Saturday, November 1, 2014

கொடை 5

5.
ஆழ்வார்க்குறிச்சி கல்லூரியில், 'பி.காம் படி', என்று உடன் படித்த நண் பர்கள் சொல்லியிருந்தார்கள். பிளஸ் டூவில் எண்ணூற்றி எண்பத்து மூன்று மதிப்பெண்கள் என்பது முப்பிடாதிக்கு அதிகப்பட்சம்தான். இவ் வளவு மதிப்பெண் எப்படி வந்தது என்கிற ஆச்சர்யம் இன்னும் அவ னுக்கு உண்டு. ஏனோ தானோ என்று படித்துவந்தவன், கொஞ்சம் கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டதற்கு, சுபலட்சுமி காரணமாக இருந்தாள்.

'அவா இங்லீஷ்லயே நூத்துக்கு தொண்ணூறு மார்க்கு வாங்குதா. நீ அறுவது மார்க்காவது வாங்குனாத்தாம்ல ஏறுட்டாவது பாக்கும்' என்று நண்பன் கணபதி சொன்னதில் இருந்து மதிப்பெண்களுக்கும் காதலுக் கும் இருக்கும் தொடர்பை அறிந்துகொண்டான் முப்பிடாதி. கணிதவி யல் பிரிவில் படித்து வந்தாள் சுபலட்சுமி. இவனுக்கும் அவளுக்கும் தமிழ், ஆங்கில வகுப்புகள் மட்டும் சேர்ந்து நடக்கும். அவள் வகுப்பில் நிகழும், இவ்வகுப்புகளுக்குப் போகும்போது சுபலட்சுமி அமர்ந்திருக்கும் பெஞ்சுக்கு அருகிலேயே அமரும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது அவனுக்கு.

மனதுக்குப் பிடித்தவளின் அருகில் அமர இடம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று நினைத்த முப்பிடாதி, அவளைப் பார்த்து புன்னகைப்பதும் சிரிப்பதுமாகவே இருந்தான். எதிர்பால் ஈர்ப்பின் சுகம் அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது. எப்போதும் தேவையாகவும் இருந்தது. இதன் பொருட்டு சுபலட்சுமியும் அவளது தோழிகளின் கிண்டலுக்கு ஆளாகி யிருந்தாள்.

இவனைப் போன்றதொரு உணர்வு அவளுக்கு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. மழைக்குப் பிறகான அழகிய ஈர உணர்வு அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. மற்ற எந்தப் பெண்ணையும் பார்க்கும்போது வராத அந்த ஈர உணர்வு அல்லது ஓர் திடீர் நடுக்கம் இவளைப் பார்க்கும்போது மட்டும் எப்படி என்று மனதுள் கேட்டுக்கொண்டான். வகுப்புக்குள் நுழையும் வரை யதார்த்தமாக இருப்பவன் அவளைப் பார்த்த நொடியில் அப்படியொரு நடுக்கத்துக்குள்ளும் ஈர உணர்வுக்குள்ளும் சிறிது நேரம் சென்று வந் தான்.

 அவளும் பதிலுக்கு இவனிடம் ஏதாவது பேச, சிரிக்கவுமாக இருந் ததில் அதைக் காதல் என்று நினைத்துக் கொண்டான். அவள் சிரிப்பத ற்கான காரணம், அம்மாவால் முடியாத காலை நேரங்களில் இவன் தான் அவள் வீட்டுக்குப் பசும்பால் கொண்டு போய் கொடுப்பான். ஒரு பால்காரன் என்ற முறையிலேயே அவள் இவனைப் பார்த்தாலும் அவ ளுக்குள்ளும் இவன் மேல் ஏதோ ஓர் ஈர்ப்பு இருப்பதை அவன் கண்டு கொண்டான். இல்லையென்றால் இப்படி நாணி, கோணி, சிரித்து அவள் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என நினைத்தான் முப்பிடாதி.

அவளைப் பார்ப்பதற்காகவும் பேசுவதற்காகவும், அவள் படிக்கும் ராஜ லட்சுமி டீச்சரிடம் இவனும் டியூஷன் சேர்ந்தான். இதன் பொருட்டு கொஞ்சம் அதிகமாக மதிப்பெண் வாங்கினான்.

அக்ரஹாரத்துக்கும் சாண வாடை அடிக்கும் தொழுவைக் கொண்ட இவனது வீட்டுக்கும் சம்பந்தம் ஏற்படுவது சாத்தியமல்ல என்று  எழும் எச்சரிக்கை உணர்வு, அதீத காதலை அவ்வப்போது தடுத்தாலும் அவளது சிரிப்பில் மொத்தமாகத் தொலைந்துவிடுவது அவனையறி யாமலேயே நடந்தது.
அவள் வீட்டுக்குப் பின்பக்கம் வாய்க்கால் ஓடுகிறது. அதில் தெப்பக் குளத்துக்குச் செல்லும் வழியில் இருக்கும் பாலத்துக்கு கீழ், மேல் பக்கங்களில் படித்துறை. இங்குதான் ஆடு, மாடுகளோடு மனிதர்களும் குளிக்கும் இடம். சுபலட்சுமியின் வீட்டுக்குப் பின்னால் இரண்டு புளிய மரங்களும் ஒரு நார்த்தங்காய் மரமும் இருக்கிறது. அதற்கு பின் வாய்க்கால் படித்துறை. எப்போதாவது மரத்தில் இருந்து விழுகிற நார்த்தங்காய்கள், அவள் வீட்டு பின்பக்கக் கதவுக்கு கீழே உருண்டு வந்துகிடக்கும். படித்துறையில் இருந்து முப்பிடாதியே பல முறை அதை எடுத்து தின்றிருக்கிறான். கொஞ்சம் ஆரஞ்சுப் பழம் போல் இனிக்கிற நார்த்தங்காய்க்கும் ஆரஞ்சுப் பழத்துக்குமான வித்தியாசத்தை பல வருடங்களுக்குப் பிறகே அவன் உணர்ந்து கொண்டான்.

தெப்பக்குளத்துக்குச் செல்லும் வழியில் இருக்கிற பாலத்தில் இருந்து மேற்குபக்கமாக, வளர்ந்திருக்கும் கருவை முட்களை ஒதுக்கிவிட்டு நடந்தால் அவள் வீட்டின் பின்பக்கம் வந்துவிடலாம். காலையிலும் சாயங்காலமும் அவள் வருவாள் என்பதற்காகவே இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தான் முப்பிடாதி. அவள் வராத நாட்களில் பலமணி நேரம் துணிக்கு சோப்புபோடுவது போல பாசாங்கு செய்துகொண்டே இருப்பான்.
இப்படியாகத் தன்னுள் காதல் வளர்த்த முப்பிடாதி, அவளிடம் கேட் டான், 'எந்த காலேஜ்ல சேரப்போறீங்க?' என்று. கல்லூரி மாணவனாகப் போகும் வளர்ச்சி, அவளிடம் 'ங்க' சேர்த்து பேசும் பக்குவத்தைக் கொடுத்திருந்தது. அவள் வெட்கமாகச் சிரித்துக்கொண்டே, 'குற்றாலம் காலேஜ்' என்றபடி உதட்டை மடித்து நாணினாள். அது பெண்கள் கல் லூரி. அவளுடன் படிக்கும் வாய்ப்பு இல்லை என்பது முடிவாகி விட் டது. இனி எந்தக் கல்லூரியில் சேர்ந்தால் என்ன? என்று நினைத்துக் கொண்டான்.

'நீ'

'இன்னும் தெரியல. ஆழ்வாரிச்சுல படிக்கச் சொல்லுதாவோ' என்றான். அதற்கு மேல் அவளிடம் பேச முன் தயாரிப்பு ஏதும் இல்லாததால் சும்மா அவளைப் பார்த்துச் சிரித்தான். பிறகு பேச்சுவராமல், போயிட்டு வாரேன் என்பது மாதிரி தலையை மட்டும் ஆட்டிவிட்டு சிரித்தபடியே நகர்ந்தான். வெளியுணர்வில் அவன் நகர்ந்துவிட்டாலும் மனதளவில் இன்னும் அவளருகிலேயேதான் நின்றுகொண்டிருந்தான். அவளது வெட்கப்புன்னகையில் கிறங்கி கிறங்கி அவள் பின்பே மனம் சென்று கொண்டிருந்தது. உடல் வேறு பக்கம் வந்தாலும் அவளைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொன்டிருக்கிற அவன் மனம் பற்றி அவள் அறிந்தி ருப்பாளா? அல்லது அவளது உடலும் மனமும் கூட தனித்தனியாகப் பிரிந்து மனம் என்னுடனும் உடல் அவள் வீட்டினுலுள்ளும் இருக் கலாமோ?

இனி அவள் தன்னை நினைப்பாளா, காதலிப்பாளா என்கிற புது கவ லை அவனுக்கு ஏற்பட்டது. குற்றாலத்தில் படிக்கப்போகிற அவளை இனி அடிக்கடிப் பார்க்கும், பேசும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாள் ஆற்றுப்பாலத்தில் குளிக்கும் போது வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தான்.

சுற்றுவட்டாரத்தில் மூன்று கல்லூரிகள் இருக்கின்றன. ஆழ்வார்க் குறிச்சி பரமகல்யாணி, பாபநாசம் திருவள்ளூவர் கல்லூரி, அம்பாச முத்திரம் கலைக்கல்லூரி. இதில் ஆழ்வார்க்குறிச்சியை தவிர மற் றவை ஆண்களும் பெண்களும் படிப்பவை.

ராஜலட்சுமி டீச்சரின் தம்பி ராஜா, பாபநாசம் கல்லூரியில் பி.காம் படித்து வந்ததன் காரணமாகவும் அவனுக்குத் துணைக்கு ஓர் ஆள் தே வை என்பதன் பொருட்டும் முப்பிடாதி அதே கல்லூரில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டான்.
'என்னமோய்யா, நான் என்னத்த கண்டேன், காலேஜையும் படிப்பையும் அவனாது படிச்சா சரி' என்றாள் முப்பிடாதியின் அம்மா ஆண்டாள்.
'அவென் படிப்பை நா பாத்துக்கிடுதெங்கா' என்று படிப்பு வாசனையறி யாத ஆண்டாளிடம் ராஜா சொன்னதை அடுத்து அங்கு சேர்ந்தான் முப் பிடாதி.
ஆண்டாளின் குடும்பத்தில் முதல் பட்டதாரி.

முதல் நாள் கல்லூரிக்குச் சென்றபோது, அவனுக்கு நாராயணசாமி கோயில் முத்திரியை நாமமாக இழுத்துப் பூசினாள் அம்மா. அவனுக்கு அது தேவையில்லை என்றே பட்டது. பள்ளிக்கூடத்திலேயே இந்த நா மத்துக்கு கிண்டலடிப்பார்கள். கல்லூரியில் இன்னும் அதிகமாக இருக்க லாம் என நினைத்தான். இருந்தாலும் அவள் மனசு கவலைப்படும் என்று நெற்றியை நீட்டினான். போன தீபாவளிக்கு எடுத்து தைக்கப் பட்டிருந்த பச்சைக்கலர் பேண்டையும் மஞ்சள் வண்ணத்தில் கோடு போட்டிருந்த சட்டையையும் அணிந்திருந்தான். கையில் ஸ்டைலாக ஒரு நோட்டை மட்டும் வைத்துக் கொண்டு, கல்லூரிக்குச் செல்கிற புது கிறுக்கு மனதுக்குள் ஆட்டு வித்துக்கொண்டிருக்க, வீட்டுக்குள்ளிருந்து சைக்கிளை எடுத்தான். வெளியே, ராஜா நின்றிருந்தான். அவனுக்கு இலவச ஓட்டுனர் கிடைத்த சந்தோஷம் மனதுள் சிரிப்பாக மாறியி ருந்தது. அவனைப் பின்பக்கம் உட்கார வைத்துக்கொண்டு அழுத்தப் போனான். அம்மா, சைக்கிளை நிறுத்தி, எதிரில் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

இல்லையென்றதும், 'இப்ப போயிட்டு வாய்யா' என்றாள்.

சைக்கிள் கிளம்பியது. ஏறி ஊர் பஞ்சாயத்து போர்டை தாண்டியதுமே நெற்றி நாமத்தை அழித்தான். யப்பா ஒரு பெரிய பிரச்னையில் இருந்து தப்பியது போல இருந்தது. அழுத்தினான். ஊர்தாண்டி, கோவன்குளம், தாட்டாம்பட்டி, வடமலைசமுத்திரம், டானா, பாபநாசம் என ஏழு கிலோமீட்டர் சைக்கிள் மிதியில் உடலெல்லாம் வியர்த்து நசநசவென்று இருந்தது. ராஜாதான் அவனது வகுப்பைக் காண்பித்தான். அவனது நண் பர்களை அறிமுகம் செய்து வைத்தான்.

அவனுக்கு எங்கோ தனித்து விடப்பட்ட மாதிரி இருந்தது. பைக்குக ளில், கார்களில் விதவிதமாக உடையணிந்து வருகின்ற மாணவர்க ளைப் பார்க்கும்போது தன்னையே அறுவறுப்பாகப் பார்க்கத் தோன் றியது. அழகழகான வண்ணங்களில் உடையணிந்து, வாசனையோடு செல்கிற பெண்களைப் பார்க்கையில் அவர்களை விட்டு கொஞ்சம் தூரமாக நிற்கத் தோன்றியது. அவர்களின் சிரிப்பில், நடையில், பேச் சில் இவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்து, சிறு புள்ளியாக எங் கோ காணாமல் போயிருந்தான். அவனது உடைகளும் முகமும் ஏள னமாகத் தெரிந்தது. புது உலகத்தில் தனித்துவிடப்பட்ட மாதிரி உணர்ந்தான்.

பிளஸ் டூவில் அவனுடன் படித்தவர்கள் யாரும் இவன் சேர்ந்திருக்கிற பிரிவில் இல்லை. அமர்ந்திருக்கிற பெண் பிள்ளைகளை நோட்டமிட் டான். தனக்கு இணையாக ஒரே ஒருத்தி மட்டுமே இருக்கிறாள் என்று நினைத்தான். கருந்தேகமும் எண்ணெய் தேய்த்து தலைவாரியிருந்த ஸ்டைலும் கொஞ்சம் சாயம்போன பாவாடை தாவணியும்... அவள் மட்டும்தான் தன்னைப் பார்க்கக்கூடும் என நினைத்தான். அல்லது, தான் அவளை மட்டுமே காதலிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் நினைத்துக் கொண்டான். மற்றவர்கள் இருக்கிற அழகுக்கும் நடை உடை பாவனைக் கும் தன்னை ஒரு பொருட்டாக நினைக்கவே மாட்டார்கள் என்றும் நினைத்தான். அவனுக்கு ஏதோ ஒரு பயம் தோன்றி அவர்களிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான். யாரிடமும் பேசுவ தற்குத் தயக்கமாக இருந்தது. அப்படியே யாரும் பேசினாலும் வார்த்தைகள் மெதுவாகவே வெளிப்பட்டன.

முதல் ஒருவாரம் இப்படிக் கழிய அடுத்தடுத்த வாரங்கள் அவனுக்கு வேறொரு கனவைத் தந்தன.

0

பூத்தார் கோயிலின் பூ(பீ)டங்கள் சிதைந்திருந்தன. அதிலிருந்து விழுந்த செங்கல்கள் உடைந்து பூடத்துக்கு அருகிலேயே சரிந்து கிடந்தன. அந்த செங்கற்குவியலுக்குள் இருந்து சாமந்திப் பூச்செடிகள் கொத்தாக முளைத்திருந்தன. கண்டங்கத்திரி கொடி, பூடத்தின் பின் பக்கம் இருக் கிற சுவரில் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறது. போன கொடையின் போது படைப்புச்சோறுக்கு அடுப்பாகப் போடப்பட்ட பாறாங்கற்கள் அங்கேயே அன்னாந்து வாய்பிளந்து பார்த்த மாதிரி கிடந்தன. கோயிலைச் சுற்றி, கடந்த கொடைக்கு முன் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர் தனது வெண் மையை இழந்து அழுக்கு வண்ணத்துக்கு மாறியிருந்தது.

கோயிலின் முன் பக்கம் வாசல் தெளித்து கோலம் போட்டிருந்தாலும் இந்தப் பின்பக்க வேலைகளை கால்நாட்டுக்குப் பிறகுதான் சரி செய்ய வேண்டும்.
கோயில் என்று சொல்லப்படும் இந்த இடம் ஒரு காலத்தில் மந்தை யாக இருந்தது என்று மூக்க தாத்தா சொல்வார். ஒல்லி தேகத்தில் இன் னும் இரும்பாக இருக்கிற தொண்ணூற்று ஒன்பது வயது தாத்தா அவர். அவரது சிறு பிராயத்தில் இது அப்படித்தான் இருந்திருக்கும். ஊரின் மொத்த மாடுகளும் இங்குதான் மேய்ச்சலுக்கு முன், நிறுத்தி வைக்கப்பட்டிருக்குமாம்.

புறம்போக்கான இந்த இடம் கசமுத்துவின் பாட்டன் கட்டுபபாட்டில் இருந்ததாம். பிறகு ம்ந்தையின் ஓரத்தில் சின்ன குடிசை மட்டும் அடித்து காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு மருந்து கொடுக்கும் தடவும் வேலையை அங்கி ருந்து ஆரம்பித்தாராம் கசமுத்துவின் பாட்டன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மந்தையைச் சுற்றி வீடுகள் வந்துவிட, மந்தை ஊருக்கு வெளியே, பஞ்சயாத்து போர்டுக்கு எதிரில் சென்றுவிட்டது என்றும் மந் தையாக இருந்த இடம் கசமுத்துவின் பாட்டன் கைக்கு வந்து விட்டது என்றும் சொல்வார் மூக்க தாத்தா.

அவர்களின் சாமியான பூதத்தார் வேறு எங்கோ ஒரு ஊரில் இருந்ததால் அவ்வளவு தூரம் போய் சாமி கும்பிடமுடியாது என்று நினைத் தபோது கசமுத்துவின் பாட்டன் கனவில் சாமி தோன்றி தனக்கு உன் ஊரிலேயே பூடம் அமைத்து கும்பிடு என்று சொன்னதாகவும் அதையடுத்தே, அங்கிருந்து மண் கொண்டுவரப்பட்டு பூடம் செய்து மந்தை இடத்தில் கோயில் கட்டியதாக அவர் சொன்னார். அவர் சொல்லும் கதைகளில், கேட்கும் கேள்விகளுக்கு அவரிடம் ஏராளமான கிளைக் கதைகள் கிடைக்கும். கசமுத்துவின் பாட்டன் ராமையா இங்கு பூடம் அமைத்து வழிபட்டாலும், முதலில் பூதத்தாருக்கு மட்டுமே இங்கு பூடம் இருந்தது. அவருக்கு அடுத்து வந்த கசமுத்துவின் தத்தா ஆண்டி, தளவாய் மாடசாமியையும் பலவேசக்காரனையும் கொண்டு வந்ததாகச் சொல்வார்கள். பிறகு கோயிலில் இவர்கள் குடும்பம் தவிர சொக்காரக் குடும்பங்களும் பெண் கொடுத்த, எடுத்த குடும்பத்துக்காரர்களின் வருகைக்குப் பின், மற்ற சாமி பூடங்கள் கோயிலுக்குள் வந்ததாகவும் கதை உண்டு.
கோயிலில் பூத்தாருக்கு மட்டும் சிறு சிலை. அவரின் அருகில் சிறு பூடங்களாகத் தளவாய் மாடசாமியும் பலவேசக்காரனும் இருந்தார்கள். சிறிது தூரத்தில் வடபக்கமாக பட்றையன், தூண்டிமாடனின் பீடங்கள் இருந்தன. எதிரில் பிரம்மராட்சதை அம்மன், நாராயணனுக்கான பூடம்.

பரம்பரை பரம்பரையாக, கோயிலில் பூத்தாருக்கு ஆடி வரும் கசமுத்து வகையறா, குடும்ப பெருக்கத்தின் காரணமாக ஒரே சாமிக்கு நான்கைந்து பேர் ஆடுவதை இப்போது கொண்டுள்ளனர்.

கசமுத்து, கோயிலின் முன், ஆடுகள் போட்டுவிட்டுப் போன புழுக்கை களைத் தூத்து தள்ளிக்கொண்டிருந்தார். 'ஊர்ல அவ்வளவு எடம் கெடக்கு, எங்க வந்து புழுக்கைய போடுது பாத்தியா?' என்று தன்னாலேயே பேசிக்கொண்டு ஈர்க்குச்சி வாரியலால் தூத்தார். வெள்ளிக்கிழமையில் இருந்து கோயில் பரபரப்பாகிவிடும். பன்னீர் தெளித்த பல வித பூக்களின் வாசமும் மேளச்சத்தமும் சொந்தபந்த கூட்டமும் படைப்புச்சோறும் கெடாக்கறியும் நினைக்கவே கசமுத்துவுக்கு சிலிர்ப்பாக இருந்தது. போன கொடையின் நிகழ்வுகள் கண்முன் வந்து சந்தோஷம் வீசிவிட்டுப் போனது. கொடை என்பது கொடையல்ல. அது கொண் டாட்டம். மனதின் கொண்டாட்டம். புழுதியைப் பூக்களாக்கும் விசித்திர வேடிக்கை அது.

ஆட்டுப்புழுக்கைகளைத் தூத்து ஒதுக்கிவிட்டு பட்றையன் பூடத்துக்குப் பின்பக்கம் வளர்ந்திருந்த பூவரசம் மரத்து மூட்டில் உட்கார்ந்தார் கச முத்து. அவர் மனதெங்கும் மகிழ்ச்சிப் பரவியிருந்தது. தன்னை கொ டைக்குள் முக்கிக்கொண்டார். அருகில் நின்ற பசு, திடீர் அருவியென மூத்திரம் அடித்ததையும் அவர் தோளில் அவைத் தெறித்து ஈரப்புள்ளி களை ஏற்படுத்தி இருந்ததையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லை.
போன கொடையில், ஆடுவெட்டும் பிரச்னையில் தகராறு வந்திருந்தது. ஒவ்வொரு கொடைக்கும் ஏதாவது பிரச்னை வந்துவிடுகிறது.

சாமக் கொடையன்று யாரிடமும் கேட்காமல் முதல் ஆட்டை, பட்றையனுக்கு வெட்டினான் பல்லி முருகன். இது வேண்டும் என்றே செய்யப்பட்ட விஷயம்தான். கோயிலில் ஏதாவது ஒரு தகராறை இழுத்து அதன் மூலம் சொந்தத்துக்குள் அல்லது சொந்த சாதிக்குள் பிரிவினையை ஏற்படுத்துவது அவனது நோக்கமாக இருந்தது. பல்லி முருகனுக்கும் இந்த கோயிலில் ஆளுமை செலுத்தக்கூடிய உரிமை இருந்தது. கசமுத்துக் குடும்பத்தின் சொக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் அவன். சொத்துத் தகராறில் உறவு முறிந்து, கோயிலில் தன் குடும்பத்துக்கான முக்கியத்துவம் குறைந்ததை அடுத்து, எழுந்த பல வருட கோபத்தை கெடா வெட்டில் காண்பித்தான் முருகன்.

'அதெப்படி அங்க போயி மொத கெடாவை வெட்டலாம். அறிவில்லயோல. ஏற்கனவே இருக்க வழக்கத்தை எப்டி மாத்துவாம், செரிக்குள்ள' என்று ஆரம்பித்தது வாய்த்தகராறு. கெடா வெட்டும் அரிவாளை எடுத்துக்கொண்டு பல்லி முருகன், கசமுத் துவை வெட்டப்போக, பதிலுக்கு அவன வகையறாக்களும் கோதாவில் இறங்க, இனிமையாக முடிய வேண்டிய விழா, இழுபறி சண்டையில் முடிந்திருந்தது.

அதற்கு முந்தைய கொடையில் வேறு மாதிரி பிரச்னை வெடித்திருந் தது. அது படைப்புச்சோறு கொடுப்பதில் நடந்தது. வரி கொடுத்தவர்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து சோறும் கறியையும் வாங்கிக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். காலையில் ஏழு மணிக்கு படை ப்புச்சோறு கொடுக்க ஆரம்பித்து பத்து மணிவாக்கில் முடிய இருந்தது. படைப்புச்சோறு எல்லோராலும் சாப்பிட முடியாது. உப்பு அதிகம் போடாத சோறு.

முழு வரிக்கு இவ்வளவு, அரை வரிக்கு இவ்வளவு என்று பகுத்து க்கொடுக்க, முதலிலேயே ஒரு பாத்திரத்தை கொடைகாரர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். குடும்பஸ்தர்களுக்கு முழு வரி, பதினெட்டு வயதுக்கு மேல், வீட்டில் மகன் இருந்தால் ஒன்றரை வரி. ஆம்பளை இல்லாத வீடுகளுக்கு அரை வரி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

படைப்புச்சோறை கிட்னணும், பாலுவும் கொடுத்துக் கொண்டிருந்தார்க ள். கறியை வேம்புவும் சுப்பையாவும் கொடுத்துக்கொண்டிருந்தனர். சிறி து நேரத்தில் அங்கு வந்தான் சொம்பு தங்கம்.

'இந்தச் சோறை யார்ல போட்டா?' என்று சட்டியை நீட்டினான். அவன் கோவம் என்னவென்று அங்கிருந்தவர்களுக்குப் புரிந்துவிட்டது.

'ஏம் நாந்தான்' என்றான் கிட்னண்.

நாக்கைத் துறுத்திக்கொண்டு கையை ஓங்கி அவன் முகத்தில் குத்தப் போனான். பாலுவும் அங்கிருந்த வேம்புவும் அவன் கையைப் பிடித் தார்கள்.

'என்னடெ அலூசமா கை நீழுது' என்றான் சுப்பையா.

'எங்கள கண்டா ஏளனமாவால இருக்கு, ஒங்களுக்கு? நாங்களும் ஒரு வரிதானெ கொடுத்தோம். எங்களுக்கு மட்டும் இப்டி ஏம்ல கொடுத் தியோ?
'இப்ப என்னங்கெ?'

'என்னங்கெயா?  இது கறியால? வெறும் நாலு துண்டு. இந்த மயித்து க்கு நாங்க நாக்கைத் தொங்க போட்டுட்டா இருக்கோம்? இப்டி கொடுக் கதுக்கு எல்லாத்தையும் நீங்களே பொடதியில போட்டுக்குங்களென்'

--அவரின் அவயம் தெரு பூராவும் கேட்டுவிட்டது. தாம் தூம் என்று குதித்தார். 'ஒங்க சோலியல்லாம் முடிச்சுருவம்ல' என்று கத்திக் கொண் டிருந்தார். கூட்டம் கூடிவிட்டது. ஏற்கனவே வாங்க வந்திருந்த சிலரும் தங்கத்துக்கு ஆதரவாக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.

வேம்பு, சத்தம்போடாமல் அவன் சட்டியை வாங்கி இன்னும் நான் கைந்து கறித்துண்டுகளை குழம்போடு எடுத்துப் போட்டான்.

'இந்தா இத கேட்டா தரப்போறோம். எதுக்கு தேவையில்லாம அவயம் போட்டுட்டு கெடக்க? என்றான் சுப்பையா.

'இப்பம் நான் வரலனா தந்திருப்பேளா? ஆள் பாத்து கொடுக்காதீங்கல, சாமி காரியம், சங்கனாங்குழியை அறுத்துருவாரு பாத்துக்குங்கெ?' என் றான் சொம்பு தங்கம்.

அவன் பேசுவதைப் பார்த்து கோயிலுக்கு கீழ்பக்க வீட்டில் இருக்கும் கருப்பனுக்கு, 'நாமும் திரும்பக் கொண்டு போய் கேட்போமா?' என்று தோன்றியது. கேட்டால் இன்னும் கொஞ்சம் கறிக்கிடைக்கும் என்று நினைத்தான். அதற்குள் தங்கம் திட்டிக்கொண்டே வெளியில் சென்றது கேட்டது. இனி போகவேண்டாம் என்று முடிவு செய்துகொண்டான்.
சொம்பு தங்கத்தின் மகள்தான் வந்து வாங்கிவிட்டுப் போனாள். அவ ளுக்கு வேண்டும் என்றே கறியைக் குறைவாக வைத்து கொடுத்தது சுப்பையாதான் என்பது வேம்பு உள்ளிட்டவர்களுக்குத் தெரிந்து விட் டது. இப்டி ஏதாவது வந்து சந்தி சிரித்தால்தான் நல்லது என்று அவர் களும் விட்டுவிட்டார்கள். சொம்பு தங்கம், பல்லி முருகன் வகையறா வைச் சேர்ந்தவன் என்பதால் வேண்டும் என்றே வம்பு இழுத்ததாக கச முத்து நினைத்துக்கொண்டார்.

இந்த வருடக் கொடையில் அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என நினைத்துக் கொண்டார்.

தொடரும்

4 comments:

rama said...

வணக்கம் அண்ணன் திரு எக்னாத் ராஜ் அவர்களுக்கு..
நான் ஏற்கனவே உங்களது கிடைகாடு நாவலை படித்திருக்கிறேன் நன்றாக இருந்தது. அப்போதே அதுப்பற்றி எழுதலாம் என்று நினைத்தேன் முடியவில்லை. இப்போது யாதர்த்தமாக உங்களது வலைப்பதிவை பார்த்தேன். உங்களது கொடை பதிவு நன்றாக் இருக்கிறது....

ஆடுமாடு said...

நன்றி.

Anonymous said...

Its so good to read your stories. Even though i grew up in madras every summer i go to dana as my uncle and all of my relatives are there. It brings me back all of the memories

Whats ur cell number i can give you call some time

My name is augustine

ஆடுமாடு said...

Augustine thanks. Mail me this id : I'll give u my number. egjira@gmail.com