Sunday, November 8, 2015

ஆங்காரம் வாசிப்பனுபவம் ரிப்போர்ட்: மதுமிதா


ஏக்நாத் எழுதிய ஆங்காரம் நாவல் வாசிப்பனுபவ பகிர்வுன்னு நண்பர் கவிதாபாரதி பேஸ்புக்கில் போட்டிருந்த டேக் அழைப்பைப் பார்த்ததும், காலம் அனுமதித்தால் அவசியம் வருவேன் என்று பதிலும் பேஸ்புக்கில் போட்டிருந்தேன். ஆனால் போகமுடியுமா என்பது அன்றைக்கு வரை முடிவாகவில்லை. அதுவுமில்லாமல் நாவல் வாசிக்கவுமில்லை. நாவல் குறித்த பகிர்வுகளையும் வாசித்திருக்கவில்லை.

ஒரு இனிமையான மழை நாள். தொடர் மழை. துவைத்து வெளியில் காயப்போட்ட துணிகளையெல்லாம் பால்கனியிலும் காய வைக்க முடியாமல் அடித்து ஆடும் மழை. துணிகளை வீட்டுக்குள்ளேயே எடுத்துப் போய், ஈரத்தின் நாற்றம் வந்துவிடக்கூடாதே என்று மனமின்றியிருந்தாலும், காய வைக்க இடம் தேடித்தேடி வேறுவழியில்லாமல் காயப்போட்டு வைத்த மழை நாள். இந்த மழை நாளுக்கான ஒரு சிறப்பு என்னன்னா ஒரு நினைவை எழுப்பி இன்னொரு நினைவுடன் தொடர்புப்படுத்தி, இப்படியாக சங்கிலித் தொடர்பான நினைவலைகளை எழுப்பிவிட்டு விடும். மழைநாள் குறித்து இன்னொரு மழைநாளில் பேசிக்கலாம்னு, ஒருவழியாக நிகழ்ச்சிக்குப் போகலாம் என்னும் முடிவுக்கு வந்தாகிவிட்டது.

சரியான நேரத்துக்கு நிகழ்வுக்கு போய்விட முடியுமா என்னும் அளவில் மழையால் போக்குவரத்து பழக்கூழ். அதாங்க டிராபிக் ஜாம். மேடும் பள்ளமுமான சாலையெல்லாம் வெள்ளக்காடு. சாலையின் ஓரங்களில் நீர்வடிந்து போக கால்வாய்களே இல்லை. வண்டிகள் எப்படியோ போய் விடுகின்றன. நடந்து செல்லும் மக்கள் எங்கே எப்படி நடந்து போகமுடியும். சென்னை மாநகரின் சாலையின் இரண்டு ஓரங்களிலும் கொஞ்சம் இடமிருந்தால் படகு ஓட்டலாம்.

அப்படி இப்படியென்று டிஸ்கவரி புக் பேலஸ் வரும்போது மணி 5.30. அழைப்பிதழில் 5 மணிக்கு நிகழ்வு என்று இருந்தது. சரி எப்படியும் ஆறு மணிக்கு ஆரம்பிச்சிடுவாங்க என்று உள்ளே போனால், அரங்கில் இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர் ஏக்நாத் அமர்ந்திருப்பது தெரிந்தது. தம்பி வேடியப்பனிடம் சில புத்தகங்கள் எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு ஆங்காரம் நாவலையும் வாங்கிக் கொண்டேன்.

இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது நமக்கு ஒத்த தெரிந்த நண்பர்கள் ஒன்றிரண்டுபேர் அல்லது யாருமே இல்லையென்றால் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கும். என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, வேடியப்பன் எப்போதும் சொல்வதுபோல் இப்போ ஆரம்பிச்சிடுவாங்க அக்கா நீங்க உள்ளே போய் உட்காருங்க என்றார். அவர் அப்படி சொன்னாரென்றால் இன்னும் அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் ஆகும் என்பதை இதற்கு முன்பு நடந்த இரண்டு கூட்டத்தில் பார்த்திருந்த நினைவு வந்தது. எழுத்தாளர் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். பர்த்ருஹரி சுபாஷிதம் சந்தியா பதிப்பகத்தில் வரவேண்டுமென்பதை முடிவு செய்தவர் சுந்தரபுத்தன். ஒரு பத்து வருடம் கழித்து அதற்கான நன்றியை இந்தச் சந்திப்பில் தெரிவித்தேன்.
நிகழ்வு ஆரம்பிக்க நேரமானால் வீட்டுக்குத் திரும்ப நேரமாகிடுமோ என்று தோன்றுகையில், கவிதாபாரதி உள்ளே வந்தார். ஆங்காரம் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டார். பேப்பர் வேண்டும் என்று தனியாக ஒரு ஓரத்துக்கு அவரும் சுந்தரபுத்தனும் போய் அமர்ந்துகொண்டார்கள். நான் வெளியில் நிற்கவும் முடியாமல் அரங்கின் உள்ளே போய் அமர்ந்து கொண்டு ஆங்காரம் வாசிக்க ஆரம்பித்தேன்.


எப்போதும் முன்னுரையை கடைசியாகத்தான் வாசிப்பேன். இன்று நாவல் குறித்து ஏதும் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பு கொஞ்சமாவது தெரிய வேண்டுமென்பதற்காக முதலிலேயே வாசித்து விட்டேன். சுகாவின் முன்னுரையின் கடைசி பத்தி வண்ணதாசன் எழுத்தில் எழுதியது போலவே இருந்தது. ஒரு பேஸ்புக் நண்பர் வந்தார். (நண்பர் மன்னிக்க. பெயரை சட்டென்று இப்போது மறந்துவிட்டேன்) அந்த பேஸ்புக் நண்பரும் சுந்தர புத்தனும் பேசியபின் அரங்கில் இன்னும் இயல்பாக நான் இருக்க முடிந்தது. அதிஷா, பாஸ்கர்சக்தி, அஜயன்பாலா 2 நிமிடங்கள் பேச முடிந்தது.
மேடையையும், சுற்றிலும் இருப்பவர்களையும் இயல்பாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். டீக்கடை சிந்தனையாளர் பேரவையின் பேனரை கொஞ்சம் இஸ்திரி போட்டு தொங்க விட்டிருக்கலாமோ, இரண்டு கிளாசுக்குக் கீழே ஒரு சிகரெட் படம் போட்டு அதை பெருக்கல் குறி போட்டு அடித்து வேறு வெச்சிருக்கிறாங்க, என்ன காரணமாயிருக்கும், புகைபிடிக்கக்கூடாதுன்னு சிம்பாலிக்காக போட்டிருப்பாங்களோ என்னும் யோசனையில் இருந்த போது சட்டென்று கவிதாபாரதி உள்ளே வந்தார். முன்னால் கொஞ்ச நேரம் அமர்ந்து வசந்தபாலனுடனும் ஏக்நாத்துடனும் பேசினார். சட்டென்று மேடையில் மைக்கை எடுத்ததும் ஆஹா நிகழ்ச்சி ஆரம்பிச்சிட்டாங்க என்று நிம்மதி பெருமூச்சுடன் ஆசுவாசமாயிருந்தது. நிகழ்ச்சியை இன்னும் பத்து நிமிடங்களில் ஆரம்பிச்சிடலாம் என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார். இங்கே அரங்கில் இராணுவ அமைதி. எனக்கு அமைதியாக இருக்கும் இடங்கள் மிகவும் பிடிக்கும். இந்த புத்தகத்தை வாசித்துவிட இன்னும் நேரம் இருக்கிறதுன்னு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாலும், இலக்கிய கூட்டங்களில் நிகழ்ச்சி நடக்கும் போதே, அந்த மைக்கையும் மீறி இங்கே பார்வையாளர்களின் பேச்சுச் சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே பார்வையாளர்கள் அமைதியாக இருக்கிறாங்களேன்னு திரும்பித் திரும்பி வேறு பார்த்தேன். சின்ன அரங்கு என்பதால் சத்தம் கேட்கும் என்று பேசாமலிருக்கிறார்களோ என்று மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தேன்.
அன்றைய மழைநாளின் இனிமையை இன்னுமொருமுறை நினைவு கூறும் விதமாக, சில வரிகள் கிடைத்தன. மழையின் சத்தம் இனிமையாக இருக்கிறது. அது சோவென பெய்யவில்லை. வேறு ஓர் இனிமையான சத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து வாசித்தேன். இரண்டாம் அத்தியாத்தில் வண்ணாத்தி, பேயான கதை ஊரில் எல்லோரும் அறிந்தது தான் என்னும் வரி வரும்போது, முதல் அத்தியாயத்தின், பேய் பிடித்த பெண்கள் தலைவிரித்தாடுவது போல, தென்னை மரங்கள் அங்கும் இங்குமாக சத்தத்துடன் அலைந்து கொண்டிருந்தன, வரிகள் நினைவுக்கு வந்து வேறு ஒரு நுட்பத்தை நினைவு படுத்தியது.

28 ஆம் பக்கம் வரை படித்து முடிக்கும்போது, பரீட்சைக்கு கடைசி நிமிடத்தில் படிப்பது போலிருக்கிறது என்று புத்தகத்தை மூடிவைத்தேன். மீதியை நிதானமாக வீட்டுக்குப் போய் வாசிக்கலாம் என்று.

கவிதாபாரதி அரங்கின் உள்ளே வந்தார். இரயில் இன்னும் பத்து நிமிடத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுன்னு சொல்வது போல, மறுபடியும் இன்னும் பத்து நிமிடத்தில் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறோம்னு சொல்லிடுவாரோ என்று பார்க்கும்போதே, மேடைக்கு ஒவ்வொருவராக அழைக்க ஆரம்பித்துவிட்டார். மாரிசெல்வராஜ், ஏக்நாத், வசந்தபாலன் மேடையில் அமர்ந்தனர். கரு. பழனியப்பன், கவிஞர் வித்யாஷங்கர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார். நிகழ்வின் ஆரம்பமாக சுந்தரபுத்தன் சுகாவின் முன்னுரையை வாசிப்பார் என்றதும், சுந்தரபுத்தன் புத்தகத்துடன் மேடைக்குச் சென்று மைக்கில் பேச….. அப்போது வசந்தபாலன் அதை வாசித்துவிட்டால் நாங்க என்ன பேசுவது என்று சொல்ல சுந்தரபுத்தன் திரும்பி வந்துவிட்டார். இப்போது கவிதாபாரதி முதலில் கடங்கநேரியான் பேசுவார் என்றவர் புகழ் பெறும் மனிதர்களைப் பற்றி இரண்டு பிரிவுகளைக் கூறி இரண்டாவது பிரிவு கடங்கு என்று சொல்லி 5 நிமிடங்கள் பேசுவார் என்று அவரைப் பேச அழைத்தார். சில விஷயங்களை இதற்குப் பிறகு குறிப்பாக மட்டுமே தான் சொல்ல வேண்டும். காணொளி சுட்டி கிடைக்கும்போது முழு பேச்சின் சுவாரஸ்யத்தை விரிவாக நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஹரி வந்து பேச ஆரம்பித்தார். கீழே வரும்போதே அண்ணன் பேசச்சொன்னாரு… அண்ணன் சொன்னதால் மாட்டேன்னு சொல்லாமல் பேச வந்தேன், அங்கே 3 நிமிஷம்னு சொன்னார், இங்கே 5 நிமிஷம்னு சொல்லிட்டார், எந்த தயாரிப்புமில்லாமல் திடீருன்னு பேச வேண்டியிருக்கு என்று தனது ஊரின் தனது மக்களின் தெய்வங்களின் அனுபவம் பற்றி சொல்லிக் கொண்டே வந்தவர், சுற்றிலும் அரங்கைப் பார்த்துவிட்டு, மதுமிதாம்மா மட்டும்தான் இருக்கிறாங்க அதனால் தைரியமா சொல்லலாம்னு சொன்ன விஷயம், பயப்படாமலே கூட பகிர்ந்திருக்க வேண்டிய விஷயம்தான். நல்லாதான் பேசிட்டிருந்தார் சட்டென்று பேச்சை முடித்துக் கொண்டார்.

ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் கவிதாபாரதி வந்து அவர்களின் பேச்சின் முக்கிய விஷயங்களை எடுத்துக்கூறியும், அடுத்து பேச வருபவர்களை சிறந்த முறையில் அறிமுகப்படுத்தியும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
அடுத்து மாரி செல்வராஜை பேச அழைத்தார். அவரைப் பற்றி ஒவ்வொன்றாகக் குறிப்பிட்ட அவர்,
உறக்கமற்று திரியும்
பசித்த பூனையை போல
இதோ இன்னுமொரு இரவில்
உச்சினியை நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
உச்சினியென்பது நாங்கள் நேசித்த
முதல் கன்று
முதல் நாய்
முதல் பூனை
முதல் மரம்
முதல் கிளி
இன்னும் சொல்கிறேன்
உச்சினியென்பது நாங்கள் அனுபவித்த
முதல் மழை
முதல் வெயில்
முதல் கொண்டாட்டம்
முதல் துயரம்
முதல் ஏமாற்றம்
முதல் அச்சம்
இன்னும் கேளுங்கள்
உச்சினியென்பது நாங்கள் பறிகொடுத்த
முதல் நிலம்
முதல் வனம்
முதல் மலை
முதல் அருவி
முதல் நதி
முதல் கடல்
இன்னும் கவனியுங்கள்
உச்சினியென்பது நாங்கள் தேடி அலையும்
முதல் வெளிச்சம்
முதல் புன்னகை
முதல் இசை
முதல் எழுத்து
முதல் கவிதை
முதல் பாடல்
இன்னும் ஒன்றை சொல்லி முடிக்க சொன்னால்
உச்சினியென்பது எங்கள் அகால நினைவுகளின்
பெரும்பாறைகளை உடைத்து நொறுக்கிவந்து
இன்றும் எங்கள் கண்களில்
பொத்தி பொருந்தாமலிருக்கும்
அக்கா எனும் ஆதி உறக்கமும் கூட.

என்னும் மாரிசெல்வராஜ் கவிதையை வாசித்து அவரைப் பேச அழைத்தார்.
எழுந்து பேச வந்த மாரி செல்வராஜ் எனக்கு பேசிப் பழக்கமில்லை, நாவல் குறித்து பேசிப் பழக்கமில்லை என்று, அதையே வெவ்வேறு விதமாக நான்கைந்து முறை சொன்னார். ஆனால், கடங்கநேரியான் ஆரம்பித்து வைத்த முதல் உரையின் வீச்சு, இங்கே மாரியின் உரையில் சாமியாடத் தொடங்கி விட்டது. வண்ணதாசன், வண்ணநிலவன் சுகா என்று பலர் திருநெல்வேலியைப் பற்றி எழுதி இருந்தாலும், ஒவ்வொரு சாதிக்கான பேச்சு வழக்கு வேறாகத்தான் இருக்கும், திருநெல்வேலிக்கென்று ஒரு தனிவழக்கு இல்லை என்று வட்டார வழக்கு குறித்த முக்கியமான பேச்சை பதிவு செய்தார். அங்கே இருப்பவர்களால் உடனே இந்த வேறுபாட்டைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றார்.

நாவலுடன் ஒப்பிட்டு, நாவலின் கதாபாத்திரங்களுடன், நிகழ்வுகளுடன் தனது வாழ்க்கையின் தனது ஊரின், தனது மக்களின் வாழ்வினைக் கோர்த்துச் சொல்லிய விதம் அரங்கை அசையாது நிறுத்தி வைத்தது. அத்தனை ரசங்களுடனும் அற்புதமான ஆத்மார்த்தமான பேச்சாக இருந்தது. தனது பெயர், கடவுள் நம்பிக்கையில்லாத தான், உடன்பிறப்பு இருவர் கிருத்துவத்துக்குப் போய்விட்டதாலும், தான் சாமியாடியாகத் தேர்வானது தான் சாமியாடியாகிய விதம், தனது மக்களின் மனநிலை, அம்மா குறித்து, அப்பா பற்றி, உடன்பிறந்தோர் என்று, ஆங்காரம் நாவலைப் போன்றே, அந்த மக்களுடன் தான் வாழ்ந்த கதையை புதிதான ஒரு ஒட்டு மொத்த நாவலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்சிப்படுத்திக் காட்டினார். அம்மா சாமி குழந்தை யென்று தன்னைக்காத்த கதை, அப்பாவிற்கு பார்வை போனகதை, இரு மகன்களைத் தந்தை தனது கைகளில் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு பலிகொடுப்பதாக சாமியிடம் தனது கண்பார்வை போனதற்கு பரிகாரம் கேட்டு பார்வை வந்த கதை என்று புனைவிலும் பார்க்க முடியாத உண்மைக்கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவரின் வட்டார வழக்குப் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. மாணவனாக இருந்தபோது பத்து நாட்கள் சாமி வேஷம் போடும்போது அவரை அனுமார் வேடம் போடச்சொல்ல, அவர் உடன்படிப்பவர்கள் கேலி செய்வார்கள் என்று மறுத்து கிருஷ்ணன் வேடம் போட விரும்பியதைச் சொல்லியபோது அதற்கான காரணமாக, கிருஷ்ணர்னா பொட்டப் புள்ளைங்களோட வெளையாடுவாரு அதனால புடிக்கும் என்றார். சிரிப்பும், சோகமும், ரௌத்திரமும் என பல்வேறு ரசங்களுடன் பேசி முடித்தார். இனிய சாரலுடன் மழை அடித்து ஓய்ந்தது போலவே இருந்தது. வாழ்த்துகள் மாரி செல்வராஜ் புத்தக வாசிப்பனுபவம் குறித்து எந்த மேடையில் வேண்டுமானாலும் நீங்கள் பேசலாம், அரங்கத்தை உங்கள் அனுபவப் பகிர்வின் மூலமாக கைக்கொள்ளும் உத்தி உங்களுக்குக் கைதேர்ந்த கலையாகிவிட்டது.

அடுத்து கவிஞர் வித்யாஷங்கர் பேசினார். ஆரம்பத்திலிருந்து கி.ரா அவர்களுடன் இருந்த நட்பு என்று ஆரம்பித்து, ஏக்நாத்துடன் இருந்த நட்பு என்று வரிசையாக சொல்லி வந்தவர், தான் சிறப்பாக இயங்கி வந்த காலத்தையும் இப்போது வயதின் காரணமாக அப்படி இல்லை என்றும் சொல்லிக் கொண்டே, அரங்கை கலகலப்பாக்கும் வகையில் பேசினார். ஆங்காரம் எழுதிவிட்டு அதன் பினனர் கெடை காடு வந்திருக்க வேண்டும் என்றவர் அதனாலென்ன இப்போ கெடைகாடுக்குப் பிறகு ஆங்காரம் வந்திருக்கிறது என்று சொல்லி, தான் பேசிய முதல் பேச்சுக்கு தானே அடுத்த வரியில் மறுப்பு அல்லது வேறு கோணத்தில் பேசுவது என்று இங்கும் அங்குமாக சொற்சிலம்பமாடினார்.

நாவலுக்குள் பயணப்பட்டதால், அவரின் நினைவுக்கு வந்த தோழிகளால் தன்னால் இந்த சில நாட்களாக உறங்க முடியவில்லை என்றும் கூறினார். ஏக்நாத்துக்கு விருது கிடைக்கும் என்றுகூறினார்.

அடுத்துப் பேச வந்த வசந்தபாலன் அரங்கை 5 நிமிடத்தில் தன் வசமாக்கிக் கொண்டார். அன்றைய மழைநாளில் காலையில் தான் வாசித்த ஆங்காரத்தில் ஆரம்பிக்கும் மழை குறித்துப் பேச ஆரம்பித்தவர், காக்காமுட்டை திரைப்படத்தைப் போன்று அருமையான ஆரம்பம் என்று வரிசையாக நாவலுக்குள் பயணித்தார்.. மதினி கொழுந்தன் இடையில் நிகழும் பேச்சு குறித்து சொல்லி புத்தகத்திலிருந்து ஒரு உரையாடலை வாசிக்க எடுத்தார். வாசித்தார். பிறகு சுகா முன்னுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு உரையாடலை புத்தகத்தின் வேறு பக்கத்திலிருந்து வாசித்தார். புத்தகத்தில் பல இடங்களில் குறிப்புக்கான காகிதங்கள் நிறைந்திருந்தன. இவ்வளவு குறிப்புகள் பற்றி பேச நினைத்தேன் என்றார். ஆனால் என்ன ஆனதென்று தெரியவில்லை. பேச்சை சட்டென்று முடித்துக்கொண்டார்.
அடுத்து க.சீ. சிவகுமார் பேசினார். வந்து மைக் முன்னே நின்றதிலிருந்து தானும் சிரித்து ஒரு சிரிப்பலையை அரங்கிலும் ஏற்படுத்திவிட்டுப் போய்விட்டார்.

அடுத்து கரு.பழனியப்பன் பேச வந்தார். அண்ணன் கவிதாபாரதி சொல்லிட்டுப் போனதுபோல, நான் எதற்கும் எதிரா பேசறது இல்ல. வேற கோணத்துலயும் பேசறது இல்ல. ஏன் அப்பிடி தோணறதுன்னா நம்ம நட்பு, நம்மை வளத்த விதம் அப்படி. ஒரு முறை அண்ணன் சௌபாவும் நானும் புத்தகக்கடையில் எம்ஜிஆர் புத்தகம் ஒண்ணு பாத்தோம். மனிதர்கள் மனதில் மறையாதவர்னு தலைப்பு. அப்போ சௌபாண்ணன் சொன்னார் இதைப் போட்டது யாதவன் தான், இல்லைன்னா இத்தனை தலைப்பு இருக்க மறையாதவர்னு ஏன் போடணும். இப்பிடி வளர்ந்ததால இப்பிடி பேசறோம். ஒரு சினிமாவைப் பாராட்ட இப்பிடிதான் ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ரொம்ப நல்லா இருக்குன்னு அப்பிடி பாராட்டிட்டு வந்தபிறகு பாத்தா, அந்த படம் அப்பிடியே கொரியன் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டிருக்கு. அதனால் தான் இணை இயக்குனர்களை எல்லா படங்களும் பாருங்கன்னு சொல்றேன் என்று சொன்னார.

அய்யா நாவலுக்கு வாங்க அய்யா. நாவலுக்குள் இன்னும் வரவே இல்லையேன்னு இங்கே மைண்ட் வாய்ஸ் தோணும்போதே கடகடன்னு நாவலுக்குள் வந்து, கதாபாத்திரங்களின் அறிமுகம் அது முடியும்போது மற்றொரு கதாபாத்திரம் அறிமுகம் அதைப் பற்றிய கதைன்னு அந்த தொடர் வேகத்தைக் குறிப்பிட்டார். ஆரம்ப காட்சியிலேயே மழையின் அழகைக்கொடுத்து மூன்றாவது பக்கத்திலேயே அண்ணியை அறிமுகப்படுத்தி வாசகனை அங்குமிங்கும் நகர விடக்கூடாதென்ற நுட்பம் ஏக்நாத்துக்கு தெரிந்திருக்கிறதென்றார். ஏக்நாத் எழுத்தில் காட்சிப்படுத்தும் விதத்தை நுட்பமாக எடுத்துக்கூறி திரைப்படத்துக்கு வாங்க என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

பேசியவர்கள் அனைவருமே ஊர்ப்பாசம் குறித்தும், அந்த ஊர்ப் பெண்கள் அழகிகள் தேவதைகள் என்றும் குறிப்பிட்டனர். ஏக்நாத் என்பதற்கான பெயர்க்காரணத்தையும், ஏக்நாத் வெள்ளையாக இருப்பது, வடநாட்டவர் போல இருப்பது என்பதையும், பத்திரிகையில் இருந்துகொண்டு நாவல் படைத்ததன் சிறப்பைப் பற்றியும் கூறியிருந்தனர். கி.ரா வின் பாலியல் கதைகள் போல இவரின் எழுத்திலும் பாலியல் விஷயங்கள் இயல்பாக சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
ஏக்நாத் வந்தார். அப்பாவு சீரடி சாயிபாபாவின் சீடர் ஏக்நாத் அவர்களின் பெயரை எனக்கு வைத்தாங்க. நன்றின்னு முடித்துவிட்டார். ஏக்நாத் இன்னும் சிறிது பேசி இருந்திருக்கலாம்.

கவிதாபாரதி முழுக்க ஆழ்ந்து நாவலை வாசித்திருக்கிறார் என்பதை ஒவ்வொருவர் பேசி முடித்த பின்னும் அவர் கூறிய கருத்துகளும், பேசுபவர்களுக்கு மனத்தடை ஏற்படும்படி தான் முதலிலேயே பேசிவிடக்கூடாதென்று ஒவ்வொருவரும் பேசி முடித்த பின் சில கருத்துகளைக் கூறியும், டீக்கடை சிந்தனைப் பேரவையின் ஆல் இன் ஆல் ஆக சிறந்த தொகுப்புரையாற்றி நன்றியும் சொல்லி முடித்தார். இதற்குள் ஒரு 15 நிமிடங்கள் பேசுவதற்கான உரை மனதிற்குள் தானாகவே தயாராகிவிட்டது. ஊர்ப்பாசமும், காதலும், உறவும் என முகித்தெழுந்த நினைவுகளை இங்கே எழுதாமல் இத்துடன் முடித்துக்கொண்டேன்.
அன்புடன்
மதுமிதா


-நன்றி மேடம்.

1 comment:

ராஜ நடராஜன் said...

க்யா ஆடு! ஆப் கிதர் கயா?