Monday, February 4, 2013

கனவுகளின் ரசிகன்

மாடசாமி அண்ணனின் தோட்டத்துக்குள் இருக்கும் குச்சில்தான், எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்துக்கான இடமாக இருந்தது. காளை மற்றும் பசுமாடுகளின் மணிகள், வில் வண்டிக்கான தார்க்குச்சிகள், அதில் அமர்வதற்காகச் செய்யப்பட்ட இலவம்பஞ்சு தலையணைகள், ஏர்க்கலப்பை, மரமடிக்கும் பலகைகள், கயிறுகள், மாட்டின் மணிகள் உள்ளிட்ட பொருட்கள் அடைந்து கிடக்கும் இடத்தில், ஓர் ஓரமாக உடைந்த மேஜை. அருகில் சிறு சேர். நான்கைந்து முக்காலிகள். மேஜையின் பின்பக்கச் சுவரில் பலவித போஸ்களில் எம்.ஜி.ஆர் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். ரசிகர் மன்றத்துக்கான அடையாளமாக இதுவே போதுமானதாக இருந்தது.


மன்றதுக்கு வெளியே எம்.ஜி.ஆர் மாதிரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, தண்டால் எடுக்க இரண்டு ஆட்டு உரல்களும் கர்லா கட்டைக்காக கருவை மர தூர் ஒன்றும் கிடக்கும். எப்போதும் எம்.ஜி.ஆர் பாடலை டேப் ரெக்கார்டரில் கேட்பது, அவர் மாதிரியே நடப்பது மற்றும் பேசுவதுதான் மாடசாமி அண்ணனின் வேலை. அந்த இருட்டு குச்சிலுக்குள் எப்போதும் கருப்பு கண்ணாடியை அணிந்துகொண்டு அண்ணன் பண்ணுகிற அழிச்சாட்டியம்தான் உறுத்தலாக இருக்கும்.

‘ஏ கூறுகெட்டவன. வண்டி மை நெறத்துல இருந்துட்டு கண்ணாடி வேறயா, கழத்துல? எவனும் கல்ல கொண்டி எறிஞ்சிர போறான்'என்று மன்றத்து ஆட்கள் முன்பு, அண்ணனின் பாட்டி கேவலப்படுத்துவது அவனுக்குத் தாங்க முடியாத பிரச்னை.

‘மொதல்ல இவ கழுத்த நெறிக்கணும்'என்று முணு முணுத்துவிட்டு டேப்பில் சத்தத்தை கூடுதலாக வைப்பான். அண்ணன்தான் மன்றத் தலைவர். செயலாளர் எனச் சொல்லப்பட்ட முருகன், வயலில் ஏர்க்கலப்பையை பிடித்துக்கொண்டு தனது கொடுமையான குரலில், ‘விவசாயி... விவசாயி'என்று இழுத்து பாடும்போது, பக்கத்து வயலில் நிற்பவர்கள், ‘‘எய்யா ரொம்ப முக்காத. கழுத கிழுத வந்துரப்போது'' என்பார்கள். இதையெல்லாம் கண்டுகொள்கிற ஆளில்லை அவன். தனது பாடலில் அவன் உறுதியாக இருப்பான். பொருளாளரான சைக்கிள் கடை தீ என்கிற தீனதயாளன், நறுக் மீசை வைத்துக் கொண்டு கைகளில் கட்ஸ் தெரிகிற மாதிரி சட்டையை டைட்டாகப் போட்டுக்கொண்டு அலைபவன். இவர்கள் மூவரும் பத்து பதினோரு மணிக்கு மேல் மன்றத்துக்கு வருவார்கள்.

‘‘ஆழ்வாரிச்சி தியேட்டர்ல வேலை பாக்காம்லா சங்கரு. அடுத்த வாரம், ‘உரிமைக்குரல்'போடுதாம்னான். என்ன செய்யலாம்?'' என்று விவாதம் நடக்கும். அக்கம் பக்கத்து ஊர் திரையரங்குகள், அரசு குறிப்பிடும் நடமாடும் திரையரங்கு வகையை சேர்ந்தவை. அதாவது டூரிங் தியேட்டர் என்பதால், புதிதாக ரிலீஸ் ஆகிற படங்கள் இங்கு வர வருடங்கள் ஆகும். அதனால் இருக்கவே இருக்கிறது பழைய படங்கள். போனமுறை கோட்டைவிளைபட்டி பாபி தியேட்டரில், ‘ஆயிரத்தில் ஒருவன்'போட்டபோது, முதல் நாள் எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்தார்கள். இதில் மாடசாமி அண்ணன், பெண்கள் கவுன்டருக்கு அருகில் நின்று சாக்லெட் கொடுத்து புண்ணியம் தேடி கொண்டான். சாக்லெட்டுக்கான காசை டீக்கடை பாலு கொடுத்தார். இவர்களை விட வயதில் சீனியரான பாலுவுக்கு இப்படி உதவி செய்வதில் அலாதி பிரியம். அதனால் அவருக்கு மன்றத்தில் கவுரவ தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

‘உரிமைக்குரலு’க்கான விவாதத்தில் ‘தீ’தான் இப்படியொரு ஐடியாவை கொடுத்தான்.

‘‘படத்துல மாங்கா திருடி திங்கிற பெண்ணே மாசம் எத்தனையோ’ன்னு பாட்டு வருது. அதனால...''

‘‘மாங்கா கொடுக்கலாங்கியோ?''

‘‘மாம்பழம்?''

நல்ல ஐடியாவாக இது ஏற்கப்பட்டு மாம்பழத்துக்கு பட்ஜெட் அதிகம் என்பதால் ஊரில் உள்ள கடைகளில் காசு வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. டீக்கடை பாலு இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். நூற்றி ஐம்பது சிறு மாம்பழங்கள் பொட்டல்புதூர் மார்க்கெட்டில் வாங்கப்பட்டன. தியேட்டருக்கு கொண்டு போவதற்குள் ஆளுக்கொரு மாம்பழத்தை ருசி பார்த்துவிட்டார்கள். அங்கு கூட்டத்தை பார்த்ததும் கெதக் என்றானது மாடசாமி அண்ணனுக்கு. நிற்க இடமில்லாமல் அலைமோதியது கூட்டம்.

‘‘இந்த கூட்டத்துக்கு இது எப்டில பத்தும்?'' என்றான் முருகன். ஆபரேட்டர் ரூமில் இருந்து வந்த சங்கர், மாடசாமி அண்ணனிடம் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டு நான்கு மாம்பழங்களை அள்ளிக்கொண்டு போனான். பிறகு, பெண்கள் கவுன்டரில் மட்டும் மாம்பழம் கொடுப்பது என்றும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கொடுக்கத் தொடங்கினான்.

காலையில் தோப்பில் விழுந்த கிடந்த மட்டைகளை அள்ளிக்கொண்டு வந்து தோட்டத்தில் போட்டுவிட்டு, மன்றத்தில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணனை, அவனது பாட்டி அழைத்தாள்.

‘‘ஏலெ. நம்ம சொள்ளமுத்து மவளுவோ, மீனா பிள்ளெயும் செல்லம்மாவும் சினிமாவுக்கு வந்தாவோளாம். நீ எல்லாத்துக்கும் மாம்பழத்த கொடுத்துட்டு இவ்வோளுக்கு கொடுக்கிலியாமே? காலேல படித்தொறல வச்சு, என்னா பேச்சு பேசுது, அந்த பிள்ளெ'' என்று அவள் சொன்னதும் இது, புது வில்லங்கமாக இருக்கிறதென்று நினைத்தான்.

‘‘நாங்க என்ன ஒண்ணுமில்லாமயா இருக்கோம். எங்கள பாத்து எளக்காரமா ஒம் பேரனுக்குன்னு சண்டைக்குலா வருது. எல்லாத்துக்கும் கொடுத்தவன் அவ்வோளுக்கு கொடுத்தாதான் என்ன?'' என்றவளிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது எனத் திணறிக் கொண்டிருந்தான். ரசிகர் மன்ற வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்றான் தீ. செயலாளரான முருகனுக்கு சொல்லமுத்து வீடு சொந்தம் என்பதால், மாடசாமியுடன் சேரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை மீறியதுதானே நட்பு.

அவ்வப்போது இது போன்ற பிரச்னைகள் வந்துகொண்டிருக்க, இன்னொரு பிரச்னையும் அவர்களுக்கு ஊரில் இருந்தது. அது சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் ‘சிவாஜி'வேம்பு. இவர்களை கண்டாலே முறைத்துக்கொண்டு அலைகிறவன். பேச்சுவார்த்தை கூட, ஏடா கூடமாகத்தான் இருக்கும். மாடசாமி அண்ட் கோ மாம்பழம் கொடுத்ததற்கு அடுத்த நான்காவது நாள், ‘வசந்த மாளிகை'போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. உள்ளூர் தியேட்டர் என்பதால் பிரச்னை இல்லை. வேம்புவுக்கு, மாடசாமி அண்ணன் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் வீடு. அங்கு மன்றம் என்ற ஒன்று இல்லையென்றாலும் அவன் வீட்டின் பின்புற சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் சிவாஜி போஸ்டர், பெரிதாக ஒட்டப்பட்டிருந்தது. சிவாஜி ரசிகர்களின் மீட்டிங் பிளேசாக புளியரமரங்கள் அடர்ந்திருக்கும் வடக்குத் தெரு இருந்தது.

‘‘ஏலெ. அவனுவோ, மாம்பழம் கொடுத்திருக்கானுவோ. நாம அதை விட புதுசா கொடுக்கணும்'' என்றபடியே கூட்டம் ஆரம்பித்தது. வேம்பு, சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு அதன் கேரியரில் உட்கார்ந்திருந்தான். எதிரில் இருந்த கட்டமண் சுவரில் ரசிகர் மன்ற நிர்வாகிகளான சுடலை, வைத்தி, சைலு, கல்யாணி ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள்.

‘‘படத்துல தலைவர் ஸ்டைலா சரக்கு அடிப்பாரு'' என்று சொல்லிவிட்டு சுடலை கேப் விட்டதும் வேம்பு அவன் முதுகில் மிதித்து ‘‘உருப்டியா எதாவது சொல்லு'' என்றான். பிறகு சிறிய வகை கடலை மிட்டாய் பாக்கெட் கொடுப்பது என்று முடிவானது. மாம்பழத்துக்கு கடலை மிட்டாய் ஈடானது அல்ல என்றாலும் பொருளாதார பிரச்னை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் அவர்கள் மாம்பழத்தை எல்லோருக்கும் கொடுக்காதது குறையாகச் சொல்லப்பட்டு வந்தது. இவர்கள், எல்லோருக்கும் கொடுப்பது என்ற முடிவோடு இருநூற்றைம்பது சிறிய கடலை மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கினார்கள். இத்தகவல் முதல் நாளே தியேட்டர் ஓனரான நைனாவுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது.

சிவாஜி ஸ்டைலில் வெள்ளை நிறச்சட்டையும் பேண்டும் அணிந்து வேம்பு நின்றுகொண்டிருக்க, விளக்கெண்ணெய் தேய்த்து பணிய வைக்கப்பட்ட தலைமுடி மட்டும் சப்பென்று அமுங்கி கிடந்தது. அதை முன்பக்கம் இழுத்து சுருட்டி விட அவன் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ‘‘அப்டியே சிவாஜி மாரியே இருக்கல'' என்று சைலு உசுப்பேற்றி விட, அதை நிஜமென நம்பிக்கொண்டு அடிக்கடி பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு ஆளில்லாத ஏரியாவில் அங்கும் இங்கும் தலையை ஸ்டைலாகத் திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான். ஆறரை மணி காட்சிக்கு மூன்று மணிக்கே தியேட்டருக்கு வந்திருந்தார்கள். தியேட்டர் ஓனரான நைனாவின் வீடு எதிரில் மாந்தோப்புக்குள் இருந்தது. அவர் தற்செயலாக இவர்களைப் பார்த்துவிட்டு, ‘‘என்ன வேம்பு, அதுக்குள்ள வந்துட்டெ. கல்லமுட்டாய கொண்டாந்தாச்சா?'' என்று கரிசனையாகக் கேட்டார். இவர்கள் ஆமாம் என்றதும் இரண்டு பாக்கெட்டை எடுத்துக்கொண்டு போனார்.

ஐந்தே முக்கால், ஆறு மணிக்குதான் ஒவ்வொருவராக வந்தார்கள். அன்று திருமண நாள் என்பதால் பக்கத்து ஊரான தாட்டாம்பட்டியில் கல்யாண வீட்டுக்கு வந்திருந்த கோஷ்டி அப்படியே ஆறு மாட்டு வண்டிகளில் வந்து இறங்கினார்கள். வந்தவர்கள் எல்லோரும் ‘சிவாஜி'வேம்புவை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடி, கடலைமிட்டாய் கட்டுபடியாகாது என்ற நிலை ஏற்பட்டது. இவர்களும் பெண்களுக்கே கொடுக்க நினைத்து கொடுத்தார்கள். வழக்கம் போல் குறைந்துவிட்டது. மறுநாள் பிரச்னை.

‘‘வெளியூர்க்கார பொம்பளை பிள்ளைலுக்கு கொடுக்காம் ஒங்க அண்ணன். எங்கள பாத்ததும் பேசாம போயிட்டாம். நாங்க என்ன கல்லமுட்டாயிக்கா அலையுதோம்'' என்று மேலத்தெரு தோழி சொன்னதாக, ‘சிவாஜி' வேம்புவின் தங்கச்சி புகார் வாசித்தாள். இப்புகாரை அடுத்து இனி இலவசங்களை கைவிட்டுவிட்டு, ஸ்லைடுகளில் ரசிக மகாஜனங்களை வரவேற்றால் போதுமானது என்று முடிவு செய்யப்பட்டது. பொட்டல்புதூரில் ஸ்லைடு எழுதும் பரணியிடம் சொன்னதும், ‘‘மன்றத்துக்கு என்ன பேர் வச்சிருக்கியோ? ‘வசந்த மாளிகை'சிவாஜி ரசிகர் மன்றம்னு போடவா, ‘புதிய பறவை'ரசிகர் மன்றம்னு எழுதவா?'' என்று கேட்டு குழப்பினான். இப்படியொரு யோசனை நமக்கு வரவில்லையே என்று நினைத்த வேம்பு, ‘வசந்த மாளிகை’க்கு ஓ.கே.சொன்னான்.

இதே போல மாடசாமி அண்ணனும் ‘உலகம் சுற்றும் வாலிபன்'எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்ற ஸ்லைடை ரெடி பண்ணினான். சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற இலவசப் போருக்குப் பிறகு ஸ்லைட் போர் ஆரம்பமானது உள்ளூர் மற்றும் அக்கம் பக்கத் தியேட்டர்களில். ஆழ்வார்க்குறிச்சியில் ‘அன்பே வா'படமும் உள்ளூரில் ‘பட்டிக்காடா பட்டணமா'படமும் வெளியான நேரத்தில் இரண்டு கோஷ்டிக்கும் சண்டை வந்து சேர்ந்தது. ஊனி கம்பும், உருட்டு கட்டையுமாக வந்த சண்டையை தீர்க்கப் பெரும்பாடாகிவிட்டது, ஜெய்சங்கர் ரசிகர் மன்றத்துக்காரர்களுக்கு.

இச்சண்டைக்குப் பிறகு வேம்புவும் மாடசாமி அண்ணனும் பெரும்பகையாளி ஆனார்கள். எதிரெதிர் சந்தித்துக் கொண்டால் கூட முகத்தை திருப்பிக்கொண்டு நடக்கலானார்கள். ‘‘மாடசாமியும் வேம்பும் மோறய தூக்குத மாரிலா தூக்குதானுவோ'' என்று வேறோர் சண்டைக்கு உவமை பொருளானார்கள். பயல்களுக்குள் மாடசாமி கோஷ்டி என்றும் வேம்பு கோஷ்டி என்றும் புது கோஷ்டி உருவாகி இருந்தது.

இன்று அப்படியில்லை. கோயில் கொடை ஒன்றுக்காக ஊருக்குச் சென்றிருந்தபோது, மாடசாமி அண்ணனும் வேம்புவும் ஆலமரத்திண்டில் அருகருகில் உட்கார்ந்துகொண்டு பாசமாகப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ‘‘எப்பவோ சொந்தக்காரனுவோ ஆயிட்டானுவளெ'' என்றான் நண்பன். அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பேசிக்கொண்டிருப்பது போலவே இருந்தது.

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

இயல்பான நடையில் அருமையான சிறுகதை! வாழ்த்துக்கள்!

Robert said...

மனக்காயங்கள், உறவு,பகை என விலக்கின்றி மறக்க/மன்னிக்க வைப்பதில் காலம் ஒரு அற்புத விளக்கு. அருமை. (அந்த உடற்பயிற்சிக் கூடம், கொஞ்சம் போல கோயில் வடிவேலு நினைவுக்கு வந்தார் :-))

P.PAUL VANNAN said...

nalla irukku brother , unga vayasu enna ?

unga sitekku varapo , riyadh to puliyur,puliyur to spkc valithadankal , nera oru oosi travel.

patichu mudicha appuram than , riyadh la irrukura feelings varum .

well done.

valka valamudan......