‘உங்கக்கா இப்டி சொல்லிருக்க கூடாதுடே...’ என்றான் புளிமூட்டை.
‘என்னத்த சொல்லிட்டா...?’
‘நல்ல செட்டு சேர்ந்துருக்கு பாருங்கா... எங்களுக்கு என்னல கொற’
‘ஏன் உங்கய்யா கூடத்தான் என்னைய சொன்னாரு... உருப்படாத பயலுவோன்னு... அதுக்கென்ன செய்ய சொல்லுத...’
கொஞ்சம் அமைதி நிலவிய பிறகு இருட்டி விட்டதை ஞாபகப்படுத்தினான் குட்டை. கும்மிருட்டு. இந்த இடம் சுற்றி, தெருவிளக்குகள் இல்லாதது வசதியாகியிருந்தது. இருந்திருந்திருந்தாலும் அது எரிந்திருக்கப் போவதில்லை.
அவரசரமாக எழுந்தார்கள். எதிரில், கழுத்து வரை இருந்த மண்சுவர் வேலியில் முட்களை ஒதுக்கினான் புளிமூட்டை. மெதுவாக கீழிறங்கினார்கள். கீரிப் பிள்ளைகளின் கிர் கிர் சத்தம் தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. பம்ப் செட்கள் பொருத்தப்பட்ட அந்த பெரும் கிணற்றில் புறாக்களும் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. இந்த தோப்பில் பல முறை இவர்கள் கை வைத்திருக்கிறார்கள் என்பதால் இருட்டிலும் பாதை அத்துபடி.
காலில் செருப்பு போட்டிருந்த குட்டை, மண் வழுக்கி முள்ளில் கையை வைத்து ரத்த காயத்தை வாங்கி கொண்டான். இம்மாதிரியான ரத்த காயங்கள் ஒரு வகையில் நல்லது என்பது அவர்களது நம்பிக்கை. முதலிலேயே ரத்த காயம் ஏற்பட்டு விட்டால் பிறகு பெரிய காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லையாம்.
‘செரி... செரி... கைய வாயில வையுல, ரத்தம் அமுங்கிரும்’
‘ம்...’
அகலமான கிணறு. எந்த காலத்திலோ தோண்டப்பட்ட பெருங்கிணறு. மேலிருந்து கீழே பார்த்தால் கரும் பாறைகள் பாசி சுமந்து தென்னி நிற்கும். கரு நீலத்தில் தண்ணீர். மீன்களின் துள்ளாட்டமும், ஓரங்களில் அவற்றின் குரூப் வாக்கிங்கையும் பார்க்க சுகமாக இருக்கும். ஐயரின் அனுமதி பெற்று இங்கே குளிக்க வருபவர்களும் அதிகம்.
புளிமூட்டை சிறு வயதில் அப்படி வந்திருக்கிறான். அருகில் வளர்ந்து வளைந்து நிற்கும் தென்னைமரத்தில் ஏறி கிணற்றுக்குள் குதிப்பது இளவட்டங்களின் வீரவரலாறாகி இருந்தது. இந்த வரலாறை தாண்டிவிட்டவர்கள் இவர்கள்.
அருகில் பம்பு செட். அது ஒரு குடிலை போன்றிருந்தது. உள்ளே தலையணைகள் வைக்கப்பட்ட கட்டில் ஒன்று. ஐயர் நண்பகல் நேரங்களில் தூங்குவதற்கு.
இதற்கு கீழ்ப்பக்கம் தென்னந்தோப்பு. சில தோப்புகளை போல வரிசையாகவே, நேர்கோடாகவே தென்னைகள் இங்கு இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக தலையாட்டி நின்றன.
புளிமூட்டையும், குட்டையும் தென்னமரத்தில் ஏறலானார்கள். புளிமூட்டை செவ்விளநீர்கள் தொங்கும் மரத்திலும், ஜீனி தண்ணி மரத்தில் குட்டையும் ஏறினார்கள். பாதி மரம் ஏறுவதற்குள்ளேயே புளிக்கு, மூச்சு வாங்கியது. ‘இனும பீடிய கொறைக்கணும்’ என்று நினைத்துக்கொண்டான்.
மேலே ஏறி, இளநீர்களை சாரத்துக்குள் போட்டு இறுக்க கட்டிக்கொண்டு இறங்க வேண்டும் என்பது திருடர்கள் விதி. பறித்து கீழே போட்டால் சத்தம் கேட்டு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்பதற்காக இப்படி.
புளி, சாரத்தை இறுக்க கட்டாததால் அதில் போட்ட இளநீர் ஒன்று சாரத்தை அவிழ்த்துக்கொண்டு பொத்தென்று கிணற்றுக்குள் விழுந்து பெரும் சத்தத்தை எழுப்பியது.
பத்தாடி தலையில் அடித்துக்கொண்டான். எப்போதும் உள்ளே எழுதுவும் அணிந்திராத புளிக்கு இறங்குவது சிக்கலாகியிருந்தது. காரணம் எப்போதும் எங்கேயும் தென்னங்கீரல்கள் விழலாம் என்கிற பயம்.
‘சீக்கிரம் இறங்கி தொலைங்கல’ என்றான் பத்தாடி.
தோப்புக்கு வடக்காக வாய்க்காலை தாண்டிய வீடுதான் ஐயருடையது. அவர் மொட்டை மாடியில் நின்றால் இந்த சத்தத்தை கேட்டிருக்க முடியும் என்பதால் பயத்தில் வேக வேகமாக இறங்கினான் புளி. இந்த களேபரத்தில் வெறும் நான்கு காய்களை மட்டும் சாரத்தில் போட்டுகொண்டு, அவசரமாக தரை இறங்கினான் குட்டையும்.
கீழிறங்கிய புளி, சாரத்தை தேடினான். அது கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்தது.
தொடரும்.
5 comments:
அண்ணே, களவானிப் பயகண்ட்டாலும் கெதக் கெதக்குங்கே பாவி மனசு.
ஐயரு கையில கண்டும் மாட்னானுவோ அம்ம்புட்டுத்தாம். ஐயருவாள் ஆந்தானிக்கு கச்சேரில பிராது கொடுத்துருவாவ பாத்துகிடுங்க. அம்பிட்டுத்தேன்.
//களவானிப் பயகண்ட்டாலும் கெதக் கெதக்குங்கே பாவி மனசு//
அப்படியா? பாத்துக்கிடும்வே.
நன்றி.
நல்ல வேளை...ப்ளேடு படாம தப்பிச்சான்:-)
//ப்ளேடு படாம தப்பிச்சான்:-)//
பட்டிருந்தா...?
அப்புறம் என்னங்க தங்ஸ், ஆளையே காணோம்.
/* அப்புறம் என்னங்க தங்ஸ், ஆளையே காணோம் */
சம்சார சாகரம்:-)))
Post a Comment