Monday, June 1, 2009

கேரக்டர்: சாமி கொண்டாடி-2

மந்திரக்கோனுக்கு, இவன் ஏன் வர்றாம்னு ஒண்ணும் பிடிபடல. மொகத்தை வேறபக்கம் திருப்பிட்டு, யோசிக்குத மாதிரி உக்காந்திருந்தாரு.
என்னைக்கும் வராத சம்முவக்கோனை,'வாரும்யா, இங்ஙன உக்காரும்'னு சொன்னாரு சின்ன சுப்பையா. துண்டை உதறிட்டு உக்காந்தாரு.

வெவாரம் ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும்னு பாத்துட்டு இருந்த சம்முவக்கோனுக்கு சப்புனு போச்சு. சும்மா அவங்கவங்க அங்கங்க உக்காந்து பேசிக்கிட்டிருக்காவோ. எதுக்கு இப்டி இருக்காவோன்னு அவருக்கு பிடிபடல.

அந்தானி, சின்ன சுப்பையாவை கூப்டு, 'இப்ப யாரு வரணும்னு காத்திருக்கியோ. வெவாரத்தை ஆரம்பிக்க வேண்டியதானே"ன்னு சொன்னாரு. இவரு பேசிக்கிட்டிருக்கதை, மந்திரக்கோன் கோஸ்கண்ணு போட்டு பாத்துட்டு, சண்முவக்கோன் ஏதோ வில்லங்கத்தோட தான் வந்திருக்கான்னு நெனச்சிக்கிட்டாரு.

சின்ன சுப்பையா, சத்தம் போட்டு, ஏம் இப்டி உக்காந்திருக்கியோ. வெவாரத்தை ஆரம்பிக்க வேண்டியதான'ன்னு சொன்னாரு.
'இரும்யா. வெவாரத்துக்கு வர வேண்டிய மோவப்பயல காணுமே"ன்னு சத்தம் வந்ததும், எதுத்தாப்ல சம்முவக்கோன் மவன் கண்ணனும், மோகப்பயலும் வந்தாவோ.

மந்திரக்கோனுக்கு திக்குனு ஆயிப்போச்சு. ''சரிப்பா. வந்துட்டாம். ஏல மோவா, நீ பெரியசாமி கொண்டாடிய, எச்சிக்கையால கன்னத்துல அடிச்சிருக்கே. இது உம்மையா இல்லையா" ன்னு மந்தரக்கோனுக்கு சிங்கி அடிக்கத, கசமுத்து கேட்டாம்.
மோகப்பய சம்முவக்கோனை பாத்தாம்.

'மொதல்ல எனக்கொரு பஞ்சாயத்து இருக்கு. அதை பேசிட்டு, பெறவு இதை பேசுவோம்"னு ஆரம்பிச்சாரு சம்முவக்கோன்.

கூட்டம் புரா, இதென்ன கதைன்னு பாக்க ஆரம்பிச்சுட்டாவோ. மந்தரக்கோன் மீசையை தடவிட்டு தரையை பாத்துக்கிட்டு இருந்தாரு.
''வெஷயம் என்னன்னு சொல்லு சம்முவம். பாப்போம்" ன்னாரு சின்ன சுப்பையா.

'இங்க, பெரிய மனுஷன்னு இருக்குத சாமிகொண்டாடி இதுவரைக்கு கோயிலுக்கு வரியே கொடுக்காம ஏமாத்திருக்காரு. நாமலாம் என்ன கேணப்பயலுவோலா"ன்னு ஆரம்பிச்சாரு.

'யோவ் அஞ்சாரு தெரியுமோ உமக்கு. யாரை பாத்து என்ன சொல்லுத. நாங்கென்ன கஞ்சிக்கு வழியில்லாமயா அலையுதோம்"ன்னாம் மந்தரக்கோன் மவன். அவனுக்கு கூட மாட அவனுவ சொக்காரனுவோ வந்துட்டானுவோ.

மோகப்பய, அவரு மவனை பாத்து, ';நீ ஏம்ல குதிக்க, உங்கப்பந்தானல இதை சொன்னாரு"னு சொன்னதும் கூட்டத்துல சல சலன்னு பேச்சு.
இதுக்கு வெவாரத்தை பேசிட்டு மத்ததை பேசுவோம்னாவோ.

ஒரே காச்சு மூச்சுன்னு சத்தம். மந்தரக்கோன் போதையில சொன்னதை மோவனும், சம்முவக்கோன் மவனும் கூட்டதுல சொன்னதும் ஆதாரமா போச்சு. அங்ஙனயே புது தலைவரை தேர்ந்தெடுக்கணும்னு, மந்தரக்கோனை ஊரை விட்டு ஒதுக்கணும்னு பேச்சி. செல பேரு, ஊரைவிட்டு ஒதுக்காண்டாம், அம்மன் கோயிலுக்கு நாலுலிட்டரு எண்ணையையும், அஞ்சாயிரம் ரூபா தண்டம் (அபராதம்) கட்டச்சொல்லுங்கன்னாவோ.

இவ்வளவு நடக்கும்போது, திடீர்னு துண்டை உதறிட்டு, 'என்ன மயி்ரைல பேசுதியோ; எம்மேலயே குத்தம் சொல்ல வந்தேட்டேளா"ன்னுட்டு எழுந்திரிச்சு போவ போனாரு மந்தரக்கோன்.

யாரும் விடலை. ரொம்ப நாளா இருந்த கொஞ்ச நஞ்ச கோவத்தையும் இப்ப கொட்டி, 'உன்னையபத்திதான் பேசிட்டிருக்கு. எங்க அவசரமா வெளிய போற. உள்ள உக்காரு"ன்னுட்டாவோ. அவருக்கு அவமானமா போச்சு. மூச்சு, மேலயும் கிழயும் ஏறி ஏறி இறங்குது. சங்காபீசை சுத்தி நிக்குத ஆளுவோலாம் சுவத்துல எட்டி நின்னும, இங்க வேடிக்கை பாக்காவோ. அதுல நாலஞ்சு பொம்பளைலுவோலும் உண்டு. கோவம் கோவமாவும் வருது. இந்த நேரத்துல என்ன செய்ய முடியும்?.

மோவப்பய சொன்னதை இந்தாளு மறுத்துலாம் பேசல. அப்டின்னா ஒத்துக்கிடுதாருய்யா, அடுத்த முடிவை எடுங்கங்காவோ. ஆளாளுக்கு பேசி, பேசி கடைசில, வீட்டுல தூங்கிட்டிருந்த சூச்சமடையன் தாத்தாவை கூட்டிட்டு வந்தாவோ. இந்த மாதிரி தலைவரு, பெரியசாமிகொண்டாடிக்கெல்லாம் வெவாரம் சொல்லணும்னா பெரிய மனுஷங்க வேணும்.

உடம்பு சரியில்லைன்னு படுத்துக்கிடந்த சூச்சமடைய தாத்தா இருமிகிட்டே வந்தாரு. ஊருல பாதி சொத்து அவருக்குங்கதால அவரு பேச்சுக்கு கொஞ்சம் மரியாதையும் உண்டு. இவருக்குன்னு அவரு வீட்டுல இருந்து கயித்து கட்டுலையும் தூக்கிட்டு வந்தாவோ. அதுல வந்து உக்காந்தாரு. 'அதாவது வெவாரம் என்னனனா'ன்னு சம்முவக்கோன் ஆரம்பிச்சாரு.

எல்லாம் தெரியுங்கத மாதிரி கையை காண்பிச்சாரு தாத்தா. செத்த நேரம் அமைதியா இருந்தாரு. அவரு பேரன் சுருட்டை கொண்டு வந்து கொடுத்ததும் பத்த வச்சுட்டு, புகைய இழுத்தாரு.

'இங்க பாருங்க, கோயிலுக்கு வரி கொடுக்காம ஏமாத்திருக்கது, நம்மள மட்டுமில்லை, சாமியையும்தான் ஏமாத்திருக்கான். அதனால இனும அவன் பெரியசாமிக்கு ஆட கூடாது. இதுதான் நான் சொல்லுதது"ன்னாரு பாருங்க, கூட்டத்துல குசு குசுன்னு பேசுதானுவோ. ஓரமா செவத்துல சாஞ்சிட்டிருந்த மந்தரக்கோன், உர்ருனு பாத்துக்கிட்டிருக்கான். அவங்கூட நாலஞ்சு பேரு உக்காந்துட்டுருக்கான்.

சம்முவக்கோன், 'இதுதான் சரி;அவன் என்ன சொல்லுதான்னு கேளுங்க. அடுத்த பெரிய சாமியை தேர்தெடுப்போம்"ன்னாரு பாருங்க.

மந்தரக்கோன் வேகமா எந்திரிச்சாரு, 'நீங்க ஆட்டுததுக்கெல்லாம் நானும் என் சொக்காரப் பயலுவோலும் ஆடமாட்டோம். என்ன வேணாலும் பண்ணிக்கிங்க. அடுத்த கொடைக்கு என்னைய தவிர எந்த சாமி ஆடிடுதாம்னு பாக்கேன்"ன்னு சொல்லிட்டு போனாரு.
சூச்சமடைய தாத்தாவுக்கு சுள்ளுனு கோவம் வந்துட்டு.
'ஏல அவனை புடிச்சு இழுங்களே"ன்னாரு.

நாளைக்கு சொல்றேன்.

4 comments:

Sarav said...

விரைவில் தொடரவும். வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

கண்டிப்பாங்க. நன்றி

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

என்ன அண்ணாச்சி,
நாளைக்குனு போட்டுட்டு இப்படி 3 மாசம் கழிச்சு வரறீங்க..
ஆனா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருறீங்க..

ஆடுமாடு said...

ஹலோ இந்தி பார்ட்டி. நன்றி.
அதென்ன தலைப்பு வச்சிருக்கீங்க?