Thursday, July 9, 2015

குடி சூழ் உலகு

காளை மாடுகளைக் குளிப்பாட்டிவிட்டு ஆற்றில் இருந்து மேலே பத்தி னான் வெள்ளத்துரை. 

மாடுகள் குளித்து கலங்கிய ஆற்று நீர், வேகமாக ஓடும் தண்ணீரில் மாயமென மறைந்தது.

'என்னத்த மாட்டை குளிப்பாட்டுனே. தொடையில பாரும்யா சாணிய' என் றான் கந்தன்.

'எங்ஙன?'

'அந்தப் பக்கம் தொடைய பாரும்'

படுத்துக்கிடந்த மாட்டின் தொடையில் அப்பிய சாணியின் அடை யாளம் வட்டமாய் தெரிந்துகொண்டிருந்தது. மாட்டின் வால் அந்த இடத்தில் பட்டதும் ஈரத்தோலில் சாணி இழுவி வயிற்றுக்கும் கொஞ் சம் வந்தது.

'இத கவனிக்கலயே'

'இதான், நீரு மாடு குளிப்பாட்டுத லெச்சணம்'

மாட்டை திரும்பவும் ஆற்றுக்குள் இறக்கினார் வெள்ளத்துரை. கரையில் கந்தனுடன் ஆல மரத்தூரில் அமர்ந்திருக்கும் பாலுவுக்கு கோபமென்றால் கோபம். கந்தனைப் பார்த்து நாக்கைத் துறுத்தி, 'சனியன் புடிச்சவனே' என்று திட்டினான்.

'எதுக்குல?' என்று சைகை செய்தான் கந்தன்.

'அவரு பாட்டுக்குப் போவாரு. கூப்புட்டு திரும்பவும் ஆத்துக்குள்ள இறங்க வச்சிட்டெ?' என்று மெதுவாகக் கடிந்துகொண்டான். அவன் இடுப்புச் சாரத்தில் ஆழ்வார்க்குறிச்சியில் இருந்து வாங்கி வந்திருந்த பிராந்தி பாட்டில் தென்னிக் கொண்டிருந்தது.

வெள்ளத்துரை, பாலுவுக்கு தாய்மாமா என்பதால் கொஞ்சம் மரியா தை. மற்றபடி யாருக்குப் பயந்தும் குடிக்காமல் இருப்பதில்லை. அவர் போன பின் குடிக்கலாம் என்று இரண்டு பேரும் ஆலமரத்தூரில் இருந்தார்கள். திரும்பவும் ஆற்றுக்குள் அவர் இறங்கியதால் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண் டிய கோபம் பாலுவுக்கு.

'ஏல கந்தா. அழுக்குப் போயிட்டா, பாரு?' என்று கேட்டுவிட்டு கையில் வைத்தி ருந்த ஈர வைக்கோலை கரையில் போட்டார் வெள்ளத்துரை.

'ஆங், நல்லா தேச்சிட்டேரே'

'செரி, தீப்பெட்டி வச்சிருக்கியாடே?'

'ஒம்ம மருமவன்கிட்ட இருக்கும், நான் என்னைக்கு பீடிய குடிச்சேன்'

'வாங்கிட்டுவா'

பாலு, கந்தனை முறைத்தான். தீப்பெட்டியை வாங்கிக் கொடுத்தான். பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு கிளம்பிய வெள்ளத்துரை, 'சட்டு புட்டுனு முடிச்சுட்டு வாங்கல. இங்ஙனயே கெடந்துராதீங்க. புள்ள முழிக்க முழி எங்களுக்கு தெரி யாது பாரு' என்று சொல்லியபடி நக்கலாகச் சிரித்துவிட்டுப் போனார்.

அவர், சின்ன பாலத்தைத் தாண்டியதும், 'ஒன்னயலாம் கூட்டிட்டு குடிக்க வரணும்ல' என்றான் பாலு.

'ஏண்டே?'

'வேலில போறத வேட்டிக்குள்ள விட்ட மாதிரி. அவரு ஆத்துக்குள்ள நிய்க் காருன்னுதான் ஒதுங்கி நிய்க்கோம். நீ யோக்கிய பூழலு கணக்கா, அதை கழு வல, இதைக் கழுவலன்னு சொல்லிட்டு இருக்க. எங்களுக் குத் தெரியாதா?'

'ஏல, அவரே என்ன சொல்லிட்டு போறாரு பாத்தல்லா. நாம இங்க ஏம் இருக் கோம்னு தெரியுங்காரு. பாட்டிலை பாக்காமயா சொல்லுவாரு'

'செரி, ஊத்து'

ஆளுக்கொரு கிளாசில் பாதி சரக்கை ஊற்றினார்கள். ஆற்றுக்குள் இறங்கி குத்த வைத்துக்கொண்டார்கள். கையால் தண்ணீர் அள்ளி கிளாசை நிறைத் தார்கள். கண்ணைப் பொத்திக்கொண்டு வாயில் வைத்து ஒரே இழு. குடித்து விட்டு தலையை ஆட்டிக் கொண்டார்கள். இலேசாக தொண்டையை இறுமிய படி, இடுப்பில் இருந்த மட்டை ஊறுகாயை விரித்து நக்கிக் கொண்டார்கள்.

'முந்தா நாளு ராத்திரி, வயலுக்குத் தண்ணிப் பாய்ச்சுட்டு வந்திட்டிருந் தேன்.  மந்திரமூர்த்தி கோயிலு பின்னால என்னமோ சத்தம். யாருன்னு எட்டிப் பார்த்தா, இப்ப போனாரே இவரும், ஒங்க சின்னய்யாவும் சத்தம் போடாம குடிச் சுட்டு எந்திச்சு நிக்க முடியாம தரையில உருளுதாவோ. நாய்வோ வேற சத்தம் போட்டுட்டு கெடந்துச்சு. சுவரைப் புடிச்சுட்டு எழுந்திரிக்க பாக்காவோ முடியல. கைதாங்கலா தூக்கி நடத்திக் கூட்டுட்டுப் போயி, வீட்டு வாசல்ல கொண்டு போயி விட்டேன். வாசலை மிதிச்சதும் என்ன சொன்னாவோ தெரி யுமா?'

'ஏம் வீட்டுக்கு கூட்டியாந்தன்னு கேட்டிருப்பாவோ'

'மயித்த. மருமவனே, வெஷயம் நமக்குள்ள இருக்கட்டும்னு சிரிக்காரு பாத்துக் கெ'

'யாரு?'

'உங்க சின்னையா? இவரை எவன் மதிப்பான் சொல்லு?'

கிளாசை வைத்தான். அடுத்த ரவுண்டை ஊத்தினான். அதே போல  தண்ணீர் நிறைத்து குடித்தார்கள். அப்படியே கிளாசை கசக்கி கிழக்கு நோக்கி தண்ணீரில் வீசிவிட்டு, கரையின் ஈரமணலில் உட்கார்ந்தார்கள். வெயில் சுள்ளென்று அடித்தது. ஆனாலும் அடிக்கும் காற்றில் வேனல் தெரியவில்லை.

'கண்ணப் பயலுக்கு இப்டி நடந்திருக்கக் கூடாது'- கந்தனுக்கு லேசாக வாய்க் குழறியது. எச்சிலைக் கூட்டி தண்ணீருக்குள் எக்கித் துப்பினான். மீன்கள் அதை அபகரித்துச்சென்றன.

'என்னது?'

'மூதி குடிக்க ஆரம்பிச்சுட்டாம்னா, விடிய விடிய தூங்க விடமாட்டானாம்லா'
'என்ன செய்வானாம்?'

'ஒண்ணுஞ் செய்யமாட்டானாம்' என்று சொல்லிவிட்டு இருவரும் சிரித்தார் கள்.

'அதாம்ல பிரச்னையே'

'ச்சே. லைட்டை போட்டுட்டு யாரையும் தூங்க விடமாட்டானாம். அவன்ட்ட் பேசிட்டே இருக்கணுமாம். பிள்ளைலயும் தூங்க விடமாட்டானாம்?'

'இதென்னல நோயி'

'நோயிதான் மூதிக்கு. ரெண்டு நாளு இல்லனா ஒரு வாரம் பொறுத்துக் கிடுவான்னு வச்சுக்கோ பொண்டாட்டிக்காரி. தெனமும் இதே எழவுன்னா அவா என்ன செய்வா, சொல்லு? அவா அண்ணன்காரன் போலீஸ்ல இருக்காம் போலுக்கு. சொல்லிருக்கா. வந்தாம். அவனை யும் அவன் அம்மாகாரியையும் மானங்கெட்ட கேள்வி கேட்டுட்டு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாம், பிள் ளைய'

'இப்படியொரு குடிகார பயலுவோ கூட யாருடா வாழ முடியும்?'

பாலுவுக்குப் போதை தலைக்கேறியது. துண்டை தலைமாட்டுக்கு வைத்து அப்படியே சாய்ந்தான். அவன் படுப்பதைப் பார்த்து ஒருக்களித்து தானும் படுத் தான் கந்தன்.

'நம்ம காய்ஞ்ச குண்டி பய பொண்டாட்டியும் ஓடிப்போயிட்டா தெரியும்லா?'

'இது எப்பம்ல?'

'ஓடிப் போயிட்டான்னா, எவங்கூடயும்னு நெனச்சிக்கிடாத. அவ்வோ அப்பன் வீட்டுக்குப் போயிட்டா, முந்தா நாளு'

'நானும் ஊர்லதான் இருக்கேன். ஒரு கதையும் தெரியமாட்டக்கலே, ஒன்னய போல'

'நாலு இடத்துக்குப் போயி வந்தாதான் நாலு வெஷயம் தெரியும். குடிச்சதும் துண்டை விரிச்சு இப்டி தூங்குனா என்ன மயித்த தெரியும்?'

'சும்மாதானடெ படுத்திருக்கென்'

'காய்ஞ்ச குண்டி மூதி என்ன செய்வாம்னா, 'காய்கறி விய்க்கவன்ட்ட ஏம் சிரிச்சுட்டு இருக்கே. கடைகாரன்கிட்ட என்னட்டி பேச்சு, ரோட் டுல போறவன் ஏன் உன்னைய உத்துப் பாத்து பல்லைகாட்டுதாம்னு எல்லாத்துக்கும் சந்தேகப் பட்டுட்டு இருப்பானாம். போன வாரம், அந்த பிள்ளையோட சித்தப்பா மவன் வந்திருக்காம் போலுக்கு. அவனையும் சந்தேகப்பட்டு, பிள்ளைய போட்டு அடிச்சிருக்காம். மறுநா காறித் துப்பிட்டு ஊரப்பாத்துப் போயிட்டு'

'இந்தப் பய ஒழுங்கா இருந்தா என்னத்துக்கு சந்தேகப்படணும்?'- பாலுவுக்கு கொட்டாவி வந்தது. இடுப்பில் வைத்திருந்த பொட்டலம் ஒன்று அவிழ்ந்து விழுந்ததை அப்போதுதான் பார்த்தான் கந்தன்.

'இங்கரு , இதை வாங்குனதை மறந்துட்டோமே' என்று எடுத்து தின்றார்கள். காரசாரமான தட்டை. இந்தப் போதைக்கு ஜிவ்வென்று இருந்தது.

'என்ன கந்தா, ஆத்துல படுத்துட்டெ. வேலைக்கு போலயா?'- ஆடு மேய்க்கும் செல்லையாதான் அழைத்தான்.

'போலடே. கோயிலுக்கு மேக்க வயலுக்குள்ள பத்திராத ஆடுவோள, கேட் டியா? எள்ளு போட்டிருக்கு'

'செரி செரி' என்றவாறே போனான். அவன் கோயில் அருகே சென்றதும், 'இந்தப் பய கதை தெரியும்லா?' என்று கேட்டான் கந்தன்.

'என்னது?'

'குடி, கதைதான். அம்மன் கோயில் கொடை அன்னைக்கு நல்லா குடிச்சி ருக்கானுவோ. ராத்திரி கெரகாட்டம் நடந்திருக்கு கருவேலப்பிறை பக்கத்துல. உக்காந்து பார்த்துட்டிருந்த பனைமறிச் சான் பொண்டாட்டி, பாதியில் எழுந் திரிச்சு வீட்டுக்குப் போயிட்டிருந்திருக்கா. இந்தப் பய போதையில பனை மறிச்சான் வீட்டு திண்ணையில உட்கார்ந்திருக்கான். வந்தவா, 'இது யாரு ஒக்காந்திருக்கது'ன்னு கேட்டிருக்கா. 'நான்தான் உன் வீட்டுக்காரன்'ன்னு சொல்லிட்டு டமார்னு வாயைப் பொத்தி தொழுவுக்குத் தூக்கிட்டான். அவா குதியோ குதின்னு குதிச்சு, அங்க கெடந்த ஊனிக்கம்பை எடுத்து விளாசி எடுத் திருக்கா. அக்கம் பக்கம் வீட்டுல இருந்து ஆளுவோ கூடிட்டு. ஆளுவோல பாத்ததும், 'தெரியாம பண்ணிட்டேன். மன்னிச்சிருங்க'ன்னு அவா கால்ல விழுந்திருக்கான். நாலு மிதி மிதிச்சு வெளிய தூக்கி போட்டிருக்காவோ. பயலு க்கு கொட்டைப் பிதுங்கிப் போச்சு'

'நம்மளும்தான் குடிக்கோம். இப்டியா நடந்துகிடுதோம்'

'ச்சே, ஒம் பொண்டாட்டிலாம் தங்கம்லா. ஓங் வீட்டுல ஆயிரம் நடக்கும் எதை யும் வெளியில சொல்லிருப்பாளா?'

'ஏம், ஓம் பொண்டாட்டி கூடதான். ஒண்ணையும் சொல்ல மாட்டாளே'

'எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு பாத்துக்கெ. அதை மீறுனாதாம்ல சிக் கலு'

'நாலு நாளு முன்னால ஒம்பொண்டாட்டி, நாண்டுகிட்டு நிக்க போனாலா ம்லா?'

'இதை யார்ல சொன்னா?'

கந்தன் தடுமாறினான், உளறிவிட்டோமோ என்று. பிறகு, 'நீதாம்ல சொன்னே' என்றான்.

'நான் சொன்னனா... இருக்காத. இதை எப்பம் சொன்னேன்' என்றபடி யோச னையில் அப்படியே படுத்தான். பேச்சு நின்றுபோனது.

சிறிது நேரம் கழித்து, 'ஏல வா போவும்' என்ற பாலு எதுவும் பேசாமல் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினான்.

3 comments:

maithriim said...

மண் மணக்கும் கதை. வட்டார மொழியில் அழகான கருத்தை சொல்லியிருக்கும் உங்களுக்கு பாராட்டுகள் :-)

amas32

துபாய் ராஜா said...

ஆமா அண்ணாச்சி, ஊருல்லாம் முன்னாடி மாதிரி இப்ப இல்லை.... நம்ம பாலுவும், கந்தனும் பரவோயில்லை... ஊரோரம் ஆத்துப்பக்கமா இருந்து குடிக்கானுவோ... இப்ப உள்ள இளந்தாரியெல்லாம் பஸ்ஸ்டாண்டு, பெட்டிக்கடைன்னுல்லா நேரம் காலம் பார்க்காம உட்காந்து குடிக்கானுவோ... நாமதான் வெள்ளத்துரை மாரி கண்டு காணாம போவேண்டியிருக்கு...

ஆமா...கீழாம்பூர்லே இப்ப டாஸ்மாக் தொறந்துட்டாங்களா... இல்லையா...ஏதாவது ஒட்டுக்கடையாவது இருக்கணுமே...

ஆடுமாடு said...

amas 32 நன்றி.

ராஜா அண்ணாச்சி, வணக்கம். சிறுசுல இருந்து பெருசு வரை குடியிலதான் கெடக்கானுவோ. எங்க ஊர்ல டாஸ்மாக் கிடையாது. ஆழ்வார்க்குறிச்சியில இருந்து வாங்கணும்.
நன்றி