Sunday, September 14, 2008

ஒரு காட்டெருமையும் இருட்டு பங்களாவும்

நண்பர் வெயிலான் உள்ளிட்ட கோவை பகுதி பதிவர்கள் டாப்சிலிப் பற்றி எழுதியதை அறிந்து, மனைவியிடம் சொன்னதும், ஒகே ஆனது பட்ஜெட் காலி பண்ணும் பரபர டூர்.

முதலில் டாப்சிலிப்புக்காக போடப்பட்ட ப்ளான், பக்கத்து வீட்டுக்காரியின் புண்ணியத்தில் ஊட்டிக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த விஷயம் எப்படியோ தெரிந்து வயக்காட்டு வேலையை அப்படியே போட்டுவிட்டு சென்னை வந்தான் மனைவியின் தம்பியானவன்.

'நீ இப்ப வந்திருக்கே. நாங்க ஊட்டிக்குலா போறோம்" என்றேன்.
'தெரியும் மச்சான். அதுக்குதானே வந்திருக்கேன்" என்றான். மச்சான்கள் விவரமானவர்கள்.
மனைவியை பார்த்தேன். எல்லாம் என் வேலைதான் என்பது போல சிரித்தாள். பர்ஸில் கனம் இன்னும் கூடியது.

கோவையில் இறங்கி, குவாலிஸ் உதவியுடன் ஊட்டி ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ்க்கு போவதற்குள் மணி நண்பகல் 12.

'ஐயையோ அங்க நல்லா குளிருண்டா. இந்தா ஸ்வட்டர் போட்டுக்கோ' என்று என் ஜூனியர்களை கோவையிலேயே முழுதாக மூடினாள் மனைவி. ஆனால், அங்கு குளிருக்கு பதில் ஜிவ் வெயில். 'என்ன கொடுமைடா' என்று நண்பர் இயக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் அங்கு நடப்பதை அறிந்து (முன்கூட்டியே அறிந்துதான்) இடத்தை தேடினால்... மலை மலையாய் ஏறி, வளை வளையென வளைந்து எங்கோ ஒரு தேயிலை தோட்டத்தில் நின்றது வண்டி.

நடிகை சரண்யா மோகன் மரத்தில் சாய்ந்து லேசாக கண்ணை ஆட்டினாள். இதை நான்கைந்து தடவை படமாக்கிய பிறகு அடுத்த ஷாட் என்றார்கள். அது எங்கே என்று கேட்டால், மலையில், இன்னும் நான்கைந்து ரவுண்ட் அடித்து உச்சியில் ஏதோ ஒரு தோட்டம் என்றார்கள். 'இனும முடியாதுப்பா. நீங்களும் உங்க ஷூட்டிங்கும்" என்று சொல்லிவிட்டு, பொட்டானிக்கல் கார்டன். பரந்து விரிந்த கார்டன். முழுசாக பார்ப்பதற்குள் மழை.

'ஒரு நா மழையில நனைவோமே' என்று பொடிசுகளை இழுத்தால், என் தர்மபத்தினி, 'உங்களுக்கெல்லாம் சளி பிடிச்சு, காய்ச்சல் வந்து, ஆஸ்பிடல் போயி, ரெண்டு நாள் லீவு போட்டு... எனக்கிருக்கிற வேலையில இதெல்லாம் தேவையா?' என்று அநியாயத்துக்கு பயம் காட்டியதால் நான்காவது மரம் வரை பார்த்துவிட்டு கார்டனுக்கு ஒரு டாடா.

கார்டன் வாசலில் இருந்து வலப்பக்கம் உற்றுப்பார்த்து டாஸ்மாக் இருப்பதை மச்சான் கண்களால் சொன்னான். அவன் அக்காவுக்கு தெரிந்தால்.... குலை நடுங்கியது. மூச் என்று மூக்கு மேல் விரல் வைத்து ஆஃப் பண்ணினேன். மச்சான் ஞாபகப்படுத்திய பிறகு வேறு எந்த சிந்தனையும் வரவில்லை.

லேசாக குளிர ஆரம்பித்தது.

'நீங்க ஸ்வட்டர் போட்டுக்கிறீங்களா?'

'ம்ஹூம்... இதெல்லாம் குளிரா? எங்க உடம்புக்கெல்லாம் இது ச்சூ... காஷ்மீர் குளிருலயே வெத்து உடம்போட போனவன் நான்"

'ம்..."

'பின்ன'

வீராப்பாய் சொல்லிவிட்டாலும் நிஜமாகவே குளிர். அதுக்காக ஸ்வட்டர் எடுத்து போட முடியுமா?

வேறு எங்கு போகவும் விருப்பமில்லை. மச்சானிடம் 'ரூம் போயிடலாமாப்பா' என்றேன். தலையாட்ட, புறப்பட்டோம். அறைக்குள் குடும்பத்தை வைத்து, டி.வியை ஆன் பண்ணிவிட்டு, போதை தேடி அலைந்தது மனது. 'இந்த மாதிரி குளிர் பிரதேசத்துக்கு வந்துட்டு, ஹாட் அடிக்கலைன்னா..." என்று முடிப்பதற்குள்ளேயே உர்ரானாள் மனைவி.

'என்ன ப்ர்மிஷனா?"

கெஞ்சி கூத்தாடி, கொஞ்சமா குடிக்க அனுமதி கிடைத்தது. அனுமதி கிடைத்த பின் கொஞ்சம் என்ன கொஞ்சம்!

விவரமான மச்சான், எங்கயோ பராக் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆஃப் பாட்டிலை வாங்கி வந்ததை அப்போதுதான் சொன்னான். 'புத்திசாலிடா நீ' என்ற சர்டிபிகேட்டை கொடுத்துவிட்டு, கீழே ஹோட்டல் பேரரிடம் 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்ததும் அரேன்ஜ் பண்ணினான் தண்ணி அடிக்க ஒரு இடத்தை.பிறகு தூக்கம்.

இரவு. சாப்பிட்டுவிட்டு ஹால் வந்தால் எக்கச்சக்க குளிர். மனைவி என்னை பார்த்தாள். இம்முறை மறுப்பேதும் இன்றி ஸ்வட்டர் போட்டுக்கொண்டேன். ஹோட்டலிலேயே மரக் குச்சிகளை வைத்து தீ வளர்த்தார்கள். ஹோட்டலில் இருந்த இன்னும் இரண்டு உ.பி பார்ட்டிகளும், கோவாவிலிருந்து வந்திருந்த கொங்கனி ஆண்டி, வேகமாக ஆங்கிலம் பேசும் அவள் மகள் என எல்லாரும் நெருப்பருகே நின்றோம். பின்னணியில் 'மச்சான் பேரு மதுர" பாடல்.

பேச ஆரம்பித்தால் வாயிலிருந்து புகை. குளிர் நன்றாக இருந்தது.

அறைக்கு போனதும் மகன் கேட்டான்:

'அப்பா இங்கதான் இவ்வளவு குளிருதே, ஏன் ஏ.சி ரூம் புக் பண்ணினே".
அடப் பாவி!
............

மறு நாள் காலை பொள்ளாச்சி வழியாக டாப்ஸ்லிப் போகும் போது மலை அடிவாரத்தில் ஷூட்டிங். ஏதோ தெரிஞ்ச முகமாக இருக்கிறதே என்று காரை நிறுத்தினால், அட நம்ம ராஜ்கிரண்.

கொஞ்ச நேரம் பழங்கதை பேசிவிட்டு, அவர் கொடுத்த இளநீரையும் காலி செய்துவிட்டு, மலைக்கு போனோம். டாப்சிலிப் போனதும் அங்கிருந்த வனத்துறை அதிகாரி,' காட்டுக்குள்ள போக எங்க பஸ் வரணும்னா குறைஞ்சது 25 பேராவது வேணும், உங்க காரையெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது" என்று உட்கார்ந்து கொண்டார்.

செல்பேசி உதவியுடன் (இங்க சிக்னல் கம்மியாத்தான் கிடைக்குது) பொள்ளாச்சி அதிகாரிக்கு போன். அவர் உத்தரவின் பேரில் எங்கள் கார் அனுமதிக்கப்பட்டது. துணைக்கு ஒருவரையும் அனுப்பினார் அந்த வன அதிகாரி.

காரின் சத்தம் கேட்டு இரண்டு யானைகள் முகத்தை திருப்பி எங்களை பார்த்தது.

மச்சான், இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்து 'விநாயகா விநாயகா" என்று போட்டுக்கொண்டான்.
'ஏண்டா... குரங்கும்தான் நிக்குது. அதை ஏன் ஆஞ்சநேயர்னு கும்பிடலை" என்றேன்.

'சும்மா இருங்க மச்சான்"

'புலி வந்தா ஐயப்பா ஐயப்பான்னு சொல்வியா?'

'சாமிய கிண்டல் பண்ணாதீங்க' என்றாள் மனைவி. இதற்கு மேல் நான் பேசக்கூடாது என்று அர்த்தம்.
ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, 'சார் அங்க பாருங்க, காட்டெருமை. எவ்வளவு கூட்டமா நிற்குது பாருங்க. நம்ம கார் சத்த்ம் கேட்டதும் கலையுது" என்றார் துணைக்கு வந்தவர்.
ஒரே ஒரு காட்டெருமை மட்டும் முகத்தை நீட்டி, பல்லை காட்டியது லேசான ராகத்துடன். அழகான பல்!

உள்ளே மான்கள், மயில்கள் உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு, பங்களாவுக்கு போகலாம் என்றார் துணை பார்ட்டி.

'போலாமே"

போனோம்.

சின்ன பங்களா. அதிகமாக இருட்டாகத்தான் இருந்தது. உள்ளே போனால், சரக்கு பாட்டில்களும்(காலியானது) தண்ணி பாட்டில்களும் அதிகமாக கிடந்தன.

'டிஸ்கஷனுக்கு சினிமாக்காரங்க இங்கதான் சார் வருவாங்க. ஆனா, இங்க கரண்ட் கிடையாது. மத்த படி அமைதியா யோசிக்க நல்ல இடம்" என்றார்.

அமைதியா யோசிக்க 5000 ரூபாய் செலவு பண்ணணுமே! கார் ரிட்டர்ன் ஆனது

7 comments:

மஞ்சூர் ராசா said...

ஊட்டிக்கு போகும் பலர் ஊட்டியை மட்டுமே பார்த்துவிட்டு திரும்பிவிடுகிறார்கள். ஊட்டியை சுற்றி, பல கிராமங்கள் அவற்றை சுற்றியுள்ள கோயில்கள், தோட்டங்கள், ஓடைகள் ஏரிகள் என பல அழகான இடங்களை தவறவிட்டுவிடுகின்றனர்.

ஆடுமாடு said...

மஞ்சூர் ராசா உண்மைதான். நேரமில்லை. உங்க ஊருக்கு போகும் பாதைன்னு ஒரு போர்டு பார்த்தேன். அங்க இருந்து 30 கி.மீயாமே.

மஞ்சூர் ராசா said...

ஆமாம் நண்பரே.

அடுத்த முறை போய் வர முயற்சியுங்கள்.

Anonymous said...

அடிக்கடி இந்த பக்கம் வாங்க! நெறய எடம் கெடக்கு பாக்கதுக்கு.

ஆனா வரும்போது முன்னக்கூடியே சொல்லிட்டு வாங்க!

ஆடுமாடு said...

நன்றி மஞ்சூர். டிரை பண்றேன்.

குசும்பன் said...

சூப்பர்!!!

அட ஆடுமாடு போய் காட்டெருமையை பார்த்துவிட்டு வந்து இருக்குங்க:))

கிருத்திகா ஸ்ரீதர் said...

அய்யோ டாப்ஸ்லிப் போயிட்டு பரம்பிக்குளம் போகாம வந்துட்டீங்களா.... பரம்பிக்குளம் டிரக்கிங் ரொம்ப வித்யாசமான அனுபவமா இருக்கும். ரொம்ப கெடுபிடி கூட இருக்காது. அந்த ஊர்லயே சில கைடு கிடைப்பாங்க ரொம்ப நம்பகமானவங்க அவங்களோட போன நல்ல காட்டுக்குள்ள போயிட்டு வரலாம். ...ம்ம்ம் ஞாபகப்படுத்திட்டீங்க...ஆனா இப்போதைக்கு போக முடியுமான்னு தெரியல...