Friday, November 6, 2015

சாமிகளின் கதை'நெசமாவால சொல்லுத?'

-பீடியை நன்றாக இழுத்துவிட்டபடி கேட்டான், ஒரு சொல். குளத்தின் கரை யில் உட்கார்ந்துகொண்டு, தாமரைமொட்டுக்குள் இருந்த பருப்பைத் தின்றுக் கொண் டிருந்த புனமாலை, 'பெறவு என்ன பொய்யாவே சொல்லுதேன்?' என்றான்.

'ஒரு சொல்' என்பது தெய்வத்தின் பெயர். காடே தெய்வமென்றாலும் காட்டுக் குள் பல தெய்வங்கள். அதில், ஒரு சொல், காட்டுத் தெய்வமெனச் சொல்வார் கள். சொல்வழி கேட்ட செவி, அது பற்றிய ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை.

ஒரு சொல்லின் அப்பா சுடலையாண்டி, மேற்கு தொடர்ச்சி மலைக்குள் இருந்த சிறு தெய்வம் ஒன்றின் பூசாரியாக இருந்தவர். நீண்ட ஜடை முடியும், தாடியும் நெற்றி நிறைய பட்டையும் காவி வேட்டியும் கொண்ட அவர், உடுக்கை அடித்து ஆடினால் சிவனே ஆடியது போல இருக் கும். அவரின் ஆக்ரோஷமும் முகத்தில் தெறிக்கும் அனலின் வெக்கையும் அப்படித்தான் தோன்றும். அதற்காக 'சிவன் ஆடுனதை நீ எப்பம்ல பாத்தே?' என்றெல்லாம் கேட்கக் கூடாது. அனு மானம்தான். அவர் தன் மகனுக்கு இப்படியொரு பெயரை வைத் திருக்கிறார் என்றால், அது சாமி பெயராகத்தான் இருக்க வேண்டும் என்பதும் அனுமானம்தான்.

ஆடுகளைப் பக்கத்துத் தோப்புக்குள் பத்திவிட்டு, தாமரைக்குளத்தின் அருகில் இருந்த பொத்தையின் நிழலில் உட்கார்ந்திருந்தார்கள் புனமாலையும் ஒரு சொல்லும். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. ஆடு, மாடு மேய்க்க வருப வர்களுக்கு இது, வெயிலுக்கு இளைப்பாறும் இடம். மதிய சாப்பாட்டை இங்கு தான் சாப்பிடுவார்கள். தாமரைக்குளத்தின் கலங்காத, ருசிகொண்ட தண் ணீரும் இங்கு சாப்பிடுவதற்கு ஒரு காரணம்.

பொத்தையின் மேல் ஏறிய தெண்டலை (ஓணான்) குறிபார்த்து கல்லால் எறிந்து விட்டு புனமாலைதான் ஆரம்பித்தான், 'சுடலை மாடசாமி கோயில்ல சுடலைக் கு இப்ப யாரு ஆடப் போறா தெரியும்லா?' என்று.

'வேற யாரு? மூக்காண்டிதான்' என்றான், ஒரு சொல்.

'இவங்கண்டாம். அவருக்கு கம்பு இல்லாம, இப்பலாம் நிக்கவே முடியாது. பெறவு எப்படி ஆடுவாரு?'

'கம்பை புடிச்சுட்டு ஆடுவாரு'

'அதுலாம் சரிபட்டு வருமாடே?'

'ஏன்டே?'

'அவருக்கு ஆட முடியாதுன்னுட்டு ஆள மாத்த போறாவுளாம்' என்றான் புனமாலை.

சுடலைமாடன் கோயில், ஆற்றுக்குப் போகும் வழியில் இருக்கிறது. ஆழ்வார்க் குறிச்சிக்குச் செல்லும் சாலையில் இருந்து கிழக்குப் பக்கம் எட்டிப் பார்த்தால் நான்கைந்து பெருமரங்களின் அடியில், துணைச் சாமிகளுடன் நின்ற படி சுடலை, நம்மைப் பார்ப்பது போலவே தோன்றும். 'என்னைய கும்பிடாம போற?' என்பதாகவோ, 'எனக்கு ஏதாது தந்துட்டு போ' என்று கேட்பதாகவோ,  இல்லையெனில், 'நான் இருக்கேன், துணைக்கு. நீ கவலப்படாம போ' என்று உறுதி கூறுவதாகவோ அதன் பார்வை இருக்கும். எது எப்படியிருந்தாலும் அங்கிருந்தபடி எங்கெங்கும் இருக்கும் அச்சுடலையின் வேர்களைக்  காத்தருளிக் கொண்டிருக்கிறார், வீராவேசம் கொண்டு.

ஒரு சொல்லுக்கு நினைவு தெரிந்து, சுடலைமாடனுக்கு ஆவேசமாக ஆடியது, கொம்பையா தாத்தாதான். அவரின் உயரமும் திடகாத்திரமான உடலும் சுட லையே நேரில் வந்து ஆடுவது போல இருக்கும். அவர் தொண்ணூறு வயதில் நெஞ்சு வலி வந்து இறந்து போனார். அந்த வயதுவரை ஒவ்வொரு வருடமும் ஆடிக்கொண்டிருந்தவர் அவர்தான். அவருக்குப் பிறகு சோமு தாத்தா ஆடினார். கொம்பையா தாத்தாவுடன் துணைக்கு ஆடிக் கொண்டிருந்தவ இவர், அவருக்குப் பிறகு சுடலைக்கு ஆடும், தலைமைச் சாமியானார். ஒரு மழை காலத்தில் திடீரென்று வந்த நோயின் காரணமாக, படுத்தப் படுக்கையாகி விட்டார்  சோமு தாத்தா. அவருக்குப் பிறகு சுடலைக்கு ஆடுவதற்கான ஆளைத் தேர்ந்தெடுக்க, சீட்டுக் குலுக்கிப் போடுவது என்று முடிவானது. 

கோயில் கொடை கமிட்டி சார்பில் அமைக்கப்பட்ட குழு, வரிக்காரர்களில் மொத்தம் ஆறு பேரை சுடலைக்கு ஆடுவதற்காகத் தேர்வு செய்திருந்தது. அதில் இரண்டு பேர், கட்டாயமாக விலகிக் கொண்டதால், மற்ற நான்கு பேரை தேர்வு செய்தார்கள். கடனாநதி அணையில் லஸ்கர் வேலை பார்க்கும் சுடலை யாண்டி, எப்போதும் தோப்பே கதி என்று கிடக்கும் சுருட்டு சுடலை, மாட்டு வண்டியை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டும் வண்டி சுடலை, சண்டை சச்சரவுகளில் முதல் ஆளாய் நிற்கும் சல்லிச் சுடலை ஆகிய சுடலைகள், சாமிக்கு ஆடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவரை சாமி பூடத்தின் முன், சீட்டு குலுக்கல் நடத்தி, தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தனர். 

ஒரு செவ்வாய்க்கிழமை அதிகாலையில், சாமியின் முன் போடப்பட்ட, சுருட் டப்பட்ட பேப்பர்களில் ஒன்றை, நான்கு வயது சிறுவன் ஒருவன் எடுத்து, விழா கமிட்டியாரிடம் கொடுக்க, அதில், சல்லிச் சுடலை என்ற பெயர் இருந்தது.  அதை மூன்று முறை வாசித்த விழா கமிட்டி, அடுத்த நொடியே சுருட்டப்பட்ட மற்ற பேப்பர்களை நார் நாராகக் கிழித்து எறிந்தனர். இதையடுத்து தலைமைச் சாமிக்கு ஆடும் வாய்ப்பு, அவருக்குச் சென்றது. கொடை கமிட்டியும் ஊரும் இதை ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள, சல்லிச் சுடலை, சாமி சுடலையானார். இப்படி, சாமி சுடலை ஆனதன் பொருட்டு, சாமிக்கு நேர்மையாக, அல்லது விசுவாசமாக இருப்பதற்காக, எப்போதும் கோயிலே கதி என்று கிடக்கலானார் சல்லி சுடலை. 

அந்தச் சாலை வழியாக, அதாவது தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி, ஆழ்வார்க்குறிச்சி, பொட்டல்புதூர், கடையம், தென்காசி மற்றும் இன்ன பிற ஊர்களுக்கு சைக்கிளில், மோட்டார் பைக்குகளில் செல்பவர்களும், வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி செல்பவர்களும் வழியில் சாமியை வணங்கிவிட்டுச் செல்பவர்களாக இருந்தனர். அவ்வாறு வணங்கு பவர்களுக்கு சாமியின் அருள் கொண்ட, திருநீறு பூசிவிடும் வேலையைச் செவ்வனே செய்துவந்தார் சாமி சுடலையான சல்லி சுடலை.

இவர் சாமி சுடலை ஆகி, சில மாதங்களுக்குப் பிறகு நடந்தது, மாடசாமி சார்வாளின் மகன் கல்யாணம். தாலி கட்டிய அன்று மாலையில், மேல ரைஸ் மில்லில் நடந்த சாராய விருந்தில், சாமி முன் நடந்த ஏமாற்று வேலை தெரிய வந்தது சொந்தக்காரர்களுக்கு. எல்லா சீட்டுகளிலுமே சல்லிச் சுடலையின் பெயரை எழுதி, கொடை கமிட்டியில் அதிகமாக இருந்த அவன் சொந்தங்கள் தங்கள் ஆசையை தீர்த்துக்கொண்ட தகவல், அங்குதான் பேசப்பட்டது. ஆனால், அதற்குள் ஒரு கொடை முடிந்துவிட்டதால் அதைப் பற்றி இனிமேல் பேசுவது நன்றாக இருக்காது என்று முடிவு செய்தார்கள். ஆனால், லஸ்கர் சுடலை யாண்டிக்கு இது பற்றிய கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண் டிருந்தது. 'சாமியவே ஏமாத்துதானுவளே. அவரு இவனுவள சும்மா விட்டுரு வாரா?' என்கிற கோபம் அது.

ஆனால் சாமியின் கோபமோ என்னவோ, தலைமைச் சாமி ஆன பின் நடந்த நான்காவது கொடைக்கு முந்தைய வாரம், பாம்பு கடித்து இறந்து போனார் சல்லி சுடலை. சிவசைலத்துக்கு மேற்கே கூவிலை பறிக்கப் போன அவரை அங்கிருந்து பிணமாகத்தான் தூக்கி வந்தார்கள். இலையை அறுக்கிறேன் என்று அதில் உறங்கிக்கொண்டிருந்த அல்லது ஏதோ செய்துகொண்டிருந்த பெருந்தடியான சாம்பல் நிறத்து நல்ல பாம்பை அறுத்துவிட்டார் சல்லி சுடலை. அரிவாள்  நுனி பட்டதுமே எகிறிய பாம்பு. சுடலையின் முகத்தில் கொத்தி விட்டு ரத்தக் காயத்தோடு சென்றதை, தான் பார்த்ததாகச் சாட்சி சொன்னான் அவருடன் கூவிலைப் பறிக்கப் போன பச்சைமுத்து.

இது, சாமி வேலைதான் என்று லஸ்கர் மட்டும் நம்பிக்கொண்டிருந்தார். 'சாமிய ஏமாத்துனா, எவ்வளவு நாளுதாம் பொறுப்பாரு. அதான் பலி வாங் கிட்டாரு. நல்ல பாம்பு யாருங்கெ. சிவம்லா. சாமின்னா அவரே நேராவா வந்து கொல்லுவாரு? இப்படித்தான் ஏவி விடுவாரு' என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் லஸ்கர். 

இவருக்குப் பிறகு விழா கமிட்டியே, மூக்காண்டியை தலைமைச் சாமி ஆக் கியது. அவர்தான் சில வருடங்களாக  ஆடிக் கொண்டிருக்கிறார். அவர் உடலில் சாமி எப்படி இறங்குகிறது என்பதை நேரில் பார்க்கும்போதே தெரியும். சாமி பூடத்தைப் பார்த்து இரு கைகளையும் குவித்து கும்பிட்டுக் கொண் டிருப்பார். கொட்டுச் சத்தம் காதைப் பிளக்க, அமைதியாக கண்களை மூடி சாமி யை பார்த்துகொண்டிருப்பவர், 'ஏய்' என்கிற பெருஞ்சத்தத்தோடு ஒரு குதி குதிப்பார். அந்த குதியில் பூமி அதிரும். ஆற்றில் இருந்து அடித்துப் போடப் பட்டிருக்கிற மணல் பிளந்து, அவரின் கால்கள் பதிந்த இடம் மட்டும் தனியாகத் தெரியும். அப்போது திருகிய மீசை கொண்ட அவரது முகத்தைப் பார்க்க பயமாக இருக்கும். ஒரு ஈ, காக்கா சத்தம் இருக்கது அங்கே. ஆடி முடிந்ததும் அவரிடம் திருநீறு பூசினால் நினைத்தது நடக்கும் என்பார்கள் ஊர்ப் பெண்கள்.

அவரது சொந்த வயல் மற்றும் தோப்பு கோயிலுக்கு அருகிலேயே இருப்பதால் எப்போதும் கோயிலில் தான் இருப்பார் அவரும்.

இப்போது அவருக்கு கால்களில் பிரச்னை. எழுபது வயதுக்கு மேல் ஆகிவிட்ட மூக்காண்டி, மகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க, தென்காசிக்குப் போன போது, ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் இரண்டு கால்களிலும் அடி. மருத்துவ மனை சென்று சரியாகி வந்துவிட்டாலும் முதுமை காரணமாக, இப்போது நடக்க சிரமப்படுகிறார். கம்பை ஊன்றிக்கொண்டுதான் நடந்து கொண்டிருக்கிறார். இந்தக் காலை வைத்துக்கொண்டு இவர், எப்படி சாமி யாடுவார் என்கிற கேள்விகள் ஊருக்குள் எழுந்திருந்தன. இவருக்கு அடுத்தப் படியாக சாமியாடிக் கொண்டிருக்கிற, குட்டிக்கும் மூக்காண்டிக்கும் ஏற்கனவே வாய்த்தகராறு ஒன்று, கணக்கில் இருக்கிறது.

ஊரில் காத்து கருப்புக்குப் பயந்த பெண்களுக்கும் நோய், நொடி கொண்ட வர்களுக்கும் குட்டி, முகத்தில் தண்ணீர் எறிந்து திருநீறு பூசி வந்தான். அவன் கைராசியோ, சாமி அருளோ, அவன் தண்ணீர் எறிந்தால் குணமாகிவிடுகிறது என்கிற பேச்சு ஊரில் பரவ, அதில் பிரபலமாகியிருந்தான் குட்டி. வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளின் மாலை நேரங்களில் குட்டியைப் பிடிக்க முடியாது. ஊரில், ஏதாவது ஒரு தெருவில் தண்ணீர் செம்பும் திருநீறுமாக அலைந்து கொண்டிருந்தான் அவன்.

இது தலைமைச் சாமியான, மூக்காண்டிக்குப் பிடிக்கவில்லை. தலையொன்று இருக்கும்போது வாலொன்று ஆடலாமா? என்கிற கோபம் அவருக்கு எழ, மனதுக்குள் வைத்துக்கொண்டிருந்தார். கடந்த கொடைக்கு கோயிலில் கால் நாட்டியபோது, எல்லோருக்கும் திருநீறு பூசிவிட்ட மூக்காண்டி, குட்டிக்குப் பூசும்போது திடீரென சாமியாடினார். பிறகு, 'எங்கிட்ட கேக்காம, இனும யாருக்கும் நீ திருநாறு பூசக் கூடாது. இது சுடலை வாக்கு, ஆமா. சொல்லுதத கேட்கணும்?' என்று அதட்ட, அந்த இடத்திலேயே சாமியை எதிர்த்து, 'யார்ட்ட வந்து என்ன பேசுத? போ வே' என்று கூறி விட்டான் குட்டி. 

'சாமிய எப்படி எதுத்துப் பேசலாம்?' என சிலர் பிரச்னைக்கு வர, பிறகு சொந்த பந்தங்கள் வந்து சமாதானப்படுத்தினார்கள்.

'நீ சுடலைக்கு ஆடுதனா, நானும்தான் சுடலைக்கு ஆடுதேன். என்னைய திருநாறு போடக்கூடாதுன்னு சொல்லுததுக்கு, இவரு யாரு? என்னய கூப்பிடுதாவோ, போறேன். உம்மையும் கூப்புட்டா, போவ வேண்டியதான. போவக் கூடாதுன்னு எப்படி சொல்வேரு?' என்று குட்டிக் கத்த, அவன் பொண்டாட்டியும் அவனுடன் சேர்ந்து கொண்டாள்.

'அவருட்ட யாரும் திருநாறு பூசமாட்டாக்காவோலா, அந்த பொறாமையில பேசுதாரு. இவரு யாரு என் புருஷன பேச? சாமி என்ன அவரு வீட்டு சொத்தா?' என்று சேலையை இடுப்பில் இழுத்துக்கட்டிக் கொண்டு அவளும் களத்தில் குதித்தாள். சுடலையின் முன் பெருங்கூப்பாடு. ஒரு வேளை இதுவும் அவரின் திருவிளையாடல்களில் ஒன்றோ என்னவோ?

பிறகு மூக்காண்டிக்கு ஆதரவாகச் சிலரும் குட்டிக்கு ஆதரவாகச் சிலரும் தனித் தனியாக நின்று பேசத் தொடங்கினர். சிறிது நேரத்துக்குப் பிறகு கோயிலுக்கு வெளியே வந்த குட்டி, பீடியை எடுத்துப் பற்ற வைத்தான். இதற்கு  முன் என் றால், மூக்காண்டியின் முன் அவன் பீடி குடிக்க மாட்டான். மரி யாதை. இப்படி சண்டை வந்த பிறகு,  'இனும என்ன மாரியாத வேண்டி கெடக்கு இவனுக்கு?' என்று பற்ற வைத்து இழுத்தான். இவ்வளவுக்கும் மூக் காண்டி, அவனுக்கு சித்தப்பா. 

சண்டைக்குப் பின் கொஞ்சம் கர்புர் என்றே, போன வருட கொடை நடந்தது. அப்போதே மூக்காண்டிக்குச் சாமியாட முடியாமல் மூச்சிறைத்தது. அடிக்கடி ஓரமாக உட்கார்ந்துகொண்டார். சாமக்கொடைக்கு எப்போதும் வேகவேக மாகச் சுடுகாட்டுக்கு ஓடும் சாமி, வேகம் குறைந்து மெதுவாகவே செல்ல முடிந்தது. இப்போது கம்பு இல்லாமல் அவரால் நடக்க முடியவில்லை. அவர் இல்லை என்றால் அடுத்த தலைமைச்சாமி, குட்டிதான் என்று ஊரில் பேசிக் கொண் டார்கள்.

நான்கைந்து வெள்ளாட்டங்குட்டிகள் வெயிலுக்குப் பயந்து இவர்கள் அமர்ந் திருந்த பொத்தைக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டிருந்தன. ஒரு சொல், தின்றுகொண்டிருந்த அவிச்ச புளியங்கொட்டையில் ஒன்றை எடுத்து, ஓர் ஆட் டின் பின்பக்கம் எறிந்தான். அது, எந்தச் சலனமும் இன்றி அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு அப்படியே நின்றது. 

'மூக்காண்டி இல்லன்னா, குட்டிதாம் ஆடுவாம்? என்றான் ஒரு சொல்.
'நானும் அப்படிதான்டே நெனச்சேன்'
'பெறவு?'

'அவனும் இல்லையாம்?'

'ஏம்ல?

'ஏம்லன்னா? குட்டிக்கு என்ன வயசு இருக்குங்க. நாப்பது, நாப்பத்திரெண்டு இருக்கும். அவன் ஆடுனா, பெரிய ஆளுவோள்லாம் அவனை கும்பிட முடி யுமா?'

'ஏல, சாமின்னு வந்துட்டா, பெரியாளு, சின்னாளுன்னு பாக்க முடியுமா? யாரு ஆடுனாலும் சாமிதான?'

'அப்டியில்லலா. வரை முறை வேண்டாம்?

'என்ன வரைமுறை வேணுங்க?

'நீ சாமி ஆடுனா, நான் கும்புடுவேன்டே. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு வயசு, ரெண்டு வயசு முன்னப் பின்ன இருக்கும். ஒங்கப்பா கும்புடுவாரா, உன்னைய? இல்ல எங்கய்யாதான் கும்புடுவாரா?'

'இது என்னல புது கதையா இருக்கு?'

'அது அப்படித்தான்டே. அதான் வயசான ஆளா தேடியிருக்காவோ. லஸ்கருக்கு சக்கரை நோயாம். அஞ்சு நிமிஷத்துக்கு மேல நிய்க்கவே முடியா துன்னுட்டாரு. கல்ற குறிச்சா மவனை கேட்டிருக்காவோ, அவரு, 'எம்பொழப் பை  பாத்தாதான்  கஞ்சி குடிக்க முடியும். இதுல நான் என்னத்த சாமி யாட?'ன்னுட்டாராம். வாத்தி யாரைக் கேட்டுருக்காவோ. 'அவரு. இவ்வளவு வயசுக்கு மேல நான் சாமியாடி என்னத்தப் பண்ணப் போறேன்'ன்னு சொல் லிட்டு நவுண்டுட்டாராம். போலீஸ் காரரு மொட்டை மணி, கோயிலு கோயி லுன்னு எப்பவும் பேசிட்டிருப்பாரு. இப்பம் பாத்தா, 'ஆத்தாடி என்னைய விட்டு ருங்கப்பா'ன்னு சொல்லுதாராம். இப்படி, ஒரேடியா யாருமே ஆடலைன்னா, எப்படி கொடைய நடத்த? கமிட்டியில வேற அவ்வளவு ரூவா வச்சிருக்கானு வோ?'

'இது என்னல,  சுடலைக்கு வந்த சோதனையா?. 

'சோதனைதான் போலுக்கு. இன்னும் நாலஞ்சு பேர்ட்ட கேட்டிருக்காவோ. யாரும் ரெடி இல்ல பார்த்துக்கெ. பெறவு கமிட்டியில புதுசா ஒரு முடிவெடுத் தாச்சு'

'என்ன முடிவ எடுத்தானுவோ?'

'ஆழ்வாருச்சி கோயில்ல சாமியாடுதாருல்லா, சூச்சாரு, அவரை கூட்டிட்டு வந்து சம்பளத்துக்கு ஆட பேசிருக்காவோ'

'சம்பளத்துக்கு சாமியாடவா? நெசமாவால சொல்லுத?

'பின்ன , பொய்யாவே சொல்லப் போறேன்?'

'சம்பளத்துக்கு கொத்த வேல பாக்கலாம், வயல்ல வேலை பாக்கலாம்.  கோயில்ல கூலிக்கு ஆடுனா எப்படில? ஒரு எழவும் புரிய மாட்டேங்கே?'

'இங்கரு, வெஷயம் கமிட்டியை தாண்டி ஒருத்தனுக்கும் தெரியாது. எங்க சின் னைய்யா, எங்க சித்திட்ட பேசிட்டிருக்கும்போது, எங்காதுல விழுந்தது'

'ம். உருப்புடும். இதுக்கு குட்டியவே ஆட சொல்லிருக்கலாமே?'

'நீயும் நானும் சொன்னா யாருல கேப்பா?

'ஊர்க்காரங்ககிட்ட, 'ஆழ்வாருச்சிக்காரரு மேலதான் சாமி வந்திருக்கு. சாமி தான் அவரு கனவுல வந்து சொல்லிருக்கு. அவருதான் இனும ஆடுவாரு'ன்னு சொல் லப் போறாவுளாம்' என்ற புனமாலை, தூக்குச் சட்டியில் சோற்றுக்குத் தொட்டுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கும் ஈராய்ங்கத்தில் இரண்டை எடுத்துக் கடித்தான். 

ஒரு சொல், தாமரைகுளத்தில் போய் தண்ணீர்க்குடித்துவிட்டு வந்து மணலில் உட்கார்ந்தான். 

'சம்பளத்துக்கு சாமியாடுதவனுக்கு அருளு எப்படில வரும்?'

'இப்பம் மட்டும் என்ன மூக்காண்டி, அருளு வந்தா ஆடிட்டு இருக்காரு?'

ஒரு சொல் அமைதியாக இருந்தான். 

'கோழிப்பண்ணைக்காரன் சும்மா கிடைக்குத குருணையை வெலை கொடுத்து வாங்கிட்டு போவ ஆரம்பிச்சுட்டான். ரியல் எஸ்டேட்காரனுவோ, வயலு வோள எல்லாம் மனை ஆக்கிட்டானுவோ. கோயில்ல வில்லு பாடுனா, நாலஞ்சு கெழடு கட்டைலுதான் உக்காந்திருக்குவோ. எருக்கெடங்குல இருந்து சாணி யள்ளி வயலுக்கு உரமா போட்டதெல்லாம் ஒரு காலமாயிட்டு. இப்பம் சாமியவும் இப்படி ஆக்கிட்டானுவன்னா எப்படில?' என்று நினைத்த ஒரு சொல், ஆடுகளைத் தேடிப் போனான்.

அன்று வயல் அறுவடைக்கு நாள் குறித்துவிட்டார்கள். அறுப்புக்கு முன்பாக, சுடலையை கும்பிட்டுவிட்டுதான் வேலையைத் தொடங்குவது வழக்கம். காலையிலேயே வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. ஏழரை மணி தேவி பஸ், அம்பாசமுத்திரம் நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. கோயில் முன்,  சொந்த பந்தங்கள் கூடியிருந்தார்கள். குட்டி, சாமிக்கு தீபாரா தனைக் காட்டிவிட்டு எல்லோரிடமும் சூடன் தட்டை நீட்டினான். கும்பிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். அமைதியாக இருந்த கோயிலில் திடீரென  'ஏய் ஏய்' என்று சத்தம். எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். ஒரு சொல் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு சாமி வந்திருந்தது

கண்களை மூடி, நான்கைந்து முறை ஏய் ஏய் என்ற சத்தம் எழுப்பியபடியே வேகமாகச் சுற்றிச் சுற்றி சாமி பூடத்தின் முன் விழுந்தான். அவன் முகத்தில் புழுதி அப்பியது. திடீரென ஆவேசத்தோடு எழுந்தான். நாக்கைத் துறுத்தியபடி சாமியின் பீடத்தைப் பார்த்து நின்றவாறே ஆடினான். இரண்டு பேர் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடம் இருந்து திமிறுவதுபோல முன்னும் பின்னும் சென்றுகொண்டு பீடத்தையே பார்த்தபடி நின்றான். பிறகு, 'எனக்குத் தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கியோ? என்னயா யாருன்னு நினைச்சே?' என்று சொல்லிவிட்டு உறுமினான். உதட்டைக் கடித்தான். மொத்த க்கூட்டமும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. 

'நான் சொல்லுதத கேளு. என் முன்னால, குட்டிதான் ஆடணும். அசலூர்க் காரனை  இங்ஙன ஆட விடக்கூடாது ஆமா. அப்படி ஆடுனா அனுபவிப்பியோ, ஆமா. நான் என்ன செய்வேன்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும்? ம்ம்ம்' என்று சொல்லிவிட்டு மீண்டும் உதட்டைக் கடித்தான் ஒரு சொல். பிறகு தொப் பென்று விழுந்து மயங்கினான். 

அவனுக்கு இரண்டு பெண்கள் முகத்தில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருக்க, 'என்னல சாமி இப்படி சொல்லுது? அசலூர்க்காரன் எவன் இங்க வந்து ஆடப் போறான்?' என்று ஊர்க்காரர்கள் ஆச்சரியமாகப் பேசிக் கொண் டார்கள். 'நம்ம பேசுனது சாமி காதுல விழுந்துட்டடே, பாரேன்?' என்று கிசுகிசுத்தப்படி விழா கமிட்டியினர்  ஒருவரையொருவர் பார்த்துக் கொண் டிருந்தனர்.

-நன்றி
தினகரன் தீபாவளி மலர்

4 comments:

Anonymous said...

It is really nice to see you are writing again. It is awesome to read it.

Augustine

Nagendra Bharathi said...

அருமை

துபாய் ராஜா said...

அருமை அண்ணாச்சி.

முள்ளை முள்ளால் எடுப்பது போல் ஒரு சொல்ல சாமியாட வச்சு சாமியாடி யாருன்னு சுடலை காமிச்சுட்டாருல்லா...

ஒரு சொல் தெரிஞ்சு செஞ்சானா, இல்லை நிஜமாவே சாமியாடினாங்கிறதுதான் கதையோட ட்விஸ்ட்டே...

ஆடுமாடு said...

அகஸ்டின் சார், நாகேந்திர பாரதி நன்றி.


நன்றி ராஜா அண்ணாச்சி.