Friday, December 25, 2009

பரிசோதித்தல் -1

ஒரு காட்டுமிராண்டியின் மனநிலையில் இருக்கிறேன் என்பது கொஞ்சம் குறைவான வார்த்தைதான். அதை தாண்டிய என்பது அதிகமானதாகவும் இருக்கலாம். என்னை நானே, கேட்டு தோற்கிற அல்லது கேட்டு வெல்கிற நிலைக்கு வந்துவிட்டேன். என்னை கேட்டு தோற்கிற அல்லது என்னை கேட்டு வெல்கிற நண்பர்களுக்கானவனாகவும் தள்ளிவிட்டிருக்கிறது காலம். காலங்கள், மண்ணை காற்றாகவும் காற்றை மண்ணாகவும் மாற்றும் சக்தி கொண்டவை. அவற்றின் சக்தியில் பல முறை பிறக்கலாம், சில முறை இறக்கலாம். கடந்த காலங்களை கயிறு கொண்டு இழுத்தாலும் நினைவை மட்டும் தந்துவிட்டு ஏமாற்றிவிடுகிறது. ஏமாறுதலும் ஏமாற்றுதலும் அவரவர்களுக்கான விளையாட்டு.

2009- சில வெற்றிகளையும் சில இழப்புகளையும் இயல்பாய் தந்திருக்கிறது. இனிமையான இரண்டாது வெளிநாட்டு பயணம் இம்முறை வாய்த்திருந்தது. ‘ஹேப்பி என்டிங்’ என்ற வார்த்தைக்கு வெளிநாடு தந்த அர்த்தத்தில் இன்னும் புல்லரித்து போயிருக்கிறேன். கனவாய் இருந்த சொந்த வீடு, திக்கி திணறி நிறைவாகியிருக்கிறது.

அம்மா, இப்போதெல்லாம் பென்சனை மட்டும் நம்பியில்லை. கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவளால் வயலில் களை எடுக்க முடிகிறது. கருவை முள் வெட்ட முடிகிறது.

அம்மாவை மட்டும் சந்தித்துவிட்டு போகும் என் காதலியிடம் இந்த வருடம் பேச முடியவில்லை. பேசியிருந்தால் கண்ணீரோடு என் கண்களும் சிந்திருக்கும். வீட்டு திண்ணைக்கு எதிரில் இருந்த முருங்கை மரம் ஆடி காற்றில் முறிந்திருக்கிறது. அப்பாவின் பள்ளி தோழர், மாரடைப்பில் மரணமாகியிருக்கிறார்.

ரெண்டாவது மகனுக்கு தம்மாத்துண்டு காரும், முதல் மகனுக்கான சைக்கிளும் அடுத்த வருட லிஸ்டுக்கு போகிறது. சனிபெயர்ச்சி, குருபெயர்ச்சி... இன்ன பிற பெயர்ச்சிகளுக்குள் முங்கி இருக்கிறாள் மனைவி.

பசுமை நிறைந்த சொந்த ஊர், ஞாபகங்களாவே இருக்கிறது. மரமேறி காக்கா முட்டை எடுத்ததும், தெப்பகுளத்தில் சொர்க் அடித்ததும், ஆற்றுக்குள், எருமை மாட்டின் மீதேறி அக்கறை கடந்ததும் நினைவாகவே இருக்கிறது. இப்போதைய ஊர் சிறுசுகள் தெருவிளையாட்டு மறந்து கம்ப்யூட்டருக்குள் புதைந்திருக்கிறார்கள்.

அடிமையான வலைப்பதிவு பக்கம் வரவிடாமல், இழுத்துப்பிடித்திருக்கிறது வேலை. நண்பர்களின் பதிவுகளை கூட, படிக்க முடியாத வேலையில் சம்பளம் பிரதானமாக இருக்கிறது.

போராடிய நண்பர்கள் இயக்குனர்களாகியிருக்கிறார்கள். இயக்குனர்களாக இருந்த நண்பர்கள், ஹீரோவாகியிருக்கிறார்கள்.

இதை தவிர்த்து இந்தாண்டு...

ரத்தக் காடாகியிருக்கிறது ஈழம். உரிமையின் மீதேறி, உயிர்குடித்த ரெண்டு நாக்குகள் தங்களுக்குள்ளேயே முட்டிக் கொண்டிருக்கிறது. கலைஞர் தனக்குத்தானே விருது வாங்கி பெருமைப்பட்டிருக்கிறார்.

‘கோலங்கள்’ முடிந்திருக்கிறது. திருச்செல்வம் ஹீரோவாக இருக்கிறார். அர்ச்சகர், கோவிலுக்குள் பூஜை செய்திருக்கிறார். நண்பர்கள், க.சீ.சிவகுமார், விக்ரமாதித்யன், வித்யாசங்கர் வலைப்பதிவை தொடங்கியிருக்கிறார்கள். கொதித்துக்கொண்டிருக்கிறது தெலங்கானா. செல்வாக்கை இழந்துகொண்டிருக்கிறது கம்யூனிஸ்ட்.

அய்யனார் புத்தகம் வெளியிட இருக்கிறார். பையத்தியக்காரன் 'படம்' காட்டுகிறார். சுந்தர், மொழியில் விளையாடிக்கொண்டிருக்கிறார்.

மரணம் நோக்கி செல்லும் காலத்தில், நம் மீது இன்னும் ஒரு வயது ஏறபோகிறது.

பழைய, பரிசோதித்தல் இந்த லிங்க்ல:

http://aadumaadu.blogspot.com/2007/12/blog-post_29.html

12 comments:

மணிஜி said...

அருமை..அட்டகாசமான பதிவு..

Ayyanar Viswanath said...

ஒவ்வொரு வருட முடிவிலும் இதுபோல எழுத ஏதாவது இருக்கத்தான் செய்கின்றன.வயதை மரணத்தை நோக்கிச் செல்வதோடு பொருத்தியிருப்பது அற்புதம்.

ஆடுமாடு said...

நன்றி தண்டோரா.

ஆடுமாடு said...

நன்றி அய்யனார்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வழக்கம் போல வசீகர எழுத்து நடை

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆடுமாடு said...

அமிர்தவர்ஷினி அம்மா நன்றி.

Thekkikattan|தெகா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், ஆடுமாடு.

interesting read, thanks.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஒரு நிமிஷம் அய்யனார் பக்கத்திற்கு வந்துவிட்டோமோ என்று மீண்டும் ஒருமுறை பதிவர் பெயரைப்பார்த்தேன்... அடுத்தடுத்த பத்திகள் படித்ததும் ஆடுமாடு தெரிந்தார்.

"மரணம் நோக்கி செல்லும் காலத்தில், நம் மீது இன்னும் ஒரு வயது ஏறபோகிறது."

நல்ல பிரயோகம்...

ஆடுமாடு said...

தெகா நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

ஆடுமாடு said...

நன்றி கிருத்திகா.

பா.ராஜாராம் said...

நேற்றே இதை வாசித்தேன்.என்னால் பின்னூட்டம் இட இயலவில்லை.இன்று முயன்று பார்க்கிறேன்..சமீபமாகத்தான் உங்கள் தளம் வந்தேன்.அருமையான எழுத்து நடை.இனி தொடர்ந்து வருவேன்.புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா.

ஆடுமாடு said...

ராஜாராம் நன்றி.