Monday, June 29, 2015

அம்மாவின் ஆவி

'எங்கிட்டயே வந்து ஒங்கம்மா எல்லாத்தையும் சொல்லுதாவோ. ஏன் ஒங்க அக்கா வீட்டுக்குப் போயி சொல்ல வேண்டியதான?'- வீட்டைத் தூத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தாள் மனைவி லட்சுமி.

முகச்சவரம் செய்துகொண்டிருந்தேன் நான். பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டார்கள். வழக்கமாக, ஐந்து மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செல் கிறவன், இன்று கொஞ்சம் அதிகமாகத் தூங்கிவிட்டேன். இதைச் சொன்னால் நண்பன் அமலுகுட்டி, 'நாம குடிக்கிற பீர் எல்லாம் டூப்ளிகேட் நண்பா. எல் லாத்தையும் ஏமாத்துதானுவோ. அதான் உடம்பு அசதியாயி தூக்கம் அதிக மாகுது. இதே, ஃபாரின் பீருன்னு வையேன்...' என்பான்.

மிகவும் மெதுவாக குடிக்கிற அவனால்தான் வீட்டுக்கு வர தாமதமானது என் கிற காரணத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான்.

நான் அவள் சொல்வதைக் கேட்காத மாதிரி நின்றுகொண்டிருந்தேன்.
'ஒங்களதான் சொல்லுதேன். காது கேக்கா, இல்லயா?'

வாயைக் கொப்பளித்துவிட்டு வந்து, 'ம்ம்.. என்னது?' என்றேன்.

'செவ்வா, வெள்ளியாச்சுனா என்னால தூங்கவே முடியல?'

'ஏம், நல்லாத்தான தூங்குன?'

'ஆமா. தூங்குனேன். இவரு கண்டாரு?'

'பெறவு?'

'பெறவா?... ஒங்கம்மா வந்து ஏதாவது சொல்லிட்டே இருக்காவோ. ஊர்ல  இருக்க ஒங்க அக்காட்ட சொன்னா, கேட்கமாட்டம்னா சொல்லப் போறா வோ... உயிரோட இருக்கும்போது ஒரு ஒதவியும் பண்ணல. எல்லாத்தையும் மவளுக்கே கொடுத்தாவோ. இப்பவும் பாருங்க. எங்கிட்டயே எல்லாத்தையு ம் சொல்லிட்டு...'

'என்ன சொன்னான்னு சொல்லு?'

'செத்துப் போயிருவோம்னு தெரிஞ்சி, வீட்டையும் வயலையும் ஒங்க பேருக் கு எழுதி வைக்கத்தான் ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்தாவுளாம். அதுக்குள்ள ஒங்க அக்கா பின்னாலயே வந்துட்டாவுளாம், ஒங்க அம்மா கூட. அது ரொம்ப வருத்தமா இருக்காம்'

'ம்ம்'

'எம் மவனுக்கு ஒண்ணும் பண்ணாம போயிட்டேனேன்னு ஒரே அழுவை. இப்ப அழுது என்னாவப்போவுது? பேங்க்ல கெடந்த ரூவாய எடுத்துத் தாரம்னு சொன்னாவுளாம். நீங்க, 'வேண்டாம், ஆஸ்பத்திரி செலவுக்கு வச்சுக் கோ'ன்னு சொல்லிட்டு வந்தேட்டாளாமே'

'இது ஒனக்கு எப்படி தெரியும்?'

'எனக்கெப்படி தெரியும்? நீங்க சொன்னேளா இந்த விஷயத்தை?கள்ளத்தனம். ஒங்க அம்மா கனவுல வந்துலா சொன்னது?'

'இதையெல்லாமா சொன்னா?'

'ஆமாமா. பெத்த தாயி ரெண்டு லட்ச ரூவாய பேங்க்ல இருந்து எடுத்து தந்தா எந்த ஆம்பளயாவது வேண்டாம்னு சொல்வானா? ரெண்டு பயலுவோளுக் கும் பள்ளிக்கூட பீசுக்கு என் நகையளத்தான வைக்க வேண்டியிருக்கு. நாமி னியா ஒங்க பேரை போட்டிருந்தாவது கெடச்சிருக்கும். அதையும் போடல. ஒங்களுக்கு பாதியாம் ஒங்க அக்காவுக்கு பாதியாம்?'

'செரி, அதை விடு'

'ஆமா, இப்டியே சொல்லுங்க. ஒங்கள கட்டிக்கிட்டு இதத்தான் அனுபவிக்கே ன். ரெண்டு லட்ச ரூவா!. என்னைக்கு இதை நீங்க சம்பாதிக்க?' என்று சொல் லிவிட்டு குத்த வைத்து உட்கார்ந்துகொண்டாள். சுவரை வெறித்துப் பார்த்த படி எதையோ நினைத்துக் கொண்டிருந்தவளிடம், 'சரி திங்கதுக்கு கொண்டா.  ஆபிஸ் கெளம்பணும்?' என்றேன்.

நேற்றைய பழைய சோறையும் கொத்தமல்லி துவையலையும் வைத்தாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். பிறகு மிளகாய்ப் பொடி போட்ட மாங் காய் துண்டுகளை எடுத்து வைத்தாள். நான்தான் பழையச் சோறு வேண்டும் என்று கேட்டிருந்தேன். வாரத்தில் இரண்டு நாள் இப்படி.

சாப்பிட ஆரம்பித்தேன்.

அம்மா இறந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அப்பன் இல்லாத பிள்ளைகளை வளர்த்த அவளது தியாகத்துக்கு முன் எதுவும் ஈடில்லை. ஒவ் வொரு செங்கற்களாகச் சுமந்து தானாகவே அவள் கட்டிய குச்சிலில் எங்கள் வாழ்க்கை வளர்ந்தது. தெருவும் ஊரும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய அவளுக்கு எதை செய் தாலும் ஈடில்லை. பிழைப்புக்கு வெளியூர் வந்துவிட்ட போதும் அவளுக்கான பாசமும் நேசமும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. திடீரென்ற அவளது இறப்பு எதிர்பாராதது. ஓங்கி அழவோ, உட்கார்ந்து உறையவோ தெம்பற் றவனாகி போனேன். அம்மாவின் நினைவுகள் ஒவ்வொன்றும் கண்ணீராகவே வந்தது. இப்போது இவளின் கனவில் வருகிறாளாம்.

'அஞ்சு மாசத்துக்கு முன்னால, 'ஏ லட்சுமி, சுக்காப்பி போட்டுத்தாயேன்'ன்னு கேட்டாவோ. நான் ஒங்ககிட்ட சொல்லவே இல்லை. காபிய போட்டு, போட் டோ முன்னால வச்சு கும்பிட்டேன். நாலு நாளு கழிச்சு, 'சுக்கை ஏன் இவ்வளவு போட்டே. கொறச்சுப் போட்டிருக்கலாம்லா?'ன்னு குறை சொல்லியாச்சு. நாளைக்கு வடை சுட்டு வைப்பியான்னாவோ. செரின்னு செஞ்சு வச்சு கும்புட் டாச்சு. ரெண்டு நாளு கழிச்சு வந்து, 'நீ கருவாட்டுக் குழம்பு நல்லா வைப்பியே 'ங் காவோ. எனக்கு கோவம் வந்துட்டுப் பாத்துக்குங்க. 'எல்லாத்தையும் இங்க வந்தே கேக்கேளே... ஒங்க மவா வீட்டுல போயி கேக்க வேண்டியதானே'ன்னு சொன்னேன். 'நா அவா வீட்டு வாசலை மிதிக்க மாட் டேன் தாயீ. அவளுக்கு நான் அவ்வளவு பண்ணிட்டேன். எம்புள்ளக்கு நான் ஒண்ணுமே பண்ணல. அதாம் இங்க வாரேன்'ன்னாவோ. எனக்கு மனசே கேக்கல பாத்துக்குங்க. அந்தானி கருவாட்டுக் குழம்பு வச்சாச்சு. இடையில ஆளை காணோம். இப்பம் திடீர்னு வந்து அழுதாவோ' என்று சொல்லிவிட்டு தண்ணீர் கொண்டு வைத்தாள்.

'நீ ரொம்ப சொல்லாத. எங்கம்மா, எங்கனவுல வந்து பேசாம, ஒங்கிட்ட வந்து எப்படி பேசுவா?

'கேட்டாச்சே. நீங்க சாமி கும்பிட மாட்டேளாம். அதான் வரலையாம். ஒங்க ம்மா செத்த அன்னைக்கு ஒங்க தாய்மாமா கோடி (புத்துணி) எடுத்துப் போட லையாம். அது ரொம்ப வருத்தமா இருக்காம். 'சேலை வாங்கி கும்புடச் சொல் லுவியா அவனை'ங்காவோ. நான் சொன்னா கேப்பாரா ஒங்க மாமா?' என் றாள்.
எனக்கு இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அதெப்படி இறந்த ஆவி கனவில் வந்து பேசும்? என்று யோசித்துக் கொண்டி ருந்தபோதுதான் பெரியப்பா மகன் மூர்த்தி அண்ணன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

'ஏல ஒங்கப்பா, எங்க வீட்டுல வந்து வேட்டி, சட்டை வச்சு கும்புடச் சொல்லு தாருல' என்று ஒரு முறை சொல்லியிருக்கிறான் அவன்.

இந்த மாதிரி விஷயங்களில் அவன் அதிக ஞானம் உள்ளவன் என்பதால் லட்சுமியை, அவனிடம் பேசச் சொல்லிவிட்டு அலுவகத்துக்குச் சென்று விட் டேன். வந்ததுமே போன். மூர்த்தி அண்ணன்தான்.

'ஏல. கேட்டியா ஒம் பொண்டாட்டி பேசுனாடே. ஆடி அம்மாச வருது. எல்லாரும் வீட்டுக்கு வந்திருங்க. எங்க வீட்டுல வச்சு அம்மா, அப்பாவுக்கு வேட்டி, சேலை வச்சு கும்புடுவோம்,னா. லீவு போட்டுருடே'.

மனைவி சொன்னது என்னை குழப்பிக்கொண்டிருக்க, மறுபேச்சு பேசவில் லை. 'சரி' என்று சொல்லிவிட்டேன்.

ஆடி அம்மாவாசை அன்று காலையில் தாமிரபரணிக் கரையில் பெருங்கூட்டத் துக்கு இடையே, ஐயர் ஒருவாரைப் பிடித்து அருகில் உட்கார்ந்து தர்ப்பணம் செய்தாகிவிட்டது. கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு அண்ணன் வீட்டுக்கு வந் தேன்.  விரதம். இரவு சாப்பாடு மட்டுமே என்று சொல்லிவிட்டார்கள். பசி வயிற்றைக் கிழித்தது. அக்காவையும் அவன் வீட்டுக்கு வரவழைத்திருந்தேன். சாயங்கால பூஜைக்குத் தேவையான அனைத்து எற்பாடுகளையும் அண்ணனும் மைனியுமே பார்த்துக் கொண்டார்கள்.

அவன் வீட்டில் அப்பா, அம்மா மற்றும் பெரியப்பா, பெரியம்மா புகைப் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு அருகில் சேலை, வேட்டிகள் முறுக்கி வைக்கப்பட்டிருந்தன. வாழை இழையில் பூஜைக்கான எல்லா விஷயங்களும் இருந்தன. அண்ணன் சாமியாராகி மணியடித்து தீபாராதனைக் காட்டினான். எல்லோரும் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது மைனி தீடீரென கண்கள் மூடி, ஏதோ முணங்கினாள். அவளை என் மனைவி பிடித்துக் கொண் டாள்.
'நாந்தாம் சீத பேசுதேன்' என்று மைனி சொன்னதும் நான் உட்பட எல்லோரும் அவளையே பார்த்தோம். சீதை அம்மாவின் பெயர். மைனியின் வழி அம்மா பேச ஆரம்பித்தாள்.

'அந்த வீட்டை எம்மவங்கிட்ட கொடுத்துர சொல்லுங்க, எம்மவாட்டா. இருக் கதே ஒழக்கு எடம். அதுலயும் பாதிய கேட்டு மூக்கை சிந்த சொல்லாதியோ அவள, கேட்டேளா? ஒங்கள நான் நல்லபடியா வைப்பேன்' என்று சொல்லி விட்டு மைனி, தரையில் உட்கார்ந்தாள். பின் சரிந்துபடுத்தாள். அவள் முகத் தில் தண்ணீர் தெளித்தான் அண்ணன்.

எல்லோரும் மைனியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அக்கா, விறுவிறுவென வெளியே போனாள். மூர்த்தி அண் ணன், 'ஏல எங்க போற. நில்லு' என்று சொல்லியும் வேகவேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். பிறகு சாமி கும்பிட்டுவிட்டு உட்கார்ந்தோம். மைனி, 'நான் என்னம்மா சொன்னேன்' என்று கேட்டுக்கொண்டிருந்தாள் என் மனைவி யிடம்.

 வாழை இலை விரிக்கப்பட்டு. சுடச் சுட சோறு பரிமாறப்பட்டது. அந்த வாசமே அலாதியாக இருந்தது. அவியல், பொறியல், வடை, பாயாசம் என பெரிய விருந்துதான்.

'கேட்டியாடே. ஒங்கம்ம நினைச்சதை சொல்லிட்டா. மத்தபடி உங்க அக்கா விருப்பம்' என்று அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தான்.

'அது ஒரு விஷயம் இல்லண்ணே. வீடு என்ன பெரிய வீடு? கேட்டா அவளு க்கே கொடுத்திரலாம்னு இருக்கேன்' என்றேன்.

'நீ இப்டி சொல்லுத. ஒங்க அக்கா சாப்பிடாமயே போயிட்டா?'
சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

திடீரென்று கதவு வேகமாகத் திறந்தது.

'நீங்களாம் பேசி வச்சி, அந்த வீட்டை ஆட்டைய போடலாம்னு பாக்கேளா? நாங்க என்ன கேணப்பயலுவோளா? நீங்க சொல்லுதத கேக்க. பாதி வந்து ரணும். இல்லன்னா கொலை விழும், பாத்துக்கிடுங்க... ஆவி பேசுச்சு, ஆத்தா பேசுனான்னு எவங்கிட்ட வந்து கதை சொல்லுதியோ. அறுத்துப்போடுவேன் அறுத்து'

அக்காவின் கணவர் வெறிகொண்டு பேசிக்கொண்டிருக்க, பின்னால் அவள் நின்று கொண்டிருந்தாள்.

6 comments:

துபாய் ராஜா said...

'சீர் கொடுத்தால் (தான்) தமக்கை'ங்கிற பழமொழியை நம்ம அக்காளுவோ நிரூபிச்சு போடுதாவுளே அண்ணாச்சி.... என்ன செய்ய 'கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய்' ங்கிற பெத்தவ பாசத்துக்காக நாம பொறுத்துப் போறதை ' கொலையும் செய்வாள் பத்தினி'வோளும் புரிஞ்சுகிட மாட்டாகிறாவுள்ளா.....

ஆடுமாடு said...

அண்ணாச்சி, இதுவும் கதைதான்.
கொஞ்சம் நிஜம். கொஞ்ச்ம கற்பனை.
வாரம் ஒண்ணுன்னு எழுதி குவிக்க முடிவு பண்ணிட்டேன்.
நன்றி

சுகன்.கலாபன் said...

அசத்தல். நல்ல மொழிநடை. படிக்கும்போது முடிவு பேசி வைக்கப்பட்ட நாடகம் என்றுதான் தோணுது

”தளிர் சுரேஷ்” said...

இயல்பான நடையில் சுவாரஸ்யம் குறையாதவகையில் சென்றது கதை! அருமை!

ஆடுமாடு said...

கலாபன், தளிர் சுரேஷ் நன்றி.

ஆடுமாடு said...

கலாபன், தளிர் சுரேஷ் நன்றி.