Friday, June 27, 2008

வள்ளி ஈயா மடம்

ரொம்ப சக்தியான அம்மன் அது. போய் நின்னு என்ன கேட்டாலும் கொடுத்திரும். காலையில வயலுக்கு வேலைக்கு போயிட்டு, ஊர்க்காரங்க எல்லாம் கோயிலு முன்னால வந்து உக்காந்து கிடுவாவோ. எல்லாரும் அம்மன்கிட்ட எதையாவது கேட்டுகிட்டே இருப்பாவோ. அம்மா, ‘எம்புள்ளைக்கு வயித்து வலி, ஏதாவது நீதான் பண்ணனும்’ கேட்டா, மறுநாளே வயித்து வலி சரியா போயிரும். இதனால அம்மன் புகழ், அக்கம் பக்கத்து ஊருக்கெல்லாம் தெரிஞ்சு, கூட்டம் கூட்டமா வர ஆரம்பிச்சுட்டாவோ.

இதுக்கிடையில என்னன்னா, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அம்மன், பணத்தை கொடுக்குறான்னு ஊருக்குள்ள பேச்சு. கொத்தனாரு முனியன், அம்மன்கிட்ட, ‘நான் வேலை பாக்குத எழவுல எம்புள்ளைல படிக்க வைக்க முடியாது, நீதான் ஏதாவது பண்ணணும்’ கண்ணை மூடி வேண்டியிருக்காம். திடீர்னு பாத்தா எதுத்தாப்ல இருக்குத திண்டுல ஒரு துணியில மடிச்சு ஒரு கெட்டு ரூவா இருந்துச்சு. முனிக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. அந்தானி, குப்புற அடிச்சு விழுந்து நெடுஞ்சாண் கிடையா கும்புட்டான்.

விஷயம் ஊரு பூரா பரவுனதும் வெள்ளிக்கிழமை தோறும் எல்லாரும் வரிசையா வந்து நின்னுட்டாவோ. அம்மனும் சளைக்காம கொடுக்க ஆரம்பிச்சா. எல்லாருமே சுகவாசியா ஆயிட்டானுவோ. ‘நமக்கென்னல அம்மன் இருக்கா; கேட்டா தரப்போறா’ன்னு சுத்த ஆரம்பிச்சுட்டானுவோ. கள்ளு எறக்குத சுப்பையாவுக்கு இதுல சந்தேகம் வந்து போச்சு.

ஒரு நாளு அவனும் போயி, அம்மன்கிட்ட வேண்டியிருக்காம். அம்மனும் பணத்தை அதே போல துணியில வச்சு திண்டுல வச்சுட்டா. ‘அதெப்படி? அம்மன் வந்து வச்சுட்டு போச்சு. நாம பாக்கலையே’ன்னு அங்கயே ரொம்ப நேரமா நின்னாம். அம்மன் இவன் கண்ணு முன்னாலயா வந்து நிக்கும்? வரவேயில்லை. போயிட்டான். அடுத்த வெள்ளிக்கிழமை காலையிலயே போய் கோயிலு உள்ள போயி ஒழிஞ்சுகிட்டாம். மேலத் தெருக்காரன் ஒருத்தன் வந்து அம்மன்கிட்ட வேண்டியிருக்காம்.

கண்ணை மூடிட்டு நின்னுக்கிட்டிருக்கும்போது நகைகள் ஜொலிக்க அம்மன் வந்திருக்கா. அவளைப் பாத்ததும் சுப்பையா, ஓடிப்போய் கால்ல விழுந்து ‘அம்மா நான் உங்களை பாத்துட்டேன்’னு சந்தோஷத்துல கத்திருக்காம். டமார்னு மறைஞ்சுட்டா அம்மன்.
மேலத்தெருகாரன் முழிச்சு பாத்தா, சுப்பையாதான் நிக்காம். பணத்தை காணலை. அவன், பணத்தை அம்மன் எங்கயாவது வச்சிருப்பான்னு சுத்தி சுத்தி வாராம். ஒண்ணுத்தையும் காணலை.

தன்னை ஒருத்தன் பாத்ததுலயிருந்து அம்மன் பணம் கொடுக்கதை நிறுத்திட்டா.
வள்ளியான அந்த அம்மன் பணத்தை ஈயாததால வள்ளி ஈயா கோயில்னு அதுக்கு பேரு வந்துச்சு. எதும் தராத அம்மனை ஏன் கும்புடணும்னு ஊர்க்காரனுவோ நினைச்சதால அதை மடமாக்கிட்டாங்கோ. அதனால அது வள்ளி ஈயா மடம்னு ஆச்சு. மருவி மருவி இப்ப வள்ளியா மடமா இருக்கு.
கடையத்துக்கு பக்கத்துல இருக்கு இந்த ஊரு.

16 comments:

Anonymous said...

/// வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அம்மன், பணத்தை கொடுக்குறான்னு ஊருக்குள்ள பேச்சு. ///

ஓகோ! அந்தக்காலத்திலேயே பிள்ளையார் பால் குடிச்ச கதை மாதிரி நிறைய இருந்திருக்கு போலெயே. சரித் தான்.

Anonymous said...

ஆடுமாடு, இப்போதுதான் இதுவ‌ரை நீங்க‌ளெழுதிய‌ வாய்மொழிக்க‌தைக‌ளை ஆறுத‌லாக‌ வாசிக்க‌க் கிடைத்த‌து. சுவார‌சிய‌மாக‌விருக்கிற‌து; தொட‌ர்ந்தெழுதுங்க‌ள்.
...
அ.கா.பெருமாளின் சில‌ நூற்க‌ளை வாசித்துவிட்டு, சுவார‌சிய‌மாக‌ப் பேசிக்கொண்டிருந்த‌ தோழியிட‌ம் ஈழ‌த்து நாட்டார் வ‌ழ‌க்கிய‌ல் முறையாக‌ப் ப‌திவுசெய்ய‌ப்ப‌டாம‌ல் போவ‌த‌ன் அவ‌ல‌ங்குறித்து உரையாடிய‌து நினைவிலெழுகிற‌து. இவ்வாறான‌ க‌தைக‌ளைத் தெரிந்த‌ ஒரு த‌லைமுறை இல்லாம‌ற்போகும்போது, அவை ச‌ம்ப‌ந்த‌மான‌ இட‌ங்க‌ள் த‌னியே 'ஒரு நினைவாய் ம‌ட்டுமே' எஞ்சிவிடுமென்ப‌து துய‌ரமான‌துதான்.
.....
அதேச‌ம‌ய‌ம் நாட்டார் வ‌ழ‌க்கிய‌லைக் க‌ட்டியெழுப்பும்போது, அது த‌ன‌க்குள்ளே ஒரு முக்கிய‌ கூறாய் உள்வாங்கியிருக்கும் சாதி குறித்த (குல‌ தெய‌வ‌ங்க‌ள், இன்ன‌பிற‌) புள்ளிக‌ளைப் ப‌ற்றியும் அவ‌தான‌மாயிருக்க‌வேண்டியிருக்கிற‌து (வ‌ள‌ர்ம‌தியும் இந்த‌ப்புள்ளிகுறித்து த‌ன‌து பின்னூட்ட‌மொன்றில் குறிப்பிட்டிருக்கின்றாரென‌ நினைக்கிறேன்). சி.மோக‌னை ஆசிரிய‌ராக‌க் கொண்டு வெளிவ‌ந்த‌ (வெளிவ‌ருகின்ற‌?) 'புனைக‌ளம்' (பெய‌ர் ச‌ரியா? நான் முத‌ல் மூன்றித‌ழ்க‌ளையே வாசித்திருந்தேன்)நாட்டார் வ‌ழ‌க்கிய‌ல் குறித்த விரிவான‌ ஆய்வுக‌ளோடு வ‌ந்திருந்ததையும் குறிப்பிட‌வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேட்டத குடுக்கலான்னா சாமி இல்லன்னு ஆக்கிட்டாங்களா ஓகோ..

இது நிறைய கதையில் வருமே.. வைக்கோலை தங்க இழையாக்கும் // elf ஷூ தச்சு தரும்.. ஆனா பாத்தா மட்டும் மறைஞ்சு போயிடும் அதுக்கப்பறம் எதும் உதவி செய்யாது அது மாதிரி இருக்கு..

நல்லா இருக்கு..

வல்லிசிம்ஹன் said...

நல்லா இருக்கும்மா. அதுவும் இந்த மொழி கேட்டு நாளாச்சு.

இதமா இருக்கு.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வள்ளி ஈயா மடம் நல்லாதானிருக்கு... வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

//ஓகோ! அந்தக்காலத்திலேயே பிள்ளையார் பால் குடிச்ச கதை மாதிரி நிறைய இருந்திருக்கு போலெயே. சரித் தான்.//

வெயிலான் அந்த மக்கள் எல்லாத்தையும் நம்புறவங்க.

ஆடுமாடு said...

தோழர் டிஜே, வருகைக்கு நன்றி.

//அ.கா.பெருமாளின் சில‌ நூற்க‌ளை வாசித்துவிட்டு, சுவார‌சிய‌மாக‌ப் பேசிக்கொண்டிருந்த‌ தோழியிட‌ம் ஈழ‌த்து நாட்டார் வ‌ழ‌க்கிய‌ல் முறையாக‌ப் ப‌திவுசெய்ய‌ப்ப‌டாம‌ல் போவ‌த‌ன் அவ‌ல‌ங்குறித்து உரையாடிய‌து நினைவிலெழுகிற‌து//

நண்பர் அ.கா பெருமாளின் நூல்களும் இந்த வாய்மொழிகதைகளை எழுத ஒரு தூண்டுதல்.

மரமேறி குருவி பிடித்த நானும் என் சேக்காளிகளும் கிராமத்து நினைவுகளை சட்டைப்பையில் போட்டுக்கொண்டு நகரத்தின் நாற்றத்தில் பிழைப்புக்காக, வந்தாகிவிட்டது.

குளத்தில் மீன் பிடித்து சுட்டு தின்ற சிறு வயது வாழ்க்கை என் மகன்களுக்கோ சேக்காளிகளின் மகன்களுக்கோ கிடைக்கவில்லை. நகரம் அவர்களை கம்யூட்டருக்குள் தள்ளியிருக்கிறது.

இப்படியொரு வாழ்க்கை இருந்தது/ இப்படி வாழ்ந்தோம் என்பது கதையாக ஆகிவிட்டது. என் தாத்தா எனக்கு சொன்ன கதைகளை எவ்வளவு சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தேனோ, அதே சுவாரஸ்யத்தோடு அவர்களும் கேட்கிறார்கள்.
அதை மீட்டெடுக்கும் விதமாகதான் இதை எழுதுகிறேன்.

'சொலவடை' என்ற விஷயம் இன்று காணாமல் போய்விட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.


//உள்வாங்கியிருக்கும் சாதி குறித்த (குல‌ தெய‌வ‌ங்க‌ள், இன்ன‌பிற‌) புள்ளிக‌ளைப் ப‌ற்றியும் அவ‌தான‌மாயிருக்க‌வேண்டியிருக்கிற‌து (வ‌ள‌ர்ம‌தியும் இந்த‌ப்புள்ளிகுறித்து த‌ன‌து பின்னூட்ட‌மொன்றில் குறிப்பிட்டிருக்கின்றாரென‌ நினைக்கிறேன்)//

உண்மைதான்.

//சி.மோக‌னை ஆசிரிய‌ராக‌க் கொண்டு வெளிவ‌ந்த‌ (வெளிவ‌ருகின்ற‌?) 'புனைக‌ளம்' (பெய‌ர் ச‌ரியா?//

புனைகளம் பெயர் சரிதான். வரும்...எப்ப வருமென்று யாருக்கும் தெரியாது. சி.மோகனுக்கு கூட.

நன்றி டி.ஜே.

ஆடுமாடு said...

கயல்விழி, வல்லிசிம்ஹன், கிருத்திகா நன்றி

Thekkikattan|தெகா said...

தொடர்ந்து கொடுங்க. படிச்சிட்டே வாரேன்.

//மரமேறி குருவி பிடித்த நானும் என் சேக்காளிகளும் கிராமத்து நினைவுகளை சட்டைப்பையில் போட்டுக்கொண்டு நகரத்தின் நாற்றத்தில் பிழைப்புக்காக, வந்தாகிவிட்டது. //

கொடுத்து வைச்சவரு, அத அத அந்தந்த வயசில செஞ்சிருக்க நேரமும், காலமும் கை கொடுத்திருக்கு...

//குளத்தில் மீன் பிடித்து சுட்டு தின்ற சிறு வயது வாழ்க்கை என் மகன்களுக்கோ சேக்காளிகளின் மகன்களுக்கோ கிடைக்கவில்லை.//

நமக்கும் இதில கொஞ்சம் அனுபவமுண்டுங்கிற முறையில இது எவ்வளவு பெரிய பெரு மூச்சை கொண்டு வருமுன்னு வெளங்குது...

//நகரம் அவர்களை கம்யூட்டருக்குள் தள்ளியிருக்கிறது.//

:-(

ஆடுமாடு said...

தெகா நன்றி

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<===
வெயிலான் said...
ஓகோ! அந்தக்காலத்திலேயே பிள்ளையார் பால் குடிச்ச கதை மாதிரி நிறைய இருந்திருக்கு போலெயே. சரித் தான்.
==>
=)))

கிருஷ்ணா said...

அருமையான பதிவு.

ambi said...

தொடர்ந்து கொடுங்க. படிச்சிட்டே வாரேன். :))

ஆடுமாடு said...

சாமானியன், கிருஷ்ணா, அம்பி நன்றி.

anujanya said...

சுவரஸ்யமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

அனுஜன்யா

ஆடுமாடு said...

அனுஜன்யா,

நன்றி