ஜன்னலுக்குள் தெறித்துவிழும் மழைத்துளி பார்த்து, ஓடோடி அடைக்கிறாள் மனைவி. 'வெளிய போகாதல. நனைஞ்சா காய்ச்சல் வந்துரும்' என பிள்ளைகளுக்கும் தடை. கொட்டித் தீர்த்துவிடும் மழையில் நனையும் சுவருக்கு தடையேதும் இல்லை. வெயிலில் நனைந்து மழையில் காயும் பாக்கியம் சுவர்களுக்கு இருக்கிறது. மழையை நோயாகவும் எரிச்சலாகவும் பார்க்கத் துவங்கிவிட்ட நகரத்துக்கு அதனதன் காரணங்களும் ஏற்புடையதாய் இருக்கின்றன.
'வீடு பள்ளத்துல இருக்குடா. மழை வந்தா நாஸ்திதான்' . நண்பனின் வார்த்தையில் மழைக்கு நாஸ்தி என்றும் பெயர்.
அதன் போக்கில் வந்துவிட்டு போகும் மழையின் ஈரம், எப்போதும் நனைத்துவிட்டே செல்கிறது என் கால்களை.
வயலில் சிறுகிழங்கு எடுத்துவிட்டு அம்மாவுடன் வரும் போது வந்த மழை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. சிறு சிறு துளியாய் முதலில் நனைத்த மழை பெரும் கோபங்கொண்டு வந்த போது, பொன்னையா பிள்ளை தோப்பில் ஒதுங்கி நிற்கலாம் என்றாள் அம்மா. பின்ன மரத்தின் அடியில் இருந்த கருங்கல்லில் அம்மா நின்றுகொண்டதும் கிழிந்த டவுசரை வயிற்றுக்கு மேலே ஏற்றிக்கொண்டு, போட்டேன் குதியாட்டம். மண்ணை நனைத்து செம்புல பெயராய் ஓடி வரும் தண்ணீரில் கால்கள் மண்ணை குழைத்தது. 'ஏல கீழ விழுந்திராத'என்பதாக இருந்தது அம்மாவின் அக்கறை.
தண்ணீர் இழுத்து செல்லும் என்ற நம்பிக்கையில், தென்னை மரத்தில் இருந்து விழுந்துகிடக்கும் சில்லாட்டையின் மீதமர்ந்து, 'ஏன் தண்ணி இழுக்கலை' என்ற கவலையில் இருக்க, மழை என்னை குளிப்பாட்டியிருந்தது. நனைதல் சுகம். திடீரென்று நின்ற மழையை தொடர்ந்து நடக்கையில், ஊர் எல்லையில் மீண்டும் தொடர்ந்தது. நனைந்து நனைந்து வீட்டுக்குள் சென்றதும் அம்மா தந்த கருப்பட்டி காபி இன்னும் நாவில் இருக்கிறது.
நண்பர்களுடன் அலைந்த டிரவுசர் காலத்து நினைவுகளில் மழைக்கும் இருக்கிறது பெரும்பங்கு. மழை நனைத்துவிட்டு போன காலங்களில் வீட்டு வாசல் ஓரத்தில் விதை போடாமல் வளர்ந்திருக்கும் கொத்தமல்லி செடியை பிடிங்கி, 'ஏய் சாப்டுறா பேரா... உடம்புக்கு நல்லது' என்கிற தாத்தாவின் மீசை மறக்காமல் வருகிறது ஒவ்வொரு மழை காலமும்.
'இப்ப வந்திரும் லட்சுமி புள்ள' என்ற ஏக்கத்தில் அவள் வீட்டு தொழுவத்திற்கெதிராக, நனைககும் மழையில் தண்ணீர் மனிதனாக ஆகிய காலங்கள் வடியாமல் இருக்கிறது. வருவேன் என்பதற்காக அவளும், வருவாள் என்பதற்காக நானும், நனைந்து நின்ற நாட்களில் யாருமற்ற மழைக்கு நாங்கள் சொல்லிய நன்றிகள் கோடி.
சிறு பிராய மழை, நினைத்தாலே நனைக்கிறது. என் மகனிடம் சொல்ல என்னிடம் இருக்கிறது ஏராள மழை அனுபவம். நனையாத அவனுக்கு என்ன இருக்கும்?
(காலையில சரியான மழை. அதான்)
14 comments:
மழை மனதிலும்:). அருமை
மழை வாசனை இல்லாத சவுதியில் இருக்கேன். ஆனா,
நனைய வச்சுட்டீங்க மக்கா.
நன்றாக இருந்தது!
//சிறு பிராய மழை, நினைத்தாலே நனைக்கிறது. என் மகனிடம் சொல்ல என்னிடம் இருக்கிறது ஏராள மழை அனுபவம். நனையாத அவனுக்கு என்ன இருக்கும்?//
அருமை!!
நாம், வெயில் மனிதர்கள்தானே தோழா.இங்கே எல்லாம் வெயிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்தான் அதிகம். கிரமங்களில் குடை வைத்திருக்கிற வீடுகள் குறைச்சல், அலாதியானதாக இருக்கும் .மற்றபடி கோனிச்சாக்கு,சுளகு,பாலித்தீன் தாள்கள் தானே இன்னும் குடையாகிறது.கடலைச்செடிகளை முடிகட்டி குல்லாயாக்கிக்கொண்ட நாட்கள் நினவுக்கு வந்து போகிறது.
வானம் பாடிகள் ஐயா, நன்றி.
......................
//மழை வாசனை இல்லாத
சவுதியில் இருக்கேன்//
மண் வாசனைதான் மனசுல இருக்கே.
நன்றி பாராஜி.
வாசிக்கும் போதே, அந்த மழையில் நனைந்த அனுபவம்.... நன்றி.
நன்றி எஸ்.கே.
குட்டி பையா நன்றி.
.....................
//கிரமங்களில் குடை வைத்திருக்கிற வீடுகள் குறைச்சல், அலாதியானதாக இருக்கும் .மற்றபடி கோனிச்சாக்கு,சுளகு,பாலித்தீன் தாள்கள் தானே இன்னும் குடையாகிறது//
உண்மைதான் தோழர். நன்றி
நீங்க என்ன சொல்லுங்க... மாலைநேரத்துல மட்டைவிளையாட்டோட விளையாடும் மழையோட விளையாண்ட சுகம் எங்கண மழையின்னு படிச்சாலும் சரி, பார்த்தாலும் சரி மனசுல வந்து சாரலா அடிக்குது... இப்பவும் இந்த மழையினாலும்...
நல்ல மழை :)
/வாசிக்கும் போதே, அந்த மழையில் நனைந்த அனுபவம்.../
நன்றி சித்ராக்கா.
...........
பாலாசி, முத்துலட்சுமி நன்றி.
அட!அங்குமா மழை!இங்கும்!
அருணா மேடம் நன்றி.
Post a Comment