Sunday, May 29, 2016

ஆதலால் தோழர்களே 6

இரண்டாவது மகள் பிறந்த பிறகுதான் வீட்டில் பணப்பிரச்னைத் தலை தூக் கியது. கட்சி ஆபிசில் மாதம் கொடுக்கும் நூறு ரூபாய் அலவன்ஸ் போத வில்லை. குடும்ப சொத்தாகப் பரமசிவத்துக்கு வந்த சிறு குண்டு (வயல்) என்ன தந்துவிடப் போகிறது? அதையும் சரியாகக் கவ னிக்க, பயிரிட, உரம் போட, நேரம் கிடைக்கிறதா என்ன, ஊர் ஒலகம் பாராட்டும் பேச்சாளருக்கு?

எப்போதாவது வெளியூர் கூட்டங்களுக்குப் போனால், கொஞ்சம் ஏதோ தருவார்கள். மற்றக் கட்சிகள் என்றால் இதற்குள் மேல பத்தில் சில ஏக்கர்களை வாங்கியிருக்க முடியும். அதுவா முக்கியம்? லட்சியம் நோக்கி, புரட்சி நோக்கிச் சென்றுகொண்டிருக்கிற பொதுவுடமை வாதிக் கு பணம் என்றுமே போதை தராது என்கிற அவரது நம்பிக்கை ஆழமா னது. வெளியூரில் நடக்கும் கட்சிக்கூட்டங்களில் எதுவும் தரவில்லை என்றாலும் சொந்தக்காசில் வந்துவிடுவார். 'தா' என்று கேட்பதும் கை நீட்டுவதும் அவரது இயல்புக்கு அப்பாற்பட்டது. ஏதும் கொடுத்தால் கூட, 'இது எதுக்கு?' என்றுதான் கூச்சப் படுவார். அது அவரது இயல்பு. ஒன்றுமே இல்லாவிட்டால் கூட வெறும் வயிற் றில் வாழத் தெரியும் அவருக்கு. அப்படி பலமுறை வெளியூரில் இருந்து பட்டி னியாகவே வந்திருக்கிறார் பரமசிவம். அதைப் பெரிய விஷயமாக அவர் பேசு வதுமில்லை. இந்த உறுதி, சிகரெட் விஷயத்தில் மட்டும் விதி விலக்கு. காசு இல்லையென்றால் எதிரில் யாராக இருந்தாலும், 'சிசர் கிடைக்குமா?' என்று கேட்டுவிடுகிற சுபாவம் அவருக்கானது.

இப்போது வீட்டில் வறுமை எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. எப் போதும் பணமும் அரிசியும் கொடுத்துவந்த கிருஷ்ணவேணியின் அம்மா வீட்டில், 'கல்யாணம் முடிஞ்சு இவ்ளவு வருஷமாச்சு. இன்னும் ஆத்தா வீட்டுலயேவா எதிர்பாத்துட்டு இருப்பே? புருஷன்காரன்கிட்ட கேளு. ரெண்டு புள்ள பெத்த பெறவும் சின்னபிள்ள மாதிரியே இருக் காத. அக்கம் பக்கத்துல எப்படி வாழுதா வோன்னு பாருட்டி' என்று சொந்தங்கள் கொஞ்சம் கறாராகவே சொன்ன பிறகு, வைராக்கியமாக இருந்து விட்டாள் கிருஷ்ணவேணி. இனி என்ன கஷ்டம் என்றாலும் அம்மா வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது என்கிற தீவிரம் மனதுக்குள் கனன்றுக் கொண்டிருந்தது. 

இவள் கேட்காமலேயே பரமசிவத்தின் அம்மா அனச்சி, தன் வீட்டில் இருப் பதைக் கொண்டு வந்து கொடுத்துவந்தாள். அதுவும் எத்தனை நாளுக்கு?
எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் பரமசிவம், வீட்டில் அரிசி இல் லை என்று கிருஷ்ணவேணி சொன்னதும் தடுமாறித்தான் போனார்.

சின்னக் குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டே முகத் தைக் கோபமாக வைத்தபடி, கிருஷ்ணவேணி அப்படிச் சொன்னதை அவர் எதிர்பார்க் கவில்லை.

'பொங்கலயா?'

'ஆங். என்னத்த வச்சுப் பொங்க?' என்றாள் அவள். காதல் மனைவி இப்படி மூஞ்சைத் தூக்கிப் பேசியதில்லை இதுவரை. இப்போது அப்ப டிப் பார்ப்பதற்குச் சங்கடமாக இருந்தது.

'என்னாச்சு?'

'அரிசி இல்ல. இனும யார் வீட்டு வாசல்லயும் போய் நிய்க்க முடி யாது' - அவள் சொன்னதின் அர்த்தம் பரமசிவத்துக்குப் புரியாமல் இல் லை. அவருக்கு இது, புதுவிதமான சவாலாக இருந்தது. சிரித்துக் கொண்டே வாசலில் வந்து உட்கார்ந்தார். வாசல், தெருவைப் பார்த்து இருந்தது. 

தரையில் உட்கார்ந்து தட்டில் இருந்த சோற்றைத் தரையில் சிந்தி இரண்டு கைகளாலும் விரவியபடி விளையாடிக் கொண்டிருந்த பெரிய மகளை, படார் படார் என அடிக்கும் சத்தம் கேட்டு உள்ளே ஓடினார் பரமசிவம்.

'சோத்தை இப்டியா சிந்துவே? ஒரு பருக்கைக்கு எவ்வளவு கெடை கெடக்கேன் தெரியுமா, கோமுட்டி செரிக்கி?' என்று கையை ஓங்கிக் கொண்டு நின்றிருந்தா ள் கிருஷ்ணவேணி.

 வேறு ஏதோ கோபத்தை அந்தப் பச்சை மண்ணுவிடம் காண்பிக் கிறாள் என்பது அவருக்குப் புரிந்தது. அது ஓவென்று அழத் தொடங் கியது. எச்சில் கையால் கண்களைத் துடைக்கவும் மிளகாய்த்தூள் கண்ணில் பட்டு எரிக்க, அழுகை மேலும் தொடர்ந்தது.

பரமசிவம், அவளைத் தூக்கி, 'சரிம்மா... சரிம்மா... அழாதே. நீ சோத்தை தரயில சிந்தலாமாடா... இனும பண்ணக்கூடாது, னா. செல்லக் குட் டிலா' என்று ஆறுதல் படுத்திக்கொண்டே சொம்பில் தண்ணீர் எடுத்து கைகளைக் கழுவி விட்டார். பிறகு அவளைத் தூக்கிக்கொண்டு வாசலில் உட்கார்ந்தார். 

சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். எப்போதும் பஞ்சாக இருக்கும் மனசு, திடீரென கணம் கொண்டது போலானது. வயலில் உழுதுவிட்டு, காளைகளைப் பத்திக்கொண்டு போகும் சுப்பு, 'என்ன தோழரே ஒக்காந்தாச்சு' என்று கேட்ட படியே மாட்டை இழுத்துப் பிடித்து நின்றான்.

'சும்மாதான். வேல ஒண்ணுமில்ல'

'ஒம்ம குண்டுல உழச் சொல்லலாம்லா? எவ்வளவு நாளுதான் சும்மா போட் ருப்பீரு. அக்கம் பக்கம் வெளஞ்சுட்டு இருக்கும்போது, பக்கத்துல தருசா கெட ந்தா நல்லாவா இருக்கு, தோழரு?'

'பண்ணணும்'

'நீரு நம்ம பட்சிட்ட சொன்னா கூட போதும். உழுதுட்டுப் போயிருவாம். துட்டை முன்னப் பின்ன கொடுத்துக்கிடும்'

'இல்ல. அவென்ட்டலாம் கேக்கதுக்கு ஒரு மாரி இருக்கு, அதாம்'

'இதுல என்ன இருக்கு தோழரு. நா வேணா சொல்லுதம் பச்சிட்ட'

-சிரித்தார் பரமசிவம். சுப்பு மாடுகளைப் பிடித்துக்கொண்டுச் சென்றான்.

பரமசிவம் சட்டைப்பையில் தடவிப் பார்த்தார். நாலணா காசு ரெண்டு கிடந்தது. அது சிகெரட்டுக்கானது. எழுந்தார். மகளை விளையாடச் சொல்லிவிட்டு வீட்டில் இருந்த மஞ்சப்பையை எடுத்து உதறினார். வெளியே நடந்தார்.

லட்சுமண நம்பியார் கடையில் கூட்டம் அதிகமில்லை. நம்பியாரிடம் கதைப் பேசுவதற்காகவே சில பேர் கடை ஓரத்தில் இருக்கிற திண் ணையில் அமர்ந் திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் பரமசிவத் துக்கு எரிச்சலாக வந்தது. பையை நான்காக மடித்து கக்கத்தில் வைத்துக் கொண்டு, கடையின் மேல் பக்கம் சும்மா நிற்பது போல நின்று கொண்டார். சிறிது நேரம் நின்று பார்த்தார். உட்கார்ந்திருப் பவர்கள் அங்கிருந்து எழுவதாகத் தெரியவில்லை. அவர்கள் முன் நின்று கடையில் கடன் கேட்டால், அசிங்கமாக இருக்கும் என்பது அவரது எண்ணம். யார் கடன் கேட்டாலும் கொடுத்துவிடுகிற நம்பியார், பரமசிவத்தை அதிசயமாகப் பார்க்கக் கூடும். ஏனென்றால் எப்போதும் வெள்ளையும் சுள் ளையுமாக அலைகிற பரமசிவம், வீட்டுக்காக இப்படி பையேந்தி, கையேந்தி வருவது அவருக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன?

சில பல வருடங்களுக்கு முன், அவரது அம்பாசமுத்திரம் அக்காவுக்குப் பொங் கப்புடி கொண்டு போகச் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா, அனச்சி. வழக்க மாகக் கொண்டு போகும் அண்ணன்களுக்கு ஏதோ வேலை. கடைசியில் பரம சிவம்தான் கொண்டு போக வேண்டு ம் என்றாகிவிட்டது. 

எப்படியெல்லாமோ தவிர்த்துப் பார்த்தார். முடியவில்லை. வேறு வழியில் லாமல் சம்மதித்தார். 

காய்கறிகள், பொங்கல் அரிசி, மஞ்சள்குலை, பனங்கிழங்கு கட்டு, சேலை, வேட்டித் துண்டு ஆகியவை வைக்கப்பட்ட புது சருவச்சட்டி, ஒரு கட்டு கரும்பு. சருவச்சட்டியை தலையில் வைத்துக்கொண்டு கையில் கரும்புக் கட்டை வைத்தபடி செல்ல வேண்டும். தான் ஒரு பேச்சாளர், இதை எப்படி தலையில் வைத்துக் கொண்டு செல்வது என்ற கவலை அவருக்கு. அவமா னமாக இருந்தது. அது மட்டுமல் லாமல், அக்கம் பக்கத்து ஊர்களில் தன்னை எல்லாருக்கும் நன்றாக அடையாளம் தெரியும் என்பது அவரது நம்பிக்கை. அம்பாசமுத் திரத்தில் இறங்கி, தலையில் இப்படி சருவச் சட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்வதை நினைத்துப் பார்த்தாலே எரிச்சல் வந்தது அவருக்கு. வேறுவழியில்லை. சென்றே ஆகவேண்டிய கட்டாயம்.

வீட்டுக்கு வடக்கே இருக்கிற புளிய மரத்தெரு வழியாக, பேரூந்து நிறுத்தம் போனால் யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்று நினைத்தார். தலையில் சட் டியை வைத்துக்கொண்டும் இடது கையால் கரும்புக் கட்டை இடுப்பில் இடுக்கி க்கொண்டும் மெதுவாக நடந்து போனார். மரங்களும் நிழலுமாக இருந்த புளிய மரத் தெருவில் ஒரு நாதி இல் லை. இருந்தாலும் ஊரே கூடி அவரைப் பார்ப்பது போலவே தோன்றி யது. வந்த எரிச்சலை அடக்கியபடி போய்க் கொண்டி ருந்தார். அப்போது தான் சைக்கிளில் வந்து கொண்டிருந்த கந்தன், பரமசிவத் தைப் பார்த்ததும் நிறுத்தினான்.

'என்ன அண்ணாச்சோ, சட்டியெல்லாம் தூக்கிட்டு போறியோ, தூரமா?'

'அம்பாசமுத்ரம், அக்கா வீட்டுக்கு'

'பொங்க புடியா?'

'ஆமா'

'நல்லாருக்கே. இத நீரு சொமந்துட்டு போலாமா?'

-பரமசிவத்துக்கு இப்போது ஒரு மாதிரியாகிவிட்டது. தன்னைப் பற்றி அழகாகத் தெரிந்துவைக்கிறானே என நினைத்தவர், 'வேற என்ன பண் ண? கடமைல்லா' என்றார்.

'வேற என்ன பண்ணவா? நில்லும்யா, கொண்டாரும் அதை' என்றவன் அவரின் தலையில் இருந்து சட்டியை இறக்கினான்.

'இதெல்லாம் என்னய மாரி ஆளுட்ட சொன்னா செய்யமாட்டனா? ஒம்ம அக்கா எனக்கு யாரு? மைனிதானே. எம் மைனி வீட்டுக்கு நான் கொண்டுபோயி கொடுத் துட்டு வரமாட்டனா? நம்மளலாம் மனுஷ னாவே மதிக்காதீரும்' என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டவன், சருவச் சட்டிக்குள் கிடப்பதைப் பார்த்தான்.

அம்பாசமுத்ரம் வண்டிமறிச்சம்மன் கோயிலு பக்கத்து தெருவுக்குள்ள போனா, நாலாவது தட்டடி வீடுதான மைனி வீடு? எனக்கு தெரியும். போரும், நா போயி கொடுக்கேன், ஒங்க வீட்டுல தந்தாவோன்னு. நீரு போயி இப்படி இதத் தூக்கிட்டு போலாமா? ஊருக்குள்ள ஒம்ம மரு வாதி என்ன? அந்தஸ்து என்னவே? நாலு வார்த்த பேசுனீருன்னா, ஊரே அசந்து போயி நிக்கி. நீரு இத தலையில தூக்கிட்டுப் போறே ரே?' என்று கந்தன் அக்கறையாகச் சொன்னதில் குளிர்ந்து போனார் பரமசிவம். இது ஒருவகையில் அவருக்கு நிம்மதியாகவும் இருந்தது.

சருவச்சட்டியைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் அனச்சியிடம் சொன்னார் விஷயத்தை.

'பொங்க புடிய இன்னொருத்தங்கிட்டயால கொடுத்து விடுவ, அலுச்சாட்டியம் புடிச்சவனெ?. ஒன் எமத்துல நிக்க முடியல கோட்டிப் பயல?' என்று ஏசத் தொடங்கினாள். 

'அவெ என்ன இன்னொருத்தனா, சொந்தக்கார பயதான?'

'ஆமா. இவனுக்கு அங்க பொண்ணுலா கெட்டியிருக்கு?. சொந்தக்கார னாம் சொந்தக்காரம். அந்த மூதியே ஒரு திருட்டு நாயி...'

அனச்சி திட்டியது போல்தான் நடந்தது. கந்தன் புது சருவச்சட்டியைக்  பத்திரமாகக் கொண்டு போய் விற்றுவிட்டு, பணத்துடன் ஓடி போய் விட்டான். விஷயம் ஊர் முழுவதும் தெரிந்து நாறிவிட்டது. 

'இருந்திருந்தும் திருட்டுப் பயட்ட போயிலா, கொடுத்திருக்காம்' என்று எக்கா ளம் பேசினார்கள். கடைகளில் அவன் சென்றால் எடக்குத்தான். அவமா னமாகிவிட்டது பரமசிவத்துக்கு. இப்படிக் கேவலப்படுவோம் என்று தெரிந்திரு ந்தால் அவனே கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்திருப்பான். இந்தச் சம்ப வத்துக்குப் பிறகு, சொந்த வீட்டுக்காகத் துரும்பை கூட தூக்கிப்போடாதவன் என்ற பெயர் பரமசிவத்துக்கு வந்திருந்தது. அப்படிப்பட்ட பரமசிவம், இப்போது மரியாதைக்குரியவர் ஆகியிருந்தார் ஊரில். 

கடையில் இருப்பவர்கள், அங்கிருந்து கிளம்புவதாகத் தெரியவில்லை. இரண்டு சிகரெட்டுகள் காலியானதுதான் மிச்சம். இப்போது தைரி யத்தை வர வழைத்துக்கொண்டு, கடைக்குப் போனார். நம்பியார், அவரை அதிசயமாகப் பார்த்தார்.

'என்ன பரம்சம்?

'அரிசி...' என்று பையை நீட்டினார். வார்த்தை முழுவதுமாக அவரிடமிருந்து வெளிவரவில்லை. எல்லாரும் தன்னையே பார்ப்பது போல  ஒர் உணர்வு.
'எவ்ளவு?'

'ரெண்டு கிலோ' என்று பேச்சை நிறுத்தி, விரலைக் காண்பித்தார், அளந்து பையில் போட்டுவிட்டு, 'வேற?' என்றார் நம்பியார். 'துட்டு பெறவு தாரேன்' என்று சொல்லும்போது பரமசிவத்தின் முகம் முற் றிலும் மாறியிருந்தது. நம்பியார் வேறெதுவும் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டினார். அரிசையைத் தூக்கிக்கொண்டு வெளி வரும்போது எதையோ இழந்துவிட்டுச் செல்கிற, அல்லது தன்னையே மொத்தமாகத் தொலைத்துவிட்டு செல்வது போல தோன்றியது.  எப் போதும் எங்கும் நிமிர்ந்து செல்கிற பரமசிவம் த லையைத் தொங்கப் போட்டபடி சென்றார். 

வீட்டில் கிருஷ்ணவேணியின் முன், அரிசி பையை வைத்துவிட்டு ஏறிட்டுப் பார்த்தார். அவள் புரிந்துகொண்டவளாக அதை எடுத்துக் கொண்டு அடுக்க ளைக்குப் போனாள். இன்னும் அவரிடம் கோபமாகப் பேச அவளின் தொண் டைக்கு வார்த்தை வந்தது. அடக்கிக் கொண் டாள். 'அரிசி வாங்கிட்டேரு. காய்கறி?' என்ற கேள்விதான் அது. தன் புருஷன் இந்தளவுக்கு போன தே பெரிய விஷயம்தான் என்கிற யோசனையும் அவளுக்குள் வந்தது. வீட்டில் ஈராய்ங்கம் அதிகமாக இருந்தது. அதை வைத்து ஈராய்ங்கக் குழம்பு அல்லது மொட்டைக் குழம்பு வைத்து விடலாம் என்று நினைத்து சமையலில் ஈடுபட ஆரம்பித்தாள். 

அரிசிப் பையில் இருந்து குத்துமதிப்பாக கொஞ்சம் அரிசியை ஈயச்சட்டிக்குள் சிந்தினாள் அவள். பிறகு களைய ஆரம்பித்தாள்.  வெட்டிக் காயவைக்கப்பட்ட காய்ந்த கருவை முட்கள் வாசலுக்கு மேற்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து நான்கைந்து கம்புகளை உருவினாள். அதை அடுப்புக்குள் வைத்து விட்டு, காய்நத தென்ன ஓலைகள் நான்கைந்தை எடுத்து தலைகீழாகப் பிடித்து தீப்பற்ற வைத்தாள். கப்பென்று பற்றிக்கொண்டதும் அடுப்புக்குள் வைத்தாள். புகை பரவ ஆரம்பித்தது. 

பரமசிவம் சட்டையைக் கழற்றி கொடியில் போட்டுவிட்டு, தோளில் சிகப்பு நிறத் துண்டை அணிந்துகொண்டு கட்சி ஆபிசுக்குப் போனார். 

(தொடர்கிறேன்)

2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

நல்லா இருக்கு, தொடருகிறோம்.

ஆடுமாடு said...

நன்றி பாஸ்கர்