Monday, June 29, 2009

கொள்ளி

அதிகாலையிலேயே அம்மன் கோயில் பொத்தையில் வந்து உட்கார்ந்துகொண்டார் நயினார். ட வடிவிலான பாறையில் முதுகுசாய்ந்து அமர்ந்துகொண்டு இதுவரை நான்கு பீடிகளை காலி பண்ணியிருந்தார். பொத்தையின் நேர் கீழ் மற்றும் தென்கிழக்கு பக்கங்கள் மோரிஸ் வாழைகள் காய்த்துக்கிடக்கும் வயக்காடுகள். கொஞ்சம் வடக்காக வாய்க்கால். இதில் கால் கழுவிவிட்டு மேல பார்க்கிற கூனையன், நயினாரை அடையாளங்கண்டுகொண்டான். கூனையன் தனது பணி நிமித்தமாக மதுரையில் முகாமிட்டிருப்பவன். முகாம் என்று சொல்வது காரணமாகத்தான். கூனையனின் பணி என்பது ஓட்டல்களில் சமைப்பது. முதலாளியோ, கடையில் வேலை பார்ப்பவர்களோ ஏதாவது சொல்லிவிட்டால், மறு நாளே வேலையை மாற்றிவிடும் சுபாவத்தை இயற்கையிலேயே பெற்றிருந்தான். தற்சமயம் அவன் வேலை பார்ப்பது 43 வது கடையில். அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், தற்சயம் மதுரை ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் தனது பணியை செய்திருப்பவன்.
செங்குத்தாக இருக்கிற பாறையில் தொப்பை சுமக்கின்ற வயிறோடு, கால்களை ஊன்றி ஏறுவதற்கு சிரமம் என்றாலும் பார்த்த இடத்தில் கேட்காமல் போகக்கூடாது என்கிற முறையில் மேலேறினான்.
கூனையனை பார்த்துவிட்டு, வா என்பதுபோல மவுனமாக தலையாட்டி திரும்பிக்கொண்டான் நயினார்.
‘காலைல நாலு மணி பஸ்லதான் வந்தேன். எங்க சித்திலா வெஷயத்தை சொன்னா. என்னடா இப்படியாயி போச்சு’
....
‘நல்ல பய. பொடி வாங்கிட்டு வான்னா, ஓடி போய் ஓடியாந்துருவான். இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்கானே’
....
‘இப்படி கொண்டுபோவவா பிள்ளைய கொடுத்தான்’
கூனையன் சொன்னதும் கண்ணீர் முட்டி வந்து அழ ஆரம்பித்தார் நயினார். பொழுது விடிந்து விடும் போலிருந்தது.

நயினாருக்கு தொழில் மாடுகளுக்கு காயடிப்பது. புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பச்சத்தி மாடன் கோயில் முன்பாக பரந்து விரிந்திருக்கிற இடத்தில் வைத்துதான் தொழில் நடக்கும். கோயிலுக்கு சுற்றுசுவர் எதுவும் கிடையாது என்பதால் பெரிதாக நிற்கிற ஆழ மற்றும் வேப்பரமரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு பகுதியாகவும் வாகை மரங்கள், நவ்வா மரங்கள் இருக்கிற இடம் மறுபகுதியாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. வாகை மரங்கள் இருக்கும் இடத்தை தன் தொழிலுக்கு தேர்ந்தெடுத்தார் நயினார். இந்த இடத்தின் பின்பக்கம் அக்ரஹார தெரு. பெரும்பாலான ஐயர்கள் இதைக்கண்டும் காணாமல் சென்றாலும் கொண்டை ஐயர், மற்றும் சந்தரமய்யருக்கு இந்தப் பாவத்தை பார்க்க வேண்டியிருக்கிறதே என்கிற எரிச்சல். என்னதான் வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டிருந்தாலும் மாடுகள் போடும் சத்தங்கள் அவர்களுக்கு பாவத்தின் ஞாபகத்தை உசுப்பும். பொறுக்கமுடியவில்லை. ஒரு திங்கட்கிழமை காலையில் பஞ்சாயத்து கூடியது. அக்ரஹாரத்தில் நாற்பது குடும்பங்கள். அவர்கள் அல்லாத குடும்பங்கள், ஊரில் 500 சொச்சம்.
‘எனக்கு அந்த இடந்தான் வாக்கா இருக்கு’ என்றார் நயினார்.
‘இங்கரு, சாமியோ சொல்லுதாவோ. அவ்வோ ஞாயத்தையும் கேக்கணும். அதனால, வேப்ப மரத்து பக்கத்துல நீ வேலைய பாரு’ என்றது பஞ்சாயத்து.
தலையை ஆட்டிக்கொண்டே வந்தார் நயினார். பிறகு இதே இடம் நிலைத்துவிட்டது.

ஊரின் அருகிலுள்ள பூவன்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், வடக்கு பத்து, தாட்டாம்பட்டி, சிவசைலம் ஆகிய ஊர்களிலிருந்தும் காயடிக்க மாடுகள் குவியும்.

நயினார் தனது ஒத்தாசு வேலைக்கு அக்காள் மகன் சுடலையை வைத்திருந்தார். இவனது வேலை, காயடிக்க வேண்டிய மாடுகளின் வாய் மற்றும் கால்களை கயிற்றால் கட்டி படுக்க வைப்பது. பெரும்பாலான மாடுகள் லேசில் மசிந்துவிடுவதில்லை. பக்கத்தில் படுத்திருக்கும் மாடுகளைப் பார்த்ததும் துள்ளும். இம்மாதிரியான மாடுகளை கையாள்வதில் சுடலை கைதேர்ந்தவன். சரிந்துகிடக்கும் மாடுகளின் கால் மற்றும் வாயை மாட்டுக்காரர்கள் பிடித்துக்கொள்ள வேண்டும். நயினார் இடுக்கி மாதிரியான மரத்திலான கட்டையை கொண்டு , மாட்டின் கொட்டையில் வைத்து கபக்கென அமுக்கு. கொட்டையில் இருக்கின்ற இரண்டு பகுதிக்குமான தொடர்பை கொண்டிருக்கிற அந்த நரம்பு இந்த அடித்தலில் காலியாகிவிட்டால் போதும். அமுக்கியதுமே துள்ளி அடங்கும் மாடுகள். பிறகு எழும் மாடுகளைப்பார்த்தால் உயிரற்றது போல காணப்படும். இரண்டு மூன்று நாட்கள்தான். பிறகு சரியாகிவிடும். காயடிப்பது சிலருக்கு பாவம். சிலருக்கு தொழில்.
நயினாருக்கு பெரிய சொத்து எதுவும் இல்லை. குடியிருக்க வீடும், கொஞ்சமாக இடமும் சொத்து. அவனது மனைவி மூக்கம்மாள் ஊரில் சொத்துக்காரி. காயடித்தலில் கிடைக்கும் கொஞ்ச காசுதான் வருமானம். அதிலும் இவ்வளவு வேணும் என்றெல்லாம் கேட்கமாட்டான். கொடுத்ததுதான் பணம்.

இரண்டாவதாக பிறந்த மகன் இரண்டாவது வயதில் மஞ்சள் காமாலையால் பலியான பிறகு, வாழ்க்கை வெறுத்து போனது நயினாருக்கு. இரண்டாவது மகன்தான் அவருக்கு எல்லாம். முதல் மகன் ஏழாவது படித்துக்கொண்டிருக்கிறான். அவன் மூன்றாவது படிக்கும்போது, மாடு வயிற்றில் குத்தி ஆபரேஷன் செய்ய வேண்டியதாகிவிட்டது. பணத்துக்கு அலைந்து அலைந்து பார்த்து கிடைத்ததில் ரூபாய் கொஞ்சம் குறைகிறது. அப்போதுதான் அம்பாசமுத்திரம் தர்மாஸ்பத்திரியில் இதை கேள்விபட்டான். குடும்ப கட்டுப்பாடு. போய் படுத்து எழுந்திரித்துவிட்டு வரும்போது, கையில் ஆயிரத்து ஐநூறு ரூபாயும் அரிசி பையும் ஆப்பிள் பழமுமாக வெளியே வந்தான். அந்தப் பணம்தான் மகனை காப்பாற்றியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூட விடுமுறை நாளில் பெரியவன் கேட்டான்.
‘யப்போ, எல்லா பயலுவோலும் காக்கநல்லூருக்கு சிறுகிழங்கு எடுக்க போறானுவளாம். போயாரட்டா?’
இது தேவையில்லைதான். ஆனால், சேக்காளிகளுடன் செல்கிறான் என்பதற்காக சம்மதித்தார் நயினார்.
காக்கநல்லூர் ஆற்றுக்கு மேலே வயல். ஆற்றங்கரை செத்தைகளாலும் மரங்களாலும் சூழ்ந்தது. வரிசையாக வயலில் அமர்ந்து கிழங்கு எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதில் பாட்டிகள் முதல் குமரிகள் வரையிலும் அடக்கம். பயல்கள் சகதி படிந்த கிழங்கை வயல்காரன் பார்க்காதபோது ஒருவர் மீது ஒருவர் எரிந்துகொண்டிருந்தார்கள்.

மாலை நான்குமணியளவில் நயினாரிடம் விஷயத்தை சொன்னதும் உயிர் நின்று வந்தது. பதறியடித்துக்கொண்டு துரையப்பா வைத்தியரிடம் ஓடினார்.
வேப்பங்குலையை ஆட்டி ஆட்டி வைத்தியர் ஒருவனுக்கு பண்டுவம் பார்த்துக்கொண்டிருக்க, கீழ கிடந்தான் அவர் மகன்.
‘நல்ல பாம்பாம். கடிச்சு ரொம்ப நேரத்துக்கு பெறவுதான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. கூட போன நல்லமுத்து மவனையும் கடிச்சிருக்கு. அவன் பொழச்சிட்டான். உம்மவன்...’

‘யய்யா...ராசா... ஏலே அப்பனை இப்படி உட்டுட்டு போயிட்டியடா...’
கண்ணீரும் கதறலும் கிராமம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தது.
இன்றோடு ஒரு மாதமாகிவிட்டது.
மகனின் படத்துக்கு அருகில் விளைக்கை ஏற்றிவிட்டு அமர்ந்தாள் நயினார் மனைவி. பொட்டலத்தை தலையில் போட்டு படுத்துக்கொண்டிருந்த நயினாருக்கு எரியும் விளக்கின் ஊடாக கொள்ளி தெரிந்துகொண்டிருந்தது.


உரையாடல் - சிறுகதை போட்டிக்கு

,

10 comments:

☼ வெயிலான் said...

அண்ணாச்சி,

உங்களுக்கே இது நாயமாத் தெரியுதா?
ம்...... நடத்துங்க.

Anonymous said...

தலைவா, நீங்கள்ளாம் ஆட்டையில கலந்துகிட்டா பச்சப்புள்ளைங்கல்லாம் என்ன செய்யிறது :-) (நவீன) கி.ரா அவர்களே

வாழ்த்துகள், முபாரக்

ஆடுமாடு said...

வெயிலான், எனக்கும் தெரியுது. பைத்தியக்காரன் அவசரப்படுத்துனதுல... ஹி..ஹி.

நன்றி.

ஆடுமாடு said...

//நீங்கள்ளாம் ஆட்டையில கலந்துகிட்டா பச்சப்புள்ளைங்கல்லாம்..//

முபாரக் நானும் பச்சப்புள்ளதான்.

//(நவீன) கி.ரா அவர்களே//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேதியே...
என்னமோ போங்க.

நன்றி

நறுமுகய் said...

நண்பரே நலமா? நான் நறுமுகய் . எனது பணி தமிழ் இலக்கிய மாற்று எழுத்தாளர்களை இணையத்தில் ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களது வலைப்பூக்களை தொகுத்து வலையிதழாக காட்சிக்கு வைப்பது. இது மற்ற திரட்டிகள் போல உங்கள் பதிவுகளை ஒரு சில நிமிடங்கள் அல்லது மணித்துளிகள் முன்னிறுத்திவிட்டு பின்பு மறையும் "நட்சத்திர" தி(வி)ரட்டி அல்ல... 365 நாட்கள், 56 வாரங்கள், 12 மாதங்கள், 4 பருவகாலங்கள் உங்களின் கடைசி பதிவை தன் அகத்தில் தாங்கி வளர்க்கும் தாய் போன்றது! இதன் இணைப்பை நீங்கள் உங்கள் வலைப்பூவில் இணைத்தால் மிகவும் மகிழ்வேன்!

அன்புடன்..
"நறுமுகய்"
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்மானம் வலைச்சிற்றிதழ்

அகநாழிகை said...

நண்பரே,
கதை அருமை என்று சொன்னால் வெற்று வார்த்தையாக வாய்ப்பிருக்கிறது. உண்மையிலேயே நன்றாக இருக்கிறது,

சரி, நயினார் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர்தானே ? (சந்தேகமாகத்தான் கேட்கிறேன்) தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆடுமாடு said...

பொன் வாசுதேவன் ஐயா வருகைக்கு நன்றி.

நயினார் என்றால சித்திரபுத்திர நயினார். இவர் யாரென்றால் எமனுக்கு கணக்குப்பிள்ளை மாதிரி. இவரிடம்தான் எமன் கேட்பாராம்,'அவன் என்ன பண்ணுனா, இவன் என்ன தப்பு பண்ணினாம்'னு. அதனால இது குறிப்பிட்ட சாதியின் பெயராக இருக்க வாய்ப்பில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் நயினார் என்கிற அதிகமாக வைக்கப்படுகிறது.

சித்திரை மாதத்தில் 'நயினார் நோன்பு' என்ற விரதம் வரும். அன்று எண்ணெய் தேய்த்து குளித்து பாவத்தை போக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடவி நயினார் என்ற கோயிலும் இருக்கிறது. சில கோயில்களில் தெய்வங்க்களினூடாக இந்த சாமியையும் வைத்திருக்கிறார்கள்..

நன்றிங்கய்யா.

ஆடுமாடு said...

நறுமுகய், ஐயா நன்றி.

எப்படி இணைக்க வேண்டும் என்று சொன்னால், இணைத்து விடுகிறேன். எனக்கு கம்ப்யூட்டர் அறிவு குறைவு.

நன்றி.

மணல்வீடு said...

vanakkam.
kolli
verum sambavakkurippaga irrukkirayhu.
hari

ஆடுமாடு said...

அண்ணேன் மணல் வீடு, நீங்க சொல்றது சரிதான்.

நன்றி