Monday, July 6, 2015

மரகத ஆச்சியின் சாயலைக் கொண்டவள்

மழை பெயதுகொண்டிருந்தது. அம்பாசமுத்திரம் கிளைக் கருவூல வாச லில் வளர்ந்திருக்கிற வேப்ப மரத்தை ஒட்டி சுவருடன் சாய்ந்து அம்மாவுடன் நின்றிருந்தேன். வாசல்படியில் என்னை உட்காரச் சொன் னாள் அம்மா. நான் மறுத்து, அவளுடனேயே நின்றுகொண்டேன். கருவூலம் திறக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. அம்மா சீக்கிரமாகவே வந்திருந்தாள், முதல் ஆளாக வாங்கிவிட்டுப் போகலாம் என் று. 

பென்சன் படிவம் எழுதிக் கொடுக்கும், நெற்றியில் பெரிய நாமம் போட் டிருக்கிற அந்தக் காக்கி டவுசர் தாத்தா, தலையில் துண்டை போட்டுக் கொண் டு சைக்கிளில் வேகமாக வந்து இறங்கினார்.

'இன்னும் தெறக்கலையாம்மா?' என்று கேட்டவர் பதிலுக்குக் காத் திராமல், கருவூல வாசல் படிக்கட்டில் ஏறி ஓரமாக தலையைத் துவட்டிக் கொண்டு உட்கார்ந்தார். பின்னர், விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிற சில படிவங் களை, சாக்குப் பையை விரித்து அதன் மேலே வைத்தார். சைக்கிளின் பின்பக்கம் இருந்த எழுத்து மேசையை எடுத்து, துண்டால் துடைத்துவிட்டு தனக்கு முன் வைத்துக் கொண்டார். இங்கு வருபவர்களுக்கு பென்சன் படிவங் களை இவர்தான் எழுதிக் கொடுப்பார்.

மழையில் நனைந்துகொண்டு ஓடும் இரண்டு வெள்ளாட்டுக் குட்டிகள் வேப்ப மரத்துக்கு அடியில் வந்து தலையைச் சிலுப்பிக்கொண்டு நின் றன. தலையை சாய்த்துக்கொண்டே அங்கும் இங்கும் பார்த்துக் கொண் டிருந்தது. தெறிக்கும் மழைத் தண்ணீரில், சிலிர்த்து உடல் ஆட் டுவதைப் பார்க்கச் சுகமாக இருந்தது. எதிரில் கருவைக் காடு. மழையின் அடர்த்தியில் அவை எதுவும் தெரிய வில்லை.

அம்மாவைப் பார்த்ததும், 'எழுதியாச்சா தாயீ?' என்றார் அந்தப் பெரிய வர். 
'ஆமா, எம்மவனே எழுதிட்டான்' என்று புன்னகையுடன் அவள் சொன் னதும் அவருக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாயை, நான் காவுக் கொண்ட வருத் தம் அவர் முகத்தில் தெரிந்தது.

'என்ன படிக்காம்?'

'எட்டாப்பு'

'செரி செரி' என்று சொல்லிவிட்டு முகத்தைத் திரும்பிக்கொண்டார்.

அம்மாவுக்கு கொடுக்கப்படும் படிவத்தில் அதிக எழுத்துவேலை இல்லை. இரண்டு இடங்களில் பென்சன் புத்தகத்தில் இருக்கும், ஆணை எண் எழுத வேண்டும். ஒரு இடத்தில் தொகை. கடைசிப் பக்கத்தில், 'எனக்கு இதுநாள் வரை மறுவிவாகம் நடக்கவில்லை என்று உறுதி கூறுகிறேன்' என்று எழுதி, கையெழுத்துப் போட வேண்டும். இவ்வள வுதான். 

சந்திரா சித்தி உட்பட இன்னும் சிலர் இப்போது வந்துவிட்டார்கள். மழை வேகமாக அடித்துப் பெய்துகொண்டிருக்கிறது. ஸ்கூட்டரில் நனைந்து கொண்டு வந்த மொட்டைத் தலைக்காரர், வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, கருவூலக் கதவை ஓடிவந்து திறந்தார். பின் கால் சகதியை படியில் அங்கும் இங்கும் இழுவினார். அதற்கு கீழ்ப்பக்கம் வாசல் படியில் அமர்ந்திருக்கிற பெரியவர், 'இதுல இழுவுதேளே?' என்று கேட்டார்.

'வேற எங்கவே இழுவ சொல்லுதேரு'

'எல்லாரும் அதை மிதிச்சாவோன்னா, ஆபிஸ் பூரா சவதி ஆயிரும்லா'

'அதுக்கு என்ன செய்ய?'

'வெளில ஓரமா இழுவுனா என்னா?'

'ஆமா. இழுவனும்' என்று எக்காளமாகப் பேசிவிட்டு உள்ளே போனார் அந்த மொட்டைத்தலை ஊழியர்.

கதவு திறக்கப்பட்டதும் எல்லோரும் உள்ளே ஓடினார்கள். அது ஓர் அகன்ற அறை. அங்கு மரப் பெஞ்சுகள் நீட்டமாகப் போடப்பட்டிருந்தன. ஆளாளுக்கு இடம் பிடித்து உட்கார்ந்துகொண்டார்கள். தினம் ஒரு குறள் எழுதப்பட்டிரு க்கும் கருப்புப் பலகையில் அந்த மொட்டை ஊழியர், இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்று எழுதிக்கொண்டிருந்தார். நன்னயம் என்பதை நாணயம் என்று தவறாக எழுதி பிறகு அழித்துத் திருத் தினார்.

பென்சன் வாங்க வருபவர்களில் சந்திரா சித்திதான் இளம் வயதுக்காரி. அவளுக்குப் பூவன்குறிச்சி. அவள் கணவன் ராணுவத்தில் வேலை பார்த்தார். காஷ்மீரில் நடந்த, தீவிரவாதிகளின் தாக்குதலில்  உடல் சிதைந்து பலியான நான்கு வீரர்களில் அவளின் கணவரும் ஒருவர். கணவன் இறந்த பிறகு இங்கு பென்சன் வாங்க வந்திருந்தாள். இங்கு வந்துதான் அந்த சித்தி அம்மாவுக்கு அறிமுகம். அம்மாவைப் போல அவளுக்கும் சுருண்ட முடிகள், அழகாக இருக்கும். அவளது முன் பக்கப் பற்களில் மூன்றாவது பல்லில் இருக்கும் கறை, சித்தியின் அடையாளங்களில் ஒன்று. 

வாகைக்குளத்தில் இருந்து வெள்ளைச் சேலை அணிந்து கொண்டு இரண்டு பேர் வருவார்கள். ஊர்க்காட்டைச் சேர்ந்த கால் ஊனமான பெண்ணும், மரகத ஆச்சியைப் போல சாயல் கொண்ட, ஒல்லியான மன்னார் கோயில் பொம்ப ளையும் அம்மாவைப் பார்த்துச் சிரிப்பதோடு சரி. அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தனிக் கூட்டமாக அமர்ந்திருப்பார்கள். எப்போதும் வெள்ளை சட்டை, தலையில் குல்லா அணிந்திருக்கிற மீசைக்கார காளியப்பா, அம்மா கோஷ்டியுடன் சேர்ந்து கொள்வார். காளியப்பாவுக்கு வீட்டில் ஏதோ பிரச்னை என்பதை மட்டும் அடிக்கடிப் பேசிக் கொண்டிருப் பார்கள். 

ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி பென்சன் வாங்க வருபவர்கள் இவர் கள். முதல் ஏழு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவு என பென்சன் வழங்க பிரித்து வைத்திருந்தார்கள். அம்மாவுக்குக் கிடைப்பது, பென்சன் என்ற பெயருக்குள் பொருந்தாது. உதவித் தொகை மாதிரி. 

சீக்கிரம் பென்சன் தந்துவிடமாட்டார்கள். பத்து மணிக்கு எழுதி நிரப்பப் பட்ட படிவத்தை அலுவலகத்தின் உள்ளே கொடுத்ததும் சிடு மூஞ்சாக இருக்கிற வழுக்கைத் தலைக்காரர், முறைத்துப் பார்த்து விட்டு திரும்பிக்கொள்வார். பிறகு அவருக்கு மனசு வந்து கையெழுத் துப் போட்டு, அடுத்த டேபிளுக்கு அனுப்புவார். அவரும் ஏதோ பார்த்து விட்டு, வந்திருக்கிற மொத்த படிவங் களையும் பன்னிரெண்டு, பனி ரெண்டரை மணிவாக்கில் காசாளனிக்கு அனுப் புவார். அந்த காசாளனி ஒவ்வொருவராகப் பேரைச் சொல்லி அழைப்பார். பென் சன் ரூபாயை வாங்கியதும் அவளுக்கு பத்தோ, இருபதோ கொடுக்க வேண் டும். அரியர்ஸ் பணம் எப்போதாவது வரும். அது கொஞ்சம் அதிகமாக இருந்தால் நூறோ இருநூறோ கொடுக்க வேண்டும். வருகிற பணத்தைப் பொறுத்து அவளுக்கு கொடுக்கும் பணம் வேறுபடும்.

சந்திரா சித்தி ஒரு முறை, கொடுக்க மாட்டேன் என்று சத்தம் போட, பிரச்னை யாகிவிட்டது கருவூலத்தில். 'எங்களுக்கு கெடைக்குததே வாயிக்கும் வயித் துக்கும் காண மாட்டேங்கு. இதுல ஒங்களுக்கு வேற அழணுமாங்கும். வெட்க மில்லாம கேட்கதை பாரேன்' என்று சத்தமாகச் சொல்ல, தனி அறை யில் இருந்து வந்த உயரதிகாரி, சித்தியை அழைத்துச்சென்று ஏதோ சொல்லி சமாதா னம் செய்தபின் சத்தம் குறைந்தது.

'நாங்களே அர்தலியா வந்து, இங்ஙன அரசாங்கம் கொடுக்கதை வாங்குதோம். ஒங்கள மாதிரி சந்தோசமா வாழ்ந்தா கொடுக்கலாம் எல்லாத்தையும்' என்ற சித்தி அழ ஆரம்பித்தாள். அம்மாதான் அமைதிப்படுத்தினாள் அவளை.

இந்தச் சம்பவத்துக்குப் பின் அந்த காசாளனியை வேறு ஊருக்கு மாற்றி விட்டார்களாம். இப்போது வேறொருவர் வந்திருக்கிறார்.

மழை விட்டிருந்தது. கருவூலத்தைச் சுற்றிக் குளம் மாதிரி தண்ணீர் தேங்கி விட்டது. அதற்குள் இறங்கி நடக்க முடியாது என்பதால் ஒரு ஓரமாக சிறிது இடைவெளியில் நான்கைந்து செங்கற்கள் போடப்பட்டிருந்தன. அந்தக் கற்க ளை மிதித்தபடி உள்ளே வருவதும் போவது மாக இருந்தனர்.

உயரதிகாரி காரில் வந்து இறங்கினார். அவர் கார் சத்தம் கேட்டதும் வேகமாக ஓடிப்போன ஒருவர், குடையைப் பிடித்தபடி கதவைத் திறந்தார்.

'ஏய் சாரு வந்தாச்சுடே' என்று ஒருவர் சொல்லவும் எல்லாரும் எழுந்து நின்றார்கள். அதிகமாக பவுடர் பூசியிருக்கிற அந்த உயரதிகாரி எல்லாரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவரது அறைக்குப் போனார். சந்திரா சித்தியைப் பார்த்ததும் அவர் இளிப்பு வேறு மாதிரி இருந்தது.

ஒவ்வொருவரிடமாகப் படிவத்தைச் சேகரித்து, உள்ளே முதன் சேரில் அமர்ந்திருக்கிறவரிடம் கொடுத்தாள் அம்மா. 

'மொதல்ல வந்தவோ, பார்மை மேல வச்சிருக்கேன்' என்று அம்மா சொன்னதும், வேண்டும் என்ற அந்தப் படிவங்களை மாற்றி வைத்தார் அந்த அலுவலக ஊழியர். அம்மாவுக்கு எரிச்சல். ஏன்தாம் சொன்னோ மோ என்று தோன்றியது.

சிறிது நேரத்துக்குப் பிறகு ஒருவர் வேகமாக வந்து, 'ஏம்மா எல்லாரும் கேட்டுக்கிடுங்க. பேங்க்ல திடீர்னு ஸ்டிரைக்காம். பணம் இன்னைக்கு கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியல. இருந்தாலும் செத்த நேரம் உக்காந்து பாருங்க. வந்துட்டுன்னா தந்திருதோம். இல்லன்னா நாளைக்குத்தாம், கேட்டே ளா?' என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

இதைக் கேட்ட அந்த மன்னார்கோயில் ஆச்சி கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டாள். திடீரென அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவள் கட்டுப்படுத்த நினைத்தும் முடியவில்லை. அவளை யும் அறியாமல் பொத்துக்கொண்டு வந்தது. 'ஏம், என்னாச்சு, எதுக்கு இப்டி அழுத?' என்று அவள் தோளைத் தொட்டார்கள். அவள் எதுவும் பேசவில்லை. 

திடீரென்று வெளியே போய் வேப்பமரத்துக்குக் கீழே குத்த வைத்து உட்கார்ந்துகொண்டு தலையில் அடித்தவாறு அழுதாள். அந்த கருத்த,  எலும் பும் தோலுமான உடலைக்கொண்ட அந்த ஆச்சி அழுவது எல்லோருக்கும் ஏதோ போல இருந்தது. 

'ஏத்தா, என்னாச்சுன்னு தெரியலயே' என்று கூட இருந்தவர்கள் எல்லோரும் அவளைப் பின் தொடர்ந்து போனார்கள். காளியப் பாதான், 'ஏம்மா சும்மா அழுத ன்னா என்ன அர்த்தம்? என்னன்னு சொல்லு?' என்றார்.

'நான் என்னன்னு சொல்லுவேன். தண்டவாளத்துல தலைய வச்சிருந்தா லாவது இந்நேரம் போன எடம் புல்லு முளைச்சிருக்குமே..'

'இங்கேரு. சும்மா இப்டிலாம் பண்ணாத கேட்டியா? என்னன்னு சொல் லுவியா? அழுதுட்டு கெடக்க?'

இந்த மானங்கெட்ட வாழ்க்கை வாழத்தான் அந்த சாமி என்னைய படைச் சானா?

'ச்சே. நாங்க சொல்லிட்டே இருக்கோம். நீ பாட்டுக்கு பேசிட்டிருந்தன்னா என் ன அர்த்தம்? சொல்லுத்தா, ஏம் அழுத?'

 அம்மாவும் சந்திரா சித்தியும் அவளருகே போய் உட்கார்ந்து கொண் டார்கள். உடனிருந்த பொம்பளைகளையும் காளியப்பாவையும், 'நீங்க போங்க. நாங்க என்ன்னு கேக்கோம்' என்றார்கள். எதிரில் மழைத் தண் ணீர் தேங்கி நின்றது.

இங்கே இப்படியொரு சம்பவம் நடப்பது எதுவும் தெரியாமல் அலுவல கத்தில் வேலை பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது.

மன்னார்கோயில் பொம்பளையின் மூத்த மகள், புருஷன் வீட்டில் இருந்து வந்துவிட்டாள். சீராகக் கொடுத்த அத்தனையும் விற்றுத் தின்றது போக, இன்னும் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று விரட்டி விட்டார்களாம். இன்றுதான் கடைசிநாள் கெடு. சாயந்தரத்துக்குள் ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வில்லை என்றால் அத்துவிட்டு விடு வானாம் நாளைக்கு. கொஞ்சம் பணம் புரட்டி வைத்திருக்கிறாள். பென்சனை வாங்கினால், ஐயாயிரம் ரூபாய் தேறும். ஆனால் இன்று ரூபாய் இல்லை என்றால், 'மகளை அத்துவிட்டுருவானே பாவி. எம் புள்ளய வாழா வெட்டியா வீட்டுல வச்சுட்டு, அடுத்தப்புள்ளய எப்படி கரையேத்துவேன்? இன்னைக்கு ரூவா இல்லன்னா, அப்டியே போயி கெணத் துல விழுந்து சாவ வேண்டியதாம்' என்று ஒப்பாரி வைத்தாள்.

பாவமாக இருந்தது. அவளை எப்படி சமாதானப்படுத்தினாலும் முடி யாது.
'ஐயாயிரம் ரூவா இல்லன்னா அத்து விட்டுருவானா? ஒங்க சொந்த பந்தம் லாம் அப்டியேவா உட்ருவாவோ?'

'சொந்தமாவது பந்தமாவது. சொந்த சாதி சனம் என்னைக்கு மண் டையப் போடுவா, குடியிருக்க வீட்டை எப்படி கைப்பத்தலாம்னு இருக்காவோ. ஒருத் தன் ஒதவமாட்டானுவோ' என்று மேலும் அழ ஆரம்பித்தாள்.

'செரி செரி அழாதியோ. ஆண்டவன் எதாவது வழி பண்ணுவாம். கொஞ்சம் காத்திருப்போம்?' என்று அவளுடனே அம்மாவும் சந்திரா சித்தியும் உட்கார்ந்து கொண்டார்கள். 

காளியப்பாவிடம் விஷயத்தைச் சொன்னதும், குல்லாவைக் கழற்றி, 'இதுக்கு தானா வெள்ளக்காரங்ககிட்ட இருந்து சுதந்திரத்தை வாங்குனோம்?' என்று பழங்கதைப் பேச ஆரம்பித்தார். 

மணி 12.30.

'இன்னைக்கு ரூவா இல்லம்மா. நாளைக்கு வாங்க' என்று சொல்லி விட்டு கருவூல உதவியாளர் உள்ளே போனார்.

மன்னார்கோயில் பொம்பளை இருந்த இடத்தில் அப்படியே படுத்து விட்டாள். 
சந்திரா சித்தி, அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வெளி யே வந்தாள். அங்கிருந்த கடையில் வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தாள். பிறகு கடைக்காரரிடம் தனியாக ஏதோ பேசிவிட்டு வந்தாள்.

டீ குடித்து முடித்ததும் அம்மாவும் அந்த மன்னார்கோயில் பொம்ப ளையும் சந்திரா சித்தியுடன் நடந்தார்கள். தாலுகா ஆபிஸ் தாண்டி ஆலங்குளம் போகும் சாலையில் நடந்த சந்திரா சித்தி ஒரு கடையைப் பார்த்ததும் திடீரென நின்று, தனது கழுத்தில் கிடந்த சங்கிலியைக் கழற்றத் தொடங்கினாள்.

1 comment:

துபாய் ராஜா said...

பென்ஷன் ஆபிஸ்ல நடக்குற கூத்தையெல்லாம் பார்த்தா 'இந்தியன்' படம் நியாபகம் வந்துச்சு அண்ணாச்சி. ஏழையோட கஷ்டத்துக்கு ஏழைதான் துணைங்கிறதை சந்திரா சித்தி நிரூபிச்சிட்டா.

சோகமான கதைன்னாலும் மழைக்காட்சி வர்ணனைகளும், வார்த்தைகளும் அருமை அண்ணாச்சி.