Sunday, January 27, 2013

கண்களில் துடிக்கும் பேரழகு

சத்தங்கள் படபடப்பூட்டுபவை, பயமூட்டுபவை, உள்ளுக்குள் இறங்கி உயிரை அசைத்துவிட்டு போகும் தன்மை கொண்டவை, சிலிர்ப்பூட்டுவை, ஜில்லிப்பாக்குபவை... இவற்றைத் தாண்டி காமம் தருவதாகவும் இருப்பவை. அப்படியொரு சிரிப்பு சத்தம் வரும் வீடாகத்தான் அந்த வீட்டை சொல்வார்கள். அந்த வீடு ஊரின் நடுவில்தான் இருந்தது. சாலை வழியே சென்றால், கருவை முட்கள் படர்ந்திருக்கிற தோட்டத்துக்கு இடது புரத்தில் சின்னதாக ஒரு ஒற்றயடி பாதை. அதில் நடந்தால் காம்பவுண்ட் சுவர் போடப்பட்ட மச்சி வீடு. அந்த வீட்டிலிருந்து பெரும்பாலும் அந்த சிரிப்பு சத்தம் வரும். கிளர்ச்சியூட்டுகிற, உடலின் வழி காமத்தை விதைக்கிற சிரிப்பு சத்தமாக அது இருக்கும். பக்கத்து ஊரில் செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு வரும் நேரங்களில் கூட அந்த சிரிப்பு சத்தம் கேட்பதற்காகவே அங்கு இறங்கி நடப்பார்கள்.


அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு என்ன பெயர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், சில்க்கு வீடென்றால் யாராலும் அடையாளம் சொல்கிற வீடாக அது இருந்தது. அவளது பெயர் என்னவாக இருக்கும் என்பது பற்றி யாரும் மெனக்கெடவில்லை. அது எதுவாக இருந்தால் என்ன, சிலுக்கு என்ற அடையாளப் பெயர் அவளுக்கு பொருத்தமாக இருப்பதாகவே சொன்னார்கள். அவளும் அந்தப் பெயரை விரும்புகிறவளாக இருந்தாள். அவள், வேறு ஏதோ ஊரில் இருந்து இங்கு வீடு வாங்கி குடியேறியவள். எந்த ஊர்க்காரி என்பது பற்றியும் ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். அவளுக்கு கணவனும் ஒரு மகனும் இருந்தார்கள். கணவனானவன் எங்கோ வெளிமாநிலம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து செல்பவனாகவும் இருந்தான். அது அவளது உண்மையான கணவனா என்பது பற்றியும் திண்ணைகளில் விவாதம் நடந்து வந்தது. ஆனால் அவளது மகன் கணவனின் சாயலையே கொண்டிருந்தான். அவளது தொழில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததுதான். அதற்காக ஒதுக்கி வைக்க முடியுமா என்ன?

‘என்ன இப்டி சொல்லிட்டெ. இப்டி இருக்கவா வீட்டு பக்கத்துல, சடங்கான பிள்ளைலயும் பொண்டாட்டியையும் வச்சுக்கிட்டு காலங்கழிக்க முடியுமாவே? இதுக்கு ஒரு முடிவெடுக்கணும், ஆமா' என்று அவள் குடியிருந்த தெருக்காரர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால், பக்கத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் அவள் ஒரு நாள் வந்திறங்கிய போது மூச்சடைத்துப் போனது தெருக்காரர்களுக்கு. வீட்டுக்குள் நின்று ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தார்கள். அந்த இன்ஸ்பெக்டர், ‘ஏதும் பிரச்னைன்னா சொல்லு, வரட்டா' என்று தெருவில் நின்று சத்தமாகச் சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறிப் போனார். ‘‘சரிங்கெ' என்ற சிலுக்கு வீட்டுக்குள் போகும்போது சிரித்த சிரிப்புப் பற்றி தெருக்காரப் பெண்கள் மெதுவாகப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். இதே போல சில அரசு அதிகாரிகளின் அம்பாசிடர் கார்களும் தெருவுக்குள் அவ்வப்போது வந்து செல்கிற சம்பவத்துக்குப் பிறகு அவள் பற்றி பேச வேண்டுமென்றால் ரகசியமாக மெதுவாகவே பேசத்தொடங்கி இருந்தார்கள்.

உயரமாக, இளம் மஞ்சள் நிறமாக, மூக்கும் முழியுமாக, பேரழகைக் கொண்டவளான அவளுக்கு வெளியூர்க்காரர்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக இருந்தனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர்க்காரர்களும் வாடிக்கையாளர் ஆனார்கள். லாரி டிரைவரான சுப்பையாதான் ஊருக்குத் தெரிந்து அவள் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று வருபவனாக இருந்தான். அவளுடன் அதிக நட்புக் கொண்டவனாகவும் இருந்தான். இவனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் சில இளவட்டங்கள் அவள் வீட்டுக்குச் சென்று வருவதை கருவை முட்களின் வழியாகப் பார்க்க முடியும். பெரிய மனிதர்கள் என்கிற பேராசைக் கொண்டவர்களில் இருந்து ஊரில் மதிக்கப்படுகிறவர்கள் வரை, அவள் வீட்டுக்கு ரகசியமாக சென்று வந்தனர். இதற்காக அவளுக்கு கொடுக்கப்படும் பணம் எவ்வளவாக இருக்கும் என்பது பற்றி தெப்பக்குள திண்டுகளில் பேச்சு நடக்கும்.

இவ்வளவு பேரழகு கொண்ட சில்க், ஏன், எப்படி இந்த தொழிலுக்கு வந்தாள் என்கிற கேள்வி, மாடுமேய்க்கும் இடத்தில் அடிபடும். அவளிடம் கேட்டால், ஏதாவதொரு துக்கக் கதை சொல்பவளாக இருப்பாள். அவளின் கதை என்னவாக இருக்கும் என்கிற கற்பனைகள் பறக்கும். ஏற்கனவே சினிமா படங்கள் காட்டியிருக்கிற பாலியல் தொழிலாளிகள், கட்டாயத்தின் பேரிலேயே இத்தொழிலுக்கு வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். இவளும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற நினைப்பும் வரும்.

இது ஒருபக்கம் இருந்தாலும் அவளுக்கு திடீரென்று நல்ல பெயர் ஏற்பட்டு வந்தது. ஊரில் தபால் ஆபீஸை அடுத்து அவள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. ஆத்திர அவசரத்துக்கு அவள் வீட்டில் போன் பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. வெளிமாநிலங்களில் வசிக்கிற உள்ளூர்க்காரர்களுக்கு அவசரத் தேவைக்கு அவள் வீட்டு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. இதை விருப்பமுடனேயே சில்க் செய்துவந்தாள்.

யாருக்கு கஷ்டம் என்றாலும் அவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுப்பதையும் கடமையாகச் செய்தாள். இப்படி கொடுப்பதன் மூலம் ஊரின் மதிப்பை பெற முடியும் என்று நினைத்தாளோ என்னவோ? இந்த கடன் விஷயங்களுக்காக அவளது உறவுக்காரன் எனச் சொல்லப்பட்டவன் இருந்தான். அவனை, வக்கெட்டை என்றுதான் அழைப்பார்கள். அப்படிச் சொல்லும்போது அவனுக்கு கோபம் வருவது போல காட்டிக் கொள்வான். அவளிடம் பழக வேண்டும் என்பதற்காகவே வக்கெட்டையிடம் சிலர் நட்பு வைத்திருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

‘போன வாரம் கோயில் கொடை. ஊர்க் கூட்டத்துல தலைகட்டுக்கு எரநூறுன்னு வரி வச்சுடானுவோ. வரிக்குன்னு வச்சிருந்த ரூவாயை தங்கச்சி மவ சடங்குக்கு செலவழிச்சாச்சு. திடீர்னு ரூவாய்க்கு எங்கெ போவ? எவண்டயாவது கேட்டாலும் தருவானுவளா, சொல்லு? வீட்டுல வெறவு வெட்டுததுக்கு ஒரு நாளு கூப்டுச்சு அந்த பிள்ளெ. கள்ளங்கபடம் இல்லாம பேசுச்சு. அந்த பழக்கத்துல அவ வீட்டுக்குப் போயிட்டென். ‘கொஞ்சம் கடனா ரூவா கெடெக்குமா தாயி’ன்னு வெக்கத்த விட்டு, கேட்டென். அசலூர்க்கார பிள்ளைட்ட போயி கடன் கேக்கோமேன்னு கேவலமாதான் இருந்துச்சு. வேற என்ன செய்ய சொல்லுதெ? மறுபேச்சு பேசலயே. வீட்டுக்குள்ள போயி, பெட்டியை தெறந்து ரூவாயோட வந்துட்டா மவராசி. தை மாசம் தாரன்னுட்டு வாங்கிட்டு வந்தென்? இல்லைன்னா, வரி கொடுக்காம ஊர்ல கேவலலா பட்டிருப்பென்? அவ என்ன தொழிலும் பண்ணிட்டும் போட்டுண்டா. அந்த மனசு ஒனக்கு வருமாடே? சொந்தக்கார பயலுவோ கடன் கொடுப்பானுவளாடா? மீன் வித்த துட்டு என்ன, நாறாவால போது?' என்று விறகுக்குப் போகும் முத்தையா, ஊரில் அவள் பெருமைப் பேச ஆரம்பித்துவிட்டார். இதைத் தொடர்ந்து பலர் அவளிடம் கடன் கேட்டு நிற்கத் தொடங்கி இருந்தனர்.

இந்த கொடுக்கும் குணம் காரணமாக அவளிடம் பேசவே தயங்கும் பெண்கள் அவளின் தோழிகளாகி இருந்தனர்ர். அவள் மகனுக்கு தெருவில் சேக்காளிகள் கிடைத்தார்கள். இருந்தாலும் அனாவசியமாக அவள் ஊருக்குள் அலைவதில்லை. இரண்டு வேளை மட்டுமே அவள் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவாள். ஒன்று அதிகாலையில் வாய்க்காலில் குளிப்பதற்கு. மற்றொரு முறை பக்கத்து டவுணில் படிக்கிற மகன் பஸ்சில் இருந்து இறங்கியதும் அழைத்துப் போவதற்கு. இந்நேரங்களில் அவளைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் கூடும். காலையில் இவள் குளிக்கும் இடத்துக்கு கொஞ்சம் மேற்கு பக்கமாக இருக்கிற தெப்பக்குள திண்டில் ஒரு கோஷ்டி அமர்ந்திருக்கும். மாலையில் சுடலை மாட சுவாமி கோயில் சுவர். இவர்களுக்கான பிரச்னை, ‘‘இவ்வளவு பேரழகு கொண்டவள், தங்களை ஏற்றுக்கொள்வாளா?' என்பதுதான்.

மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் கூனையன், அவள் வீட்டுக்குப் போய்விட்டு வந்ததை பிள்ளையார் கோவிலுக்குப் பின் பக்கம் அமர்ந்து பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான். ‘‘ஆயிரஞ் சொல்லுலெ. அவா பேசுனாலெ போதும். என்னா கொரலுங்கெ. கேட்டுட்டே இருக்லாம் போல்ருக்கும்' என்று ஆரம்பித்து அவன் விவரிக்கும்போது அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்களுக்கு காமம் தலைக்கேறும். இவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காகவே பொய்யாகவும் கற்பனையாகவும் சில விஷயங்களை அவன் சொல்வான். இம்மாதிரியான கதைகள் அவள் பற்றிய ஏக்கத்தை ஊருக்குள் அதிகமாக்கி இருந்தது.

புதிகாக கல்யாணம் ஆன தங்கசாமியை திருட்டு வழக்கு ஒன்றில் போலீஸ் பிடித்துச் சென்றபோதுதான் சில்கின் அதிகாரத்தை ஊர் அறிந்தது. தங்கசாமி பழைய குற்றவாளி. கடந்த சில வருடங்களாக சித்தாள் வேலைக்குப் போய்விட்டு திருந்தி வாழ்கிறவன். ஆழ்வார்க்குறிச்சியில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றில் இவனை பிடித்துப் போனது போலீஸ். அவனை விட அவனது புது மனைவிதான் துடித்துப்போனாள். அவன், திருடவில்லை என்று மறுத்தும், ‘ஸ்டேஷன்ல ஐயாவ பாத்துட்டு வந்துரு' என்று அழைத்துப் போனார்கள். தெருவே பரபரப்பானது. கல்யாணம் ஆன நான்கு நாட்களிலேயே இப்படி பிடித்துக்கொண்டு போனது தெருக்காரர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘‘பாளையங்கோட்டைக்குலா கொண்டு போயிருவானுவோ' என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சில்க்கிடம் இந்த விஷயத்தை யாரோ சொன்னார்கள். அவள், தங்கசாமி வீட்டுக்குப் போனாள். ‘ஒண்ணும் பிரச்னை இல்லெ. ஒன் வீட்டுக்காரன் வந்துருவான். நா பாத்துக்கிடுதென்' என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாள். அவள் சொன்னதை முதலில் யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் சொன்னது போலவே, ராத்திரி கடைசி பஸ்சில் வந்து இறங்கியிருந்தான் தங்கசாமி. காலையில் எழுந்ததும் பொண்டாட்டியுடன் அவள் வீட்டுக்குப் போனான். காலில் விழப்போனவனிடம், ‘ச்சே என்ன வேலை பார்க்க?' என்று நகர்ந்தாள். அவன் திடீரென தனது சட்டையை கழற்றி முதுகைக் காண்பித்தான். பிரம்பால் அடித்த அடி, தடம் போல் பதிந்திருந்தது. ‘‘போலீஸ்காரங்க அடிச்சே கொன்னுருப்பானுவோ. நீ மட்டும் சொல்லலைன்னா..?' என்று அழ ஆரம்பித்திருந்தான். அவனது மனைவியும் சேலை முந்தானையை வாயில் வைத்துக்கொண்டு கவலையாக நின்றாள். ‘‘அழாத. ஒண்ணும் பிரச்னையில்லை. நீ வீட்டுக்குப் போ' என்ற சில்க் இருவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள். காமம் பெருகும் இடத்தில் பாசம் பெருகிக்கொண்டிருந்தது. அவன் போகும்போது, ‘‘வாரென்க்கா' என்றான். அந்த ‘அக்கா’வை ரசித்தவளாக அவள் இருந்தாள்.

வயதாக ஆக அவளின் இளமை கூடிக்கொண்டே இருந்தது. ‘அணைய போற விளக்கு பளிச்சுனு எரியற’ மாதிரி ஒரு சித்திரையில் திடீரென இறந்து போனாள் சில்க். அவளது மரணம் யாராலும் நம்ப முடியாததாக இருந்தது. மாரடைப்பால் மரணம் என்றார்கள். ‘‘நேத்து சாய்ந்தரம் ஏங்கிட்டெ பேசிட்டுதான் படுக்கப் போனா. அதுக்குள்ளெ இப்டி போயிட்டாளெ?' என்று ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்பாச்சி. அவள் உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன் எல்லாரும் கூடியிருந்தார்கள். யாரும் அழவில்லை. கடன் கொடுக்கவும் போலீஸ் பிரச்னை என்றால் சொல்லி விடுவிக்கவும் இனி யாருமற்ற ஊரில், எப்படி வாழ்வது என்கிற யோசனை எல்லோர் முகங்களிலும் தெரிந்துகொண்டிருந்தது. வேலைக்குப் போன தங்கசாமி விஷயம் கேள்விபட்டு பாதியில் திரும்பினான். வேக வேகமாக வந்தவன் அவள் உடலைப் பார்த்தான். பெரும் உணர்ச்சியில் சத்தமாக அழத் தொடங்கினான். எல்லாரும் அவனையே பார்த்தார்கள்.
அந்த அழுகை சத்தம் அவனை பயமூட்டிக்கொண்டே இருந்தது.

4 comments:

Philosophy Prabhakaran said...

அருமையாக இருந்தது...

ஆடுமாடு said...

Thanks prabhakaran.

துபாய் ராஜா said...

அருமை அண்ணாச்சி...

Saravana Boobathy said...

கல்லுக்குள் ஈரம் ...