத்தை ஆரம்பிச்ச நேரத்துல பெறக்காத பயலாம், கம்னீஸ்ட் கட்சியை திட்டுதாம், நம்மூர் மேடையிலயே. இவனுவள விட்டு வச்சது நம்ம தப்புதானே. காங்கிரஸ்காரனுவோ எப்படி ஓட ஓட வெரட்டுவானுவோ, தெரியுமா? அவங்களை திரும்ப ஓடவிட்டது நம்ம ஆட்கள்னா பாரேன்... அதெல்லாம் ஒரு காலம் பாத் துக்கெ. அன்னைக்கு எல்லாரும் அண்ணன் தம்பியாலாடா பழவு னோம்... இன்னைக்குலா சாதி பாக்க ஆரம்பிச்சுட்டானுவோ, சாதி. அவனுவ மேல சாணிய கரைச்சு ஊத்தாம விட்டது நம்ம தப்புதாம்' என்று கதை சொல்ல ஆரம்பித்தார்.

கேட்டுவிட்டு, 'வாயம்ணே வீட்டுல சாப்பிட்டு வருவோம். ஒம்ம கொழுந்தியா பொங்கியிருப்பா?' என்றார் பரமசிவன்.

'ச்சே. சாப்பிடதுக்கு ரெண்டு, மூணு மணி ஆயிரும். ஒரே வயித்துப் புண்ணு பாத்துக்கெ. அதான் ஒம் மைனிட்ட, சிலுப்பி (குடலு) எடுத்துக் கொடுத்திட்டு வந்திருக்கேன்'

'அப்பம் செரி'

'ஒரு நா ஊருக்கு கூட்டியாடே பொண்டாட்டி, பிள்ளல. ஒங்கப்பனோட யும் ஒன்னியோடயும் நம்ம பழக்க வழக்கம் நின்னுறக் கூடாது, பாத் துக்கெ'
'கண்டிப்பா கூட்டியாரெம்ணே, கொடைக்கு வந்திருதேன்' என்ற பரமசிவன் பழச்சீப்புடன் நடந்தார். லட்சுமண நம்பியார் பலசரக்குக் கடை யைத் தாண்டிதான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அவர் பார்த்தால், 'அரிசியை நம்மகிட்ட கடனுக்கு வாங்கிவிட்டு, பழச்சீப்பை வேற எங்கியோ போயி துட்டை கொடுத்து வாங்கிவிட்டு வாரானே' என  நினைப்பாரோ என்கிற யோசனை வந்தது. நடையை மெதுவாக் கினார். கருவேலப்பிறைத் தெரு வழியாகச் சென்றால் என்ன என்று தோன்றியது. அது கடையின் பின்பக்க வழி, நடந்தார் பரமசிவன்.

அந்த வழியில்தான், துணி வெளுக்கும் மாடத்தி வீடு இருக்கிறது. மேல் பக்கம் வெள்ளாவி அடுப்பும் கீழ்ப்பக்கம் வீடும். இடையில் சின்ன முடுக்கு. வீட்டைக் கடக்கும் முன் அவள் வைத்திருக்கிற வெள்ளாவி வாசனை மூக்கில் முட்டிச் சென்றது. மாலையில் ஆற்று க்குத் துணிகளைக் கொண்டு செல்வாள் போலிருக்கிறது. வீட்டில் எதிரில் இருக்கிற வாகை மரத்தின் நிழலில், பின்னங்கால்கள் கட்டப் பட்ட இரண்டு கழுதைகள் படுத்திருந்தன.

தற்செயலாக மாடத்தி வீட்டின் முடுக்கைப் பார்த்த பரமசிவம், அங்கு துணிகளைத் தேய்க்கக் கொடுத்துவிட்டு அவளிடம் பேசிக்கொண்டி ருக்கிற ஆனந்தவள்ளி டீச்சரைக் கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பரமசிவத்தைக் கண்டால் டீச்சருக் கும் டீச்சரைக் கண்டால் பரமசிவத்துக்கும் தானாக வந்துவிடுகிற அதே சிரிப்பு, இப்போதும் வந்துவிட்டது. டீச்சர், மாடத்தியிடம், 'சரி சாய்ந்திரம் கொண்டா' என்று சொல்லிவிட்டு தரையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வெளியில் வந்து வீட்டை நோக்கி நடந்தாள். தெருவில் வேறு யாரும் இல்லை. அவள் பின்னால் மெதுவாகச் சென்ற பரமசிவம், சின்னதாகக் கணைத்தார். அதைக் கேட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தார் டீச்சர். அந்தப் பார்வை தருகிற சுகம் பரமசி வத்தை ஏதோ செய்தது. ஆனாலும் வெட்கமோ, பயமோ, தயக்கமோ அவரை ஏதோ ஒன்று மனதுக்குள் எல்லை தாண்ட தடுத்துக் கொண் டிருந்தது. அந்த தடுப்பு அவளுக்குள்ளும் இருந்திருக்கலாம்தான்.

என்னதான் மெதுவாக நடந்தாலும் அந்த சின்னத் தெரு இவர்களு க்காக நீளப் போவதில்லை. தெரு முடிந்து பரமசிவம் இடது பக்கமும், டீச்சர் நேராகவும் செல்ல வேண்டும். ஆனால், தான் திரும்ப வேண் டிய இடத்தில் யாரையோ எதிர்பார்ப்பது போல நின்று கொண்டார்.  டீச்சர் அவர் வீடு வரை நடந்து, வாசலில் கால் வைத்ததும் மெது வாகத் திரும்பி, மேற்கு நோக்கிப் பார்த்தார். இருவரும் தூர நின்று பார்த்து, வெயிலை சாட்சியாக்கிப் புன்னகைத்துக் கொண்டனர்.

வீட்டுக்குள் பரமசிவம் நுழைந்ததும் சின்னவள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். பெரியவள், ஒரு பென்சிலால் சுவரில் படம் வரைந் துகொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு பிரேமாவிடம் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணவேணி, பரமசிவத்தின் சத்தம் கேட்டு வந்து பழ சீப்பை வாங்கினாள்
'ஏது?'

'கெழக்க இருந்து சம்முவண்ணே வந்திருந்தாரு. இதைத் தூக்கிட்டு'
'சாப்ட கூட்டியாந்திருக்கலாம்லா?'

'இப்பம் சாப்ட மாட்டாராம். ரெண்டு மூணு மணி ஆவுமாம்'

'ம்ம்' என்றவள், அதை விளக்கு முன் வைத்தாள். ஒரு பழத்தைப் பிய்த்து, 'ஏட்டி இந்தா' என்று பெரியவளுக்கு கொடுத்தாள். அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சுவரில் படம் வரைவதில் மும் முரமாக இருந்தாள்.
'சொவத்துல கிறுக்காதட்டீ' என்று அதட்டிவிட்டு, தட்டில் சோறை வைத்து, குழம்பை ஊற்றினாள். நான்கைந்து ஈராய்ங்கத்தை உரித்து தட்டின் ஓரத்தில் வைத்தாள். அம்மியில் அரைக்கப்பட்ட காணத் துவையலையும் ஒரு கிண்ணத்தில் வைத்தாள்.

'அப்பா, தோப்பு பாரேன்' என்றாள் பெரியவள்.

'ஏட்டி சொவத்துல கிறுக்காதன்னம்லா. ஒன்னய?' என்று எழுந்த கிரு ஷ்ணவேணியை, உட்காரச் சொன்னார் பரமசிவம்.

'கிறுக்கட்டும்' என்று சொல்லிவிட்டு, 'நல்லா வரையுதிய. அழகா இருக்கே. அப்படியே ஆறு, மலைலாம் வர' என்றார்.

சிறுது நேரத்துக்குப் பிறகு, 'நாளைல இருந்து பீடி சுத்தலாம்னு இருக் கேன்' என்றாள் கிருஷ்ணவேணி.

'ஏம்?' என்றார் பரமசிவன்.

'வீட்டுல சும்மாதான இருக்கேன், நேரமாது போவும்லா' என்றாள்.
'இவ்வளவு சுத்தணும்னு தோணல, இப்பம் எப்படி திடீர் ஞானோ தயம்?'
'அதாம் நேரம் போவும்னு சொன்னம்லா'

சிரித்துக்கொண்ட பரமசிவம் அவளைப் பார்த்தார். அவளும் புன்ன கைத்தாள்.
மாலையில், டாணாவில் நடக்கும் கூட்டத்துக்குப் போக வேண்டும். ஏழரை மணி பஸ்சில், தோழர் கல்யாணி மற்றும் சிலருடன் சென்று விடலாம். கொடியில் காய்ந்துகொண்டிருந்த வெள்ளைச் சட்டையை மாடத்தியிடம் தேய்க்கக் கொடுக்கச் சொன்னார் மனைவியிடம். வேட்டி மடித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதற்காக பீரோவைத் திறந்தார். மேலிருந்து இசைத்தட்டு ஒன்று கீழே விழுந்தது. பேப்பர் கவருக்குள் வைக்கப்பட்டிருந்த, அந்த இசைத் தட்டு இளம் பச்சை நிறத்தில் இருந்து. சாயம் போன சேலையின் வண்ணம் போல காட்சியளித்தது. மேலே, தோழர் பரமசிவம் பேச்சு என்று பேனாவால் எழுதப்பட்டு இசைத்தட்டின் நடுவில் வட்டமாக ஒட்டப்பட்டிருந்தது.

எடுத்துப் பார்த்ததும் அவருக்குப் புன்னகை வந்தது. மதுரையில் நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் பரமசிவம் நட்சத்திரப் பேச்சாளரல்ல. ஆனால் அவரது பேச்சுதான் அந்தக் கூட்டத்தில் அதிகம் ரசிக்கப் பட்டது. எதேச்சையாக இவரது பேச்சை பதிவு செய்தவர்கள் பிறகு இசைதட்டாக்கி அனுப்பியிருந்தனர். இந்த இசைத் தட்டு வந்தபின் ஊரில் பல முறை பல பொதுக் கூட்டங்களுக்கு முன்னால் ஒலிபரப்ப ப்பட்டு விட்டது. பரமசிவத்தின் புகழ் கொஞ்சம் கூடியிருந்தது.

இசைத்தட்டின் மேலே இருந்த தூசியைத் தோளில் கிடந்த துண்டால் துடைத்துவிட்டு பத்திரமாக பீரோவின் மேலே வைத்தார்.

மடித்துவைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற பார்டர் போட்ட வேட்டியை எடுத்துப் பார்த்துவிட்டு, 'இதுக்கு நீதான, நீலம் போட்டெ?' என்று கேட் டார்.
கிருஷ்ணவேணி, ஆமா என்று தலையாட்டினாள். பிறகு வேட்டியை விரித்துக்காட்டினார். உள்ளே திட்டு திட்டாக நீலம் இருந்தது. பிறகு ஒன்றும் சொல்லவில்லை. நீலம் இருந்த பகுதியை உட்பக்கமாக  மடித்து வைத்தார்.

'வேற வேட்டியன்னா உடுத்திட்டு போங்கெ'

'அது பரவாயில்ல. ராத்திரிக்கு இந்த கொழம்பு போதுமா? ஏதும் வாங் கிட்டு வரணுமா?'

'ஒங்களுக்கு'

'நான்கு அங்க சாப்பாட்டுக்கிடுவேன்'

'ஒனக்கும் பிள்ளேலுக்கும்தான்'

'இது போதும். கையில நாலணா இல்ல. அஞ்சு பாத்தாது இருக்குமா?'
'யார்ட்டயாது வாங்கிட்டு வாரென்'

(தொடர்கிறேன்)

No comments: