Tuesday, March 24, 2009

கேரக்டர்: சாமி கொண்டாடி

பூதத்தாரு கோயில்ல மந்திரக்கோன்தான் பெரியசாமி கொண்டாடி. அவருக்கு முன்னால பலவேசக்கோன் ஆடிக்கிட்டிருந்தாரு. 25 வருஷத்துக்கு முன்னால மாட்டு வண்டி ஆத்துல உருண்டு தண்ணில முங்கி அவரு செத்த பெறவு, மந்திரக்கோனை பெரியசாமியா ஆக்குனாவோ. அவரும் ஆளு கம்பீரமா இருப்பாருல்லா. மீசையை திருக்கிட்டு, 'ஏல'ன்னாருன்னா எல்லா பயலுவோலும் பயந்துருவானுவோ. அதட்டலா இருக்கும். பெரியசாமிகொண்டாடி வேறயா. ஊருல அவருக்கு முக்கியத்துவம் ஜாஸ்தியாபோச்சு. வயக்காட்டு பிரச்னை, தண்ணி பிரச்னைன்னா அவரைதான் கூட்டியாந்து வெவாரம் பேசுவாவோ. இவரும் நியாயம், தர்மம் பாத்துல்லாம் சொல்லமாட்டாரு. எவன் அவருக்கு வேண்டியவன்னு பாத்து அவனுக்கு ஏத்தாப்ல வெவாரத்தை முடிப்பாரு. அவருக்கு சிங்கி அடிக்க, கூட மாட அஞ்சாரு பேரு இருப்பானுவோ. பெறவு கேக்கணுமா? அவரு சொல்லுததுதான் சட்டம்.

கோயில்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் கொட. மூணுநாளு கொட நடக்கும். கொட செலவுக்கு தல கட்டுக்கு இவ்வளவுன்னு வரி வைப்பாவோ. கொஞ்சம் ஏழைபாழை கொடுக்கமுடியலன்னா கூட விடமாட்டாவோ. கடனை வாங்கியாவது குடுக்கணும். சில பேருக்கு அது மான பிரச்னை. வரி கொடுக்காத பயன்னு கேவலமா பேசிருவாவோன்னுட்டு, பொண்டாட்டி தாலியை கூட அடவு வச்சு கொடுத்துருவானுவோ. கோயிலு செலவயெல்லாம் பெரியசாமிகொண்டாடி மவந்தான் பாத்துக்கிடுததால, அவரு வரியை கொடுக்க மாட்டாரு. ஆனா, கொடுத்த மாதிரி கணக்கை காண்பிச்சி, செலவுல அதுஇதுன்னு எழுதிக்கிடுவானுவோ. இது பலவருஷ கோயில் கொடையில நடந்திருக்கு. சனி வாயில இருக்குன்னு சொன்ன மாதிரி, ஒரு நாளு தன்னோட வாயாலயே மாட்டிக்கிட்டாரு மந்திரக்கோன்.

பாப்பாக்குடி பக்கத்துல இருக்குத நந்தந்தட்டையில, அவரு தங்கச்சி மவ கல்யாணம். ஊர்க்காரங்க எல்லாரும் போயிருந்தாவோ. இந்த கல்யாணம் காய்ச்சின்னா தண்ணி இல்லாமயா. தாலிகட்டி முடிஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு, மந்தரக்கோன் மச்சான், 'யோவ், நம்ம மருமவ பய இப்பம் வருவாம். கூட வந்த ஆளுவோளை கூட்டிட்டு ஆத்து வரைக்கும் போயிட்டு வந்திரும்'னு சொன்னாரு. ஆத்துக்குள்ள ஒரு தாழக்குப் பின்னால வடிப்பு (சாராயம்).

மந்திரக்கோன், ஊர்க்காரன்ல குடிக்குதவனையெல்லாம் கூட்டிட்டு போயிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணப்பயயலும் கல்யாணத்துக்கு வந்திருக்காம். இந்தப்பய குடிக்க மாட்டான். மந்திரக்கோனுக்கும் இவங்க குடும்பத்துக்கும் ஆவாது. சொக்காரனுவோன்னாலும் சொத்து தகராறு. வந்த ப்யல கூப்டாம இருக்க முடியுமா? அந்தானி, மந்திரக்கோனுக்கு ஒத்து ஊதுத பயலை கூப்டு, 'ஏல அந்தப் பயலை கூப்டுக்கோ. இல்லன்னா, அதை வேற கொறயா சொல்லுவானுவோ"ன்னாரு. சரின்னு அவனும் கூப்டான். வேட்டிய மடிச்சு கெட்டிட்டு போயிட்டாம். மொத்தம் 12 பேரு.

போய் ஆத்து மணல்ல, தென்னம்பிள்ளை நெழல்ல உக்காந்தாச்சு. ஆளாளுக்கு ஒருபாட்டுல சாராயமுப். கொஞ்சம் ஊறுகாயும். வெறுவாகெட்ட பயலுவோ கொஞ்சம் கொஞ்சமா குடிக்கணுங்கறதெல்லாம் கெடயாது. அந்தானி, பாட்டிலை கையில புடிச்சு, கண்ணை பொத்திட்டு சடசடன்னு உள்ள இறக்கிட்டானுவோ. அந்தானி, செத்த நேரத்துல உச்சிக்கு ஜிவ்வுனு தூக்குச்சி பாருங்க, எல்லா பயலுவோலுக்கும் வாய் உளறலு. சைக்கிளு கடை மோகனனுக்கு தண்ணி ஒவரா ஆயிட்டுன்னா, பய அழுது தொலைச்சுருவாம். அந்தானி, கவலையை எல்லாம் பொலம்பவும் ஆரம்பிச்சிருவாம்.

ஊருகாயை பூராம் நக்கிட்டு, வேட்டியில மடிச்சி வந்திருந்த கதலி பழத்தை எடுத்து தின்னான் மோகன். 'ஏலே.. இதை எப்பம்ல வாங்குன. அரவமில்லாம எடுக்க"ன்னாவோ.
'ஆமா, குடிக்கன்னு போறோம். திங்கதுக்கு எதும்னு வேண்டாமான்னுதான் வாங்குனேன்"ன்னுட்டு புலம்ப ஆரம்பிச்சிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணன், குடிக்கலைன்னாலும் ஊறுகாயை நக்கிட்டு, இவங்களை வேடிக்கைப்பாத்துட்டு இருந்தாம்.

மோகன், 'ஏண்ணே இன்னும் கோயிலு வரிக்கு வாங்குன கடனை அடைக்கலண்ணே. தெனமும் வீட்டுலவேற சண்டை"ன்னு அழ ஆரம்பிச்சாம் பாருங்க... மந்திரக்கோன் மத்த பயலுவோளை பாத்தான். எல்லாம் தலையை தொங்கப்போட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருந்துச்சு. அந்தானி, மோகன் காதுகிட்ட வந்து சொன்னாரு மந்திரக்கோன் .'ஏ ஆக்கங் கெட்ட பயல. இதை மொதல்லயே சொல்லிருந்தனா... வரி கட்டாமயா கட்டுனமாதிரி காட்டிருக்கலாம்ல"ன்னான்.
'எப்டி மாமா"
அந்தானி வெவரத்தை பூரா மந்திரக்கோன் சொன்னாம் பாருங்க, கண்ணப்பயலுக்கு திக்குனு ஆயிபோச்சு. இவனுவோ தடுமாறி வாரதுக்கு முன்னால, நடந்து போனான் கண்ணன்.

நாளைக்கு சொல்லுதேன்

9 comments:

M.Rishan Shareef said...

உங்களது அபாரமான கிராமத்து நடை உங்கள் பக்கம் தொடர்ந்தும் இழுத்துவருகிறது. தொடர்ந்து அடிக்கடி எழுதுங்கள் நண்பரே !

தமிழன்-கறுப்பி... said...

தண்ணியடிச்சா உளறாம இருக்கத்தெரியாதா...?

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நாளைக்கப்புறமா எழுதினாப்புல..?

அத்திரி said...

சுவாரஸ்யமா இருக்கு

Anonymous said...

ரொம்ப நாள் கழிச்சு சாமி கொண்டாடியோட வந்திருக்கீக. பாதியில சடார்னு முடிச்சிட்டு போயிராதீக.

ஆடுமாடு said...

//உங்களது அபாரமான கிராமத்து நடை உங்கள் பக்கம் தொடர்ந்தும் இழுத்துவருகிறது//

ரிஷான் புல்லரிக்குது. நன்றி

ஆடுமாடு said...

தமிழ்ன் கறுப்பி, அத்திரி வருகைக்கு நன்றி.

ஆடுமாடு said...

//பாதியில சடார்னு முடிச்சிட்டு போயிராதீக//

இல்லைங்க வெயிலான். உங்க நண்பரை சந்திச்சேன். சொன்னாரா?

வெயிலான் said...

// உங்க நண்பரை சந்திச்சேன். சொன்னாரா? //

ம். நான் பாத்தீங்களா?னு கேட்டப்பறம் சொன்னார். மகிழ்ச்சி.