Sunday, November 25, 2012

தெய்வங்கள் பேசும் இடம்

சக்தியின் அருள் நேரடியாக இறங்கி, குடியிருப்பவளாகக் கருதப்படும் பார்வதியம்மாளை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் லேசில் பிடிக்க முடியாது. மஞ்சள் தேய்த்த முகத்தில் நெற்றி நிறைய குங்குமத்தோடும் கழுத்து இழுக்குமளவு மாலைகளோடும் தெத்துப்பல் தெரிய சிரிக்கிற அவள், வீட்டுக்கு எதிரில் அம்மனுக்கு கோவில் வைத்திருக்கிறாள். வேலியாக சூழ்ந்திருக்கிற கருவேல மரங்களுக்கு மத்தியில் வல, இடப் பக்கங்களில் வேப்ப மரங்கள் வளர்ந்திருக்க, நடுவில் செம்மண் சுவரெழுப்பி, கூரைக்குள் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் ஆக்ரோஷ அம்மன்.


மற்றக் கிழமைகளை விட்டுவிட்டு செவ்வாய், வெள்ளி மட்டும் அம்மன்களுக்கு உகந்த தினமானது எப்படி என்கிற கேள்விக்கு, அவளிடமிருந்து கண்கள் சிவக்க கோபம் மட்டுமே பதிலாக வரும். அந்த கோபம், ‘அம்மனையே கேள்வி கேட்கியா நீ?' என்பதாகவோ, ‘ஆத்தா கோவத்துக்கு ஆளாவாதெ' என்பதாகவோ இருக்கலாம். அவரவர் விதிப்படி அவரவர் சாபம். பார்வதியம்மாளுக்கு அம்மன் பற்றி நினைப்பது, அம்மன் பற்றி பேசுவது, கனவில் அம்மன் சொன்ன விஷயங்களை கடைபிடிப்பது மட்டுமே வாழ்க்கை. இதற்கிடையே சோறு பொங்கி, உண்டு உறங்குவதும் துணையாக இருக்கிறது.

‘பிள்ளைக்கு வயித்துவலி. டாக்டரு நாலு ஊசிப் போட்டும் கேக்கலெ. அந்தானிக்கு நம்ம சொள்ளமுத்தண்ணே பொண்டாட்டிதான், இந்த கோயிலுக்கு போவ சொன்னா. சரின்னு போனோம். கொஞ்சோல திருநாறை தண்ணில போட்டு குடிக்க கொடுத்தா, குறிகார பொம்பளெ. மறுநாள்லயே சரியாயிட்டு தாயீ'

‘சடங்கான பிள்ளைலுவோ, கருக்கல்ல அங்க இங்க அலைய கூடாதுன்னு சொன்னா, யாரு கேக்கா? இந்த மூதி எங்க போயி பயந்துட்டு வந்ததோ தெரியலெ. மூணு நாளா, கோட்டி புடிச்ச மாதிரி உம்முனு இருந்தா. சீதை சித்திதான், இந்த கோயிலுக்கு கூட்டிட்டு வந்தா பாத்துக்கோ. குறி சொல்லுத பொம்பளெ, இவ மூஞ்சியில தண்ணியெ அடிச்சதும் உடனே சரியா போச்சு, பாரேன்'

'ரெண்டு புள்ள பொறந்தும் தங்கலெ. போவாத ஊரில்ல. பாக்காத டாக்டரில்ல. எலஞ்சிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கும்போது அங்க உள்ளவோ சொன்னாவோன்னு இந்த கோயிலுக்கு மருமவளெ கூட்டிட்டு வந்தேன். என் பேரன் பொறந்தான். ஆத்தா பேரையே வச்ச பெறவு இப்ப நால்லாருக்காம்யா’ &என்றவாறு பார்வதியம்மாளின் புகழ் பரவிக் கொண்டிருந்தது. இவ்வாறு பரவும் புகழ்பற்றி அவளிடம் சொன்னால், ‘நான் என்ன செய்யுதென்? ஆத்தா சொல்ல சொல்லுதா, சொல்லுதென்' என்பாள் சாமியை கைகாட்டியவாறு.

பார்வதியம்மாளுக்குள் சாமி குடியிருப்பது, அவளது மகன் பிறந்த பிறகுதான் தெரிய வந்தது என்பார்கள். முதலாவது மகள்.

‘அவா மவனுக்கு நாலு வயசு இருக்கும்போது இருக்கன்குடி போயிருக்கா. மொட்டையடிச்சுட்டு சாமி கும்பிட வந்ததும் திடீர்னு நிய்க்க முடியாம தலெ சுத்தியிருக்கு. இவளுக்கு என்னென்னு தெரியலெ. கூட வந்த சொந்தக்காரிலாம் சேந்து பிடிச்சிருக்காவோ. அப்பம் அங்க இருந்த ஒரு சாமியாடி பொம்பளெ வேப்பங்கொலையை கொடுத்து அடக்குனாளாம். அதுல இருந்து ஊர்ல எந்த கோயில்ல கொடை நடந்தாலும் இவளால வீட்டுல இருக்க முடியாது. தலையை விரிச்சு போட்டு துடியா துடிப்பா. இதனாலயே அவ வீட்டுக்காரரு இவளெ விட்டுட்டு வேறொருத்தியை கூட்டிட்டுப் போயிட்டாரும்பாவோ' என்று சொல்லப்பட்டு வந்தது அவள் பற்றி. பார்வதியம்மாளின் மகள் பக்கத்தூரில் வாழ்க்கைப் பட்டு சென்றுவிட்டாள். மகன் கல்லூரியில் படிக்கிறான்.

ஆனாலும் அம்மன் அருள் பெற்ற பெரும்பாலான பெண்கள் கோயிலில் சாமியாடுகிறார்கள். இதில் பார்வதியம்மாளுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? அவள் ஏன் சாமியாடாமல் குறி சொல்வதில் மட்டுமே குறியாக இருக்கிறாள் என்கிற கேள்வி எழும். ஒரு முறை இதை கேட்டுத்தொலைக்க, ‘தெய்வத்தை கேள்வி கேக்க உனக்கென்ன தகுதி இருக்குடெ' என்று பிரம்மராட்சதை அம்மனுக்கு சாமியாடுகிற, செல்லையா மாமா சொன்னதில் இருந்து, சாமிகளிடம் கேள்வி கேட்பதை விட்டுவிட்டேன்.
பார்வதியம்மாள் குறி சொல்ல துவங்குவது இரவு எட்டு மணிக்கு மேல்தான். ஆனால் காலையிலேயே அதற்கான வேலைகள் தொடங்கிவிடும். முதலில் சாமிக்கான அலங்காரத்தை ஆரம்பிப்பாள். அலங்காரம் என்பது பூக்களோடும் புது புடைவையோடும் அம்மனை அழகுபடுத்துவது. கருக்கல் முடிந்து இருட்டத் தொடங்கியதும் கோயிலுக்குள் பத்தி மணம் புகையாகப் பரவத்தொடங்கும். அந்த தெய்வீக மணத்தோடு அம்மனுக்கு தேவையான பூ, பழங்கள், வெற்றிலை, பாக்கு, குங்கும டப்பா உள்ளிட்ட வகையறாக்களை வகைப்படுத்தி வைத்திருப்பாள். அவளுக்கு உதவியாக, தங்கிடு சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டிருப்பான்.

ஏழு, ஏழரை மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சம் பேராகக் குறி கேட்க வந்துவிடுவார்கள். அவர்கள் கொண்டு வருகிற தேங்காய், பழங்கள் மற்றும் காணிக்கைகள் அம்மன் சிலைக்கு எதிரில் வைக்கப்படும். காணிக்கை என்பது பக்தர்கள் கொடுப்பதுதான். அதில் பத்து, இருபதுகள் என இருக்கும். சில வெளியூர் ஆட்கள் அதற்கு மேலும் கொடுக்கலாம்.

சாமி இருக்கிற படிகட்டுக்கு கீழே, சம்மணம் போட்டு அமர்ந்து கொள்வாள் பார்வதியம்மாள். கண்களை மூடி, ஏதோ முணங்குவாள். பிறகு கண்ணைத் திறக்காமலேயே, ‘வீட்டுல பிரச்னைன்னு வந்திருக்காவளெ யாரும்மா?' என்பாள். வந்திருப்பவர்களில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வார்கள். சிறிது நேரத்துக்குப் பின், ‘ஆமா' என்பார்கள். அப்படி சொல்பவர்கள் மற்றவர்களை விட்டுவிட்டு சாமியின் அருகே சென்று உட்காரவேண்டும். பின், குறி சொல்லத் தொடங்குவாள் பார்வதியம்மாள். அவள் சொல்லும் ஒவ்வொன்றும் அம்மனின் வாக்காகப் பார்க்கப்படும். வந்திருப்பவர்கள் எதை பற்றி கேட்க வந்திருக்கிறார்கள் என்பதையும் அதற்கு, ‘இப்படி பண்ணு, சரியா போகும்’ என்பதையும் சொல்வாள் அவள். சில நேரங்களில் இவளின் கணிப்பு மாறியிருக்கலாம்.

‘ஆத்தாவை தேடி வந்துட்டல்லா. தை மாசம், மொத செவ்வாய்க்குள்ள நீ நெனைச்சது நடக்கும். அப்படி நடந்தா, ஆத்தாவுக்கு என்ன தருவெ?' என்று கேட்பாள்.

‘முடிஞ்சதெ தாரென்'

‘சரி, இந்தா, புடி' என்று கண்களை மூடிக்கொண்டே, குங்குமத்தை அவள் கையில் வைப்பாள். அவர்கள் கிளம்பிட வேண்டும். அடுத்தும் அதே போல தொடங்கும்.

எப்போதாவது, ‘இன்னைக்கு எங்கிட்டெ ஆத்தா ஒண்ணும் சொல்லலெ. சாமியெ மட்டும் கும்புட்டுட்டு போங்கோ' என்று சொல்வதும் உண்டு. பார்வதியம்மாள் சாமிகளிடம் மட்டுமல்ல, பேய்களிடம் பேசும் வித்தையையும் கற்றிருந்தாள். அக்கம் பக்கத்தூர்களில் இருந்து தலைவிரி கோலமாக வருகிற பெண்களிடம், அவள் நடத்தும் பேச்சுவார்த்தை சுவாரஸ்யமானது.

சில நேரம் பேய்களின் வார்த்தைகளில் கொடூரம் இருக்கும். கடைசியில் பார்வதியம்மாளின் குங்குமத்துக்குள் சுருண்டுவிடுகிற பேய்கள்தான் அதிகம். இப்படியான நேரங்களில் பேய்களை விட, குறி சொல்கிறவளே பயங்கரமானவளாகத் தெரிவது தவிர்க்க முடியாததுதான்.

ஊரில் கல்யாணம் ஆகப் போகிற கன்னிப்பெண்களுக்கு பார்வதியம்மாள், திருமணத்துக்கு முதல் நாள் சிறப்பு ஆசி வழங்குவாள். திருமணமாக இருக்கிற பெண்களின் வீட்டுக்குச் சென்று விளக்கு ஏற்றுவாள். அங்கு கூடியிருக்கிற சொந்த பந்தங்கள் முன்னிலையில் மணப்பெண் அவளின் காலில் விழ வேண்டும். சாமியை வேண்டிக் கொண்டு கண்களை மூடுவாள். ‘ஆத்தா சொல்லிட்டா, நல்லாயிருப்பே...' என்றவாறே நெற்றியில் குங்குமத்தை பூசுவாள். ஆத்தாளின் ஆசிப் பெற்றவளாக மணப்பெண் ஆனதும் பார்வதியம்மாளுக்கு மஞ்சள் சேலை ஒன்று காணிக்கையாகக் கொடுக்கப்படும். வாங்கிவிட்டு நடப்பாள்.

மழையில்லா காலங்களில் ஆத்தாவின் கோவிலுக்குள் சிறப்பு பூஜை நடத்தப்படும். வயல்வெளிகளில் தண்ணீரை எதிர்பார்த்து பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கும்போது, சம்சாரிகள், ‘ஆத்தாளாவது காப்பாற்ற மாட்டாளா?' என்கிற ஏக்கத்தில் நடக்கும் பூஜை அது. பூஜைக்கு மறுநாள் அல்லது இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மழை கொட்டும். அப்படி கொட்டிய மழை நிற்காமல் மூன்று நாள் அடித்த ஒரு தினத்தில், பார்வதியம்மாளின் கோவில் கூரை சரிந்துவிழுந்தது. அம்மன் புகைப்படங்களும் பூஜை சாமான்களும் சிதைந்து கிடந்தன. ஓடி, ஓடிப் போய் சாமி படங்களை கொண்டு வந்து வீட்டுக்குள் வைத்தாள். குங்குமம் தண்ணீரில் கரைந்து சிறு சிவப்பு ஆற்றை உண்டாக்கி இருந்தது. மழை நின்றபாடில்லை. குளிர் காற்றும் மழை நீரும் நிலத்தில் நீந்திக்கொண்டிருந்த நாளில், பார்வதி அம்மாளுக்கு உடல் நலமில்லாமல் போனது. எழுந்து நின்று சாமி கும்பிட அவள் கைகளை உயர்த்தியபோது இடது கை வரவில்லை. இடது காலும் வலிப்பதாகத் தெரிந்தது. அப்படியே தரையில் படுத்தாள். கண்ணில் இருந்து சொட்டு சொட்டாக உதிர்ந்தது கண்ணீர். பிறகு அவளால் ஆள் துணையின்றி எழுந்து நிற்க முடியாமல் போனது. வாய் ஒருபக்கமாக இழுத்து பேச்சு குழறியது. கண்கள் மேலும் கீழும் இழுக்கின்றன. மகளும் மகனும் அவளுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர். விஷயம் தெரியாமல் குறி கேட்க வருகிறவர்கள், அவளின் கதை கேட்டுப் போகிறார்கள்.

2 comments:

P.PAUL VANNAN said...

ARUMAI ANNA ARUMAI , CORPORATE TECHNIQUE ETHAYIUM FOLLOW PANNAMA KADAIVARIKKUM EALMYIL IRUNTHUTAANKA.
ANNA , 40 KILO UDAMBAI VACHUKITTU ,KOIL KODAI APPO 100 KILO SANKILYA THUUKI THUUKI NENCHULA ADIKIRANGLE EPPADI ? MATHAA NERATHILA AVANKALALA ITHA SEYYIA MUDIYALA ,YEN? .
KALAVUL VISAYATHIL ,ARAYAMAL APPADIYE VIDURATHU NALLATHUPOLA .....

KATHAI NALLA IRRUKU , UNKA KATHAYODA NADIYUM NALLAIRUKKU , VALTHUKKAL .

துபாய் ராஜா said...

இதைப் படிச்சவுடன் நான் குறி கேட்ட கதை எழுதணும்ன்னு தான் தோணுச்சு அண்ணாச்சோ...