Tuesday, January 27, 2015

கொடை 15


'பொம்பள சோக்கு ஏதுமிருக்குமால?'

'யாரு கண்டா? பம்பாய்ல இருந்தம்ங்கான். இல்லாமயா இருக்கும்?' என்றான் சுடலை.

'ஆமா, அவந்தான் ஒருத்தி குண்டிக்கு பின்னாலயே அலைஞ்சிட்டிருக்கான?'

'அந்த சப்பை மூக்கியா?. காச வாங்கி அவளுக்கு கண்டா கொடுக்கானா?' என்றார் கசமுத்து.

'அந்த அளவுக்கா கிறுக்குப் பிடிச்சிருக்கும் அவனுக்கு?' என்றான் கணேசன்.

'பொம்பள கேட்டா, எல்லாத்தையும்தான் கொடுப்பாம். ஒங்க பெரிய தாத்தா கொடுகலயா, அரண்மனை மாதிரி வீட்டையும் அஞ்சு கோட்டை வெதப்பாட்டையும்'

'எங்க தாத்தன் கொடுத்ததை நீ பாத்தியோல?'

'ஊர்ல சொல்லுததுதான்'

'கண்டான், அஞ்சாறு மயிர'

'எதுக்கு இப்பம் கோவப்படுத? வெசயத்துக்கு வருவோம்'

சிறுது நேரம் அமைதியாக இருந்தார்கள்.

நெல் அவிக்கச் சென்றுகொண்டிருந்த நாராயண கொத்தன், 'ஏல சொடல. ஆடுவோ பூரா செக்கடி தெருவுக்கு போது. நீங்க இங்கன்னு வாயளந்துட்டு இருக்கெ?' என்றான்.

'செக்கடித்தெருக்கா? கதய கெடுத்துப்போட்டுவோள?' என்றவாறு ஓடி னான் அவன். அங்கு கீரைப் பாத்திகள் போட்டிருக்கிறார்கள். திருடித் தின்ன ருசிக்கு ஆடுகள் அங்கு போவது தெரிந்ததுதான். காலையில் அங்கு ஆட்கள் இருப்பார்கள். கல்லை கொண்டு எறிவார்கள். எவனோ ஒருவன் எறிந்த கல் முதுகில் பட்டு ஏற்பட்ட புண் ஆறாமல், காதறுந்த வெள்ளாடு இன்னும் ம்மேஹ்... என அடிக்கடி கத்திக் கொண்டிருக்கிறது. அதனால் ஓடினான் சுடலை.

நாளையுடன் கோயிலில் வேலை முடிந்துவிடும். பந்தல்காரர் தனது பொருட்களை மாட்டுவண்டியில் கொண்டுவந்தார். அவரிடம் வேலை பார்க்கும் சைலப்பன், தென்னந்தட்டிகளையும் கம்புகளையும் இறக்கி கோயிலின் வெளிப்புறச் சுவரில் சாய்த்து வைத்தான். சாக்கு மூட்டையில் சிறு பைகளில் வைக்கப்பட்டிருந்த காக்கா முட்களைத் தனி யாக எடுத்து தென்னந்தட்டிகளுக்குள் திணித்து வைத்தான். யார் காலிலும் பட்டுவிட்டால் வலி உயிர்போய்விடும் என்பதால் இப்படி ஓரமாக வைத்தான்.

பந்தல்காரர் பெரிய தொப்பையுடன் இருக்கிறார் என்பதால் அவரால் வேலை ஏதும் செய்ய முடியாது என்று நினைக்க முடியாது. அவர் அதற்கும் மேல். குனிந்து நிமிர்ந்து கம்புகளில் ஏறி நின்று அவர் பார்க்கும் வேலைகளுக்கும் தொப்பைக்கும் சம்பந்தமில்லை. 'ஒம்ம வெயிட்டை கம்பு தாங்குமாவே. நொறிஞ்சிராம?' என்று வரும் கிண்டல்களை, அவர் சிரித்துக்கொண்டே கடந்து போவார். கசமுத்துவைப் பார்த்ததும், 'என்ன மச்சான், ஒக்கார்ந்துட்டேரு' என்றபடி ஒரு குத்து பொடியை மூக்குக்குள் திணித்துவிட்டு புறங்கையால் மூக்கைத் துடைத்தார் பந்தல்காரர்.

'அந்த மூக்கு என்னத்துக்கு ஆவும்?. கொஞ்சம் குறைச்சுதான் திணிச்சா என்ன?' என்ற கசமுத்துவின் அருகில் அவர் வந்ததும், கணேசன் தும்மினான்.

'பொடி போடுதது நீங்க. தும்மலு எனக்கா' என்ற கணேசன், இன்னு மொருமுறை தும்மினான். பிறகு 'வெளங்கிரும்' என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றான்.  ஒவ்வொரு முறையும் இவர்தான் பந்தல் போடு பவர் என்பதால் கம்புகளை ஊன்ற எங்கெங்கு குழி தோண்ட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். சைலப்பனிடம் அவர் இங்கிருந்து கொண்டே அங்க, இங்க என்று கை காண்பித்து குழி தோண்ட சொன்னார்.

நாளை மாலையில் மைக்செட் கெட்டிவிடுவார்கள். சீரியல் பல்புகளும் விடிய விடிய எரியும் ட்யூப் லைட்டுகளும் மூன்று நாட்கள் வேறொரு இடமெனத் தோற்றம் தரும். கசமுத்துவின் காதில் கொட்டு சத்தம் கேட்க ஆரம்பித்து நாட்களாகிவிட்டது.

வரி நோட்டையும் ரூபாய் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பேக்கையும் தூக்கிக் கொண்டு வன்னியநம்பியும் ராமசாமியும் முப்பிடாதியுடன் கோயிலுக்கு வந்தார்கள். கணக்கு வழக்குகளை மூன்று பேருமே பார்த் தார்கள். பல்லி முருகன் மற்றும் சொம்பு தங்கம் வகையறாக்களின் ஏழு வீடுகளைத் தவிர, மற்ற எல்லாருமே வரி கொடுத்திருந்தார்கள். பந்தல், சாமி அலங்காரம், கொட்டுக்காரர்கள், வில்லு, மைக் செட் என எல்லாருக்குமே முன் பணமாக, கொஞ்சம் கொடுக்கப் பட்டிருந்தது.

கோயிலுக்காக இரண்டு ஆடுகள் வாங்கப்பட்டிருந்தன. சாமிக்கு நேர்ந் துவிட்டு, படைப்புச் சோறு போடுவதற்காக.

பூதத்தார் சைவ சாமி. அவருக்கு கொஞ்சமாக சைவ படைப்பு படைத்துவிட்டு, மற்ற சாமிகளுக்கான அசைவ படைப்பை அதிகமாகப் படைத்தார்கள் கொடைகாரர்கள். அதை மட்டும்தான் வீடுகளுக்கு வினியோகித்தார்கள். தேவைக்குட்பட்டதே வாழ்வு. அசைவ பிரியத்துக் காக, அதற்கான முக்கியத்துவத்துக்கு மாறியிருந்தார் சைவ பூதத்தார். அவர் மனிதர்களுக்காக வாழ்பவர். மக்களை காப்பாற்றுவதற்காக வாழ்பவர் என்பதால் அவர்களின் அசைவ ஆசையை கண்டு கொள்ளவில்லையோ என்னவோ?

'செலவ, பார்த்து பண்ணுங்கெடா. சாமி காரியம்னு சொன்னா எல்லாவனும் கொறச்சுக்கிடுவானுவோ, கேட்டேளா?' என்றார் கசமுத்து.

'அப்டிதான் நடக்கு. அவ்வோ கேக்கதுல முக்காவாசிக்குத்தான் பேசியி ருக்கோம். வில்லுப்புலவருதான் இழுக்காரு'

'யாரு, பப்புதான. நா பேசிக்கிடுதென். ரூவாய கொடுக்கும்போது என்ன ய கூப்பிடுங்கெ,னா'

'மைக் செட்க்காரன், 25 டியூப்பு லைட்டு கெட்ட மாட்டேன்னாம். பெறவு பேசிலா சம்மதிக்க வச்சிருக்கு'

'முருக பயலா? 'அவெனுக்குலாம் எந்த ஒயரை எங்க சொருவணும்னு சொல்லிக் கொடுத்ததே நம்ம மந்திரம்தான். இன்னைக்கு மைக்செட்டு மொதலாளி ஆயிட்டாம்லா, எல்லாம் கேப்பாம்'

கொட்டுக்காரர்கள், வில்லுப்பாட்டுக்கார்கள் தங்குவதற்கு சங்காபீஸை ஒதுக்கி இருந்தார்கள். அங்குமிங்குமாக சிதறி கிடந்த சாமான்கள் எல் லாம் ஓரங்கப்பட்டு அவர்களின் பொருட்களை வைக்கவும் அவர்கள் படுப்பதற்கான இடமாகவும் மாற்றப்பட்டிருந்தது ஏரியா. அவர்களுக் கான சாப்பாடு, காபி, டீ வகையறா, அண்ணாமலை செட்டியார் கடை யில் சொல்லப்பட்டிருந்தது. வில்லுப்பாட்டு அண்ணாவி கழுத்தில் நான்கைந்து சங்கிலிகளோடும் கை களின் எல்லா விரல்களிலும் மோதிரங்களோடும் சென்றால் அவர் பின்னால் வருபவர்கள் எல் லாருக்கும் கோயில் கணக்கில் சாப்பாடு உண்டு.

'அப்பலாம் கடையில சாப்பாடு கொடுக்க மாட்டோம். இவங்களுக்கு பட்ற தலைவர் வீட்டுலதான் சாப்பாடு பொங்குவாவோ. ஏழெட்டு வகை கூட்டு, வடை, பாயாசம்னு பெரிய விருந்தால்லா நடக்கும். இப்படி வில்லு அண்ணாவிக்கும் கொட்டுக்காரங்களுக்கும் வீட்டுல விருந்து வைக்கத பெருமையா நினைச்ச காலம் அது. ஆனா, அதுல யும் சில பீநாறியோ இருக்கும்லா. காதை கொண்டா, யார்ட்டயும் சொல்லிராதல... ஒத்தகண்ணன் இருக்கார்லா அவ்வோ விட்டுல தான் ஒவ்வொரு கொடைக்கும் சாப்பாடு. அப்பம் ஒரே வில்லுக் காரனைதான் கூப்பிடுவோம். சாப்பிடுத வில்லுக்காரனுக்கும் வீட்டுல உள்ள பொம்பளை பிள்ளைக்கும் தொடுப்பு ஏற்பட்டு போச்சு. பிள்ளை, வில்லுக்காரனோட ஓடிபோச்சுன்னா பாரு. வெளிய தெரிஞ்சா கேவல ம்னு சொள்ள முத்து நம்பியாரையும் அவத்திய தேவரையும் கூட்டி ட்டுப் போயி சமானம் பேசியாங்கும் பிள்ளைய வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாவோ. அதுக்குப் பெறவு அந்த வில்லுபாட்டுக்காரன இந்த கோயிலுக்கு கூப்பிடுதது கெடையாது. வீட்டுலயும் பொங்கி போடுதது கெடயாது,
பார்த்துக்க. அந்தானிதான் செட்டியார் கடைக்கு போனது' என்று சுப்பையா தாத்தா ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கொடைக்காக ஆய்க்குடியில் இருந்து வரும் பார்வதி, தனது பிள்ளைகளுடன் கோயிலுக்குள் ஏறினாள்.

மற்றவர்களைக் கவனிக்காமல் சாமி பூடத்துக்கு முன் நின்று கும்பிட்டாள். அவள் பிள்ளைகளையும் கும்பிட வைத்தாள். முடிந்ததும், 'என்ன முப்பிடாதி. எப்டில இருக்கெல?' என்று சிரித்தாள். பிறகு எல்லோரும் அவளிடம் நலம் விசாரித்தார்கள்.

'வார வழியில கோயிலு இருக்கு. சாமிய பாக்காம வீட்டுக்கு போனா நல்லாருக்குமா, அதான் உள்ள வந்துட்டு போறேன்'

'நீ செஞ்சதுதாம் சரி. ஒங்கப்பம் இப்பதாம் எங்கயோ போனாம். ஆத்தாக்காரி இருப்பா வீட்டுல' என்ற கணேசன், அவளின் குழந்தையைத் தூக்கினார்.

'ஓங் வீட்டுக்காரரு வர்லயா மைனி' என்றான் முப்பிடாதி.

'கொடை அன்னிக்கு வருவாரு. எந்தம்பிக்கு வேட்டிக் கட்டணும்லா'

'நல்ல பாலிஸ்டர் வேட்டியா கட்ட சொல்லு ஓங்வீட்டுக்காரர்ட்ட. பாதி நேரம் கிழிஞ்ச சாரத்த உடுத்திட்டு பாதி சாமான் தெரியதான் அலையுதாம் ஓந்தம்பி' என்றான் ராமசாமி.

'ச்சீ' என்ற பார்வதி, 'ஒனக்கு கொழுப்பு ஏறிபோச்சுல. பக்கத்துல சின் னைய்யா இருக்காரு. இல்லன்னா நல்லா கேப்பேன்' என்றாள்.

'மைனி கேட்டா கொடுக்காம இருக்க முடியுமா? நீ கேளு மைனி' என்றான் ராமசாமி.

'ஓங்கிட்ட பெறவு வச்சுக்கிடுதெம்ல' என்றவள் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு நடந்தாள்.

கோயிலின் வெளியே, வட்டி முத்தையாவை டிப்டாப் ஏசிக்கொண்டே வந்துகொண்டிருந்தான். இரண்டு பேரும் வாய்ச்சண்டை போட்டவாறே கொண்டே வந்துகொண்டிருந்தனர்.

'இந்த மயிரு ரூவாய கொண்டுட்டு ஓடியாய போயிரப்போறேன். வீட்டுல வந்து கேட்டிருக்கேரு?'

'திங்ககெழம தந்திருதம்னு சொல்லிதானல வாங்குன? ஒரு நாளு, ரெண்டு நாளு தள்ளிப் போலாம். ஒரு வாரம் பொறுத்துக்கிட்டென், ஒங்கப்பம் மூஞ்சுக்காவ. நீ தந்தியால'

'வர வேண்டிய இடத்துல வரலன்னா என்ன செய்ய முடியும்?. நாளைக்கே நான் செத்து போயிருவேங்குத மாரிலா சண்டை போட் டிருக்க வீட்டுல வந்து. ஒம் மூஞ்சில இனும முழிச்சம்னா சொல்லு. ஆக்கங் கெட்டவன்'

'யாரல ஆக்கங்கெட்டவன்னு சொல்லுத. பொடதியில போட்டம்னா'

'போடுவேரோ பொடதியில' என்று சைக்கிளை ஸ்டான்ட் போட்டு விட்டு அவரை அடிப்பது போல போனான் டிப்டாப். சத்தம் கேட்டு கோயிலில் இருந்து எல்லாரும் எட்டிப்பார்த்தார்கள்.

அதற்குள் டிப்டாப்பின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் முத்தையா. இதை எதிர்பார்க்காத டிப்டாப் கன்னத்தைத் தடவிக்கொண்டு, அவரை மிதித்தான். தடுமாறினார் அவர். அதற்குள் 'ஏ ஏம்?' என்று  கோயிலில் இருந்து சத்தம் கொடுத்தான் கணேசன். எப்போதும் இடுப்பு வேட்டிக்குள், மடக்கு (கத்தி) வைத்திருக்கும் முத்தையா அதை உறை யில் இருந்து எடுத்து அவனைக் குத்த ஓங்கும்போது முப்பிடாதியும் வன்னிய நம்பியும் ஆளுக்கொருவரைப் பிடித்துக்கொண்டனர்.

'நல்லாருக்கு, ரோட்டுல இப்டி சண்டை போடுதது. மடக்கை உள்ள வையும்யா' என்று முத்தையாவிடன் சொன்னான் வன்னியநம்பி. டிப் டாப் திமிறிக்கொண்டு நின்றான்.

'எம்மேல கை வச்சுட்டல்லா. என்ன பண்ணுதம்னு பாரு' என்றான் டிப்டாப்.

'என்ன மயித்த புடுங்கிருவியோல. ஒன்னால ஆனத பாத்துக்கெ' என்ற முத்தையா, 'தராதரம் தெரியாத நாயிட்டலாம் வரவு செலவு வச்சா இப்படிதான் நாறணும்' என்று தனக்குள் முணங்கிகொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் டிப்டாப்.

1 comment:

துபாய் ராஜா said...

ஏ என்னா... இப்படி ஆயிப்போச்சு...
கொடைக்கு முன்னாடி ஊர்ல குத்து வெட்டு ஆகிடும் மாறிலா இருக்கு..