Sunday, November 2, 2014

கொடை 6

6.
கடையில் இருந்தான் 'டிப்டாப்' செல்வம். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத முடுக்கில் இருந்தது கடை. அவன் வீட்டின் விவசாய சாமான்கள் கிடந்த தொழுவத்தின் ஒரு பகுதியை மறைத்துக் கட்டி டெய்லர் கடை ஆக்கியிருந்தான். ரோட்டில் இருந்து இடப்பக்கம் திரும்பும் தெருவின் கடைசியில் இருந்தது. அதைத் தெரு என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால் மொத்தமே மூன்று வீடுகள் மட்டுமே அந்தப் பகுதியில் இருந்தது. அந்த வீடுகளும் அவற்றின் தொழுவமும் ஒரு தெரு போல காண்பித்துக் கொண்டிருந்தன. நடுவில் பெரிய பூவரச மரமும் வேப்ப மரமும் இருக்கிறது. பூவரச மரத்தைத் தாண்டியதுதான் செல்வத்தின் கடை.

உள்ளே நடிகைகள் ஜீனத் அமன், ரேகா போஸ்டர்களை ஒட்டி யிருந்தான். அந்தப் படத்துக்கு கொஞ்சம் பெரியதாக இடது பக்கம் ரஜினிகாந்தும் வலது பக்கம் கமல்ஹாசனும் ஸ்டைலாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். ரஜினியின் ஸ்டைலைத் தொடரும் பொருட்டு செல்வமும் அதிகமான தலைமுடியை வளர்த்து அவர் போலவே, இடது பக்கம் வகிடெடுத்து வாரியிருந்தான். கொஞ்சம் ரஜினிபோல அந்த தலைமுடி கலைந்து கிடக்கும் அவனுக்கு.
கடையில் செல்வம் இருந்தானென்றால் டேப் ரெக்கார்டர் பாடிக் கொண் டிருக்கும். கூட அண்ணனின் இரண்டு மூன்று அடிபொடிகள் இருப் பார்கள். பெரும்பாலும் சோகப்பாடல்கள். ஏனென்றால் அண்ணன் காதல் தோல்விகண்டவர் என்பார்கள்.

'கீழப்பாவூர்ல பிடிஆர்எல் குடும்பம்னா சும்மாவா? நாலு பேருட்ட கேட்டுப்பாரு சொல்லுவாவோ. அவ்வோ சொத்தும் சொகமும். எனக்கு அண்ணன் முறைதாம்ல வேணும். அவ்வோலாம் பொண்ணு கொடுக் கதே பெரிய வெஷயம் ஒனக்கு. அவ்வோளே தாரம்னு சொல்லுதா வோங்கென், நீ வேண்டாங்கெ. சீமாம் வீட்டு நாயி சிம்மாசனம் ஏறுச் சின்னு வண்ணான் வீட்டு நாயி வெள்ளாவியில போயி ஏறிச்சுங்கத கதையா, எவளோ ஒருத்தி எவனையோ கெட்டிட்டுப் போனா, நீ எதுக்குல காஞ்சுட்டு கெடக்கணும். கூறுகெட்ட கோட்டி' என்பாள் அவன் அம்மா.

அவள் அப்படி ஆரம்பித்தால், 'இவா தொல்லை தாங்க முடில' என்றவாறு டேப் ரெக்கார்டரில் சத்தத்தை அதிகப்படுத்தி வைப்பான் செல்வம்.

இதற்கிடையில் ஊரில் செல்வம்பற்றி கிசு கிசு ஒன்றும் ஓடிக் கொண் டிருந்தது. அக்ரஹாரத்தில் இருந்து, அடிக்கடி இவன் கடைக்கு வந்து, அதிக நேரம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிற, அழகான உடையணிந்து முகமெல்லாம் பவுடர் அப்பி செல்கிற, கேரளாவில் இருந்து புதிதாக வந்திருக்கிற ராமகிருஷ்ண உண்ணியின் மகள் மகேஸ்வரியை வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் அது.

மகேஸ், அவள் மட்டும் அவன் கடைக்குத் தனியாக வரமாட்டாள்.  பக்கத்து வீட்டு பொம்பளையையும் அழைத்து வருவாள். முதலில் ஜாக்கெட் தைக்கத்தான் வந்தார்கள். பிறகு, நேரம் போகவில்லையென்றால் இவன் கடைக்கு வரத் தொடங்கினார்கள். பேச்சு பேச்சாகவே இருந்தார்கள் கடையில். அடிக்கடி காரணமே இல்லாமல் சிரிப்பும் வந்து போகும்.

மாலை வேளைகளில் கடையில் பாட்டுக்கேட்க வரும் நண்பர்கள், அவனிடம், 'சரிடே. யோக்கியம் மாதிரி பேசிட்டு என்னைக்காது நம்ம சடை யன் மாதிரி மாட்டிராத கேட்டியா?' என்பார்கள். செல்வம் அதற்கெல்லாம் அசருகிற ஆள் இல்லை.

சடையன் கதை யாரும் எதிர்பாராதது. எப்போதும் அமைதியாகவே இருக்கிற அவனுக்கு அப்பாவி என்ற பெயர் இருந்தது, அவன் வீட்டுக்கு கீழ்ப்பக்கம் இருந்த பொன்னம்மா பிள்ளை கர்ப்பம் ஆகும்வரை. விஷயத்தை வீட்டுக்குள்ளேயே முடித்து அமுக்கப் பார்த்தார்கள். பொன்னம்மாள் தெளிவாகச் சொல்லிவிட்டாள், கர்ப்பத்துக்கு காரணம் அந்த அப்பாவிதான் என்று. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான் சடையன். பிறகென்ன, கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டார்கள்.

'சடையனாது சொந்த சாதிக்குள்ள பண்ணுனதால தாலி கெட்டி வச்சாவோ? வேற எங்கயாவது கைய வச்சன்னா, சாமானை அறுத்துறப் போறாவோ'

'அப்டியே வாயில ஊசிய வச்சு தச்சிருவேன், அர்தலி. ஒங்களுக்குலாம் என்ன எழவுல தெரியும்? கூறுகெட்டவனுவளா? அது நட்பு. தேவையில்லாம பிரண்ட்ஷிப்பை தப்பா பேசாதீங்க' என்பான் செல்வம்.

'கேட்டேளா? நட்பாம்லா. பொம்பள பிள்ளைலுட்ட ஆம்பள பயலுக்கு என்ன நோக்கம் இருக்கும்னு எங்ளுக்குத் தெரியாதாடே? எப்படா சிரிப்பா, இடுப்புல கைய போடலாம்னு பார்க்குதவன் நீ. கணக்குப் பிள்ளை வீட்டுல செஞ்சது தெரியாதா?' என்று ஏளனம் பேசுவார்கள்.

'செரில. அதுக்காவ ஆத்தா யாரு, அக்கா, தங்கச்சி யாருன்னு கூடவா தெரியாது, கோட்டிக்காரனுவளா?'

'அதுக்கும் இதுக்கும் எப்படி சொல்லுவெ. அது வேற, இது வேற தானெ'

'அப்டியே மூஞ்சியில மிதிச்சம்னா, அதுமாரிதாம்ல இதுவும். இதுக்கு பேரு நட்பு. எவடா அவுத்து போட்டுட்டு போவான்னு, நாக்கை தொங்கப் போட்டுட்டு போறவனுவோ நீங்க. ஒங்களுக்கு நட்பு பத்தி, பிரண்ட்ஷிப் பத்தி என்ன தெரியுங்கெ?' என்பான் செல்வம்.

'ஆமா, நாங்க பச்சபுள்ளலா?  நாங்க ஒண்ணு சொன்னா, நீ பேச்சை மாத்தாதலெ, நீ அவளை வச்சிட்டுதான் இருக்க, கேட்டியா? எங்ககிட்ட கதை வுடாதெ. என்னைக்காது மாட்டுனன்னு வையி. நாங்கதான் ஒனக்கு பஞ்சாயத்துக்கு வரணும் கேட்டுக்கொ'

'த்தூ. அப்டி ஒரு மயிரு சம்பவமும் நடக்காது. பொத்திட்டு பீடிய குடிங்கல' என்பான் செல்வம்.

-இவர்களிடம் எதுவும் பேசமுடியாது. எதெதற்குமோ முடிச்சுப்போட்டு சிக்கல் இல்லாத விஷயத்தை கூட சிக்கலில் மாட்டு விடும் புண்ணியவான்கள். அதனால் எதற்கும் கோபம் கொள்ள மாட்டான் செல்வம். அதுதான் அவன் சிறப்பு.  அவர்களிடம் அவர்களைப் போலவே பேசிச்செல்வான்.

அக்கம் பக்கத்தில் அப்படி பேசுவது போல்தான செல்வமும் மகேஸ்வரியும் நடந்துகொண்டார்கள். சில பாடல் கேசட்டுகளைக் கொடுத்து அவள் இவனிடம் போடச் சொல்வதும் அவளுக்கு இவன் சில இந்திப் பாடல்களைக் கொடுப்பதும் அவள் குளிக்கச் செல்லும் நேரத்துக்கு இவனும் செல்வதும் அவள் வர நேரமாகிவிட்டால அதுவரை வாய்க்காலில் காத்திருப்பதும் செல்வம்- மகேஸ் மீது ஊருக்குள் சந்தேகம் வர வழைத்தது.

'யாரும் என்னவேணாலும் பேசட்டும். நானே சொல்றேனே. எங்காது படவே அக்ரஹாரத்துல ஏதேதோ பேசறா. ஆனா, நாம அப்படி இல்லையே. கவலைய விடு செல்வம். இதெல்லாம் கண்டுக்காத' என்பாள் மகேஸ்.

கடையில் இந்திப் பாடல் ஒன்றை ஒலிபரப்பிக் கொண்டிருந்தான் செல்வம். அதிக டிரம்ஸ் இசை கொண்ட அந்த சத்தம் தெருவில் மிதந்துவந்து கொண்டிருந்தது. வேகமாக சைக்கிளில் வந்த முப்பிடாதி, அதில் இருந்து இறங்காமலேயே காலை அவன் கடை வாசலில் ஊன்றி நின்றான். சைக்கிள் ஹேன்டில்பரில் அம்பாசமுத்திரம் சேட் கடை மஞ்சள்துணி ஆடிக் கொண் டிருந்தது. அதற்குள் புது சட்டைத் துணி.

'என்னடே முப்பு வா' என்று சொல்லிவிட்டு சவுண்டை குறைத்து வைத்தான். பிறகு, 'காலேஜ் போனதும் போதும், கடைபக்கமே எட்டிப் பாக்கல' என்றான் செல்வம்.

'என்னத்த காலேஜு' என்று வெறுப்பாகச் சொன்னான் முப்பிடாதி.

'என்னடெ இப்டி சொல்லுத. எனக்குலாம் காலேஜ்ல படிக்காத கொற நெறைய இருக்கு கேட்டியா?'

'செரி, அதை விடுண்ணே. இந்தா இருக்கு பாரு சட்டைத்துணி. எங்கம்மகிட்ட அழுது அடம்பிடிச்சு துட்டு வாங்கி, துணி வாங்கியாந்திருக்கேன். பாம்பே ஸ்டைல்ல தச்சு தா. சும்மா ஸ்டைலா இருக்கணும். வழக்கமா தய்க்குத மாதிரி தய்க்காண்டாம்,னா' என்றான்.

'கெளப்பிருவோம்' என்றவன் சட்டைக்கான அளவை எடுத்துக் கொண் டிருந்தான். பக்கத்து தொழுவத்தில் இருந்து மாடுகளை அவிழ்த்து விட்டுவிட்டு, வெற்றிலை போடுவதற்காக இவன் கடைக்கு வந்த சுக்கு, 'என்னடே முப்புடாதி. இந்த கொடைக்கு நீயும் ஆடணும்னு சொல் லிட்டிருந்தாரு கசமுத்து' என்றான்.

திரும்பிப்பார்த்த முப்பிடாதி, யாரென்று தெரிந்துகொண்டு 'அவரும் ஒவ் வொரு கொடைக்கும் சொல்லிட்டுதாம் இருக்காரு சின்னையா. எனக்குள்ள சாமி வரணும்லா? வந்தாதானெ ஆட முடியும்? சும்மா போயி தங்குதங்குன்னு குதிக்க முடியுமா?' என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவிய சுக்கு, 'நீ என்னடே இப்டி சொல்லுத. ஒங்க குடும்பத்து கோயிலு. தோலாம் துருத்திலாம் ஆடிட்டு இருக்காம். ஒனக்குத்தானடா சாமி வரணும், மொதல்ல' என்றார் அவர்.

சட்டையின் அளவை எடுத்து முடித்த டிப்டாப்,, 'ஆங். வரும்வே, மலையில இருந்து ரயிலேறி வந்து இறங்கி, அவனை சாமி ஆடச் சொல்லும்? போரும்யா நீரு. படிக்கப் பயலெ போயி சாமியாட சொல்லிட்டு' என்றான் கிண்டலாக.

'படிப்புக்கும் சாமிக்கும் என்னல சம்மந்தம் இருக்கு? கீழத்தெருவுல கொம்பையாத் தேவரு மவன் கரண்டு ஆபிசில என்ஜினீரா இருக்கானாம். இப்பவும் வந்து அவ்வோ வீட்டு கோயில்ல, ஒவ்வொரு கொடைக்கும் ஆடிட்டுதானல இருக்காம்'

'அவ்வோ குடும்பத்துல சாமியாட ஆளில்லை. அதனால ஆடுதாரு. இந்த கோயில்ல சாமியாடுத கூட்டம் அவ்வளவு இருக்கு. இதுல இவன் வேறயா?' என்றான் செல்வம்.

'ஏங் கொப்பனோளி, நீ வாயை பொத்துலெ' என்ற சுக்கு, வெற்றிலைச் சாறைத் துப்பிவிட்டு, முப்பிடாதியின் பக்கம் திரும்பினான்.

'இங்ஙரு. நீ இப்பம் கைநிமிந்துட்டெ. இதுக்கு முன்னால வேற பாத்துக்கெ. ஒங்கப்பம் இருந்தா நீதான் மொதல்ல நின்னு ஆடியிருப்பே. அந்த கோயில்ல ஒங்களுக்குத்தானடெ மொத உரிமை இருக்கு. சாமியாடுதது சும்மான்னு நினைச்சுராத. அது பரம்பரை பரம்பரையா வார பழக்கம். இன்னைக்கு நீயும் ஆடலன்னா, ஒம்பிள்ளைலும் ஆடாது. பெறவு வரிய மட்டும் கொடுத்துட்டு, எவனோ மாதிரி போவ வேண்டியதாம் நீயும். கோயிலுக்கும் ஒனக்கும் சம்பந்தம் இல்லன்ட்ருவானுவோ' என்ற சுக்கு புளிச் என வெற்றிலைச் சாறைத் துப்பினார்.

கடைக்குள் இருந்த் டிப்டாப், 'எய்யா முப்பு. இந்தாளு பேச்சைக் கேட்டு சாமி, சாத்தான்னு போயிராத. நீ படிச்சாதான் முன்னேற முடியும் பாத்துக்கெ. கஷ்டப்பட்டேன்னா, சாமியும் காப்பாதாது, சாத்தாவும் காப்பாத் தமாட்டாரு' என்றான், ஜாக்கெட் துணியை வெட்டிக்கொண்டே.

முப்பிடாதிக்கு சுக்கு சொல்வதில் ஏதோ இருப்பது போல தோன்றியது. அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

(தொடரும்)

No comments: