Friday, June 26, 2015

ஆவிகளுடன் பேசுதல்

சடையாக வளர்ந்திருக்கிற தலைமுடியை கொண்ட அந்த அம்மாவின் முன், வாசல்படியில் அமர்ந்திருந்தாள் என் மனைவி லட்சுமி. அது சிறு அறை. அறைக்குள் இருந்தபடி சம்மணமிட்டு வெளியே முகம் காட்டி இருந்தாள் அந்த அம்மா. அவளுக்கு எதிரில் நாக்கைத் துறுத்தியபடி காளியின் சிறு சிலை. அதற்கு பட்டுச்சேலை, பொட்டு என அலங்காரப் படுத்தப்பட்டிருந்தது. சிலையின் கீழே பெரிய வாழை இலையில் பூஜை பொருட்களும் தேங்காய் களும் வைக்கப்பட்டிருந்தன. கூடவே ஒரு ஓரத்தில் ஏழெட்டு எலுமிச்சைப் பழங்கள். ஊதுபத்தியின் வாசனையும் புகையும் அந்த அறையை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. வெளியே இருக்கிற வேப்பமரத்தில் மட்டும் ஒரு ட்யூப் லைட். அதன் வெளிச்சம் போதுமானதாக இருக்கிறது. மரத்தைச் சுற்றி வட்ட வடிவில், கம்பிகள் கொண்டு வேலி மாதிரி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில், பத்திகள் சொருகப்பட்டிருக்கின்றன. கீழே, கோணி ஊசியால் குத்தப்பட்ட ஐந்தாறு எலுமிச்சைப் பழங்கள். சில அழுகும் நிலையில் காப்பி கலருக்கு மாறி கிடந்தன.

காவி சேலை உடுத்தியிருக்கிற அந்த அம்மாவின் நெற்றியில் பெரிய அளவு குங்குமம். கருநிற மாலை ஒன்று இரண்டு மடிப்புகளாக அவர் கழுத்தில் தொங்குகிறது. அந்த அம்மா, இப்போது கண்ணை மூடிக் கொண்டு வலது கையால் நெற்றியைப் பிடித்தபடி ஏதோ மனசுக்குள் பேசுவது கேட்கிறது. 

இதற்கு முன் இதே இடத்தில் அமர்ந்திருந்த பெண்ணுக்கும் என் மனைவியை போலவே பிரச்னை. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் ஏழெட்டு பேர் இருக் கிறார்கள். எல்லோரும் மனைவியையோ, மகளையோ, தங்கச்சியையோ, உறவினரையோ அழைத்துக்கொண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.

என் மகன்கள் இந்த இருட்டிலும் அமைதியை கிழித்தபடி, கோயிலைச் சுற்றி சத்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். என் மனை வியின் தம்பி அவர்களை அமைதியாக இருக்கும்படி சொல்கிறான்.

கேள்விபடும்போது, சில விஷயங்கள் சாதாரணமாகவே இருக்கிறது. அதன் தீவிரம் நம்மை நெருங்குவதில்லை. இப்படி, அப்படி என்கிற லேசான கற் பனையிலேயே சென்று மறந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அது நமக்கு நடக்கவில்லை என்பதும் வசதியாக இருப்பதால் கேள்வி படும் விஷயத்தின் ஆழத்துக்குள் செல்ல விரும்புவதில்லை. அதை மேலோட்டமாகப் பார்த்து கண்டு கொள்ளாமல் இருக்கிறது மனம். நானும் அப்படித்தான் இருந்தேன்.

பேய், பிசாசு கதைகளை நண்பர்கள் யாராவது சொல்ல ஆரம்பித்தால், ‘அப்டியே மூஞ்சியில போட்டம்னா? பேயாம்லா, மூஞ்சைப் பாருல’ என்று ஒரு எக்காளம். பிறகு யாரும் என்னிடம் அதுபற்றி பேசமாட்டார்கள். ஆனால் இதற்கு முன் ஊரில் பல பேய்க் கதைகளைக் கேள்வி பட்டிருக்கிறேன்.

தங்கம்மன் கோயில் தெருவில் இருக்கிற கூனையன் மனைவிக்குப் பேய் பிடித்த கதை ஊருக்குள் இன்னும் சொல்லப்பட்டு வருகிறது. ரயிலில் அடிபட்டு சிதறிகிடந்த சேரன்மகாதேவிக்காரப் பெண், விழியை திறந்து மூடும் போது அருகில் நின்று பார்த்தவள் கூனையன் மனைவி. அதற்குப் பிறகு அவள் தான், கூனையன் மனைவியைப் பிடித்துக்கொண்டதாகச் முதலில் சொன் னார்கள்.

 திடீரென்று ஒரு நாள் இரவு, கூனையனை ‘ஏல எச்சிக்கலை நாயே. எங்க வந்து படுத்துக் கெடக்க. பொம்பளை தூங்குனா பக்கத்துல தூங்குவியோ, செரிக்கு ள்ள’ என்று எகிற, நடு ராத்திரில் பெரும் பிரச்னையாகிவிட்டது. கோபம் கொண்ட கூனையன் அவள் கன்னத்தில் அடிக்க, பதிலுக்கு அவள், அவனை மிதித்த போதுதான் அவளுக்குப் பேய் பிடித்திருக்கிற விஷயத்தைப் புரிந்து கொண்டார்கள். எலும்பாக இருக்கிற அவள் மிதித்து கூனையனுக்கு இடுப்பில் பெரும் வலி. நடக்க முடியவில்லை. அவனின் அம்மாதான் விபரீதம் உணர்ந்து, அறைக்குள் அவளை வைத்துப் பூட்டினாள்.

பத்து பதினைந்து நாட்கள் அந்தப் பேய் பாடாய்ப்படுத்தி எடுக்க, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தொந்தரவு. பிறகு கம்பர் பூஜை செய்து பேயை விரட் டியதாகச் சொன்னார்கள். 

இந்தக் கதையை என்னிடம் சொன்னவர்களை நான் கேலி செய்து கொண் டிருந்தேன். ‘அவளுக்கு வேற ஏதோ பிரச்னை. அத பேயிங்கானுவோ?’ என்றேன்.

‘பேயில்லைனா, கண்ணை உருட்டிட்டு கூனையனை வெரட்டி வெரட்டி மிதிக்க ஓடுவாலோல?’

‘அவென் பொண்டாட்டிக்கு அவென் மேல என்ன கோவமோ?’

‘லூசுத்தனமா பேசாதல. நாராயண கம்பரு, அவா உள்ளங்கையில சூடத்தை ஏத்திட்டாரு. அதுபாட்டுக்கு வச்சுக்கிட்டிருக்கு செத்த நேரம். சாதாரணமா இருந்தா அப்டி தீய வச்சுட்டிருக்க முடியுமால. சுடுதுன்னு கீழ போட்டுர மாட் டாளா?’

‘நீ என்ன வேணாலும் சொல்லுல. பேயின்னு ஒரு மயிரும் கெடை யாது. அவளுக்கு வேற ஏதோ நோயி பாத்துக்கெ’

‘ஆமாடெ. இவன் அஞ்சாறு மயிரை கண்டான். நீ அன்னைக்கு வந்தி ருக்கணும்?’

‘வந்தா?’

‘அவா சொல்லுததா கேட்டிருந்தேனா, இப்டி எசை பாடமாட்டே?’

‘என்ன சொன்னா?’

‘என்ன சொன்னாளா? கம்பரு, நீ யாரு யாருன்னு கேக்காரு. ‘என்னை கொன்னவனை கொல்லாம விடமாட்டேன்’னு அவா சொல்லுதா? அப்பம் பேய் தான?’

பிறகு இந்தப் பேச்சு, சண்டையில் முடிந்தது. 

நண்பர்கள் கேட்டார்கள்.

‘செரில. ஒங்கம்ம குறி சொல்லுதால்லா? அவளுக்கு மேல இருந்து யாருல சொல்லி வுடுதா?’ என்று.

‘அதுவும் இதுவும் ஒண்ணா?

‘அது மாதிரிதான் இதுவும். அது மட்டும் நடக்கும். இது நடக்காதோல?’

‘குறி சொல்லுதது சாமி வெஷயம். பேய், சாமி வெஷயமால?’

‘இந்த நாயிட்ட பேசுனா, நம்மள பிராண்டிட்டே இருப்பாம். அவங் கிட்ட பேச்சை விடுங்கல’ என்று ஒதுங்கினார்கள். 

இது சிறுவயது பிரச்னை. பிறகு வளர வளர, பேய்க்கதைகளை அதிக மாக வாசித்திருக்கிறேன். பேய் தொடர்பான திரைப்படங்களைப் பார்த்திருக்கி றேன். ஆனாலும் பேய் என்கிற ஒன்று இல்லை என்பதுதான் தீர்மான முடிவாக இருந்தது.

‘செவ்வா, வெள்ளி அங்க இங்கன்னு அலையாதன்னு சொன்னா யாரு கேக்கா? இவ்வளவு கானம் மல்லிப்பூவை தலையில வச்சுக்கிட்டு அந்த செரிக்கிக்கு நடு மத்தியானத்துல தெப்பக்கொளத்து பக்கம் என்ன சோலி? அங்க ஏற்கனவே வண்ணாத்தி சுத்துதான்னு ஊரெல்லாம் தெரியும். பெறவு என்ன எழவுக்கு இந்த சிலுப்பி போனா? போனா, அவா பிடிக்காம என்ன செய்வா?’- சுருட்டைக்குப் பேய் பிடித்ததாகச் சொல்லபட்டபோது, வீட்டில் வைத்து ஆச்சி திட்டிய வார்த் தைகள் இது. 

செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்தான் பேய்களுக்குப் பிடித்தமான நாட்கள் என்றும் சமைந்த பெண்கள்தான் பேய்களிடம் அதிகமாக மாட்டுவார்கள் என்றும் ஆச்சியின் மூலம்தான் கேள்விபட்டேன். ஆனால் என் மனைவி இரண்டு குழந்தைக்கு அம்மாவான பிறகு பேயிடம் எப்படிச் சிக்கினாள் என்பது குழப்பமாக இருக்கிறது.

ஆபிஸ் மீட்டிங் முடிந்து நண்பனை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு  வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். பீர் குடிக்கலாம் என்ற நண்பனுக்கு கம்பெனி கொடுக்காமல் போய்க்கொண் டிருந்த போதுதான் மனைவி போனில் அழைத்தாள். காலையில்தான் அவளின் சர்க்கரை அளவு சோதனை அறிக் கையை மெயிலில் அனுப்பிவிட்டு வந்திருந்தேன். அது தொடர்பாகத்தான் பேசுவாள் என்று நினைத்து எடுத்தேன்.

‘கொஞ்சம் சீக்கிரம் வாங்க. வீட்டைச் சுத்தி துப்பாக்கியோட ஆளா நிய்க்காங்க. நம்மளை கொல்லப் போறாங்களாம்’ என்றதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதென்ன புதுக்கதை? நம்மை யார் கொல்ல வருகிறார்கள்? என்று எனக்குள் பயம். பிறகு, ‘அப்படியெல்லாம் யாரும் கொல்ல முடியாது. அஞ்சு நிமிஷத்துல வந்திருவேன். தைரியமா இரு’ என்று சொல்லிவிட்டு விரைந் தேன். ‘இவளுக்கு என்னாச்சு?’ என்ற யோசனையில் இருந்தது மனம்.

சிறிது நேரத்தில் மீண்டும் போன். அவளின் அண்ணன். அம்பாசமுத்திரம் கிளை கருவூலத்தில் வேலை செய்கிறவன்.

‘என்ன திடீர்னு லட்சுமி இப்டி சொல்லுதா? ஏதும் பிரச்னையா?’ என்று கேட்டார். 

‘இப்பதான் வீட்டுக்குப் போயிட்டிருக்கேன். போயிட்டு பேசுதேன்’ என்றேன்.
‘ஏதும் பிரச்னைன்னா 100-க்கு போன் பண்ண சொன்னேன். வேற ஏதாவதுன்னா கூப்டுங்க’ என்றார் அவள் அண்ணன்.

‘சரி’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனேன். வாசலில் கூட்டம் கூடியிருந்தது தெரிந்தது. சோடியம் தெருவிளக்கு அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு மாடிக்கு ஏறினேன். வீட்டின் உரிமையாளர், ‘வாங்க’ என்று ஒதுங்கினார். கீழ் வீடுகளில் இருப்பவர்களும் மேல் மாடியில் இருப்பவர்களும் கூடியிருந்தார்கள். என்னைக் கண்டதும் என் மனைவி ஒரு மாதிரியாகப் பார்த்தாள். அவள் கையில் குங்குமப் பொட்டு டப்பா இருந்தது. நெற்றி யில் அதிகமாகப் பூசியிருந்தாள். 

எதிரில் கையை காட்டி, ‘அங்கதான் நிய்க்காங்க. துப்பாக்கியெ வச்சுட்டு நிக்காங்க. இவங்க யாரும் நான் சொல்லுததை நம்ப மாட்டுக் காங்க. நீங்களாது நம்புங்க’ என்று அழத் தொடங்கினாள். பிறகு என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். ‘நம்மள கொன்னுருவாங்க. கொன்னுருவாங்க’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் அவளை சாந்தப்படுத்தினேன். பிறகு கூடியிருந்தவர்களைப் பார்த்தேன். அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர். 

‘சோறு பொங்கினியா?’

‘மத்தியானம் வச்சது இருக்கு’

‘பயலுவோ சாப்டானுவளா?’

‘ம்ம்’

-நான் லுங்கிக்கு மாறினேன். மகன்கள் அருகில் வந்து, ‘அம்மாவுக்கு என்னாச்சுப்பா. ஔறிட்டே இருக்கா’ என்றனர். ‘ஒண்ணுமில்லடா. நீங்க படிச் சீங்களா?’ என்று கேட்டுவிட்டு வெளியில் வந்தேன்.

ஹவுஸ் ஓனர் நின்றிருந்தார். மனைவியின் பக்கத்து ஊர்க்காரர்தான். ‘ஒரு நா கூட, லட்சுமி இங்க வந்து எதுவும் கேட்க மாட்டா. இன்னைக் கு மத்தியானம் திடீர்னு காபி இருக்குமான்னு கேட்டா. என் வீட்டுக்காரி ஆச்சரியமா பாத்துட்டு, ‘ஒடம்பு சரியில்லையாம்மா’ன்னு கேட்டா. ‘ஆமா’ன்னு சொல்லி வாங்கிட்டு போனவா, திடீர்னு ‘வீட்டை சுத்தி ஆட்கள் நிக்காங்க. நீங்க பாருங்களேன்’ன்னு வந்து சொன்னா. எனக்கு ஒண்ணும் புரியலை. அந்தானி, அய்யா வழி கோயில்ல இருந்து கொண்டாந்த முத்திரியை நெத்தில பூசி விட்டேன். ‘நா பாத்துக்கிடுதேன். நீ போம்மா’ன்னு சொன்னேன். பிறவு ஒரே அழுவை. என்னவா இருக்கும்?’ என்றார்  அவர்.

எனக்கும் குழப்பமாக இருந்தது. வீட்டுக்குள் வந்து தோசை சுட்டேன். லட்சுமியின் கண்களில் இப்போது மாற்றம் தெரிந்தது. ‘நீ படுத்துக்கோ. கொஞ்ச நேரம் தூங்கு’ என்றேன். கடந்த இரண்டு நாட்களாக அவள் சரியாகத் தூங்கவில்லை என்றும் சொல்லியிருந்தாள்.  தூங்கினால் சரியாகும் என்று நினைத்தேன். அவள் தூங்கவில்லை. பூஜை அறை க்குப் போய் உட்கார்ந்து கொண்டாள். சாமி பாடல் பாட ஆரம்பித்தாள். அவளைக் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டு முடித்தேன். பிறகு மருத்துவரிடம் அழைத்துப் போலாமா என்று நினைத்தேன். காலை வரை பார்த்துவிட்டு பிறகு போகலாம் என்று நினைத் தேன்.  அவளது அண்ணணுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னேன்.

‘திடீர்னு பயப்படறா. நைட்டு வரை பார்த்துட்டு காலையில டாக்டரை பார்க்கி றேன்’ என்றேன். பிறகு கிச்சன் லைட்டை அணைத்து விட்டு ஹாலுக்கு வந்தேன். அவள், ‘எந்த லைட்டையும் அணைக்காதீங்க. எனக்கு பயமாயி ருக்கு’ என்றாள். மூடியிருந்த ஜன்னலை மெதுவாகத் திறந்து, வீட்டுக்கு எதிரி ல் பார்த்தாள். அது ஒரு தனியார் பள்ளி. அங்கு யாரும் இல்லை என்பது எனக் குத் தெரியும். பிறகு டமாரென்று ஜன்னலை சாத்திவிட்டு வந்தாள். அவளது போனை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டாள். 

‘நம்மள யாரும்மா வந்து கொல்லப்போறா. கவலையில்லாம தூங்கு. நான் இருக்கம்லா’ என்று பேசிக்கொண்டிருந்தேன். ஹாலில், பாயை விரித்து படுத்தோம். மகன்கள் தூங்கிவிட்டனர். பிறகு அவள் மேல் என் கை பட்டதும் எடுத்து தள்ளி வைத்தாள். நான் அவள் கையை மீண்டும் பிடிக்க முயற்சித் ததும் தடுத்தாள். அப்போதுதான் கவனித்தேன். அவள் உடையில் மாற்றம் தெரிந்தது. நைட்டிக்கு மேல் ஜாக்கெட் அணிந்திருந்ததைப் பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. எந்த பெண்ணும் இப்படி உடை அணிந்து நான் பார்த்ததில்லை. பிறகு என்னையறியாமலேயே தூங்கிப் போனேன். 

நள்ளிரவில் கதவுத் தட்டப்படும்போதுதான் நான் விழித்தேன். என் மனைவி, ‘யாரு யாரு’ என்று பயத்தில் ஒடுங்கிக்கொண்டு கேட்டாள். ‘போலீஸ்’ என்று பதில் வந்ததும் எனக்குப் பதட்டமாகி விட்டது. நான் எழுவதற்கு முன் அவள் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

‘இங்கதான் நிய்க்காங்க. எதிர்ல போய் பிடிங்க சார். துப்பாக்கியை வச்சு சுடுங்க சார். கொல்லுங்க, அவங்கள’ என்று பள்ளியையேப் பார்த்துக் கொண்டிருந் தாள். என் மகன்கள் விழித்து, ‘யாருப்பா’ என்று வந்தார்கள்.

அந்த இளம் வயது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், ‘சார் பசங்க முழிச்சி ட்டாங்க பாருங்க. நீங்க மட்டும் வெளிய வாங்க’ என்று என்னை அழைத்தார். நான், ‘உள்ள போ’ என்று மனைவியை அனுப்பிவிட்டு அவரிடம் வந்தேன். 

‘சார். ஸாரி. அவளுக்கு ஒடம்பு சரியில்லை’ என்றேன்.

‘பார்த்தாலே தெரியுது. நூறுக்கு போன் பண்ணியிருக்காங்க. அதான் வந்தோம்’ என்ற அவரிடம் ஹவுஸ் ஓனரும் மேல வீட்டு மலையாள த்துப் பெண்ணும் விஷயத்தைச் சொன்னார்கள். ‘டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போங்க சார்’ என்று அட்வைஸ் செய்துவிட்டு போனார் அவர்.

எனக்குத் தூக்கம் போய்விட்டது. லட்சுமிக்கு ஏதோ சிக்கல் என்பதை புரிந்துகொண்டேன். உடனடியாக அவளது அண்ணணுக்கு நடந்த விஷயத்தை சொன்னேன். அவரது காரில் இரண்டு தம்பிகள் மற்றும் அம்மா, சித்தியுடன் காலை பத்து மணிக்கு வந்து சேர்ந்துவிட்டார்.

அவர்களைக் கண்டதும் லட்சுமி இன்னும் அழ ஆரம்பித்துவிட்டாள். 

‘எங்கள கொல்லப் போறாங்க. போறாங்க’ என்பதுதான் அவளது கதறலாக இருந்தது. பிறகு குடும்ப உறுப்பினர்களின் முடிவு படி, பசங்களின் ஸ்கூலுக்கு லீவு சொல்லிவிட்டு  ஊருக்குத் திரும்பினோம். கார் போகும் வழியில் அவள் பயம் இன்னும் அதிகரித்திருந்தது. போகிற வருகிற கார்கள், லாரிகள் எல் லாமே அவளையும் என்னையும் கொல்ல வருவதாக நினைத்து அலறிக் கொண்டிருந்தாள். நேற்று இரவில் இருந்து சாப்பிடவும் இல்லை. காலையில், பேருக்கு ஒரு இட்லி. மதியம் பாதி சப்பாத்தித் தின்றாள்.

தாழக்குடிக்குப் போய்ச் சேர இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. சேலையை மாற்றிவிட்டு அங்கிருந்து நாகர்கோயில் ஆனந்தி மருத்துவமனைக்குச் சென் றோம். அட்மிட் செய்துவிட்டு ட்ரிப்ஸ் ஏற்றினார்கள். 

பிறகு மருத்துவர் வந்ததும் விஷயத்தைச் சொன்னேன். நிறைய டெஸ்ட், ஸ்கேன் எல்லாம் எடுக்க எழுதிக்கொடுத்தார். ‘ஸ்ட்ரெஸா கூட இருக்கலாம். பக்கத்துல சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் இருக்கார். காலையில சொல்லுகென். பார்த்துட்டு வாங்க’ என்றார்.

அவளின் சொந்தக்காரக் கூட்டம் முழுவதும் ஆஸ்பத்திரியில் கூடியிருந்தது.

ஏம்ட்டி நல்லாத்தான இருந்தா?’ என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந் தார்கள். 

‘பயங்காட்டுத மாதிரி டீ.வி சீரியல் ஏதும் பாத்திருப்பாளோ? அப்படி ன்னாலும் இந்த மாதிரி இருக்காதெ’ என்றாள் அவள் மைனி.

‘எங்க குடும்பத்துல லட்சுமிதான் தைரியமானவா. அவா பயந்து நாங்க ஒரு நா கூட பாத்ததில்லை. ஒரு கல்யாண வீட்டுக்கு போயிட்டு வெள்ளமடம் ஆத்துப் பாலத்தை தாண்டி நடந்து வந்துட்டிருந்தோம். ஒரு பய சங்கிலிய அக்கதுக்கு கழுத்துல கைய வச்சுட்டான். ஓங்கி மிதிச்சு அவனை பொறட்டி எடுத்த வளாக்கும் லட்சுமி' என்றாள் அவளது தங்கச்சி.

இசக்கி அம்மனுக்கு ஆடுகிற அவளது சித்தி, ‘ஏட்டி சும்மாரு. ஏய்யா ரோட்டுல கழிச்சுப் போட்டதை மிதிச்சிருப்பாளோ?’ என்றாள் என் னிடம். சென்னையில் எதை கழித்து எங்கு போட்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 

‘இந்தாங்க. லட்சுமி ஒங்களை உள்ள கூப்புடுதா. நீங்க அவளை விட்டு ட்டு சென்னைக்கு போயிரக் கூடாதாம்’ என்றாள் அவளின் சின்ன மைனி. நான் அவள் அருகில் அமர்ந்தேன். ‘நீங்க அங்க போகாதீங்க. கொன்னுருவாங்க’ என்று அழத்தொடங்கினாள். அவளது சித்தி, ‘ஏன் அழுத. நாங்க இருக்கோம்ட்டி. சும்மாரு’ என்று அவளை அதட் டினாள்.

பிறகு அவளது உறவினர்கள் எல்லோரும் ஏதேதோ என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு விசாரணை கைதி போல் அவர்கள் முன் உட்கா ர்ந்திருந்தேன்.  இதற்கு நான்தான் காரணம் என்பது போல அவர்களின் கேள் வியும் பேச்சும் இருந்தது. ஒவ்வொருவராகக் கிளம்பவும் நான் மட்டும் மருத்து வமனையில் இரவு முழுவதும் இருந்தேன். லட்சுமி இன்னும் தூங்கவில்லை.

காலையில் மனநல மருத்துவரைப் பார்த்தோம். கூடவே அவளின் சின்ன அண்ணணும் வந்திருந்தான். டாக்டர் அவளிடம் சில கேள்விகள் கேட்டார். பிறகு என்னிடம், ‘சமீபத்துல எப்பவாவது கோபமா கத்தியிருக்காங்களா?’ என் றார். 

‘இல்லையே.  கொஞ்ச நாளா சரியா தூக்கம் வரலைன்னு சொன்னா’ என்றேன். பிறகு மண்டையை மட்டும் ஸ்கேன் எடுத்துவிட்டு வரச் சொன்னார். எடுத்துக்கொடுத்ததும், ‘ஒரு பிரச்னையுமில்லை’ என்றவர், ‘பத்து நாளைக்கு டேப்லெட் எழுதித்தாரென். போடுங்க. ஹெல்த்துக் காகத்தான். கூடவே நல்லா தூக்கமும் வரும். இதுலயே சரியாயிரும். பெறவும் ஏதாவது பிரச்னைன்னா கூட்டிட்டு வாங்க’ என்றார் எழுதிக்கொண்டே. அவளின் சின்ன அண்ணன், ‘மத்ததா இருக்குமோ?’ என்றான் அவரிடம். மற்றது என்று அவன் சொன்னது பேய், பிசாசு மேட்டர்.

‘ஒங்க நம்பிக்கைக்குப் போனா போயிக்கிடுங்க. ஆனா இந்த மாத்தி ரையை கண்டிப்பா போடுங்க' என்றார் டாக்டர். இந்த விஷயத்தை உடும்பாகப் பிடித்து க்கொண்டு அவளின் சின்ன அண்ணன், ‘டாக்டரே சொல்லிட்டாரு. வாங்க போவோம்’ என்றான் வீட்டில். 

'நோய்க்கும் பாரு பேய்க்கும் பாருன்னு சொல்லிருக்காம்லா. சும்மாவா சொன்னான்?'

இதையடுத்து அவள் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆதரவில் இதோ தேரூரில் உள்ள இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறோம்.

அந்த அம்மா, ‘நீ யாரு. எங்க வந்து உட்கார்ந்திருக்கெ?’ என்றாள். என் மனை வியிடம் பதில் இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அவளிடம் இருந்து அப்படி யொரு சத்தம். அதிர்ந்துவிட்டேன் நான். 'கஞ்சனா' திரைப்படத்தில் வரும் பேயின் சத்தம் போலவே அது ஏதோ செய்தது.

‘யே. நீ யாரு என்னைய கேள்வி கேக்கெ’

‘நா யாரா? நடு மண்டையில ஒண்ணு போட்டா, எப்டி இருக்கும் தெரியுமில்லா? யாருட்ட எதுத்து பேசுத, வாய கிழிச்சுருவேன், கேட்டியா? சொல்லுளா. ஓம் பேரென்னெ?’

‘சுலோச்சனா’

‘இவகிட்ட எதுக்கு வந்து ஒக்காந்திருக்கெ. புள்ளகுட்டி வச்சிருக்கவகிட்ட?’

‘இவள வச்சுதான் எம் மாமியாரை கொல்லணும்’

‘ஒம்மாமியாரையா? அவ எங்க இருக்கா?’

‘இருக்கா. என்னைய மண்ணெய்யை ஊத்தி அவளும் அவா புருஷனும் கொளுத்துனாவோ. அவள கொல்லுததுக்கு இவ மேல ஒக்காந் திருக்கேன்’

‘ஏ கூறுகெட்டவள. இவகிட்ட ஒக்காந்தா, ஒம் மாமியாரை கொல்ல முடியாது. நீ எறங்கு’

‘மாட்டேன். என்னய எறங்க சொல்லாத’

‘உள்ள யாரு இருக்கா பாத்தியா? சொன்னதை கேளு. எறங்கு’

‘கொஞ்ச நாள்ல போயிருவென். இப்பம் எறங்க சொல்லாத?’

‘சொன்னதையே சொல்லிட்டிருந்தா, சூடு வச்சுருவேன் பாத்துக்க’

என் சின்ன மகன் நெருங்கி வந்து கட்டிப்பிடித்தான். ‘அம்மாவுக்கு என்னப்பா ஆச்சு? என்றான். பெரியவன் என்னைப் பார்த்து சிரித்தான். நான் மூச் என்றேன். கூட்டத்தில் இருந்தவர்கள் இதே போன்று பல உரையாடல்களைக் கண்டி ருப்பவர்களாக  உட்கார்ந்திருந்தனர். எனக்கு ஆச்சரியமாகவும் அதிசய மாகவும் இருக்கும் இந்த விஷயம் அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்ப டுத்தவில்லை. அவர்களின் பேச்சை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந் தார்கள்.

உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த அம்மா கேட்கவும் இவள் பதில் சொல்லவுமாகச் சென்றுக்கொண்டிருக்கிறது. திடீரென்று லட்சுமியின் தலை யில் எலுமிச்சைப் பழத்தை வைத்தாள் அந்த அம்மா.

‘எறங்கு. இதுல எறங்கு’

‘மாட்டேன். அவள கொல்லாம எறங்கமாட்டேன்’

‘எங்கையில என்ன இருக்கு பாரு. குத்திருவென்’

‘குத்தாத. எறங்கிருதென். குத்தாத... குத்தாத’

பிறகு தலையில் வைக்கப்பட்டிருந்த எலுமிச்சைப் பழத்தின் மீது கோணி ஊசியால் குத்தினாள் அந்த அம்மா. என் மனைவி வலியால் துடிப்பது போல, முணகினாள். பிறகு ஊசிக் குத்தப்பட்ட எலுமிச்சைப்பழம் வேப்பமரத்தின் அடியில் வேலிக்குள் போடப்பட்டது. 

காளி சிலையின் கீழே இருந்த சொம்பிலிருந்து தண்ணீர் எடுத்து லட்சுமியின் முகத்தில் மூன்று முறை வீசினாள். நெற்றியில் திருநீறு பூசிவிட்டாள். என்னையும் என் மகன்களையும் வரவழைத்து பூசினாள். 

‘எல்லாம் சரியா போச்சு. இனும அவ வரமாட்டா. எலுமிச்சைப் பழத்து க்குள்ள போட்டு அமுக்கியாச்சு, அவளை. செரியா?’ என்ற அந்த அம்மா வுக்கு காணிக் கைக் கொடுக்கப்பட்டது. பிறகு எல்லோருக்கும் தாயத்து அணிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து எழுந்த லட்சுமி, தள் ளாடினாள்.

‘கேட்டேளா, இது மேற்படி வெவாரம்னு சொன்னன்லா, சரியா போச்சா. புள்ள முழிக்க முழிய பாத்தே கண்டுக்கிட்டனாக்கும். டாக்டர்ட்ட போனாலாம் செரிபடாதுன்னு தெரியும். ஒங்க திருப்திக் குத்தான் டாக்டரு. எங்களுக்குலா தெரியும் என்னன்னு...’ என்று சொல்லிவிட்டு லட்சுமியின் சின்ன அண்ணன் தெனாவட்டாகப் பார்த்தான்.

‘எப்படியோ, அவளுக்குச் சரியானால் போதும்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தோம். 'மாத்திரை போட்டாளா?' என்று கேட்க நினைத்து கேட்காமல் விட்டுவிட்டேன். பிறகு சின்ன மச்சானின் புண்ணியத்தில் தோப் புக்குள் நிலா வெளிச்சத்தில் எண்ணெயில் வறுத்த கோழி கால்கள் சகிதமாக, பீர் விருந்து படைக்கப்பட்டது.

அவர்கள் ஊரில் நடந்த பேய் கதைகள் பற்றியும் அந்த அம்மா பேயை விரட்டியது பற்றியும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தான் சின்ன மச்சான். தனக்கு சாமி அருள் இருப்பதால் இந்த மாதிரி பேய்கள் தன்னை அண்டாது என்றும் ஆனால் தன்னால் பேய்ப் பிடித்திருப்பவர்களை கணிக்க முடியும் என்றும் சொன்னான். இரண்டாவது பீருக்குப் போகும்போது, இன்னும் சில கதைகளைச் சொன்னான். 'நாளைல இருந்து லட்சுமி சரியாயிருவா பாருங்க' என்றான் இறுதியாக. சரியானால்தான் நிம்மதி என்று நினைத்துக் கொண்டு போதையில் வீட்டில் வந்து தூங்கினோம். 

அதிகாலையில் மின்சார தொடர்பு துண்டானதால்  ஃபேன் ஓடவில் லை. வெக்கையாக இருந்தது. எழுந்து வாசலுக்கு வெளியே கிடக்கும் கட்டிலில் படுக்கப் போகும் போதுதான் அந்த சத்தம் வந்தது. திண் ணைக்கு இடப்பக்கம் இருந்த அறையில் இருந்து சாமி கும்பிடுவதைப் போல கைகளை வைத்துக் கொண்டு லட்சுமி, 'நான் சுலோச்சனா, அவளைக் கொல்லாம  போவ மாட் டேன்' என்று முகத்தைக் கோரமாக்கிச் சொல்லிக் கொண்டிருந்தாள். 

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். 
மயக்கம் வருவது போல இருந்தது.


2 comments:

துபாய் ராஜா said...

அண்ணாச்சி, இது கதையா... நடந்த சம்பவமா... எழுத்துல அப்படியே எல்லாத்தையும் கண்ணு முன்னாடி காட்சியா கொண்டு வந்துட்டியளே...

ஆடுமாடு said...

Annachi vanakkam.
Unmai sampavathin adipadaiyil ezuthiya kathai. athavathu konjam nijamum konjanm kathaiyum. Nandri Annachi.