Thursday, September 25, 2008

திருட்டு -2

மேல் சட்டை மற்றும் துண்டுடன் பாதி அம்மணமாக நின்றான் புளி. இந்த அவசரத்திலும் மற்றவர்களின் சிரிப்பை அடக்க முடியவில்லை. துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டான். கிணற்றின் தென்புறமாக, உள்ளே இறங்குவதற்கு சின்ன படிகட்டு இருந்தது. அந்த படிகட்டும் பாதி வரைதான்.

படிகட்டை உரசியவாறோ அதற்கும் கொஞ்சம் கீழாகவோ தண்ணீர் இருக்கவில்லை. அநியாயத்துக்கு பாதி கிணறிலிருந்தது. ஊள்ளே குதித்து சாரத்தை எடுத்தால் தண்ணீர் சத்தம் கேட்டு யாரும் உள்ளே வந்துவிடலாம்.

குட்டை, ‘துண்டு போதும்ல... அப்படியே வா’என்றான். இருட்டு என்பதால் இப்படியே கூட வரலாம். அதற்குள் கீழ்பக்கம் யாரோ வரும் சத்தம் கேட்டது. அவசரம் அவசரமாக படபடத்து மூவரும் வந்த வழி நோக்கி ஓடினார்கள். தட்டு தடுமாறி வேலி தாண்டி, அருகில் இருந்த பிள்ளையார் கோயிலின் பின்பக்கம் சென்றார்கள்.

மூச்சு வாங்கியது.

‘இப்ப என்ன செய்யலாம்?’

‘ஏல நான் அம்மணங்குண்டியோட வரமுடியாது. வாய்க்காலை தாண்டினா ஐயமாரு தெரு. இன்னும் தெருவௌக்கு எரிஞ்சுட்டு இருக்கு. எப்படி போவ’’ என்றான்.

தோப்புக்குள் யாரோ சிலரின் பெரும் சத்தம் கேட்டது. ஐயர் சிலருடன் வந்திருக்கலாம். கோயிலின் பின்பக்கமிருந்து தோப்பை பார்த்தால், டார்ச் லைட் வெளிச்சம் சிதறி வருகிறது. இங்கு வரை வெளிச்சம் வர வாய்ப்பில்லை. பறித்த இளநீரை பிள்ளையார் கோயில் பின்புறம் போட்டுவிட்டு, வயக்காட்டுக்குள் விழுந்து மேலத் தெரு வழியாக வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

புளி, ‘முட்டா பயலுவோலா... நான் எப்டில வர’

‘ஒண்ணுமில்லலே. அம்மன் கோயிலு வாய்க்கால்ல குளிச்சுட்டு, எல்லாருமே துண்டை இடுப்புல கெட்டிட்டு போவும். போற வழியில துரையப்பா சுக்காப்பி கடை பக்கத்துலதான் லைட் வெளிச்சம். அதை தாண்டுனா பிரச்னையில்லைல’’

சரியென்றார்கள்.

இவர்கள் கிளம்பும்போது கேட்டது:

‘ஏண்ணே இங்க ஓடியா? இன்னா ஒரு பய இருக்காம் பாரு’.

கெதக் என்றது மூவருக்கும்.

சுதாரித்து ஓடுவதற்குள், டொப் டொப்பென்று அடி விழுந்தது.

‘நான் இல்லை... நான் இல்லை’ சத்தம்.

யப்பா தப்பித்தார்கள்.

கருக்கலாகி விட்டது. பஞ்சாயத்து போர்டு திண்டில் தலைவர் என அழைக்கப்படும் அம்மாசி அமர்ந்திருந்தார். ஊரே கூடியிருந்தது. கூட்டத்திற்குள் புளி கூட்டாளிகள் நின்றிருந்தார்கள்.

‘ஏய் இந்த சாரம் உங்குள்ளதுதானே...’

தலைவர் கேட்டார்.

‘இல்லை... எனக்குள்ளதில்லை’

‘ஏல சொன்னதையே சொல்லாத... கையும் களவுமா பிடிச்சிருக்காவோ. இல்லங்க’

‘நான் நாலு மாசத்துக்கு முன்னால ஒரு நா ராத்திரி தோப்புல எளநீ பறிச்சிருக்கேன். நேத்து ராத்திரி நான் பறிக்கலை சாமி’

கெஞ்சினான்.

‘நல்ல கதையாலா இருக்கு. ஏல கேட்டேளா? கூத்தை.’

கூட்டத்தில் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

எல்லார் முன்பும் கை கட்டி, கண்ணீர் வர நின்று கொண்டிருந்தான் கல்யாணி அம்மனுக்கு பால் கொண்டு போகும் சைலன்!

பத்தாடி உள்ளிட்ட கூட்டாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கும்போது, புளி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. அவன் அப்பா!


முற்றும்

7 comments:

anujanya said...

யாரை முன்வைத்து கதை சொல்கிறோம் என்பதில் துவங்குகிறது நாம் யார் பக்கம் என்று. உங்கள் கதையில் புளி, குட்டை, ஜீனி என்று நம் மனம் அவர்களுடனே சென்று, மாட்டாமல் இருக்கவேண்டுமே என்று பதைபதைக்கிறது; அவர்கள் செய்வது திருடு என்பது உங்கள் தலைப்பிலும், புலிக்கு விழுந்த அறையிலும் பிற்பாடு உரைக்கிறது. வாழ்த்துக்கள்

அனுஜன்யா

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ:-))))))

ஆடுமாடு said...

அனு நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

அய்யோ எங்க ஊருல எல்லாம் தோப்புல காய் திருடுனா மரத்துல கட்டி வைச்சிடுவாங்க.... அதுல உர்ற எரும்பு ஒன்னே போதும் தண்டனைக்கு... அந்த ஆள நாங்க வெளில எங்கயாவது பார்த்தாக்கூட எங்களுக்கெல்லாம் பயமா இருக்கும்...

ஆடுமாடு said...

//அய்யோ எங்க ஊருல எல்லாம் தோப்புல காய் திருடுனா மரத்துல கட்டி வைச்சிடுவாங்க...//

இங்கயும அப்படித்தான். தெரிஞ்சவனா இருந்தா பஞ்சாயத்து. தெரியாதவனா இருந்தா கட்டி வச்சிடறது.

நன்றி கிருத்திகா.

ஆடுமாடு said...

//ஹைய்யோ ஹைய்யோ:-))))))//

அதை ஏன் கேக்கிறீங்க டீச்சர்.

வல்லிசிம்ஹன் said...

புளியோட அப்பா நல்ல வேலைதான் செய்தார். இருந்தாலும் பாவமாக இருக்கிறது.அந்த சைலனை நினைத்தால்.