Tuesday, October 18, 2011

ஆணாதிக்க சினிமா!

நடிகை நிகிதா விவகாரம், சின்ன உதாரணம்தான்.
கன்னட நடிகர் தர்ஷன், அவர் மனைவி விஜயலட்சுமிக்குமான பிரச்னைக்கு காரணம் எனக் கூறி, நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிக்க தடைவிதித்தது கன்னட தயாரிப்பாளர் சங்கம். அதற்கடுத்து எழுந்த கண்டனங்களால் அதை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள்.

எந்த அடிப்படையில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது? நிகிதாவால் பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதில் தர்ஷனுக்கும் சம்மந்தம் இருந்திருக்காதா? விஜயலட்சுமி இப்படியொரு புகாரைச் சொன்னால் கூட அது உண்மைதானா என்று ஏன் ஆராயவில்லை?, புகார் சொன்ன மறுநிமிடமே தடை போட்டதெப்படி? என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இப்படியொரு முடிவை எடுக்க, ஒரே ஒரு காரணம்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அது ஆணாதிக்கம்!

சினிமா, பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் விஷயம்தான் இது என்றாலும் இப்போது இன்னும் வேரூன்றி வளர்ந்திருக்கிறது, ஆணாதிக்க மனநிலை. சினிமாவில் படைப்பு ரீதியாக பெண்களை கையாளும் விதம், இன்டஸ்ட்ரியில் பெண்களின் நிலை என இரண்டு விதமாக பார்க்கலாம். இரண்டிலுமே ஆணாதிக்க மனோபாவம் எல்லையின்றி விரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

‘சார், இந்த காட்சியை இப்படி வச்சுக்கலாமே...', ‘பெட்ரூம் சீனை மேலோட்டமா எடுக்கலாமே?' என்று ஏதாவது ஒரு ஹீரோயின் சொன்னால், அவர்கள் எப்படி பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்கு பத்மப்ரியாவிலிருந்து ஏகப்பட்ட சாட்சிகள் இருக்கிறது தெரிந்தும் தெரியாமலும். ஒரு இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ தங்கள் வேலையில் இன்னொருத்தர் கருத்து சொல்வதையோ, ஆலோசனை சொல்வதையோ ஏற்க மறுக்கிறார்கள். ‘இவ என்ன நமக்கு ஐடியா சொல்றது?' என்கிற ஈகோவை ஆலமரமாக வளர்த்து வைத்திருக்கிறது சினிமா. சினிமா கூட்டு முயற்சி என்றாலும் அதில் பெண்களை அனுமதிக்க மறுக்கிறது ஆணாதிக்க சிந்தனை.

தன் உடல் நிலையை கருத்தில்கொண்டு ஆற்றில் முங்கும் காட்சியை இன்னொரு நாள் படமாக்கலாம் என்றார் பிரபலமான அந்த நடிகை. சரி என்று தலையாட்டிய அந்த நல்ல இயக்குனர், வேறு சில காட்சிகளை எடுத்துவிட்டு, அந்த இன்னொரு நாளில் ஆற்றில் முங்கும் காட்சிக்கு வந்தார். நடிகை ஜாக்கெட்டுக்குள் பிரா போடக்கூடாது என்பது முதல் கண்டிஷனாக இருந்தது இயக்குனரிடமிருந்து. சேலையால் மறைத்துக்கொள்ளலாம் என்று நடிகையும் முதலில் கண்டு கொள்ளவில்லை. நான்கு டேக்குகள் போனது. டைரக்டர் ஒன் மோர் சொல்லிக்கொண்டே இருந்தார். கடுப்பானவர், ‘முங்கி எழறதுக்கு ஏன் இவ்ளோ ஷாட்?' என்று இயக்குனரிடம் நியாயம் கேட்க, நடிகைக்கு விழுந்தது அர்ச்சனை. இப்படியொரு அசிங்கத்தை வேறு எங்கும் எதிர்பார்த்திருக்க மாட்டார். நூறு, நூற்றம்பது பேருக்கு முன்னால் அவளை கேவலமாக அவமானப்படுத்த நினைக்கிற டைரக்டருக்குள் இருந்தவன் அந்த ஆணாதிக்க அரக்கன்.

வேண்டிய நண்பர்களிடம் இந்த விஷயத்தை நடிகை சொன்னபோது, அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீருக்குள் ரத்தம் இருந்ததை அந்த இயக்குனர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

‘இயக்குனருக்கு சரியான மரியாதை (?!) தராத நடிகைகளும் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் சினிமாவில் புதிதல்ல. இந்த மரியாதை விஷயம் கொஞ்சம் காமெடியானது. இப்போதைய மும்பை நடிகைகள் எல்லோருமே மாடர்ன் பெண்கள். அவர்கள் எல்லோரையும் போல ‘ஹாய்' என்று அழைக்கிறார்கள் தயாரிப்பாளரையும் இயக்குனர்களையும். ஆனால், கையெடுத்து கும்பிடாமல் இந்த ‘ஹாய்' தன்னை அவமானப்படுத்திவிட்டது என நினைத்து, அவர்களை காட்சிகளில் பழிவாங்கும் போக்கை சினிமா இன்றும் கடைபிடித்து வருகிறது. சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் ஒரு இயக்குனருக்கு தடை விதித்தை மறந்திருக்க முடியாது.

சமீபத்திய இன்னொரு உதாரணம், நித்யா மேனன்.

இவர், மலையாள படம் ஒன்றிற்காக திருவனந்தபுரத்தில் ஷூட்டிங்கில் இருந்தார். இவரிடம் கதை சொல்வதற்காக மலையாள தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆண்டோ ஜோசப், நண்பர்களுடன் போனார். தான் வந்திருப்பதாக நடிகையிடம் சொல்ல சொல்கிறார் உதவியாளரிடம். அவர் போய் சொன்னதும், ‘இங்கு எப்படி கதை கேட்பது? என் மாஜேனரிடம் பேசச் சொல்லுங்கள்' என்றார் நித்யா. இதை தயாரிப்பாளரிடம் சொன்னார் உதவியாளர். ‘என்னிடமே இப்படி நடந்துகொள்கிறாளா? என்ன செய்கிறேன் பார்' என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் சொல்லியிருக்கிறார். மூத்த தயாரிப்பாளரை அவமானப்படுத்திவிட்டதாகத் தடை விதித்திருக்கிறார்கள்.

இதில் எங்கே அவமானம் வந்தது? நித்யா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? எல்லா நடிகர், நடிகைகளுமே மானேஜர் மூலம் தேதி வாங்கிதான் கதை கேட்கிறார்கள். தயாரிப்பாளர் சங்க நிர்வாகி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இது நிஜமாகவே ஆணாதிக்க காமெடியாகத்தான் இருக்கிறது.

சினிமா கேமரா வைக்கப்பட்டிருக்கும் வேனுக்குள், பெண்கள் இன்றும் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு ஏதோதோ காரணம் சொன்னாலும் அதை நியாயப்படுத்த முடியாததாக இருக்கிறது. இன்டஸ்ட்ரியில் பெண்களின் நிலைக்கு இது ஒரு சாம்பிள்.

‘வாய்ப்பு தருகிறேன், திருமணம் செய்கிறேன்' என்ற ஆசை காட்டி பெண்கள் சூறையாடப்படுவதும் சினிமாவில் அதிகம். இப்படியொரு பிரச்னையில், மூன்று முறை தேசிய விருது பெற்ற இந்திப் பட இயக்குனர் மதுர் பண்டார்கர் மீது, சமீபத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது மும்பை கோர்ட்.

சம்பள விஷயங்களிலும் ஹீரோக்களின் கோடிகளை, ஹீரோயின்கள் தொட்டுவிட முடியாத நிலைதான் இருக்கிறது. ‘‘ஹீரோக்களை மையப்படுத்தியதுதான் சினிமா வியாபாரம். இங்கு யாருக்கு என்ன விலை என்பதை மார்க்கெட்தான் நிர்ணயிக்கிறது. ஹீரோவை முன்னிலைப்படுத்தும் சினிமா சந்தையில், ஆணாதிக்க மனோநிலைதான் இருக்கும். அதை மாற்றுவது சாதாரண விஷயமில்லை'' என்கிறார்கள் சினிமா வியாபாரத்தை முன்னிலைப் படுத்துபவர்கள்.

படைப்பு ரீதியாக, பெண்களின் பிரச்னைகளை பேசும் சினிமா என்பதில் கூட ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவே காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால், பெண்குரல் சினிமாவில் இல்லை. அதாவது பெண்ணுக்கு ஏற்படுகின்ற காதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஆண்களால் எழுதப்பட்டு பாடலாகிறது, அல்லது வசனமாகிறது. ஆணின் குரலிலேயே பெண்கள் பிரச்னைகள் பேசப்படுவதால், அதில் ஆணாதிக்க சிந்தனைதான் இருக்கும் என்கிறார்கள்.

‘‘இது ஆணாதிக்க சமூகம். இங்கிருந்து அப்படிப்பட்ட படைப்புகள்தான் வரும். அசுத்தமாக இருக்கும் மனிதனிடமிருந்து சுத்தமான படங்களை எதிர்ப்பார்க்க முடியாது. ரவுடிகளின் சமூகத்தில் ரவுடிகள் பற்றிய படம்தான் வரும். பல்வேறு இயக்குனர்களின் படங்களில் பெண்களின் பிரச்னைகள் அலசப்பட்டிருந்தாலும் அது ஆணாதிக்கச் சிந்தனையைதான் கொண்டிருக்கிறது. பெண்ணிய படம் என்று சொல்கிற படங்களிலும் பெண்ணடிமைத்தனம்தான் இருக்கிறது'' என்கிறார் கலை விமர்சகர் இந்திரன்.
‘‘சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அறிஞர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் உட்பட எல்லாருமே சினிமாவை கொச்சையாகப் பார்க்கும் போக்கு இருக்கிறது. அரசே, அப்படித்தான் பார்த்தது. அதனால்தான் 1931-ம் வருடம் பேசத் தொடங்கிய சினிமாவை 26 வருடம் கழித்து (1957-ம் ஆண்டு) கலையாக அங்கீகரித்தது அரசு. ஆரம்ப காலத்தில் ரெட்லைட் ஏரியாவில் இருக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க மறுத்தார்கள் என்பதே சினிமாவை எப்படி பார்த்திருக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பது புரியும். இதைத்தாண்டி, கே.பி.சுந்தராம்பாள், டி.பி.ராஜலட்சுமி, அஷ்டாவதனி பானுமதி போன்றவர்கள் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். தனியுடமை சமூகத்தில் பெண் அடிமையானாள். பொதுவுடைமை சமூகத்தில்தான் பெண் சுதந்திரமடைவாள்'' என்கிறார் இயக்குனர் ஜனநாதன்.

‘‘பெண்களால் ஒரு படைப்பு வெளிப்படும்போதுதான், பெண்களின் குரல் அதில் வரும். அப்படி அவள் பேசும்போது என்ன பேசுவாள்? அப்படிப்பட்ட குரலை கேட்க ஆர்வமாக இருக்கிறது சினிமா'' என்கிற ஜனநாதன், ஆணாதிக்க மனோபாவத்தை போக்க, பெண் படைப்பாளிகள் சினிமாவில் அதிகரிக்க வேண்டும் என்கிறார்.

‘‘கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் போன்ற துறைகளில் பெண்கள் கவனம் செலுத்துவதன் மூலம், சினிமாவில் பெரிய அளவில் அவர்கள் இடம்பெற முடியும். சில பெண் எழுத்தாளர்கள் செய்திருந்தாலும், படையெடுப்பு போல் வந்தால்தான் ஆணாதிக்கத்திலிருந்து சினிமாவை விடுபட வைக்கலாம்'' என்கிறார் ஜனநாதன்.

இருந்தாலும் அது முடியுமா என்றால், ம்ஹூம்தான் பதில். பெண் படைப்பாளிகள் அதிகரித்தாலும் ஆணாதிக்கத்திலிருந்து சினிமாவை விடுபட வைக்கும் முயற்சி நடக்குமே தவிர, முழுமையாக ஒழித்துவிட முடியாது.

ஏனென்றால், சினிமா ஆணாதிக்கத்தின் வேர்!

(நாளிதழ் ஒன்றுக்காக எழுதப்பட்ட அவசரக் கட்டுரை)

3 comments:

சித்திரவீதிக்காரன் said...

ஆணாதிக்க சமூகத்திலிருந்து ஆணாதிக்க சினிமாதானே வரும். பெண்கள் என்னதான் பணிக்கு வந்தாலும் ரோட்டோர கடைகளில் நின்று அவர்கள் பஜ்ஜி,வடை சாப்பிடுவதை பார்த்திருக்கிறீர்களா? நம் சமூகத்திலிருக்கும் சாதி,மதம்,பெண்ணடிமை இவைகளை போக்க கோடி பெரியார்கள் வந்தாலும் முடியுமா என்பது சந்தேகந்தான். அற்புதமான பகிர்வு. நன்றி.

துபாய் ராஜா said...

// (நாளிதழ் ஒன்றுக்காக எழுதப்பட்ட அவசரக் கட்டுரை)//

அவசரக் கட்டுரை என்றாலும் ஆணாதிக்க அவலத்தை சொல்லி அசர வைக்கும் கட்டுரை.

ஆடுமாடு said...

நன்றி சித்திரவீதிக்காரன்.


நன்றி ராஜா அண்ணாச்சி.