Sunday, April 5, 2015

கெடை காடு: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

கெடை காடு பற்றி சொல்வனம் இணைய இதழில் பாலகுமார் எழுதியுள்ள விமர்சனம்.
ஐந்து வகை நிலத்திணைக்களில், காடும் காடு சார்ந்த வாழ்வும் முல்லைத் திணையின் இயல்பு. மாயோனை கடவுளாகவும், ஆவினங்கள் மேய்த்தலைத் தொழிலாகவும் கொண்ட இடையர்கள் இந்த நிலத்தின் மக்கள். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் குடி கொண்டிருக்கும் அத்தகைய ஒரு இனக்குழுவின் வாழ்வியலை “கெடை காடு” என்னும் சிறு புதினம் மூலமாக அதன் இயல்பு மாறாமல் அழகான சித்திரமாகத் தீட்டியுள்ளார் ஏக்நாத்.
ஊரிலிருக்கும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கிடைக்காத பருவத்தில் அவற்றை ஓட்டிக் கொண்டு போய், அருகில் உள்ள குள்ராட்டி என்ற மலைப்பிரதேசத்து காட்டிற்குள் கிடை அமைத்து சிலநாட்கள் தங்கிவிட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்க்கிராமத்து மக்கள். அவ்வாறு மாடுகளை ஓட்டிச் செல்லும் இளைஞர்கள் மூலமாக அந்த மலங்காட்டின் இயல்பும், கிடை போடுகையில் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் புதினம் முழுதும் இயல்பாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. மனிதர்களையும், மாடுகளையும் தனக்குள் அனுமதிக்கும் காடு எப்போதும் போலவே தன்னியல்பில் அமைதியாக இருக்கிறது. அந்த புதிய அனுபவத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்த மாடுகளோ செழித்து வளர்ந்த பசும்புற்களை வயிறு முட்டப் புசித்து விட்டு தன் வாக்கில் நிதானமாக அசை போட்டு குளிரை சுவாசித்து தானாக மடியில் இருந்து பாலை சுரந்தபடி இருக்கின்றன. கிடையை ஓட்டி வரும் இளைஞர்களுக்கோ, பரவசமும் பயமும் கலந்த புது அனுபவம். மனிதக்கரங்கள் படாமல் வளர்ந்து நிற்கும் காய்கனி வகைகளை ருசிப்பதாகட்டும், பெயர் தெரியாத சிறு காட்டு விலங்குகளை வேட்டையாடி ருசித்து மகிழ்வதாகட்டும், மலையுச்சியில் செம்மியிருக்கும் தேனெடுத்து சுவைப்பதாகட்டும்… இவையணைத்திலும் பரவசம் கொண்டிருந்தாலும், கொடிய வனவிலங்குகளால் தங்கள் கால்நடைகளும், தாங்களும் தாக்கப்படுவோமோ என்ற பயமும், காட்டிலாகா அதிகாரிகளின் கெடுபடிகளால் தங்கள் பொருளை இழக்க நேருமோ என்ற பயமும் அவர்களுக்கு ஒரு சேர இருந்து கொண்டே இருக்கின்றது.
கூடவே ஊடுகதையாக, கொஞ்சம் ஊர்க்கதையும், ஊரில் உள்ளவர்களின் குணம் குறித்த கதை மாந்தர்களின் விமர்சனமுமாக விரிகிறது புதினம். கிடை ஓட்டிச் செல்லும் குழுவினருடன் முதன் முதலாகச் செல்லும் உச்சிமாகாளியின் காதல் அனுபவங்களும் அவை கை நழுவிப் போன நிகழ்வுகளும் சுவாரஸ்யம். அவன் யாரைக் காதலிக்கத் துவங்குகிறானோ அந்தப்பெண்ணுக்கு விரைவிலேயே மாப்பிள்ளை அமைந்து கல்யாணமாகி விடுகிறது. அப்படியாப்பட்ட யோகம் கொண்டவன், வீட்டில் பெரிதாய் பொறுப்புகள் இல்லாது செல்லமாய் வளரும் பிள்ளை. அவனது கதைகளைக் கேட்டு குதூகலிப்பதில் நண்பர்களுக்கு மகிழ்ச்சி. தன் காதல் நினைவுகளை அசைபோடுவதில் அவனுக்கும் மகிழ்ச்சி.
ஓர் அசந்தர்பத்தில், தனது கணவனை இன்னொருத்தி வீட்டில் பார்க்க நேரிட்ட பிறகும், குடும்ப அமைப்பு முறை குலையாத வகையில் அவனை விட்டு பிரியாவிட்டாலும் கடைசி வரை வைராக்கியமாக, அவனுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் காலம் முழுக்க மௌனியாகவே வாழ்கிறாள் உச்சிமாகாளியின் தாயான புண்ணியத்தாய். அவளைப் பற்றிய மிகப்பெரிய சித்தரிப்புகள் புதினத்தில் இல்லையென்றாலும் கூட அவளைச் சார்ந்து வரும் சிறு நிகழ்வுகளிலேயே அவளது குணத்தை தத்ரூபமாக ஏக்நாத் வெளிக்காட்டியிருக்கிறார். (மறுவாசிப்பின் சமயம், இந்நாவல் திரைப்படமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் தெரிய, அன்னிச்சையாக இந்த கதாப்பாத்திரத்திற்கு சரண்யா பொன்வண்ணனின் முகம் பொருந்திக் கொண்டது). புதினத்தில் வரும் இன்னொரு பெண் பாத்திரம் கல்யாணி. கணவனை இழந்து விட்டு வாழ்வாதரத்திற்காக ஒற்றை பசுமாட்டை நம்பி இருப்பவள். நன்கொடை தர இயலாததால் ஊராரின் பேச்சுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகும் போது, “சாதியும் வேணாம், ஒங்க உறவும் வேணாம், என்னை வேணா உங்க சாதியை விட்டு தள்ளி வச்சுக்கோங்க” என்று வெடித்து அழுகிறாள். கல்யாணியின் குணநலனும் சிறப்பாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டையும், அதையொட்டிய சிறுகிராமத்தையும் பற்றிய புதினம் என்ற வகையில் நாவலை வாசிக்கத் துவங்குகையில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. மக்களின் வழக்குமொழி, வாழ்க்கைமுறை, சாதி சங்க அமைப்புகளின் செயல்முறை, வேற்று சாதி மக்களுடனான உறவுமுறை விளிப்புச்சொல் என்று பல இடங்களில் கிராமத்தின் இயல்புத்தன்மை அப்படியே பிரதிபலிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மலங்காட்டின் விவரிப்பு என்ற வகையில் ஒரு வெளியூர்க்காரன் முதன்முதலில் காட்டுக்குள் சென்று முதல் பார்வைக்குக் கண்ணில் தெரிவதை மட்டும் புகைப்படம் எடுத்தது போன்று இருந்தது. உள்ளூர்க்காரனின் பரிச்சயமான பயணம் போல இன்னும் சில நுணுக்கமான விவரிப்புகளும், காட்டின் நுட்பங்களும், அதிசயங்களும் விவரிக்கப்பட்டிருந்தால், இன்னும் கூட ஒரு செழுமையான அடர்த்தி நிறைந்த படைப்பாக மிளிர்ந்திருக்கும். இருப்பினும் பரபரப்புக்கும் நெருக்கடிகளுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்து விட்டு கடிகார முள்ளைத் துரத்திக் கொண்டு, எதற்கென்றே தெரியாமல் ஓயாமல் “பிசி”யாய் இருக்கும் நகர வாழ்க்கைக்கு நடுவே கிராமத்திலிருந்து தோளில் சிறு மூட்டை முடிச்சோடும், கையில் கம்புடனும் கால்நடைகளை பத்திக் கொண்டு வெற்றுப் பரபரப்பின்றி, நிதானமாக காட்டுக்குள் மேச்சலுக்குச் சென்று திரும்பும் அழகான மெதுநடைப்பயணமாக இனிக்கிறது இந்த “கெடை காடு”.
கெடை காடு பற்றி பாலகுமார். 
நன்றி. சொல்வனம் இணைய இதழ்.

4 comments:

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி....

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

கருப்பையா.சு said...

அன்புள்ள ஆடுமாடுவிற்கு !
நீங்கள் வேறொரு பெயரில் எழுதிய "கெடை காடு" நாவலை வாசிக்கும் வாய்ப்பு தம்பி பாலகுமார் மூலமாக எனக்கு கிடைத்தது. நாவலை முடித்ததும் , நீண்ட இடைவேளைக்குப் பிறகு நல்லதொரு நாவலைப் படித்து முடித்த திருப்தி உணர்வு எனக்கு ஏற்பட்டது. மறைந்த பழம்பெரும் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் நாவல்களை நான் மிகவும் ஆழமாக வாசித்தது உண்டு. அவரின் , ஒரு பெண் போராடுகிறாள், வேள்வித்தீ போன்ற நாவல்கள் என்னிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டு. அதே போல் கி.ரா. அவர்களின் கோபல்லக்கிராமம், கோபல்லபுரத்து மக்கள் போன்ற நாவல்களும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த நாவல்களில் காணப்பட்ட உயிர்ப்புத் தன்மையே அதற்குக் காரணமென்றால் அது மிகையாகாது. அத்தகைய உணர்வு உங்களது " கெடை காட்டை" வாசிக்கும் பொழுது கிடைத்தது என்று சொல்லியே ஆக வேண்டும்..
நாவலின் உயிர்ப்புதன்மையை வைத்து பார்க்கும் பொழுது குளிராட்டியின் அனுபவங்களை நீங்களும் நேரிடையாக அனுபவித்திருக்க வேண்டும் என்றே கருத இடமுண்டு. ஏனென்றால் அக்கிராமத்தின் நிகழ்வுகளையும் , குளிராட்டியின் அனுபவங்களையும் ஒருவரால் கற்பனையாக எழுத இயலாது என்று கருதுகிறேன் .அப்படி இல்லையெனும் பட்சத்தில் பட்டறிவின் மூலம் எழுதப்பட்டிருந்தால் உண்மையிலேயே நீங்கள் சிறந்த படைப்பாளியே!. மனதை வருடும் அழகான குளிராட்டியின் அனுபவங்கள், வனங்களில் , காடுகளில் , பாறையின் வழுக்கல்களில் நான் வாழ்ந்த காலங்களை எனக்கு ஞாபகப்படுத்தியது.
நன்றி.
சு.கருப்பையா.
மந்தையில் ஒருவன்

ஆடுமாடு said...

சு.கருப்பையா அவர்களுக்கு நன்றி.

பிழைப்பு, எல்லாவற்றையும் தொலைத்துவிட்டது.மனதோடு அலையும் ஞாபகங்கள்,'ஒரு காலத்துல நாங்கள்லாம்' என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது.மேய்ச்சல் நிலங்களே குறுகிவிட்ட காலத்தில், இந்த கெடை காடு புதிய அனுபவமாக இருக்கும் என்று எழுதினேன். சிலருக்கு பிடித்திருக்கிறது. சிலருக்கு இல்லை.
வாழ்க்கையும் அப்படித்தானே.
நன்றி.