Monday, September 22, 2008

திருட்டு

திருடுவது என்று முடிவாகிவிட்டது. புளிமூட்டைதான் இதற்கான திட்டத்தை வகுத்தான். இது மூன்றாவது திருட்டு திட்டம் என்பதால் நண்பர்களிடம் அவன், திட்ட வகுப்பாளன் என்ற பெயரை பெற்றிருந்தான். இது திருட்டு வகையை சேர்ந்தாலும் திருட்டல்ல.

பிள்ளையார் கோவில் திண்டிலிருந்து எதிரே பார்த்தால் கல்யாணி ஐயர் தோப்பு. நாற்பது தென்னைகள், ஒரு கிணறு, ரெண்டு பின்ன மரம், எழெட்டு மா மரங்கள், நெற்கள் விளையும் வயலில் கடலை, அருகே குறுணி விதைப்பாட்டில் ஈராய்ங்கம்... இன்னபிற விளையும் பொருட்களை உள்ளடிக்கியிருந்தது தோப்பு என சொல்லப்படும் அது.

தெற்கே வாய்க்கால் கரைக்கும் வடக்கே இருந்த பொத்தைக்குமிடையே புதிதாக வேலி அமைத்திருந்தார் ஐயர். வாய்க்கால் கரையில் அனாதையாக முளைத்து நின்ற இரண்டு தென்னைகளும், தோப்பை ஒட்டி இருந்ததால் ஐயருக்கு சொந்தமாகியிருந்தன.
மற்ற இரு பக்கமும் ஏற்கனவே வேலி இருந்தது. வேலி என்பது புதிதாக கத்தாழை செடிகளை நட்டும், கருவை முட்களை வைத்துமாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு. இவை ஆடு மாடுகள் உள்ளே புகுந்துவிடக்கூடாது என்பதற்காக. இம்மாதிரியான வேலிகள் ஆடு மாடுகளுக்கு எம்மாத்திரம்?.

வேலி அமைக்கும் போது வந்த நான்கைந்து பாம்புகளில் ஒன்று மலைப்பாம்பாக இருந்தது. எப்போதோ வந்த வெள்ளத்தில் தப்பி வந்த பாம்பு, ஐயர் தோட்டத்தில் அடை காத்திருந்த விஷயம் அப்போதுதான் தெரிந்தது. வேலி அமைத்துக்கொண்டிருந்த கூனையன், பாம்பின் குறுக்கில் அரிவாளை போட்டான். சரியாகப் பதியாத அரிவாள், வழுக்கி திரும்பியது. அடுத்த முயற்சியும் அப்படியே... நீண்டு உருண்ட அந்த பாம்பு இரண்டு முறை எகிறி, அவனிடம் வாயை காண்பித்து நகர்ந்து நகர்ந்து வாய்க்காலுக்குள் இருந்த பெருங்கல்லின் கீழே சென்றுவிட்டது. கூனையன், துணைக்கு ஆளை கூட்டி வந்து கல்லை புரட்டிய போது பாம்பு அங்கே இல்லை.

இதே போல தென்பட்ட இன்னும் இரண்டு பாம்புகளில் ஒன்று கண்ணாடி விரியன். ஆள் சத்தம் கேட்டதுமே சிட்டாக பறக்க கூடிய பாம்பு. ஆனால், சரியாக போட்டுத்தாக்கும் ஆபத்துடையது அது. இன்னொன்று நல்லபாம்பு. இதை சாமி பாம்பாக கருதிய ஐயர், விட்டுவிடச்சொன்னார். ஆனால் கண்ணாடி விரியன், கூனையனின் குறி தவறாத கல் எறியில் சுருண்டது.
மலைப்பாம்பு? அதன் வசிப்பிடம் இப்போது தெரியவில்லை. அனேகமாக தோப்புக்குள் எங்காவது குடியிருந்து வரலாம்.

இவ்வாறான பாம்புகளின் நடமாட்டத்தையடுத்து ஐயர், கருக்கல் நேரங்களில் தோப்புக்கு வருவதை தவிர்த்துக்கொண்டார். அவரின் இந்த முடிவு, புளிமூட்டை உள்ளிட்ட இளசுகளுக்கு வசதியாகிவிட்டது.

திண்டை உடைத்து வளர்ந்திருந்த எருக்கலை செடியின் அருகே அமர்ந்து, பீடி குடித்துக்கொண்டிருந்த குட்டை, புகையை விட்டவாறே சொன்னான்.

‘‘ஏழாவதா நிக்கி பாரு எளந்தென்னை. அதுலதாம்ல சரியான காயி. டேஸ்டு எப்டிங்க. குறும்பை மாதிரிதான் இருக்கும். அவ்வளவும் ஜீனி தண்ணிலா’’

‘ஒனக்கெப்படில தெரியும்?’ புளிமூட்டை கேட்டான்.

‘ஏ அர்தலி, ஐயருக்கு யாரு காய் பறிச்சு போடுதா?’

‘நீயால’

‘‘பெறவு? ஒரு தென்னைக்கு நாலு காய்ன்னு சொன்னாரு. நாலு மரம் ஏறுனேன். ஒரு மரத்துக்கு அஞ்சுன்னு வச்சு கொத்தாரு. ரெண்டு எளநீய வெட்டி போடுன்னாரு. போட்டேன். ஒண்ணை குடிக்க கொடுத்தாரு... அதை வச்சுதான சொல்லுதேன்’

துண்டை விரித்து திண்டில் சாய்ந்திருந்த பத்தாடி, ‘கடலை கூட வௌஞ்சிருக்கும்’ என்றான்.
இதைக்கேட்ட புளிமூட்டை, ‘ச்சீ ஆக்கங்கெட்டவன. போனா எதையாவது ஒண்ணத்தாம்ல களவாங்கணும். அதுல கைய வைக்கேன். இதுல கைய வைக்கேன்னு இருந்தா நாளைக்கு சிக்கலாயிரும்’ என்றான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சைக்கிள் ஒன்று வந்தது. ஸ்குரு கழன்ற பெல், ஹேண்ட்பரில் பட்டு ணங் ணங் ஒலியை எழுப்பிக்கொண்டே வந்தது. ஒவ்வொரு மிதிக்கும் ஒரு ணங். சைக்கிளில், ஆழ்வார்க்குறிச்சியிருந்து கல்யாணி அம்மன் கோயிலுக்கு பால் கொண்டு போகும் சைலன் இருந்தான். அவனது பூசணிக்காய் தேகத்தில் சைக்கிள் டயர் நசுங்கி எப்போதும் வெடித்துவிடும் பிரயத்தனத்தில் இருந்தன.

இன்னும் இருட்டவில்லை என்பதால் பார்வையில் ஆட்கள் தெளிவாக அகப்பட்டனர்.
‘ஏலே எளவட்ட பயலுவளா? இந்நேரத்துக்கு இங்கென்ன சோலிடே... எவளாது வாரேன்னு சொல்லிருக்காளா...?’என்றான் சைலன்.

‘யோவ் எக்காளமாய்யா... பொத்திகிட்டு போவேரா’

‘ம்.. ம்... ஹூம்...’ என்ற சத்தத்துடன் போனான் சைலன்.

‘பெறவு என்ன செய்லாம்’ என்றான் குட்டை.
‘பொறுல. இன்னும் இருட்டட்டும்’ என்றான் புளி மூட்டை.

வேலியை கடப்பது விஷயமில்லை. எதிரே இருக்கிற மண் சுவர் மீது பெரிதாக அடைந்திருக்கிற கருவை முள்ளை கைகளால் தூக்கி ஒதுக்கிவிட்டு, மெதுவாக உள்ளே இறங்குவது சுலபமான வேலை. இதில் பத்தாடி கை தேர்ந்தவன். நிஜமாகவே அவன் தேர்ந்த கைகளை கொண்டவன். அரிவாள், கலப்பை, மம்பட்டிகள் பிடித்து பலமேறியே கை. முட்கள் குத்தி கைகளுக்கு வலிக்கப் போவதில்லை.

தென்னைமரங்களில் இவன் மாதிரியான திருடர்களுக்காகவே பிளேடை அடித்து வைத்திருப்பது திருட்டு அதிகமாக புழங்குகின்ற தோப்புகளில் வழக்கம். கருத்த பிள்ளையூருக்கு சூடடிக்க போகும் போது, கோயில்பிள்ளை தோப்பிலிருந்த தென்னமரத்தில் அடிக்கப்பட்டிருந்த பிளேடை சரியாக கவனித்து, வாக்காக தாவி காய் திருடிய திறமையை பார்த்து வியந்திருக்கிறான் புளிமூட்டை. பிளேடு அடித்திருக்கிற மரங்கள் மட்டுமில்லாமல், ஊரில் கிருஷ்ண பிறப்புக்கு நடக்கிற வழுக்கு மர போட்டியில் வெல்பவனும் இவனாகவே இருந்தான். இப்படியான திறமைசாலிகளை ஊர்மக்கள் கொண்டாட மறுக்கிறார்களே என்பது அவனது ஆதங்கம். ஆதங்கங்கள் அடிமனதோடு ஆறுபவையே.

இன்னும் இருட்டவில்லை. மாத்ராங்குளத்து வயக்காடுகளில் களை எடுத்து வரும் அக்காள்கள், தூக்குச்சட்டியை ஆட்டிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். எடக்கு பேச்சும், தூக்குச்சட்டியின் சத்தமும் அவர்களின் வருகையை தெரிவித்துக்கொண்டிருந்தன.

திண்டில் சாய்த்து கிடந்த பத்தாடி, இந்த சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தான்.
புளிமூட்டை, குட்டையிடம் சொன்னான்.

‘பயலுக்கு பயத்தை பாத்தீயா?’

‘ச்சீ சும்மார்ல, வீட்டுக்கு போனா ஏசுவா?’

வருபவர்களில் பத்தாடியின் அக்காவும் ஒருவர் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை. அவர்கள் நெருங்கி வர வர, அப்பாவி போல எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான் பத்தாடி. கிட்டே வந்த அக்காள்களில் ஒருத்தி, இவர்களை உற்று பார்த்துவிட்டு, ‘புளிமூட்டையால... என்ன இங்க உக்காந்திருக்கே’ என்றாள்.

‘புளிமூட்டையா... அப்பம் என் தம்பியும் இருப்பானே...’ என்றாள் பத்தாடி அக்காள்.
‘ஆமா, வந்தோம். இன்னா பெறப்ட வேண்டியதான்’ என்றான் பத்தாடி.

‘ராத்ரி போல இங்கலாம் சுத்து. வெறவுக்கு ரெண்டு கருவைய வெட்டிப்போடுன்னா போடாத... ஆக்கங்க கெட்டவன... நல்ல செட்டுலா சேர்ந்திருக்கு’

‘நா எங்க சுத்துதேன்’

‘போதும்ல... சீக்கிரமா வந்து தொல’ என்றவள் கிளம்பினாள்.

அக்காள்களின் கோபங்கள் அதிக ஆபத்தில்லாதவை. ஆனால், இப்படி எல்லார் முன்பும் மானம் வாங்கும் செய்கை அறிந்தவர்கள். பத்தாடி, தலையை கீழே போட்டபடி உக்கார்ந்திருந்தான்.


தொடரும்
.....................

11 comments:

SP.VR. SUBBIAH said...

கதையின் ஓட்டம் மண்வாசனையுடன், வட்டாரப் பேச்சு வழக்குடன் அருமையாக உள்ளது சாமி!
அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்!

Thamiz Priyan said...

நல்ல சுவையாக இருக்கு கதை.. :)

ஹேமா said...

நான் உங்கள் தொடர்கதையை ஆர்வத்தோடு வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

Anonymous said...

என்னே எப்பம்னே மீதியப் போடுவிய?

துளசி கோபால் said...

இந்த 'நடை' அட்டகாசமா இயல்பா வருது!!!!

பிளேடு சமாச்சாரம் எனக்குப் புதுசு:-)

ஆடுமாடு said...

சுப்பையா சாமி நன்றி.

ஆடுமாடு said...

தமிழ்ப்பிரியன், ஹேமா நன்றி.

ஆடுமாடு said...

//எப்பம்னே மீதியப் போடுவிய//
வடகரை, இன்னா நாளைக்கு போட்டிருவம்டே.

ஆடுமாடு said...

//பிளேடு சமாச்சாரம் எனக்குப் புதுசு//

டீச்சர், இது இங்க பழசு. ஆத்தோரமா, அல்லது ரொம்ப தூரமா இருக்கிற தோப்புகள் திருடறதுக்கு கும்பல் கும்பலா வருவாங்க. இந்த திருட்டு இளநீர் குடிக்கத்தான். அதனாலதான் பிளேடு.

நன்றி டீச்சர்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"ஜீனி தண்ணிலா’’

ஆஹா எத்தனை நாளாச்சு ஜீனிங்கற வார்த்தைய கேட்டு... இங்கெல்லாம் அப்படிச்சொன்னா சிரிக்கறாங்க...

கிருஷ்ணா said...

அண்ணா,
கதை அருமை.
தோப்பில் இப்பொழுது தேங்காயை குரங்குகள் திருடிவிடுகின்றன என கல்யாணி ஐயர் சொல்கிறார்.

ஊரில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கிறது.