Thursday, July 23, 2009

ஆட்டுமந்தையிலிருந்து ஒரு காதல்...

தூங்க முடியாத இரவுகளில் நினைவுகளைச் சுமப்பது சுகங்களின் பாக்கியம். நீர்த்துப் போகிற பண்டங்களில் இருக்கிற நீரின் சதசதப்பை உணர்கின்ற தருணம் அது.

நீ உன் கணவனுடனும் நான் என் மனைவியுடனும் இரண்டற கலந்துபோன கால சூழ்நிலையிலும் காதலில் வலிகள் உக்கிரமாகவே இருக்கிறது. நடு நிசியில் எழுந்து அழும் என் குழந்தையை தோளோடு அணைத்துக்கொண்டு மொட்டை மாடியில் உலாத்துகிற நேரம் கூட, சமீபத்தில் சந்தித்த உன் நினைவுகள் என்னை உறிந்து எடுக்கின்றன.

அது கோயில் திருவிழா. நீ வருவாய் என்பதற்காகவே நான் வந்தேன். நான் வருவேன் என்பதற்காகவே நீயும் வந்திருந்தாய். சொந்தங்கள் முன்னிலையிலேயே நலம் விசாரித்தோம். நீ என் மகனையும் நான் உன் மகனையும் முத்தமிட்டோம். அதிகம் பேச முடியாத அந்த சாயங்காலத்தில் எல்லார் முன்பும் நீ கிசுகிசுத்தாய். இரண்டு பேருமே நம் குழந்தைகளாக இருந்திருக்க வேண்டும் என்று.

வார்த்தையால் கொன்றுவிட்டு கண்ணீர்விட்டாய். உன் கண்ணீரின் தகதகப்பிலேயே பிரிந்தோம்.

வானமாக நீளும் ஆசைகளில் ஒன்றிரண்டு நிறைவேறியிருந்தாலும் உன் செம்மறியும் என் வெள்ளாடும் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக ஆகியிருக்கும். அப்படி எந்த கொலைப்பழியும் வந்துவிடாமல் தெய்வங்கள் பார்த்துக்கொண்டது. சாமிகள் பாக்கியவான்கள்.

அப்போது எங்கள் வயலில் சிறுகிழங்கு முளைத்திருந்தது. உன் வயலில் கத்தரிக்காய். இரண்டு வயலுக்கும் பொதுவாக இருக்கும் வடக்குவா செல்வி அம்மன் கோயிலில், உன் ஆசைக்காக பூ போட்டுப் பார்த்தோம். நம் கல்யாணம் நடக்குமென்று அம்மன் சொன்னாள். அன்றிலிருந்து உன் முகம் சிரிப்பை மட்டுமே சுமந்தது. ஆனால், காலம் உன்னையும் என்னையும் பிரித்துவிட்டது. அதே அம்மன் கோயிலில் காதலர்கள் நம்மைப் போலவே இன்னும் பூப்போட்டு பார்க்கிறார்கள். நினைத்த பூ வந்துவிடுகிறது. அம்மன் வைக்கின்ற பூ பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.

அடுத்த திருவிழா வரும் வரை நம் தவிப்புகள் நமக்குள்.

(பழைய பதிவு.)

9 comments:

அ.மு.செய்யது said...

இது தாங்க நீங்க...

மனச என்னமோ பண்ணிடறீங்க கடைசில...

ஆடுமாடு said...

செய்யது அண்ணேன். ரொம்ப நன்றி.

//மனச என்னமோ பண்ணிடறீங்க கடைசில//

நெசமாவா?

Anonymous said...

காதலில் இத்தனை வலிகளா?
எல்லாக் காதலிலும் இதே வழிகளா?
இந்த வலிக்கு வருந்துவதா? என் வலியை தட்டி எழுப்பியதற்கு வருந்துவதா?

தவிக்கின்ற தாகங்கள் எதுவும் தணிக்க படக்கூடாது என்பது தெய்வங்கள் விதித்த விதிகளா?

இல்லை நம்மவர் செய்யும் சதிகளா?

நன்றி செய்யது இந்த வலைப்பூவை வாசிக்க செய்தமைக்கு...

Anonymous said...

ஆடுமாடு said...
செய்யது அண்ணேன். ரொம்ப நன்றி.

//மனச என்னமோ பண்ணிடறீங்க கடைசில//

நெசமாவா?

செய்யது அண்ணா இல்லீங்க உங்களுக்கு தம்பியாத் தான் இருப்பார்..எனக்கு தம்பி...

நாடோடி இலக்கியன் said...

//
வானமாக நீளும் ஆசைகளில் ஒன்றிரண்டு நிறைவேறியிருந்தாலும் உன் செம்மறியும் என் வெள்ளாடும் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக ஆகியிருக்கும்.//

அருமையா எழுதியிருக்கீங்க.

சிறு வயது தோழி குறித்து நானும் இதே மாதிரியானதொரு பதிவு சென்ற மாதம் எழுதியிருந்தேன் நண்பரே. ஆனால் இதன் பக்கத்தில் அது நிக்க முடியாது.எழுதுறவங்க எழுதனும்.
நான்.... அவள்

ஆடுமாடு said...

//தம்பியாத் தான் இருப்பார்..எனக்கு தம்பி...//


நன்றிங்க தமிழரசி அக்கா.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

நட்புடன் ஜமால் said...

நடு நிசியில் எழுந்து அழும் என் குழந்தையை தோளோடு அணைத்துக்கொண்டு மொட்டை மாடியில் உலாத்துகிற நேரம் கூட]]


முழுவதும் படித்துவிட்டு

மீண்டும் வாசித்தேன் மேலே சொல்லியிருக்கும் வார்த்தைகள் கண்களில் கண்ணீர் கொண்டு சில நொடிகள் பார்வைகளை தடைப்படுத்தின.


நன்றி செய்யது அறிமுகத்திற்கு.

ஆடுமாடு said...

ஜமால்ஜி வருகைக்கு நன்றி.