Friday, November 7, 2014

கொடை 7

அன்று ஞாயிற்றுக்கிழமை. கழுத்தைச் சாய்த்து சாய்த்து நடந்து கொண் டிருந்த காபி கலரும் மஞ்சள் நிறமும் சேர்ந்த கோழியையும் நடக்க முடியாமல் ஒற்றைக்காலுடன் துள்ளித் துள்ளி சென்ற கருப்புக் கோழி யையும் கறிவைக்க முடிவு செய்திருந்த கணேசன், ஆண்டாளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றார். அது கருப்புக்கோழி. காலில் சண லால் கட்டுப்போடப்பட்டிருந்தது.

ஆண்டாள், அதை முப்பிடாதியிடம் கொடுத்து கழுத்தைத் திருவச் சொன்னாள்.

'எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நீ திருக்குழா' என்றான் அவன்.

'ஒரு கோழிய கொல்ல தெரியல. ஒன்னயல்லாம் வச்சுகிட்டு' என்ற ஆண்டாள், காலில் இருந்த சணலை அவிழ்த்து தரையில் விட்டாள் கோழியை. ஒரு பக்க சிறகை மட்டும் இழுத்து விரித்து சாய்வாக பறக்க முயன்றது அது. முடியவில்லை.

வீட்டுக்குள் இருந்த அரிவாளைக் கொண்டு வந்த ஆண்டாள், கோழி யைப் பிடித்ததும் அது ஏதோ உணர்ந்ததாக தாவ முயன்றது. அரிவாளை மல்லாக்க வைத்துக்கொண்டு நடுப்பகுதியில் கோழியின் கழுத்தை வைத்து மேலிருந்து கீழாக ஒரே இழு. ரத்தம் பீறிட, தொங்கிய க்ழுத்துடன் அவள் கையில் இருந்த கோழி, தரையில் விழுந் து துள்ளித் துள்ளி உருண்டு புரண்டது. சிதறிய ரத்தம் பட்டு கொஞ்சம் கருநிறத்துக்கு மாறியது தரை. சிறிது நேரத்தில அடங்கிப் போனது துடிப்பு. ஆண்டாள் கையில் இருந்த கோழியின் ரத்தத்தைத் தொட்டித் தண்ணீரால் துடைத்துவிட்டு, 'அதை உரிச்சாது தா' என்றாள்.

உரிக்கத் தொடங்கினான் முப்பிடாதி. இரண்டு கால்களின் சதைப்பகுதி யை அறுத்து வெளித்தோலை இழுத்தான். அதன் உள்ளே கையை விட்டு தோல்களை எடுத்துவிட்டு ஓரமாகக் கிடந்த மரத்தூர் ஒன்றில் மல்லாக்கப் போட்டான். வழுவி நழுவி சரிந்து கிடந்தது கோழி.

அதற்குள் இரண்டு காகம் வந்து பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் அமர்ந்துகொண்டது. ஒரு நாயும் வாலை ஆட்டிக்கொண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றது.

கவுச்சு பொங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த மண் சட்டியை எடுத்து அவன் பக்கம் வைத்தாள் ஆண்டாள். 'சின்னதா வெட்டிப் போடு' என்ற வள் பிறகு என்ன நினைத்தாளோ அவன் அருகில் உட்கார்ந்தாள்.

'முதல்ல நெஞ்சுல வெட்டு' என்றவளிடம், 'நேத்து நம்ம மேலத் தெரு சுக்கு சின்னையா இருக்கார்லா, அவரைப் பார்த்தேன்' என்றான் முப்பி டாதி.

'ங் என்ன சொன்னாரு?'

'கோயில்ல சாமியாடுததப் பத்தி சொன்னாரு. எனக்கு சாமி வரலை, ஆடமாட்டேன்னு சொல்லிட்டேன்'

'அதுக்கு?'

'ஒங்க கோயிலு, நீ ஆடலைன்னா, பெறவு ஒண்ணுமில்லாம போயி ரும் பாத்துக்கோ'ன்னாரு'

'அவரு சொன்னது வாஸ்தவம்தான். அது ஒண்ணும் சும்மா யாருக்கொ கோயிலு இல்லை. ஒங்க கோயிலுதான். ஒங்க பெரியப்பன் கசமுத் துக்கு என்ன உரிமை இருக்கோ, அது ஒனக்கும்தான் இருக்கு. சும்மா ன்னு நெனச்சிராத. கோயிலுக்கு அங்க இங்கன்னு கொஞ்சம் சொத்து கெடக்கு. கருத்தப்பிள்ளையூருக்கு போற வழியில நாலு ஏக்கர்ல வயலு ம் ரயில்வே கேட்டுக்கு தெக்க நாலஞ்சு விளையும் கெடக்கு. எவனோ அனுபவிக்க வேண்டியத எவனோ அனுவவிக்காம். அதுக்குத்தான் ஒவ் வொருத்தனும் மனசுக்குள்ள அடி புடின்னு கெடக்கானுவோ. இன்னைக் கு இல்லன்னாலும் என்னைக்குனாலும் நீதான் முன்ன நிக்குத ஆளு. ஒனக்கு இருவத்திரெண்டு வயசு வரும்போது நீயா போயி கோயிலு காரியத்துல முன்னால நிப்பன்னு கல்லிடகுறிச்சு ஜோசியக்காரன் சொல்லிருக்கான். அதுவரைக்கும் நானும் பேசாம இருப்போம்னு இருக்கென். கொஞ்ச நாளு ஒனக்கும் நேரம் சரியில்லலா' என்றாள் ஆண்டாள்.

முப்பிடாதிக்கு ஆர்வம் அதிகமானது. கோயிலின் மீது திடீர்ப் பாசம் வந்தது. கோழியை வெட்டி முடித்துவிட்டு எழுந்தான். கை கால்களை கழுவினான். தலையை சீவி, பவுடர் அடித்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போனான். தரையில் இருந்து கொஞ்சம் உயரத்தில் இருந்து கோயில். மேலே ஏறுவதற்கு கீழ்ப்பக்கம் படிகள் அமைப்பட்டிருந்தன. சுத்தமாக இருந்தது அந்தப் பகுதி.  அதன் திண்டில் பூனா சிவனும், கானா நம்பியும் உட்கார்ந்திருந்தார்கள். இவனைப் பார்த் ததும் அவர்களுக்கு ஆச்சரியம்.

'என்னடே அதிசயமாயிருக்கு'

'சும்மா வந்தேன்' என்ற முப்பிடாதி, செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு பூதத்தார் முன் கைகளைக் குவித்து, கண்களை மூடி சாமி கும்பிட்டான். அவனுக்கு ஏதோ ஒரு சக்தி உடலுக்குள் புகுந்து விட்டது போல தோன் றியது. பிறகு பூடத்தின் முன் விழுந்து வணங்கி எழுந்து நின்று பார்த் தபோது, கோயிலுக்கு பின்பக்கம் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் கட்டமுண்டு மைனி நின்றுகொண்டிருந்தாள். கட்டை குட்டையான அவள் குனிந்து நெல்லையோ, வேறு எதையோ தூத்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். அவளின் தேகம் இவனுக்குள் ஏதோ ஒரு சில் மிஷத்தை செய்துகொண்டிருந்தது. அவள் அங்கிருந்து இவனைப் பார்த் திருக்கலாம். பார்த்தாலும் பார்க்காத மாதிரிதான் அவள் இருப்பாள் என்று அவன் நினைத்த நொடி, நெற்றி வியர்வையைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து நின்று கீழ்ப்பக்கம் பார்த்தாள் மைனி. இவன் இங்கிருந்து ஒரு சிரிப்பு சிரித்தான். வாயெல்லாம் பல்லாக, மனதெல்லாம் வக்ரமாக இருந்ததொரு புன்னகையின் நோக்கத்தை அவள் அறியாதவளல்ல. அவளும் சின்னதாகப் புன்னகைத்துவிட்டு, குனிந்து பெருக்க ஆரம்பித் தாள்.

அவன், ஒரே நொடிக்குள் அவளைப் பற்றிய ஆபாச சிந்தனையில் இருந் துவிட்டு பிறகு கோயிலில் வைத்து இது ஏன் என சுதாரித்து மறக்க முயன்றான். அது திரும்ப திரும்ப மனதுக்குள் வந்து இம்சை செய்தது. பிறகு திரும்பி, அங்கே அமர்ந்திருந்த கானா நம்பியிடம் கேட்டான், 'என்ன இங்ஙன ஒக்காந்துட்டியோ' என்று. கீழ்ப்பக்க மச்சி வீட்டின் நிழல், கோயிலின் முக்கால்வாசியை நிரப்பியிருந்தது. அந்த நிழலுக்குள் இருந்த திண்டில்தான் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

'கோயிலு வேலைய ஆரம்பிக்கணும்லா. இன்னும் ஒரு வாரம்தான கெடக்கு. அதாம், ராசு மாமா வாரம்னாரு. பார்த்துட்டிருக்கோம்' என்றான் கானா நம்பி.

அவன் சொன்ன ராசு மாமா என்கிற ராசய்யா, கட்சி பிரமுகர். கன்னம் வரை மீசையை வளர்த்து திருகிவிட்டிருக்கிற அவருக்கு மெட்ராஸ் வரை செல்வாக்கு உண்டு என்று பேசிக்கொள்வார்கள். ஊரில் பாதி வயல்கள் அவரிடம் தான் இருக்கின்றன. வட்டிக்கு விட்டு சம்பாதி க்கிறவர். வட்டிக்கு கொடுத்தவர்களிடம் கொஞ்சமும் இரக்கம் காட்டா தவர். 'வட்டித் தொழில்ல குட்டியையும் இரக்கத்தையும் பார்த்தா கோ வணத்தோடதான் நான் அலையணும்' என்று அதற்கு விளக்கம் வேறு சொல்வார்.

முப்பிடாதிக்கு அவர் ஒரு வகையில் மாமா முறை என்றாலும் அதிக நெருக்கம் இல்லை. நேரில் பார்த்தால் சும்மா ஒரு சிரிப்பு, பேருக்கு ஒரு பேச்சு. அவ்வளவுதான். கோயில் சொத்து என்று சொல்லப்படும் சில வயல்களை அவர்தான் பார்த்து வந்தார். அதற்காகக் கோயிலுக்கு கொடுக்க வேண்டிய வருடாந்திர கொத்தகை கணக்கு, அவர் கொடுப்ப துதான் என்பதாக இருந்தது. பெரும் வசதி கொண்ட அவரிடம் கேட்க வோ, எதிர்த்துப் பேசவோ தைரியம் கொண்ட ஆட்கள் இல்லாததால் கோயிலுக்கு அவர் கொடுப்பதுதான் சரி என்ற நிலை இருந்தது.

முப்பிடாதி அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ராசு வந்து சேர்ந் தார். 'இவன் ஏன் இங்கெ நிய்க்காம்' என்பது மாதிரிதான் முப்பிடாதியை அவர் பார்த்த பார்வை இருந்தது. முப்பிடாதி லேசாகச் சிரித்தான். பதிலுக்கு அவரும்.

'ஏய் என்னடா ஒக்காந்துட்டியோ. கானா, நீ, ரெண்டு வண்டி மணலை அடிச்சுரு. பூடத்தை பூசுததுக்கு எவ்வளவு சிமெண்ட் ஆவும் பூனா?' என் று கேட்டார் ராசு.

பூனா, 'பத்து மூட்டை வாங்கிக்கிருவோம். தேவைன்னா பாத்துக்கிடுவம் கேட்டேளா?' என்றதும் இரண்டு பேர்களிடமும் ரூபாய்களை கொடுத் தார்.

'இன்னைக்கே வேலைய ஆரம்பிச்சிருங்கெ என்னா, வேற எதுவும்னா எங்கிட்ட கேட்டுக்குங்க' என்று சொல்லிவிட்டு அவர்கள் உட்கார்ந் திருந்த சுவரில் உட்கார்ந்தார். அவரைப் பார்த்ததும் கோயிலில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் உள்ளே வந்தார்கள். பூடத்தை எப்படி பூசலாம் என்று கானாவுக்கும் பூனாவுக்கு ஆளாளுக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்தார்கள். ராசு, 'அதெல்லாம் அவங்களுக்கு தெரியுண் டே' என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

எங்கிருந்தோ ஆடுகளைப் பத்திக்கொண்டும் கருவைக்காய்களையும் பறித்துக்கொண்டும் வந்த கசமுத்து, கோயிலில் முப்பிடாதியைப் பார்த் ததும் ஆச்சரியமானார். அவருக்கு புன்சிரிப்பு. அங்கிருந்த ராசு உள்ளிட் டவர்களைப் பார்த்தாலும் முப்பிடாதியைப் பார்த்ததும்தான் அவருக்கு அதிசயமாக இருந்தது.

'எழுபத்தெட்டு தெடவ கூப்டாலும் வராத பய, அலூசமா கோயிலுக் குள்ள நிய்க்காம்' என்று நினைத்தவர், 'ஏய் இன்னைக்குத்தான் ஒனக்கு வழி தெரிஞ்சுதா?' என்றார் முப்பிடாதியைப் பார்த்து. அவன் அதற்கு ஒரு சிரிப்பை பதிலாக்கிவிட்டு நின்றான். கசமுத்துவுக்கு குழந்தைகள் இல்லை. புருஷன்- பொண்டாட்டிக்குள் வந்த சண்டையின் காரணமாக மாத்ராங்குளத்து பொத்தையருகில் இருக்கும் வயலில் எலி மருந்தை குடித்து நான்கு வருடத்துக்கு முன்னால் செத்துப் போனாள் அவர் மனைவி. அதிலிருந்து தனிக்கட்டையாக வாழ்ந்துவரும் கசமுத்து, முப்பிடாதியைதான் பிள்ளையாகப் பார்த்தார். ஆனால், அவர் சொல் லையோ பேச்சையோ பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டான் முப்பிடாதி.
கோயிலுக்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சங்கத்து இளைஞர் அணியை சேர்ந்த ராமசாமியும் வன்னியநம்பியும் நான்கைந்து பேரோடு கோயிலுக்கு வெளியே செருப்பை கழற்றிப் போடும் சத்தம் கேட்டது.
ராசு, எட்டிப் பார்த்தார்.  ஏதோ பேசிக்கொண்டு அவர்கள் மேலேறி வந் தார்கள். ராசுவை அவர்கள் அங்கு எதிர்பார்க்கவில்லை.

'தனித்தனியா ஒங்களை பாக்கணும்னு நினைச்சோம். எல்லாரும் இங்க யே இருக்கது வசதியா போச்சு' என்றான் வன்னியநம்பி. ராசுவின் சொந் தக்காரன்.

'என்னடெ வெஷயம்?' என்றார் கசமுத்து. கானாவும் பூனாவும் கடைக் குப் போகக் கிளம்பினார்கள். அவர்களை நிற்கச் சொன்ன ராமசாமி. 'இத கேட்டுட்டுப் போய்கிடுங்கெ' என்றான்.

'ஒண்ணுமில்ல மாமா. போன வருஷ கொடையில பிரச்னை. அதுக்கு முன்னால நடந்த கொடையிலயும் பிரச்னை. இப்டியே ஒவ்வொரு வரு ஷமும் பிரச்னையா நடந்துட்டு இருக்கு. ஒங்க குடும்பத்து பிரச்னை வேற இருக்கு. இந்த வருஷமும் ஏதும் நடக்கும்னு நாங்க நினைக் கோம். அப்டி நடந்தா நல்லாருக்காது. அப்பம் இருந்த மாதிரி இப்பம் இல்லெ. வெட்டுக்குத்துன்னு வெவாரம் ஆச்சுன்னா நம்ம தெருவுக்கும் சொந்த பந்தத்துக்குள்ளயும் நல்லாருக்காது'

'அதுக்கு?'

'இந்த வருஷத்துல இருந்து, கொடைய இளைஞர் அணி பாத்துக்கிடும். வரியையும் நாங்களே பிரிச்சு செலவழிச்சுக்கிடுதம்' என்றார்கள் ராமசாமியும் வன்னியநம்பியும். கசமுத்துவுக்கு அது சரியென்று பட்டது. முப்பிடாதியும் இளைஞர் சங்கத்தில் இருப்பதால் அவனுக்கும் அது சரிதான். ஆனால் ராசுவுக்கு மூஞ்சில் அடித்த மாதிரி இருந்தது. இதை எதிர்பார்க்கவில்லை அவர். இன்று கொடையை நடத்துகிறேன் என்பவர் கள் நாளை கணக்கு கேட்பார்கள். கோயில் சொத்து பற்றி பேச ஆரம் பிப்பார்கள். அது கைவிட்டு போனால் கவுரம் போய்விடும் என்ற நினைப்பு அவருக்குள் ஊசிகொண்டு குத்தியது. சிறிது நேரத்தில் ரத்தம் தலைக்கேறி உடல் கொதிக்க ஆரம்பித்தது. ஆனால் அதை உடனே காட்டிவிட முடியாது, கூடாது என நினைத்தவர் ஒன்றும் பேசாமல் இருந்தார்.

பிறகு, 'சர்தாம்பா. எல்லாரும் கைநிமுந்தாச்சு. இனும ஒங்க காலம்தானெ. ஏலெ கானா, கடைக்கு போயி சாமானை வாங்கிட்டு கணக்கை இவ்வோ ரெண்டு பேருட்டயும் கொடுத்திருங்க. ஏம் மருமவனெ, நான் முந்நூறு ரூவா கொடுத்திருக்கேன். பார்த்துக்கிடுங்கெ' என்றார் ராசு. அவர் உள்ளுக்கும் ஓடும் வஞ்சத்தையும் கொதிப்பையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது போல, 'சரிப்பா. இன்னைக்கு சாயங்காலம் கொடை பத்திப் பேச ஊர்க்கூட்டம் போட்டிருக்கு. அதுல ஒரு வார்த்தை பேசிக்கிடுவம். பெறவு, அவங்களா வே ஒரு முடிவ எடுத்துக்கிட்டானுவோன்னு நாலு பேரு பேசுவாம் கேட்டியா?' என்றார் ராசு.

'கிட்டத்தட்ட எல்லாருக்கும் சொல்லியாச்சு' என்ற ராமசாமி, 'இருந் தாலும் நீங்க சொல்லுதது சரிதாம்' என்றான்.

தொடரும்

No comments: