Saturday, February 14, 2009

கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-4

எல்லா ஊர்க்கதைகளையும் தோண்டி எடுத்து பொரணி பேசும் ஊருக்கு இவர்கள் விவகாரம் தெரியாமலிருந்தது ஆச்சர்யம்தான். பலவேசம் கனவுகளோடு பழையபடி பலூன் விற்க போனான். பிச்சம்மாளைப் போல சாயல்கொண்ட பெண்களிடமெல்லாம் ஏதாவது பேசி விடுகிற துணிச்சல் அவனுக்கு இருந்தது. மனம் மனதுடன் போட்டிப்போட்டு போட்டுக்கொடுக்கிற துணிச்சல்.

ஒரு பெண்ணை தனியாக ஊரைவிட்டு கூட்டிச்சென்ற பலவேசத்துக்கு அவளை கட்டியணைக்கின்ற வாய்ப்பு கூட கிடைக்காதது அவனது துரதிர்ஷடம். அதற்கான வாய்ப்பு வந்தும் கூட , உள்மன சொல்படியோ, தன்னை நேர்மையானவனாக காட்டிக்கொள்கிற பக்குவத்தாலோ அவன் அப்படி செய்யாமலிருந்திருக்கக் கூடும்.

ஆனால், ஆசை எல்லாருக்குமானதுதான். அது கடுகளவு நிலத்தில் காடளவு தீயை மூட்டும் சூச்சுமம். இப்படியானதொரு தனி சந்திப்பையும் ஒரு கட்டியணைத்தலையும் பிச்சம்மாவும் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் கருத்தப்பிள்ளையூர் மாமா வீடு அவனுக்கும் அவளுக்கும் அதை கொடுத்திருக்கவில்லை.

சைக்கிளை வீட்டுக்கு வெளியே சாத்திவிட்டு, உள் நுழைந்து போர்வைக்குள் தன்னை அடக்கிக்கொள்கிற பலவேசத்துக்கு நித்தம் இது ஒரு வேதனையாக இருந்தது. அவளுக்கும் இருக்கின்ற வேதனை.

கட்டிலில் இருந்து போர்வை உத்றி எழுந்தான் பலவேசம். அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குள் தூங்கிகொண்டிருந்தார்கள். இந்நேரம், பிச்சம்மாள் திண்ணையும் படுத்திருப்பாள். அமைதியாக எழுந்து அவளது வீட்டுக்குள் நடந்தான். தெரு நாய்கள் இவனை திருடன் என நினைத்து குரைத்தன. அதை பொருட்படுத்தாமல் நடந்தான். அவள் வீட்டுக்குள் நுழைந்து தட்டிக்குள் எட்டிப்பார்த்தான். அவளது அப்பாவின் குறட்டைச் சத்தத்தையும் மீறி அவள் தூங்கிகொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டில் ஒண்ணுக்கிருக்க எழுந்த பெண், ஏதோ உருவம் நிற்பதை அறிந்து, 'ஏங்க... திருட்டு பய... வாங்க வாங்க" என கத்த, ஓடினான் பலவேசம். முட்கள் தாண்டி வேகவேகமாக ஓடினாலும் பாபநாசத்தேவன் எறிந்த ஈட்டிக்கம்பு காலில் குத்தி பொத்தென்று விழுந்தான் பலவேசம். அதற்கு மேலும் ஒட முயற்சித்த அவனது கால்கள் நடை மறந்தன. இந்த எந்த விஷயமும் அறியாத பிச்சம்மா குடும்பம் இன்னும் நித்திரையில் ஆழ்ந்திருந்தது.

ஊருக்குள் நான்கைந்து மாதமாக கோழிகளும் ஆட்டுக்குட்டிகளும் காணமல் போயிருந்த கணக்குகள் பலவேசத்தின் மீது விழுந்தது. இல்லை இல்லை என மன்றாடி பார்த்தான். இதற்குள் பலமான சாத்துகள் அவனுக்கு விழுந்திருந்தன.

'திருட்டு பயலுவோ என்னக்குல உண்மையை சொல்லியிருக்கானுவோ. இவன போலீஸ்ல கூட்டிட்டு போயி விட்டாத்தாம் சரிபடுவானுவோ".

பிச்சம்மாளைப் பார்க்க வந்த விஷயத்தையும் ஏற்கனவே ஊரைவிட்டு ஓடிய விஷயத்தை சொன்னால் இந்நேரம் பலவேசம் தப்பிக்கலாம். ஆனால், அதற்கு பிற்கு பிச்சம்மா குடும்பத்திற்கான மானம் சுருண்டு விழுந்து விடும் என்பதால் அதை சொல்ல முடியவில்லை அவனுக்கு.

ஊருக்குப் பொதுவான அம்மன் கோயில் தூணில் கட்டி வைக்கப்பட்டிருந்தான் பலவேசம். அவனது அம்மாவும் அப்பாவும் அழுதுகொண்டிருந்தார்கள். விஷயம் தெரிந்து காலையில்தான் பிச்சம்மா வந்து பார்த்தாள். அவளுக்கும் துக்கமாக இருந்தது. முதல் பஸ் வந்ததும் அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதற்கான் ஏற்பாடுகளை பெரிசுகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

காணாமல் போன ஏழு செம்மறி ஆடுகள், நான்கு வெள்ளாடுகள், ஒன்பது கோழிகளை இவன்தான் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டதன் பேரில் பலவேசன் முதல் பஸ்சில் அழைத்துச்செல்லப்பட்டான்.

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் பிச்சம்மாளின் கண்களில் கனவு பூச்சிகள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. மேலும் கீழும் செல்லும் அப்பூச்சிகளின் மீது பெருமழை பெயதுகொண்டிருந்தது. அம்மழை கனவுகளை மட்டுமே பெய்துகொண்டிருந்தது.

முற்றும்.

6 comments:

M.Rishan Shareef said...

கதையின் இறுதிப்பாகம் மிகவும் கவலையளித்தது. கற்பனையாகவே இருக்கட்டும். இனி நீண்ட நாட்களுக்கு பலவேசமும், பிச்சம்மாவும் என் மனதை அரித்துக் கொண்டிருப்பார்கள்.

//ஆசை எல்லாருக்குமானதுதான். அது கடுகளவு நிலத்தில் காடளவு தீயை மூட்டும் சூச்சுமம். //

மிக அழகான, ஆழமான வரிகள்.
பாராட்டுக்கள் நண்பரே !

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஏன் கடசீல இப்படி முடிச்சீங்க... ஒரு கண்ணாலத்தை கட்டி வைச்சிருக்கலாமில்ல..

ஆடுமாடு said...

நன்றி ரிஷான்.//ஏன் கடசீல இப்படி முடிச்சீங்க... ஒரு கண்ணாலத்தை கட்டி வைச்சிருக்கலாமில்ல//

அதை ஏன் நான் முடிக்கணும். அவன் ஜெயில்ல இருந்து வந்ததும் பண்னிட்டு போறாவோ.

அத்திரி said...

உங்க கதையை இப்பதான் ரெண்டு மூனு மாசமா படிச்சிட்டு இருக்கேன்.. அதுக்குள்ள முடிச்சிட்டீங்க... உங்க கதையில நம்ம ஊர் பேச்சு வழக்கம் எனக்கு ரொம்ப புடிக்கும்.

நம்ம கட பக்கம் வர்றது.......

Anonymous said...

சார் வணக்கம். வெகு நாட்களாக பேசமுடியாமல் போய்விட்டது, நல்லா இருக்கிறது கதைகள்,

எனக்கு ஒவ்வொன்றும் ஒரு காட்சிகளாகவே இருக்கிறது,

உங்களையெல்லாம் படிக்கும்போதுதான் கால்சட்டை நாட்களில் மல்லாட்டை வயலுக்கு காவல்காக்க போன நாட்கள் ஞாபகத்துக்கு வருகிறது ,பச்சைமல்லாட்டையை பால் வடிய பால்வடிய மென்று தின்ற நாட்கள் ஞாபகத்துக்கு வருகிறது. தொடருங்கள்....

நானும் திரும்பி திரும்பி என் பிஞ்சு நாட்களை பகிர்ந்து கொள்கிறேன்...

நிறைய அன்புடன்
வீரமணி

ஆடுமாடு said...

நன்றி வீரமணிஜி.