Monday, January 19, 2015

கொடை 14

எப்போதும் தலைமுடியை பறக்க விட்டலைகிற, மயக்கம் தரும் ஒருவித வாசனையை கொண்டிருக்கிற ஜெஸிலா மேரியிடம் ஓர் ஈர்ப்பு இருப்பதை அவன் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டான். முதன் முதலில் கல்லூரியில் அவளைப் பார்த்தபோது இருந்த ஈர்ப்புக்கும் இப்போதைக்கும் அதிக மாற்றம் தெரிந்தது. அவளைப் பின் தொடரவும் ஏதாவது பேசவும் மனம் தூண்டிக்கொண்டே இருந்தது.

ஏதோ ஓர் வெளி மாநிலத்தில், அவரது தந்தை பெரும் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக இருப்பதாகச் சொன்னார்கள். அதை அவளது உடைகள் காட்டிக்கொண்டிருக்கும். உள்ளூர் பிள்ளைகள் பாவடை, தாவணி, சேலையை தாண்ட சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது அவள் தான், கல்லூரிக்கு மிடியில் வந்து பையன்களைக் கலவரப்படுத் தியவள். சுரிதார் உள்ளிட்ட உடைகளை அணிந்து வந்து மற்றப் பிள்ளைகளின் வெறுப்புக்கும் பையன்களின் விருப்புக்கும் ஆளானவள். அவளைப் பிடித்து போவதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.

இவனது வகுப்புக்கு வெளியே தான் தண்ணீர் தொட்டி இருந்தது. தொட்டிக்கு எதிரில் மாணவிகளுக்கான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் சாப்பிட, வகுப்பு இல்லை என்றால் தங்கிக்கொள்ள, அமர்ந்து பேசிக்கொள்ள என ஒதுக்கப்பட்டிருந்த அந்த விசாலமான அறையை எப்போதும் மாணவர்கள் சிலர் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அல்லது அதற்கு வெளியே நின்று யாரிடமாவது பேசிக்கொண்டு நிற்பார்கள். அதில் சிலர் காதலர்கள் என கல்லூரியில் அறியப்பட்டிருந்தார்கள்.

சேர்வலாறில் இருந்து வரும் மூன்றாமாண்டு மேத்ஸ் பிலோமியை, அதே ஊரைச் சேர்ந்த கெமிஸ்ட்ரி ஆண்டனி காதலித்து வந்தான். இருவரும் ஒரே பஸ்சில் வருவார்கள். ஒரே பஸ்சில் செல்வார்கள். கல்லூரியைத் தவிர, வெளியில் அவர்கள் பேசிக்கொள்வதில்லை. பிலோமி, கேரளாவைப் பூர்விகமாகக் கொண்டவள் என்றும் பெரும் செல்வந்தர் வீட்டு மகள் என்றும் அவள் நினைத்தால் எதையும் செய்யும் வல்லமை கொண்ட அதிகார பலமுடையவளாகவும் கல்லூரியில் பேசிக்கொண்டார்கள். அவளின் தந்தை அப்போது ஆளுங்கட்சியில் பெரும் செல்வாக்கு கொண்டிருந்தார். ஆனால் அவள் முகம் அப்படியொரு பந்தாவையோ, கொடூரத்தையோ கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இருவருக்கும் மதம் ஒன்றென்றாலும் சாதி, பெரும் பிரச்னை ஆகும் என்பதால் அவர்கள் அமைதியாகக் காதல் வளர்த்ததாகப் பேசிக்கொண்டார்கள். அவள் ஒருமுறை முப்பிடாதியிடம் பேசியபோது அவனது கை, கால்கள் நடுக்கம் கொண்டன.

'ஏன் பயப்படுறீங்க. ஒங்களை ஒன்னுஞ் செய்யல. ஆண்டனி வந்தா இந்த டிபன் பாக்ஸை கொடுத்துருங்கெ' என்று தந்துவிட்டு அவளும் அவள் தோழியானவளும் சிரித்துவிட்டுப் போனார்கள்.

பிலோமி சொன்ன, 'ஒங்களை ஒன்னுஞ் செய்யல' என்ற வார்த்தை அவனை இம்சை செய்துகொண்டிருந்தது. அசிங்கமாக இருந்தது. இப்படி கேவலப்படுத் திட்டாளே? என்பதாக இருந்தது.

டிபன் பாக்ஸ் பெரிதாக இருந்தது. ஆண்டனியைத் தேடினான் முப்பிடாதி. மதியம் இரண்டு மணி வரை அவனைக் காணவில்லை. சக மாணவர்களிடம் விசாரித்தும் வரச் சொல்லியும் அவன் வரவில்லை. அந்த டிபன் பாக்ஸை பாதுகாப்பதே அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பிறகு அதைக் கையில் வைத்துக்கொண்டு பெண்கள் அறைக்கு எதிரே கொஞ்சம் தள்ளி நின்றான் முப்பிடாதி. சிறிது நேரத்தில் வெளியே வந்த பிலோமியின் தோழி, அங்கிருந்தவாறே, 'என்ன?' என்பது போல சைகை செய்தாள். அவனைக் காணவில்லை என்றான். அவள், பிலோமியை அழைத்துவந்தாள். பிறகு, அதை 'நீங்களே தின்னுங்க' என்பது போல சொன்னாள். அவன் ஏற்கனவே சாப்பிட்டிருந்தான். யோசித்ததைப் பார்த்து அருகில் வந்தாள்.

'அதுல பிரியாணி இருக்கு. நானே செஞ்சது. அவனுக்கு குடுத்து வைக்கல. நீ தின்னுரு' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். முப்பிடாதி அதைத் தூக்கிக்கொண்டு கல்லூரியின் பின்பக்க பாறைக்குச் சென்றான். அவன் சேக்காளி குத்தாலமும் காளியும் வந்திருந்தார்கள். குத்தாலம் அசைவம் சாப்பிடமாட்டான் என்றாலும் துணைக்கு வந்தான்.

வேப்பமரத்தின் நிழலில் பாறையின் மீது உட்கார்ந்து டிபன் பாக்சை திறந்தபோது, பிரியாணி வாசம் கப்பென்று அடித்தது. காலையில் செய்தது என்பதால் டிபன் பாக்ஸின் மூடியில் தண்ணீர் கோர்த்து இருந்தது. இருந்தாலும் கையை விட்டான். நசநசப்பாக சோறு இருந்தாலும் அள்ளினான். ருசியாக இருந்தது. காளியும் அவனும் அதை காலி செய்தார்கள். அதற்குள் கவுச்சி வாடைக்கு கருப்பு நிற நாய் ஒன்று நாக்கைத் தொங்கபோட்டவாறு வந்து நின்றது. குத்தாலம் அதை விரட்டினான். தின்றுவிட்டு பாக்சை கழுவி, பெண்கள் அறையின் வெளியே சத்தம் போடாமல் வைத்துவிட்டு வரும்போது பிலோமி, கேட்டாள்.

'என்ன தம்பி, சாப்ட்டுட்டு பேசாம போற? நல்லாருந்துச்சா, இல்லியா?'

'சூப்பரா இருந்துச்சு. கறித்துண்டுதான் குறைச்சு இருந்துச்சி' என்றான் காளி.

அவள் 'தம்பி" என்று விளித்தது முப்பிடாதிக்குத் தர்மசங்கடமாக இருந்தது.

'அடுத்த தடவை நிறைய வச்சி தாரேன், னா. அவெ (ஆண்டனி) வந்தா சொல்லு' என்று போனாள் அவள்.

இதற்கு பிறகு அவள் பழக்கமானாள். அடிக்கடிப் பேசுவதும் சிரிப்பதும் ஆண்டனிக்குத் தூது சொல்வதுமாகச் சென்றுகொண்டிருந்தது நட்பு.

அன்று கல்லூரி விட்டிருந்தது. பிலோமிக்கு, சேர்வலாறு பேருந்து ஐந்து முப்பது மணிக்குத்தான் என்பதால் அதுவரை அவளுடன் பேசிக் கொண்டிருப் பது வழக்கமாகிவிட்டது. அதில் ஒரு செட் சேர்ந்திருந்தது. பிலோமியின் வகுப்புத் தோழிகள் புவனா, சரஸ்வதி மற்றும் முப்பிடாதி, எனது வகுப்புத் தோழர்கள் குத்தாலம், காளி என ஒரு யூனிட் ஆகியிருந்தது.

பூவனாவுக்கும் சரஸ்வதிக்கும் கல்லூரியின் பின்பக்க தெருவில் வீடு என்பதால் அவர்கள் அவளுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். எங்களுடன் பட்டும் படமாலும் ஆண்டனி வருவான். ஆண்டனியின் காதல் வெளியே கசிந்திருந்தாலும் அவள் வீட்டுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அதிகம் ஒட்டாமல் வருவான். ராஜாவுக்கு அவளது டீச்சர் அம்மா, டிவிஎஸ் 50 வாங்கிக்கொடுத்தப் பிறகு முப்பிடாதியை கண்டுகொள்வதில்லை.

அப்போதுதான் ஒரு நாள் பிலோமி கேட்டாள்.  'என்ன தம்பி, ஜெஸிலா பிள்ள உன்னய ரொம்ப விசாரிக்கெ, என்ன வெஷயம்?' என்று.

முப்பிடாதி எதையும் காட்டிக்கொள்ளவில்லை. 'ஜெஸிலானா, சிவந் தியாரத்துல இருந்து வருமெ அந்தப் பிள்ள தானெ?' என்று தெரியாத மாதிரி கேட்டான்.

பிலோமி சிரித்தாள்.

'ம்ம்... ஒனக்கு ஜெஸிலாவ தெரியாது?'

முப்பிடாதி சிரித்தான். குத்தாலத்தால் அதற்கு மேல் இருக்க முடிய வில்லை.
'நீங்க சொல்லுதது சரிதான்க்கா. இவென் அவளெதான் நினைச்சுட்டு இருக்காம்' என்றவன் முப்பிடாதியின் கையில் இருந்த நோட்டைப் பிடுங்கி பக்கங்களைப் பிரித்துக் காண்பித்தான்.

'இதெல்லாம் அவளெ நெனச்சு, நம்ம ஹீரோ எழுதுன கவிதை'

'கொண்டாடே படிப்பும்' என்ற பிலொமியும் அவள் தோழிகளும் கெமிஸ்ட்ரி லேபுக்கு வெளியே உட்காந்தார்கள். வாசித்துவிட்டு சிரித்தார்கள்.

முப்பிடாதி வெட்கத்தில் இருந்தான். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ள வில்லை.

0

கோயிலின் மேல சுவர் ஓரத்தில் சுண்ணாம்பு காய்த்துக் கொண்டிருந்தார்கள் வெள்ளையடிக்க. நுரைகள் பொங்க சர் சர் எனக் கொதித்துக்கொண்டிருந்தது அது. அதற்குள் கல்லைப்போட்டு விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பையனை விரட்டினான் பூனா.

நேற்று முடித்திருந்த வேலைகளில் கோயில் வளாகம் புதிது போல தெரிந்தது. மணல் பரப்பி சுத்தமாக இருந்தது. பூவரசம் மரத்தில் இருந்து விழுந்த மஞ்சள் பூக்களும் சில இலைகளும் கோயிலின் இடது பக்கம் அழகாகத் தெரிந்தன. அதனருகில் படுக்க வந்த கருப்புநாய், பிறகு என்ன நினைத்ததோ அங்கிருந்து ஓடியது.

பட்றையன் பூடத்துக்கு முன் மண்ணில் பூத்து வைக்கப்பட்டிருந்த ஈட்டியும் அதன் இட வலப்பக்கங்களில் பூத்து வைக்கப்பட்டிருக்கும் வேல்களும் துருபிடித்திருந்தது.

கசமுத்துவும் கணேசனும் கோயில் படியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு உள்ளே வந்தார்கள். வேலை முடிந்திருக்கும் இடங்களைப் பார்த்துவிட்டு பூவரச மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள்.

'ஏ பூனா. ஈட்டிக்கு பெயின்ட் அடிக்கணும் மறந்துராதெ,னா. போன கொடைக்கு மறந்த மாரி இப்பமும் மறந்தன்னா, நீதான் பொறுப்பு' என்றார் கசமுத்து.
'எப்பா எத்தன தடவதான் சொல்லுவியோ. அதெல்லாம் ஞாவத்துல இருக்கு' என்றவன் வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

ஆடுகள் மேய்க்கப் போகும் சுடலை, அவற்றை வெளியில் பத்திவிட்டுவிட்டு வலது கையில் சோத்துச்சட்டியையும் இடது கையில் கம்பையும் வைத்துக் கொண்டு கோயிலின் உள்ளே வந்தான்.

'வேலலாம் தீயா நடக்கெ' என்ற சுடலை, சாமி பூடத்தின் முன் நின்று கும்பிட்டான். பிறகு கசமுத்துவும் கணேசனும் அமர்ந்திருக்கும் இடத்துக்கு அருகில் நின்றுகொண்டு, 'நேத்து ராத்திரி டிப்டாப் கடையில ஒரே சத்தம் தெரியும்லா?' என்றான்.

'ஏம்லெ?'

'முத்தியா மாமாட்ட ரூவா வாங்கிருப்பாம் போலுக்கு'

அவன் சொன்ன முத்தையா மாமா, வட்டிக்கு பணம் கொடுப்பவர். சொன்ன நாளில், சொன்ன தேதியில் தராவிட்டால் கோபப்படுபவர். வீட்டுக்கே வந்து சத்தமாகப் பேசுபவர். ஊரில், அவரிடம் வட்டிக்கு வாங்கவே யோசிப்பார்கள்.
இவன் ஏன் வாங்கினான்?

'வட்டிக்கு வாங்குத அளவுக்கு, கொள்ளேல போவானுக்கு என்ன வந்தது இப்பம்?' என்றார் கசமுத்து.

'என்ன எழவோ. கடைக்கு ஏதும் வாங்கிருப்பானான்னு பார்த்தா அதுவும் தெரில'

'ம்ம். பெறவு?'

'வீட்டுக்குத் தெரியாம வாங்கிருப்பாம். முத்தையா மாமா நாலஞ்சு நாளு விட்டுப் பார்த்துட்டுதாம் வீட்டுக்கு வந்து கேட்டிருப் பாரு போலுக்கு. டிப்டாப்பு ஐயா, 'ஏங்கிட்ட கேட்டாவெ கொடுத்தீரு. இங்க வந்து அவயம் போடுதீரு. அவன்ட்ட போயி கேளும்'னாராம். இவெம் வீட்டுல இல்ல. செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருக்காம். வந்த பெறவு அவன் ஐயா, மானங்கெட்ட கேள்வி கேட்டிருக்காரு அவனெ. காலைல பேசிக்கிடலாம்னு அவென் அம்மக்காரி சொல்லிருக்கா. காலைலயே எந்திச்சு பாத்தா, டிப்டாப்பு அதுக்கு முன்னாலயே எங் கெயா வெளிய போயிட்டானாம்?'

'ம்ம். மூதி எங்கெ போனாம்?'

 'அழ்வாரிச்சு, அம்பாசமுத்ரத்துல போயி தெரிஞ்சவ்ங்கிட்ட ரூவா வாங்கப் போயிருப்பானோ என்னமோ'

வட்டிக்கு வாங்குத அளவுக்கு அவனுக்கு என்ன செலவுடே? என்று அவர்கள் பேச்சைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.

 (தொடரும்)

1 comment:

துபாய் ராஜா said...

பிலோமி தந்த பிரியாணியின் வாசமும், ருசியும் போல தங்களது வார்த்தைகளின் வர்ணிப்பில் பாபநாசம் கல்லூரி காட்சிகள் கண்முன்னே...

சிவந்தியாரத்துக்காரி ஜெஸிலா மேரி என்ன உடை உடுத்தி, அன்னநடை நடந்து எப்போ வருவான்னு முப்பிடாதியோடு சேர்ந்து எங்களையும் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்....

நம்ம பய முப்பிடாதி ஆண்டனி மாதிரி அடக்கி வாசிப்பானா... அல்லது டிப்டாப் செல்வம் மாதிரி ஏறி அடிப்பானா அண்ணாச்சி...