Tuesday, June 23, 2015

காணாமல் போகிறவர்


சிவன் கோயில் நுழைவாசல் திண்டில், முதுகைச் சாய்த்து உட்கார்ந் திருக்கிறார் பட்டவராயன் தாத்தா. கோயிலின் முன் பக்கத் திண்டில் அங்கும் இங்கும் தென்னிக்கொண்டிருந்த கற்கள் ஒழுங்கப்படுத்தப் பட்டு சிமெண்டால் பூசப்பட்டிருக்கிறது. கோயில், நீலம் கலந்த சுண்ணாம்பு கொண்டு வெள் ளையும், நடுநடுவே செந்நிறப் பட்டையும் அடிக்கப்பட்டு புதுப் பொலிவாகத் தெரிகிறது. நடை சாத்தப்பட்டிருக்கிறது. ஐயர், மாலையில் வருவாராக இருக்கலாம். கோயிலின் வலப்பக்க நிழலில் இரண்டு எருமைகள் படுத்துக் கொண்டு அசைப் போட் டுக் கொண்டிருக்கின்றன.

தோளில் கிடந்த துண்டை முதுகுக்கும் திண்டுக்கும் இடையில் அண்டக் கொடுத்துக்கொண்டு ஒரு காலைத் தொங்கவிட்டும் ஒரு காலை மேலே வைத் தும் அமர்ந்தபடி எதையோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார் அவர். அந்தப் பாவனையை அவரது முகம் காண்பிக்கிறது.

எங்கிருந்தோ கவ்விக்கொண்டு வந்த எலும்புத்துண்டை அவர் இருக்கும் இடத் துக்கு பக்கத்தில் போட்டுவிட்டு, காலால் மிதித்து வாயால் இழுக்கிறது, கருப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிப் போட்ட நாய். அதைப் பார்த்துவிட்டு, 'எங்க வந்து எலும்பை போடுத பய நாயே... ஓடு' என்று விரட்டுகிறார். அந்த நாய் அவர் வார்த்தைக்குப் பயந்தது போல பம்மி, பிறகு அந்த எலும்புத் துண்டைத் தூக்கிக்கொண்டு ஓடு கிறது, வலப்பக்க முள்ளு காட்டுக்கு.

முகத்தில், வெண்ணிற தேங்காய் சவுரி மாதிரி தாடியும் மீசையும் வளர்ந்து அவரை வேறொரு ஆளாகக் காண்பித்துக்கொண்டிருக்கிறது. அவருக்கு பின் பக்கத்தில், எப்போதும் இறுமிக்கொண்டிருக்கும் சுப்பையா, துண்டை விரித்து ஒருக்களித்துப் படுத்துக் கிடக்கிறார். அவரது குறட்டை சத்தம் மேலும் கீழும் இழுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

செல்வத்தின் சைக்கிளில் இருந்து இறங்கி நின்று அவரைப் பார்க்கிறேன். இதற்கு மேல் சைக்கிள் செல்லாது. கோயிலின் பின்னே வாய்க்கால். அதைத் தாண்டி வயல்காடுகள். பிழைப்பு வெளியூர் என்றாகிவிட்ட பிறகு, விடு முறைக்கு வந்திருந்தேன் நான். ஒத்திக்கு கொடுத்திருக்கும் எங்கள் வயலைப் பார்ப்பதற்காக, மாமா மகன் செல்வத்தை அழைத்துக் கொண்டு வந்திருக் கிறேன் இப்போது. 

கடலை காவலுக்காக வயலை ஒட்டிய தோப்பில் போடப்பட்டிருந்த குடிசையும் கீழ மேல வயற்காரர்களின் மகன்களுடன் நாங்கள் விளையாடிய ஞாபகங்கள் அடிக்கடி வந்து போனதன் விளைவாக, 'வயலைப் பார்த்துட்டு வருமாடே? என்றேன் செல்வத்திடம். அழைத்து வந்துவிட்டான். வழியில்தான் பட்டவராயன் தாத்தாவைப் பார்க்கிறேன்.

அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவர் இருக்குமிடத்தில் இருந்து பத்தடி தள்ளி நிற்கிறேன் நான். செல்வம் சைக்கிளை கோயில் சுவற்றில் சாய்த்து வைத்துவிட்டு, 'வாடே போவும்' என்கிறான். அவனின் சத்தம் கேட்டு, தாத்தா என்னைப் பார்க்கிறார். அவர் பார்வை கூர்மையாக என்னைப் பார்க்கிறது. அவருக்குப் பிடிபடவில்லை. யாரோ என்று நினைத்துக் கொண்டு கவனத்தைத் திருப்பிக் கொண்டார்.

அவர் முன்னே சென்று நின்றேன்.

'யாருய்யா..?' என்ற அவரது வார்த்தை கொஞ்சம் நடுக்கத்துடன் வருகிறது.

'உம்ம பேரன் தான்' என்றதும் அவர் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. 

'பேரனா?' என்று கேட்டுவிட்டு, மேலே வைத்திருந்த காலை படாரென்று தொங்கப் போட்டுக் கொண்டு என்னை அருகில் வந்து உற்றுப் பார்க்கிறார்.

'சூச்சாராடா?'

'ம்'

-கைகளால் என் முகத்தைப் பிடித்து அவர் முகத்தில் அருகே இழுத்துக் கொண்டார்.

'பாவிபயல. ஒன்னய பாக்கமயே போய் சேர்ந்துருவன்னுலாடா நெனச்சேன்' என்றவர் விம்மத் தொடங்கினார். கண்களில் கண்ணீர்க் கொப்பளிக்கத் தொடங்கியது.

'ஏம்?' என்று சத்தத்தை உயர்த்தியதும் கண்களைத் துடைத்துக் கொண்டார். திண்டில் ஏறி உட்காருமாறு சைகைச் செய்தார். செல்வமும் நானும் ஏறிக் கொண்டோம்.

பட்டவராயன் தாத்தா அப்போது கதாநாயகனாக எனக்குத் தெரிந்தவர். கருத்த, உடற்பயிற்சி செய்தது போன்ற வளைவுகளைக் கொண்ட ஒல்லி தேகம், திருகிய பெரிய அழகான மீசை, தொடைகள் தெரியுமளவுக்கான சாரம், அதற்குள் தெரியும் டவுசர், இடுப்பில் பட்டையான வார், அதில் பூத்து வைக்கப் பட்டிருக்கும் உறைபோட்ட கத்தி, நெற்றியில் பெரிய திருநீறுப் பட்டை. இதுதான் தாத்தாவின் அடையாளம். 

அவர் எதிரே வந்தால் ஊர்க்காரர்கள் கண்டும் காணாமல் போவது அல்லது ஒளிந்து கொண்டு செல்வதுமாக இருப்பார்கள். சின்ன சின்ன சண்டைக்குக் கூட, கத்தியால் குத்துவது, ரத்தக்காயம் ஏற்படுத்துவது என்றிருப்பவரைக் கண்டால் யாருக்குத்தான் பயம் வராது?.

'ஐயைய, சல்லிப்பயல்லா. மூதிக்கு எப்பம் கோவம் வரும், எப்பம் நல்லா ருப்பான்னு யாருக்குத் தெரியும்? துஷ்டனைக் கண்டா தூரப் போவுதது தான டே நல்லது?' என்பார்கள்.

 அவரது கணக்கில் நான்கு கொலை முயற்சி வழக்குகள் இருக்கின்றன. இரண்டு அடிதடி வழங்குகளும் உண்டு.  பாளையங்கோட்டைச் சிறையில் அடிக்கடித் தங்கிவிட்டு வருபவர் என்பது போன்ற பெருமைகளை உள்ள டக்கியவர் தாத்தா.

தாத்தாவுக்கு கல்யாணம் ஆகவில்லை. 

'கொலைகார பயலுக்கு எவன் பொண்ணக் கொடுப்பான்? பொண் டாட்டி ஏதும் சொன்னான்னு கழுத்தை அறுத்துட்டாம்னா, என்ன செய்ய?' என்று சொல்லி சொல்லியே, அவருக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்களாம். அவரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. பக்கத்தூரில் யாரோ ஒரு பொம்ப ளையை, அவர் வைத்துக் கொண் டிருப்பதாகப் பேசிக்கொள்வார்கள்.

அவரின் ஒரே செல்லப்பிள்ளை நான் மட்டுமே.  நான், அவரின் அண்ணன் மகள் வழி பேரன். அவரைப் போலவே மூக்கும் கண்களும் எனக்கு இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவருக்கு என் மேல் சிறப்புப் பாசம். நான் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு அவரைப் போலவே திருகிய மீசை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப் போது அந்த மீசைப் பிடிக்கவில்லை.

ஊரின் மேற்கே இருக்கிற செட்டியார் கடைக்குத் தினமும் சாயங்கால வேலைகளில் அழைத்துச் சென்று வடையும் சுக்காப்பியும் வாங்கித் தருவதை வழக்கமாக வைத்திருப்பார் தாத்தா. எனது விடுமுறை நாட்க ளில் சைக்கிளின் முன்பக்கம் உட்கார வைத்துக்கொண்டு ரயில்வே கேட்டுக்கு அருகே இருக்கிற தோப்புக்கு அழைத்துச் செல்வார். இளநீர், நொங்கு, சில நேரங்களில் கிளி மூக்கு மாங்கா. இரண்டு இளநீர் குடித்தாலே வயிறு நிரம்பிவிடும். தாத்தா, இன்னும் ஒன்றைக் குடிக்கச் சொல்லுவார். பாதி குடித்துவிட்டு அவரிடம் கொடுத்து விடுவேன். 

சில நாட்களில், என்னை மாமரத்துக்கு கீழே உட்கார வைத்து விட்டு வேலி ஓரமாக தெண்டல் (ஓணான்) பிடிப்பார் தாத்தா. ராமருக்கு சிறிநீர் கொடுத்த கதைக்காக நானும் பல தெண்டல்களுக்குத் தண்டனைக் கொடுத்திருக் கிறேன். அவரும் அதற்குத்தான் பிடிக்கிறார் என நினைத்தேன். அதற்கில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. சாக்குப் பையில் நான்கைந்து தெண்டல்களைப் பிடித்துக் போட்டுக்கொண்டுத் திரும்புவார்.

 'இத ஏம் தாத்தா புடிச்சுட்டு வாரேரு?' என்பேன். 

'மருத்துக்குடா பேரா' என்று சொல்லிவிட்டு என்னை வீட்டில் விட்டு விட்டு அவரது குச்சிலுக்குச் செல்வார். என்னை அங்கு வரவிட மாட்டார்.

'நீலாம் அதை பாக்கக் கூடாது, போடே' என்பார். அடம்பிடித்துக் கொண்டு போனேன்.

பையில் இருந்த தெண்டல்களை ஒவ்வொன்றாக எடுத்து கத்தியால் கழுத்தை அறுத்தார். எனக்கு அறுவறுப்பாக இருந்தது. ஒவ்வொன்றையும் அப்படியே செய்தார். பிறகு அதன் தோல்களை உரித்தார். உள்ளே இருக்கிற குடலு குந்தானியையெல்லாம் பிதுக்கி வீசிவிட்டு, அதைச் சருவசட்டியில் இருக்கும் தண்ணீரில் போட்டார். நான்கு தெண்டல்களை இப்படியே வெட்டித் தண்ணீரு க்குள் போட்டுக் கழுவினார். ஒருவிதமான புளித்த வாடை, அந்த இடத்தில் வந்து கொண்டிருந்தது. பிறகு அத்தெண்டல்களை வெள்ளைத் துணியில் போட்டு இடித்தார். சாறை எடுத்து, வீட்டுக்குள் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பாட்டிலில் ஊற்றினார். அது தண்ணீரல்ல, சாராயம் என்பது பிறகுதான் தெரிந்தது.

'பாத்துட்டல்லா, நீ வீட்டுக்குப் போ. தாத்தா தூங்க போறேன்' என்றார். அதற்குள் தெரு நாய் ஒன்று அவரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

எனக்கு அதற்கு மேல் அங்கு இருக்க விருப்பமில்லாமல் வீட்டுக்கு நடந்தேன். பக்கத்து வீட்டு பரமசிவ அண்ணனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தாத்தா தெண்டல் சாறு எடுத்ததைச் சொன்னேன். அவன் தான் அது மருந்து என்றான்.

'நாலு நாளா உங்க தாத்தாவ காணலல்லாடே?'

'ஆமா'

'போலீஸ்காரன் புடிச்சுட்டுப் போயிட்டாம். மேலத் தெருவுல எவனையோ அடிச்சுட்டாராம். கூட்டிட்டுப் போயி, ஊமை அடியா அடிச்சு நொறுக் கிட்டானாம் போலீஸ்காரன். அதுக்கு மருந்தாங்கும் அது. தெண்டலு சாறை எடுத்து சாராயத்துல சேத்து குடிச்சுட்டா, உள் காயம் ஆறிரும். அதுக்குல்லா அப்படி பண்ணுதாரு' என்றான்.

அறுவறுப்பாக இருந்தது. இப்படியொரு மருந்தை எவன் கண்டு பிடித்தான் எனத் தெரியவில்லை. அதற்குப் பிறகு அவரிடம் ஏதும் கேட்டுக் கொள்ள வில்லை.

குடும்பத்துக்குள் எந்த விசேஷம் என்றாலும் அவர்தான் முன்னால் நிற்பார். என் அம்மாவைப் பெற்ற அப்பா இறந்த பிறகுதான் குடும்பத்துக்குள் பிரச்னை வெடித்தது. 

'உன்னாலதான் இவரு செத்தாரு. நீமட்டும் உருப்படியா இருந்தா இவரு இன்னும் பல வருஷம் உயிரோடு இருந்திருப்பாரு' என்று வெளியே பேசிக் கொண்டிருக்க, பட்டவராயன் தாத்தா எதுவும் பேசா மல் நின்று கொண் டிருந்தார் ஓரமாக. ஆளாளுக்குப் பேச ஆரம்பித்த பிறகு, 'ஏன், நான் என்னத்த பண்ணுனேன்?' என்று கோபமானார்.

'வெட்டு குத்துன்னு, இல்லாத எழவை எல்லாம் யாரு இழுத்துட்டு வந்தா? இந்தக் குடும்பத்தை கேவலப்படுத்துனது யாரு? நீ இழுத்துட்டு வந்த எழவுக்கு, அவருலா பதில் சொல்லிட்டு அலைஞ்சாரு. அதுலயே பாதி உசுரு போயிட்டு அவருக்கு. உன்னாலதான போச்சு இவரு மதிப்பும் மரியாதையும்? எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்த மனுஷன்... இவரு வந்தார்னா நேர்ல நின்னும் பேசமாட் டாம் எவனும். நீ என்னைக்கு தலையெடுத்தியோ அன்னைக்கே போச்சு எல்லாம். எல்லாத்தையும் பண்ணிட்டு, இப்பம் அவரு உயிரையும் கொன் னுட்ட' என்று ஒப்பாரி வைத்தாள் சின்ன ஆச்சி.

வெளியூரில் இருந்து வந்திருந்த சொந்தக்காரர்கள் அவளை அடக்கினார்கள். பட்டவராயன் தாத்தா அங்கு எல்லோரையும் பார்த்தார். அவருக்கு அவமா னமாக இருந்தது. பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஓரமாகப் போய் ஒரு கல்லில் உட்கார்ந்துகொண்டார்.  

எனக்குத் தெரிந்து, அம்மாவைப் பெற்ற தாத்தாவும் இவரும் நேருக்கு நேராகப் பேசிப் பார்த்ததில்லை. சந்தித்துக்கொண்டால் கூட பேசாமல் தான் இருப்பார். ஏதும் சொல்ல வேண்டும் என்றால் ஆச்சியிடம் மட்டும் சொல்வார். ஒரு வேளை தாத்தாவின் அக்கப்போரைக் கண்ட எரிச்சலில்தான் அப்படி மவுன மாக இருந்தாரோ என்னவோ? ஆனால் ஆச்சிகூட, பட்டவாரயன் தாத்தாவை ஏதும் திட்டியதில்லை. சின்ன முகச் சுளிப்புக் கூட இல்லை. ஆனால் சின்ன ஆச்சி இப்படிப் பேசியது ஆச்சரியமாக இருந்தது. 

ஆற்றுக்குப் போய், அவரது உடலை அடக்கம் பண்ணிவிட்டு வந்த பின், பட்டவாரயன் தாத்தாவைக் காணவில்லை. அவரது குச்சில் வீடு திறந்தே கிடந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த சில பாத்திரங்களில் அணில்கள் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தன. அவர் எங்கு போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. சொந்தக்காரர்களிடம் சொல்லித் தேடினார்கள். வீம்பு. தன்னை ஏசியவர்கள் முகத்தில் முழிக்கக் கூடாது என்று எங்கோ போய் விட் டார்.

நான் படித்து முடித்துவிட்டு, வேலைக்காக லண்டன் சென்று விட் டேன். அங்கு வேலை பார்க்கும்போதுதான், பட்டவராயன் தாத்தா கொச்சியில் ஒரு தோட்டத்தில் வேலைப்பார்ப்பதாகவும் ஊர்க்காரர் ஒருவர் பார்த்து அழைத்த தாகவும் அவர் வர மறுத்துவிட்டதாகவும் செல்வம் மெயில் அனுப்பி யிருந்தான். எனக்கு அவரைப் பார்க்கும் ஆவல் அதிகமானது. தோளில் தூக்கிக் கொஞ்சிய தாத்தா. அவரது திருகிய மீசையும் கருத்த உடலும் வெள்ளைப் பற்களைக் கொண்ட கள்ளங்கபடமில்லாத சிரிப்பும், 'ஏ சூச்சாரு' என்று மலர்ச்சியாக அழைக்கும் அந்த முகமும் கண்முன் வந்து நின்றது.

நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, லண்டனில் இருந்து சென் னைக்கு மாற வேண்டியதாகிவிட்டது வேலைக்காக. ஊருக்குச் சென்று அம்மா வைப் பார்க்கும் போதெல்லாம் கேரளா போய் தாத்தாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும். வேலை நெருக்கடி அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. இதோ இப்போதுதான் பார்க்கிறேன். 

எப்போது ஊருக்குத் திரும்பினார் என்று தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவரை ஊரில் பார்த்ததாகச் சொல்லியிருந்தான் செல்வம். அதைத் தொடர்ந்து சில நாட்கள் அவரைக் காணவில்லையாம். திடீர்த் திடீரென்று காணாமல் போய்விடுகிறார் என்றும் சொல்லியிருந்தான். நான் இதோ இப்போதுதான் பார்க்கிறேன். அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

'அம்மாவை நல்லா பாத்துக்கோ' என்ற தாத்தா சிறிது நேரம் அமைதி யாக இருந்தார்.

'நிறைய தப்பு பண்ணிட்டேன். அதுக்கெல்லாம் ஆண்டவன் என்ன தண்டனை தரப் போறானோ தெரியல' என்று நடை சாத்தப்பட்டிருக்கும் கோயிலின் உள்ளே எட்டிப்பார்த்தார்.

'வீட்டுக்கு வா தாத்தா' என்றேன்.

'ம்ஹும். உடம்புல உயிர் இருக்குத வரைக்கும் அந்த இடத்தை இனும மிதிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதை மீற மாட்டேன் பேரா'

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின், 'வயலுக்குப் போயிட்டு வாரேன், இங் கயே இருங்க' என்று சொல்லிவிட்டு சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்து அவர் கையில் திணித்தேன்.

வெடுக்கன கையை உதறியவர், அந்த ரூபாயை என் சட்டைப் பாக்கெட்டில் வைத்துவிட்டுச் சிரித்தார். 

அந்தச் சிரிப்பு என்னை ஏதோ செய்தது. 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உள்மனது கேள்வி கேட்கும்... உடனே என்றால் அது தான் அனுபவம்...!

துபாய் ராஜா said...

வயசானாலும் பட்டவராயன் தாத்தா மாதிரி வீம்பும்,வீராப்புமா திரியுத பெருசுங்க நிறைய பேரு இருக்கத்தானே செய்யுதாங்க இன்னைக்கும் அண்ணாச்சி...

இந்த தெண்டல் சாறு மருந்து இப்பத்தான் மொத மொத கேள்விபடுதேன்... காணாமல் போயிட்டு வரும் போதெல்லாம் இது மாதிரி பழைய விஷயங்களை நிறைய எழுதுங்க அண்ணாச்சி....

ஆடுமாடு said...

//இந்த தெண்டல் சாறு மருந்து இப்பத்தான் மொத மொத கேள்விபடுதேன்//
போலீஸ் அடிகளுக்கு இதுதாம் மருந்தாம்.
நன்றி ராஜா அண்ணாச்சி.
................


திண்டுக்கல் தனபாலன் நன்றி