Saturday, August 30, 2008

கேரக்டர் 8 - பூழாத்தி -4

சொந்தக்காரங்க கல்யாணம் காட்சின்னா, பூழா ஒரு திருட்டுதனம் செய்வா. யாரு வீட்டுல புது சேலைய வெளுக்க போட்டுருக்காவலோ அந்த சேலைய எடுத்து உடுத்திக்கிடுவா. இந்த திருட்டுத்தனத்தை மறைக்க, காலையிலயே மொத பஸ்ல ஊருக்கு கெளம்பிரணும். கல்யாணம் காட்சி முடிஞ்சு ராத்திரி போல கடைசி பஸ்லதான் திரும்புவா.

இப்படித்தான் ஒரு நா வரும் போது, மாடத்தி பாத்துட்டா. அம்பாசமுத்ரம் கல்யாணி தியேட்டர்ல சினிமா பாத்துட்டு கடைசி பஸ்ல மாடத்தி வரும் போது, நல்ல கூட்டம். முண்டியடிச்சு டிரைவரு சீட்டுக்கிட்ட நின்னுகிட்டு, வீட்டுக்காரன் ஏறிட்டானான்னு பின்னால திரும்பி பார்த்தா. சேல கண்ணுல பட்டுட்டு. யாரோ நம்ம சேல மாதிரியே கெட்டிருக்காவோலன்னு நாலஞ்சு தடவை பார்த்தா. பெறவுதான் தெரிஞ்சுது அது பூழான்னும், கெட்டிருக்கது அவ சேலதான்னும்.

உச்சிக்கு ஏறிட்டு கோவம். பஸ்ல திட்டக்கூடாதுன்னு நெனச்சிட்டா. இருந்தாலும் மூசு மூசுன்னு மூக்கு விரியுது. இவ நிக்கதை பூழா பாக்கல. ஊரு வந்ததும் இறங்குன மாடத்தி, கார்சாண்டுக்கு தள்ளி, இருட்டுல நின்னுகிட்டா. பூழா, ஒண்ணும் நடக்காத மாதிரி இறங்கி பொட பொடன்னு நடந்ததுதான் தாமதம், மாடத்தி அவ கைய எட்டி புடிச்சுக்கிட்டு, மானங்கெட்ட கேள்வி கேட்டா. இவ போட்ட அவயத்துல கார்சாண்டு பக்கத்துல இருந்துலாம் ஆளுவோ வந்துட்டு.

வந்தவோளும் பூழாவைதான் ஏசுனாவோ. 'இனும இப்டி பண்ணுனன்னா ஊர்ல இருந்து ஒதுக்கி வச்சுருவோம்'னு மிரட்டலு. இனும இப்படி பண்ண மாட்டேன்னுட்டு மன்னிப்பு கேட்டா பூழா. ஆனா, அந்த சேலைய மாடத்தி திரும்ப வாங்கலை. 'நீ உடுத்துனதை நான் கெட்டனுமோட்டீ... படுக்காளி செரிக்கி. நீயே வச்சுத்தொலை"ன்னு போயிட்டா.

ஆனா, பூழாவும் ரோசக்காரி. அந்த சேலைய அவ மாத்துக்கு பயன்படுத்துக்கிட்டா. மாத்துன்னா என்னன்னு சொல்லுதேன்.

ஊர்ல யாராவது மண்டைய போட்டுட்டா, மகன்கள், பேரன்கள் சொக்காரங்கன்னு நீர்மாலைக்கு போவாங்க. வாய்க்கால்ல போயி குளிச்சுட்டு, கையில சொம்புல தண்ணி கொண்டு வந்து மண்டைய போட்டவரு கால்ல ஊத்தணும். இப்படி நீர்மாலைக்கு போய்ட்டு வாரவங்களை பந்தல் மாதிரி துணியை புடிச்சுக்கிட்டு அதுள்ளதான் வரணும். பூழா, மாடத்தி சேலையை இதுக்கு பயன்படுத்திக்கிட்டா.

இது முடிஞ்சதும் சொக்காரங்க ஒரு பொட்டியில அரிசி, நெல்லு கொண்டு வரணும். தலைய விரிச்சு போட்டு, பொம்பளைலுவோ எல்லாம் இப்படி வரும்போது, தரையில துணியை விரிச்சுக்கிடுவாவோ. த்லைக்கு மேலயும் பந்தல் மாதிரி புடிச்சுக்கிடுவாவோ. இதுக்கு பேரு மாத்து. இதுக்குலாம் வெள்ளை வேட்டிய பயன்படுத்திக்கிடுவா பூழா.

இது முடிஞ்சதும். மண்டைய போட்டவரை சுடுகாட்டு தூக்கிட்டு போவாவோ. கொள்ளி வைக்க போறவங்க, அவங்க அண்ணன், தம்பி யாராவது இருந்தா அவங்களும் இந்த மாதிரி துணி பந்தலுக்குள்ளதான் நடக்கணும். சுடுகாட்டு கிட்ட போனதும் இந்த துணியில பெரிய மனுசங்க உக்காந்துகிட்டு மொய் பிரிப்பாவோ. அந்த மொய் 2ரூவா, 5 ரூவான்னுதான் இருக்கும். இது எதுக்குன்னா, யாரு யாரு செத்ததுக்கு வந்திருக்காங்கன்னு அப்பதான தெரியும். அதுக்குதான். இப்படி பிரியுத துட்டை, பூழாவுக்கோ பூழா வீட்டுக்காரனுக்கோ கொடுத்துருவாவோ.

அது ரெண்டு மூணு நாளு செலவுக்கு ஆவும்.

அடுத்தாப்ல சொல்லுதேன்.

Friday, August 22, 2008

கேரக்டர் 8 - பூழாத்தி -3

இவ்வளவு வேலை இருக்கா. இதுக்கு பெறவு கருக்கல்ல ஒரு சட்டிய தூக்கிட்டு, யாரு வீட்டுக்குலாம் துணி வெளுக்காவலோ அவங்க வீட்டுக்குலாம் சோறு வாங்க போணும்.

வீட்டு வாசல்ல நின்னுகிட்டு, 'எம்மோ..பூழா வந்திருக்கேன்'னு சத்தம் கொடுக்கணும். சில பொம்பளைலுவோலுக்கு எரிச்சல் வரும். வந்துட்டாளா? இதுக்கு மட்டும் கரீட்டா வந்துருவான்னு முணங்கிட்டு பழைய சோத்தை வந்து போடுவாவோ. கொழம்புலாம் எப்பவாவதுதான். சில வீட்டுல இட்லி தோசை போடுவாவோ. அதுக்குன்னு தனி பாத்திரம் வச்சிக்கிடுவா புழா.

நாலாவதா வெறவு கடைக்காரன் வீடு இருக்கு. அவன் பொண்டாட்டி, இவ எப்ப போனாலும் எரிச்சலாதான் பேசுவா.

'கொஞ்சம் முன்னால வரவேண்டியதானே. இப்பதான் அவ்வோ(வீட்டுக்காரன்) சாப்ட உக்காந்திருக்காவோ. இப்பம் போயி வந்திருக்கியே"ம்பா. செத்த நேரம் அவ்வோ வீட்டு கோழி கூட்டு மேல உக்காந்திருக்கணும். அவரு சாப்ட பெறவு கொஞ்சம் சோறை கொண்டாந்து போடுவா. இதை விட கொடுமை ஒண்ணு இருக்கு.

'பூழா... முந்தா நாளு வச்ச கொழம்பு இருக்கு. லேசா ஊசிபோச்சு. சுட வச்சு தின்னுக்கிடுதியா"ம்பா. வேண்டாம்னு சொல்லக்கூடாது. என் வீட்டு சோறு கொழம்பை வேண்டாங்கியான்னு ஏசிப்போடுவா. அதனால தனியா அதை வாங்கிகிடுவா. சில பொம்பளைலுவோ நக்கலு புடிச்சவளுவோ.

'நம்ம என்னட்டி பூழா மாதிரியா... பல வீட்டு சோறு. வெதவெதமா கொழம்பு, கறின்னு திங்கதுக்கு. அதான் அவா குண்டா இருக்கா"ம்பாளுவோ.

வெளுக்கப்போட்ட வேட்டி/சட்டையில ஏதாவது கறை இருந்துட்டா, சாப்பாடு வாங்குத நேரத்துல தாழிச்சுடுவாவோ. பால்காரன் பொண்டாட்டி ஒரு நா சேலையில சின்னதா கிழிசல் விழுந்துட்டுன்னு பூழா செவுட்டுல அறைஞ்சிட்டா. பூழாவுக்கு என்ன செய்யன்னே தெரியல. கண்ணீரு முட்டிக்கிட்டு வந்துது. பக்கத்து வீட்டுக்காரி வந்து விலக்கி விட்டா.

'உங்க காலுக்குள்ளேயே கெடக்குதோம். இப்படி அடிக்கேளம்மா"ன்னு பூழா சொன்னா. 'அதுக்கு இப்படியாட்டி கிழிச்சு கொண்டு வருவே, எச்சிக்கலை நாயி. சோத்துக்கு மட்டும் வந்துருதே'ன்னு அவ பெறவும் அடிக்க போனா.

இப்பலாம் பூழாவுக்கு இது பழகிபோச்சு. யாரு என்ன சொன்னாலும் மூஞ்சை தொங்க போட்டுட்டு சரிம்மான்னு வந்துருவா.

வீட்டுல கல்யாணம்/ கோயில் கொடைன்னா புழாவுக்கும் அவா வீட்டுக்காரனுக்கும் வேட்டி/சேலை சட்டை எடுத்துக்கொடுக்கணும். சிலருமட்டுதான் அதை செய்வாவோ.

'ஒனக்குதான் ஒவ்வொரு அறுப்புக்கும் நெல் தாரோம். தெனமும் சோறு தாரோம். இதுக்கு பெறவு என்ன வேட்டி சேல கேக்க"ம்பாவோ. அதனால யாருகிட்டயும் போயி இவளா கேக்க மாட்டா. குடுத்தா வாங்கிக்கிடுவா.

நாளைக்கு சொல்லுதேன்.

Monday, August 18, 2008

கேரக்டர் 8 - பூழாத்தி - 2

ஊர்லயிருந்து வடக்க ரெண்டாத்து முக்கு இருக்கு. கடனா நதி ஆத்தோட கடையத்துல இருந்து வார கரண்டையாறு (ராமநதி) சேருததால இதுக்கு ரெண்டாத்து முக்கும்பாவோ. கரைக்கு ரெண்டு பக்கமும் தோப்புவோ. ஆள் நடமாட்டமில்லாம் கொறச்சல்தான். எப்ப போனாலும் இருட்டி இருக்குத மாதிரிதான் இருக்கும் இந்த எடம்.

இந்த கரையுல காளியம்மன் கோயிலு. அந்த கரையில சொடலை கோயிலு. கோயிலுன்னா பெரிய கட்டடம் இருக்கும்னு நெனச்சிடாதீயோ. இது சும்மா ரெண்டு கருங்கல் செல. கொடை கொடுக்க அன்னைக்கு மட்டும் பந்தலு போட்டுக்கிடுவாவோ.

இந்த இடத்துலதான் உவரு மண்ணு கெடைக்கும். பூழா ஒரு பனைவோலை பொட்டி கொண்டு வந்துருவா. தொணைக்கு வாரவோளும் பொட்டி வச்சிருப்பா. கரை ஓரமா மண்ணை அள்ளி சுமக்க முடியுத அளவு பொட்டியில போட்டுட்டு வருவாவோ. இந்தப் பக்கத்துல வயலுக்கு வந்த சின்னச்சியை யாரோ ஒரு பய கெடுத்துட்டாம் மூணு தலைமுறைக்கு முன்னால. அவளுக்கும் இங்க சின்னதா பூடம் இருக்கு. துடியா இருப்பாளாம். ஒத்த செத்தயில போனா புடிச்சிக்கிடுவாளாம். அதனாலதான் யாரும் தனியா வரமாட்டாவோ.

இந்த உவரு மண்ணு எதுக்குனா, துணி வெளுக்க போடுதாவோலா. அவ்வளவு துணிக்கும் சோப்பு போட்டு முடியுமா? கட்டுப்படியாவாது. அதனால ஒரு பெரிய அடுப்பு மேல வெள்ளாவி பானையை வச்சு அதுல தண்ணிய ஊத்துவாவோ. மேல ஒரு துணியை வச்சு பானை வாயை கட்டுவாவோ. கீழ அடுப்பை மூட்டிருவாவோ.

இந்த உவரு மண்ணை போட்ட சருவசட்டி தண்ணி பக்கத்துல இருக்கும். அழுக்கான துணியை எடுத்து இதுல ஒரு முக்கு. அந்தானி, அதை எடுத்து வெள்ளாவி பானை மேல வச்சிருவாவோ. இப்படி பத்து இருவது துணியை வச்சு இதையெல்லாம் சேர்த்து ஒரு போர்வையை வச்சு ஒரு கெட்டு. பானையில் இருக்குத தண்ணி ஆவியாகி, மேல வரும். துணியெல்லாம் அந்த ஆவியில நனையும். உவரு மண்ணும் அதும் சேந்து அழுககை எடுத்துரும்.

எடுத்துரும்னா துணியில கொஞ்சம் ஈரமா நசநசன்னு இருக்கும். அதை ஆத்துக்கு கொண்டு போயி தொவைப்பாவோ. அழுக்கு சுத்தமா போயிரும். (சர்ஃப் எக்ஸல்லாம் வேண்டாம்).

இதுக்கு பெறவும் பூழாவுக்கு வேலை இருக்கு. துணியையெல்லாம் ஆத்துலயே காய போட்டிருவாவோ. எது எது யாரு வீட்டு துணுங்கதுக்கு அடையாளம் போடுவாவோலா, அந்த காயிக்கு பேரு தேங்கொட்டை. மலையிலதான் இருக்கு இந்த மரம்.

ஒரு நாளு இதுக்குன்னு இங்கயிருந்து நாலு கி.மீட்டர் தூரத்துல இருக்குத கருத்தபிள்ளையூரு தாண்டி, மேற்கு தொடர்ச்சி மலை மேல ஏறி போயி, இந்த மரத்தை தேடி, காயை பறிக்கணும். இல்லைனா, கீழ கெடக்குத காயை எடுத்துட்டு வரணும். இந்த வேலையும் பூழாவுக்குதான். இதை பறிச்சுட்டு வாரதுக்கு ஒரு நாளு பூரா ஆயிரும்.

அந்தானி, காயை எடுத்து கோணி ஊசியை வச்சு ஒரு குத்து. ஊசியிலயே கருப்பும் செவப்புமான கலர்ல பால் வரும். அதை அப்படியே வேட்டி சட்டையில அடையாளத்துக்கு வைப்பாவோ. ஒவ்வொரு சாதிக்காரவோளுக்கும் ஒவ்வொரு அடையாளம். இப்ப தேவமாரு சாதின்னா ஒரு பெரிய கோடு. பக்கத்துல சின்ன புள்ளி. கோனாக்கமாருவோன்னா, ரெண்டு கோடு, பெரிய புள்ளி. பிள்ளைமாருவோன்னா, புள்ளிமட்டும். இப்படி நெறைய இருக்கு.

எல்லா வேட்டியும் வெள்ளையாத்தான் இருக்கு. இதுஇது இன்னாரு வீட்டு வேட்டின்னு எப்படி கண்டுபிடிக்க? அதுக்கும் குறியீடு இருக்கு.

நாளைக்கு சொல்லுதேன்.

Sunday, August 17, 2008

கேரக்டர் 8 - பூழாத்தி


ஊர்லயிருந்து ரெண்டு பல்லாங்கு நடந்தா ஆறு. ஆத்துல பெரிய ஆழம்லாம் இல்ல. மேக்க பேயடிச்சாம் மண்டபம் இருக்கு. அது பக்கத்துலதான் கொஞ்சமா இடுப்பு முங்குத அளவுக்கு ஆழமிருக்கும். மத்தபடி எல்லாபக்கமும் கரண்டைய நனைக்குத மாதிரிதான் தண்ணி. சின்னபாலம் பக்கத்துல மேல ஊரு சுடுகாடு. ஆத்தாங்கரைக்கு அந்த பக்கம் ஆழ்வார்க்குறிச்சிக்காரங்களுக்கு சுடுகாடு. இதுல ஐயமாருவோ சுடுகாடு தனி. இங்க மட்டும் சிமெண்டுல பூசி கட்டியிருப்பாவோ. மத்த சுடுகாடுலாம் தகர கொட்டாயிதான்.

சுடுகாட்டை தாண்டிதான் துணி வெளுக்க ஏழெட்டு கல்லை போட்டிருந்தாவோ. இது எங்கன்னா சின்னப்பாலத்துக்கு வலப்புறம். கல்லுனா சாதாரண கல்லுன்னு நெனைச்சிடக்கூடாது. ரெண்டு கல்லுவோ பாறை. ஆத்துக்குள்ளேயே கெடக்குத சின்ன பாறை. மிச்சம் நம்ம பூழா வீட்டுக்காரனும், எசக்கியும் பேய்மண்டபத்துலயிருந்து ஆத்துக்குள்ளேயே உருட்டி உருட்டி கொண்டு வந்து போட்ட சதுர கல்லு. இந்த கல்லுவோலதான் துணி தொவைக்கது.

ஊர்க்காரங்க துணியையெல்லாம் கழுதை மேல தூக்கி வச்சு, வேணான வெயிலில துண்டை வச்சு மொகத்தை தொடச்சுகிட்டு நடந்தே வருவாவோ பூழா வீட்டுக்காரனும் எசக்கியும். உச்சி மத்தியானத்துல புருஷனுக்கும் எசக்கிக்கும் தூக்கு சட்டியில சோறை கொண்டு வருவா பூழா. கூட தொவைக்க யாராவது வந்தா கூட்டிட்டு வருவா. சோறு கொண்டு வாரவளுக்கு இன்னொரு வேலையும் இருக்கு. ஆத்துக்கிட்ட அவுத்துவுட்ட கழுதையோ அது பாட்டுக்கு எவன் தோப்புக்குள்ளயாவது போயி நின்னுரும். இல்லனா படுத்துரும். பூழாகிட்ட நாலு கழுதை இருக்கு. எசக்கிட்ட ரெண்டு. பூழாட்ட இருக்குத நாலு கழுதையில ஒண்ணு சேட்டைக்கார கழுத. சும்மா அதுகிட்ட போனாலே குண்டிய திருப்பிட்டு காலை வச்சு எத்திரும். பொல்லாத கழுதை. அதனால அதுக்கு மட்டும் பின்னாங்கல் ரெண்டையும் சேர்த்து கயிறை வச்சு கெட்டு போட்டிருந்தாவோ. பாக்கதுக்கு பாவமாதான் இருக்கும். என்ன பண்ண?

போன மாசம் மூக்கத்தேவன் மவ புள்ளய தூக்கிட்டு ஊர்ல இருந்து வந்தா. மவளையும் பேரனையும் பாக்க கார்சாண்டுக்கே வந்துட்டாம். மூக்கத்தேவன். இறங்குனவோ சும்மா வீட்டுக்குப் போவாம, பயலுக்கு ஒண்ணுக்கு வருதேன்னு இடுப்புலயிருந்து இறக்கி ஓரமா விட்டுருக்கா. பக்கத்துல இந்த கழுதை. இதுக்கு தெரியுமா அது மூக்கத்தேவன் பேரன்னு. காலை வச்சு மூக்குல எத்திட்டு. ஓ...ன்னு அழுததுதான் காரணம். கழுதைய மூக்கத்தேவன் ஓட ஓட விரட்டி, கல்லை கொண்டு எறிஞ்சான். இன்னும் கழுதை முதுவுல தழும்பு இருக்கு.

இப்படி ஏதாவது வம்பை இழுத்துட்டு வந்துரும் இந்த கழுதை. நல்ல வேளை மத்தியான நேரத்துல ஆத்துப்பக்கம் ஆளுவோ இருக்க மாட்டாவொ. இருந்தா, இந்த கழுதை அவங்களையும் உண்டு இல்லைன்னு ஆக்கிரும். இதனால பூழாவுக்குத்தான் வேசடை. வாரவனுவோல்லாம், ‘கழுதைய கெட்டி போடு, இல்லைனா சடச்ச நயினார் கோயிலுக்கு வெட்டி படைச்சிருவேம்பானுவோ. வேற என்ன செய்ய முடியும்? அதனால பாவ புண்ணியத்தையெல்லாம் தூர வச்சுட்டு கால்ல கட்டு போட்டுட்டாவோ.
இந்த கழுதையலயெல்லாம் தேடி புடிக்கத வேலை பூழாவுக்கு. இது முடிஞ்சதும் வேற வேலையும் இருக்கு. அதுக்கு அவா தனியா போவ மாட்டா. நடு காட்டுக்குள்ள பொம்பளைய தனியா பாத்தா ஏதாவது ஆயி போச்சுன்னா. அதான் துணைக்கு யாரையாவது கூட்டிட்டுப்போவா.

பாக்கியை நாளைக்கு சொல்லுதேன்.

படம் நன்றி: மீஞ்சூர் ராசா.

Thursday, August 14, 2008

சத்யமும் சில குறிப்புகளும்

நண்பன் இயக்கியதாலும், விஷால் என்னிடம் சொன்ன பில்டப்பாலும் பார்க்க நேர்ந்தது 'சத்யம்' படத்தை. வித்தியாசமான கதை களைத்தை சிந்திக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு மத்தியில் ஆக்சன் குப்பைக்குள் அகப்பட்டுக்கொண்ட நண்பனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

முதல் பாதியில் குழந்தைகளுடன் நயன் அடிக்கும் சின்ன சின்ன விஷயங்களை ரசிக்க முடிகிறது. வில்லன் என்ற பெயரில் கோட்டா சீனிவாச ராவ் பேசும் ஹைபீச் வசங்களில் காது ஜவ்..கிர்ர்ர்! (வில்லன்னா கத்திப்பேசணும்னு ஏதாவது விதி இருக்கா?) கன்னட ஹீரோ உபேந்திராவின் கேரக்டர் நன்றாக இருந்தாலும், மூன்று பேரை கொன்றுவிட்டு அவர் வெளியில் ஜாலியாக நடமாடுவது எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. போலீஸ் பற்றி விஷாலும் அவரும் பேசும் வசனங்கள் சுவாரஸ்யம்.

'பத்து வருசத்துக்கு முன்னால நான் பிராத்தல் கேஸ்ல உள்ள தள்ளினவ, இப்ப அமைச்சர். அவளுக்கு நாம சல்யூட் அடிக்கணும்? கேவலமா இல்ல'

ஆனால் 'போலீஸ்னா...' என்று ஆரம்பித்து விஷால் எடுக்கும் லெக்சர் கொட்டாவி. சினிமா விஷூவல் மீடியம் என்பதை எப்போதுதான் புரிவார்களோ தெரியவில்லை. கிளைமாக்ஸில் 20 நிமிடத்திற்கு வசனம் பேசியே கொல்கிறார்கள்( தெலுங்கு வாடை). வெளியில் வந்தும் மனதில் நின்றவர் உபேந்திரா மட்டுமே.

சத்யம் வெல்ல வாழ்த்துகள்!

.........


ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்துவிடுகிற சுதந்தர தினம் ஏதாவதொன்றை ஞாபகப்படுத்தி போகிறது. ஒரு நாள் லீவுக்காக வீட்டுக்குள் அடைபட்டிருந்த பள்ளி காலங்களில் ஆரஞ்சு வில்லைக்காக கொடியேற்றம் போவ விரட்டுவதுண்டு அம்மா. 5 பைசா ஆரஞ்சு வில்லை அப்போது பெரிய விஷயம் அம்மாவுக்கும் எனக்கும்.

ஒரு சுதந்திரதினத்தன்று கோயில் கொடைக்கு வரி கொடுக்காததற்காக, வீட்டிலிருந்த பித்தளை குடம், ஊர்பஞ்சாயத்தால் தூக்கி செல்லப்பட்டது. குடத்திலிருந்த தண்ணீர் வாசலில் கொட்டப்படும்போது என் கால்களை நனைத்து சென்ற தண்ணீரில் அம்மாவின் கண்ணீரே அதிகம். ஒரு சுதந்தரத்தினத்திற்கு முன் வந்த ஜாதி சண்டையில் என் வீட்டின் ஓடுகள் அடித்துநொறுக்கப்பட்டன. வேப்பமர நிழலில் கோலிவிளையாடிபடியே அம்மாவுடன் சுதந்திரத்தை கொண்டாடிய அனுபவம் யாருக்கும் கிடைத்திருக்காதது.

பத்தாவது படிக்கும் போது வந்த சுதந்திரத்தினத்தன்று மாமா வாங்கி கொடுத்த சைக்கிள் திருடுபோனது. அதை கண்டுபிடிக்க, 50 ரூபாய் கேட்ட ஏட்டின் சிரிப்பு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

இப்போதெல்லாம் சுதந்திரத்தினத்தன்று இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுவதில்லை. பீடி சுற்றும் அம்மாவுக்கு இருமல் அதிகமாகியிருக்கிறது. பெரிய மகன் படிப்புக்காக வீட்டை விலை பேசுகிறாள் அக்கா. வாங்கிய மனைக்கான பட்டாவுக்காக வருடக்கணக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் நான். அடுத்த வருடமும் வரும் சுதந்திரதினம்!

................................

இரண்டு மாதத்துக்கு முன்னால் நண்பருடன் இலங்கை செல்ல நேரிட்டது. யுத்த பூமியில் நான்கு நாள். விமான நிலையத்திலிருந்து கொழும்பில் உள்ள ஹோட்டல் தாஜ்க்கு போவதற்குள் ஏழு இடத்தில் செக்கிங். ஒவ்வொரு இடத்திலும் 'வி ஆர் பிரம் இண்டியா' ரிபீட். கூடவே பாஸ்போர்ட்டையும் காண்பிக்க வேண்டும். எந்த காரண காரியமும் இல்லாத பயணம் என்பதால், ஒரு வேனையும் டிரைவரையும் எங்களுடன் இருக்க உதவியிருந்தார் உள்ளூர் நண்பர்.

கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்தால் இருட்டியிருந்தது. அருகிலேயே கடற்கரை. ரத்த வாடை வீசும் காற்றுவாங்க போகலாம் என்று சென்றேன். என் குர்தாவும் லேசான தாடியும் அந்த ஆர்மி மேனுக்கு ஏதாவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்னை தவிர அந்த கடற்கரை ரோட்டில் யாருமில்லை. நான்கைந்து ஆர்மி வாகனங்களைத் தவிர. துப்பாக்கியுடன் வந்த ஆர்மிமேன், என் முகத்தைப் பார்த்தான். விவரம் சொன்னேன். எட்டு மணிக்கு மேல இங்க சுத்த கூடாது என்று சொல்லப்பட்டது. பக்கத்து நாட்டு அதிகாரத்துக்கு பயந்து கடற்கரையை அறையின் ஜன்னலில் இருந்துதான் பார்த்தேன்.
பாவம் உள்ளூர் மக்கள்.

காலையில் கண்டி பயணம். போகும் சாலையெங்கும் துப்பாக்கி தாங்கிய ராணுவத்தினர். ஒரு இடத்தை கடக்கும்போது, ஒரு டேப் போட்டு ரோட்டை பாதியாக்கியிருந்தனர். இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்களாம். வேதனை மனதுள் எழுந்து அடங்கியது. கண்டி பொட்டானிக்கல் கார்டன் பெரியது. உள்ளே செல்ல செல்ல போய்க்கொண்டே இருந்தது. ஒவ்வொரு மரத்தின் அடியிலும் தவிக்கும் காதலர்கள் தங்கள் தாகத்தை தணித்துக்கொண்டிருந்தார்கள். சொல்ல, எழுத ஆயிரம் இருந்தாலும் இப்போது வேண்டாம். மீண்டும் ஒரு முறை அங்கு செல்ல வேண்டும். யுத்தம் இல்லாத, ஆர்மீ இல்லாத நாட்டில், என் மக்களை பார்க்க. அவர்களிடம் பேச!
முடியுமா?