Sunday, March 29, 2009

கேரக்டர்: சாமி கொண்டாடி-1

சைக்கிளு மோகனுக்கு மோந்து பாத்தாலே போதை ஏறிரும். இன்னைக்கு வேற கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டான். பயலுக்கு நடக்க முடியலை. ஆத்து மணல்ல அங்கயும் இங்கயுமா அலைஞ்சுகிட்டு வந்தவன், பெரிய தாழைகிட்ட வந்ததும் பொத்துன்னு விழுந்துட்டான். இந்த தாழைக்கு பக்கத்துல வரப்பு மேல ஏறி கல்யாண வீட்டு போவணும். அதுக்குள்ள இந்தப் பய இப்படி விழுந்துதொலைச்சுட்டான். கூட வந்தவனுவோல்ல கொஞ்சம் பேரு, முன்னாலயே போயிட்டானுவோ.

மந்திரக்கோன் நெலமையும் கொஞ்சம் சரியில்லை. வரப்புக்கிட்ட போனதும் குபுக்குனு வாயால எடுத்துட்டாரு. குத்தவச்சுகிட்டு 'ஆங்.. ஆங்" தரையை பார்த்து துப்பிக்கிட்டிருந்தாரு. வெயிலு வேற சுள்ளுனு அடிக்கு. ஆத்துல தண்ணி, ஓடை மாதிரி ஓடிட்டு இருக்கு. என்னதான் வெயிலடிச்சாலும் லேசான குளிரு இருந்துகிட்டுதானிருக்கு.

இவங்களை கூட்டிட்டு வந்த உள்ளூர்க்கார பயலுக்கு வேசடையா போச்சு. இப்படி விழுந்துட்டானுவளேன்னுதான். மோகனை கைய புடிச்சு இழுத்து இழுத்து பாத்தான். அங்க திரும்புதான் , இங்க திரும்புதான ஒழிய எழ்ந்திருக்க வழிய காணோம். அந்தானி, துண்டை தண்ணியில நனைச்சுக் கொண்டு வந்து, அவன் மூஞ்சில புழிஞ்சான். மோகன் கண்ணை தொறந்துட்டு, 'எனக்கு என்னாச்சு?'ன்னு எழுந்திரிச்சு முட்டியை கெட்டிக்கிட்டு உக்கார்ந்தாம். வேட்டி ஒரு பக்கம் கெடந்தது. சட்டை பையில பாத்தான். வச்சிருந்த ரூவா அப்டியே இருந்தது.

'ஏண்ணே... எந்திரு... சாப்டுத நேரமாச்சு"'

அவன் கையை பிடிச்சு இழுத்தான். கூட்டிட்டு வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிப்போச்சு. வரப்பு கிட்ட வந்தா மந்திரக்கோன் மல்லாந்துக்கிடக்காரு... வேட்டி சட்டையெல்லாம சவதி கரை.

பேச்சு மட்டு்ம் அன்னா இன்னான்னு பேசுதானுவோ. ஒரு பாட்டிலுக்கு தாங்கமாட்டக்கானுவளேன்னு நெனச்ச உள்ளூக்காரன், அண்ணாச்சோ.. அண்ணாச்சோ...ன்னு உசுப்பி உசுப்பி பாத்தான். பொரண்டு பொரண்டு படுத்தவரை அதே போல ஈரத்துண்டை எடுத்து மூஞ்சியில பிழிஞ்சு..., கண்ணை தொறந்து பாத்தாரு... எப்படி இங்ஙன விழுந்தேன்னு மொணங்கிட்டு நடக்க போனாரு, காலு ஆடுது. பின்னால வந்த மோகனை புடிச்சுக்கிட்டாரு... அவன் ஒருபக்கம் லம்புதாம்... இவரு ஒருபக்கம் லம்புதாரு... அப்டியே நடந்து வந்துட்டிருக்காவோ. இவ்வோ தண்ணியடிச்ச லெச்சனம், கல்யாண வீடு பூரா தெரிஞ்சு, மோகன் பொண்டாட்டி வந்து ஏசுனா.

'ஏய் ச்சீ கேவலப்படுத்தாத.. போட்டி"ன்னான் அவன்.

மந்திரக்கோன் பொண்டாட்டி, இந்த மாதிரி நேரத்துல கிட்ட வரமாட்டா. வந்தா எட்டிக்கிட்டு மிதிச்சிருவாரு. இதே போல பலமுறை அனுபவ பட்டுருக்கதால, அந்த வீட்டுல வேற சட்டையை வாங்கிட்டு வந்து, 'ஏல தம்பி, அவரு சட்டையை மாத்தி விடுய்யா"ன்னு கொடுத்தா.

அந்தாப்ல பந்தியில எல்லாரும் மத்தியானம் சாப்டுட்டு இருந்தாவோ. ஏழு வவை கூட்டு பொறியலு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோருன்னு வரிசையா வச்சிருந்தாவோ. சைக்கிளு மோகன், பேச்சு வாக்குல சொன்னான், 'என்னதாம் சொல்லும்யா, தென்காசியில நடந்த எங்க அக்கா மவன் கல்யாணத்துக்கு வச்ச சாப்பாடு மாதிரி வேற எங்கயும் நான் இன்னைக்கு வர சாப்டதில்லை... என்ன சொல்லிதீரு"ன்னான்.

மந்திரக்கோன் இதை சாதாரணமா விட்டிருக்கலாம். போதை வேற உள்ள போயிருக்கா.

'எங்க வந்து சாப்டுட்டு என்னல சொல்லுத... இந்த சாப்பாடை கேவலமாவால பேசுத" ன்னுட்டு டமார்னு அவன் கன்னத்துல அடிச்சுட்டாரு. கூட சாப்ட்டுட்டு இருந்தவளோலாம் இவரை பிடிக்க, மோகனுக்கு சுள்ளுனு கோவம். எலயில இருந்து கைய எடுத்து எச்சிக் கையோட மொகத்துல வேகமா விட்டாம் பாருங்க... கிர்ருனு ஆயிப்போச்சு மந்தரக்கோனுக்கு. கல்யாண வீடு கலவர வீடா போச்சு. மோகனுக்கு கொஞ்சம் பேரு, மந்தரக்கோனுக்கு கொஞ்சபேருன்னு சத்தம் போட்டுட்டு இருக்காவோ.

''பெரியசாமிகொண்டாடிய எப்படி அந்தப் பய அடிக்கலாம்"

''சாமி கொண்டாடியா இருந்தா அவர் யாரையும் கை நீட்டலாமோ"

இப்படியே பேச்சு, போயி போயி ஊர்ல வெவராம் வச்சாச்சு. மந்தரக்கோனுக்கு இது மானப் பிரச்னையா போச்சு. இதுக்கு மட்டும் தண்டனை கொடுக்கலன்னா ஊருல ஒரு பய மதிக்கமாட்டாம்னு நெனச்சாரு. இதுக்காக சொக்கார பயலுவோல, தனக்கு சாதகமா என்ன பண்ணணுமோ அதை பண்ணி ரெடி பண்ணிவச்சிட்டாரு... அந்தானி, பஞ்சாயத்து கதவு தெறக்குத சத்தம் கேட்டது. மந்திரக்கோன் திரும்பி பாத்தாரு...கொஞ்ச காலமா பஞ்சாயத்து பக்கம் வாராத சம்முவக்கோன் மீசையை தடவிகிட்டு உள்ள வந்துகிட்டிருந்தாரு.

நாளைக்கு...

8 comments:

ராஜ நடராஜன் said...

உங்களின் தனிநடை பளிச்சிடுகிறது!

குசும்பன் said...

திரும்ப வந்தாச்சா!

சூப்பர்

M.Rishan Shareef said...

வழக்கம்போல அருமையான இடத்துல விட்டுட்டுப் போறீக.. !

ஆடுமாடு said...

ராஜ நடராஜன் நன்றி.

ஆடுமாடு said...

kusumbu yes vanthachu.

ஆடுமாடு said...

ரிஷான் நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

போங்கப்பு நாளைக்குன்னுபுட்டு இதென்னா இம்மா நாளாச்சு கேக்குதுக்கு ஆருமில்லாட்டா சாமி பூடமேறுமாமில்ல......
சீக்கிரம் போடுங்கப்பா அடுத்த பத்திய...

Sarav said...

Hi,
It is really long gap.. Please continue...

-Sarav-