Tuesday, June 24, 2008

முள்ளி மலை பொத்தை

கடையத்துல இருக்குத நித்ய கல்யாணி அம்மனுக்கு ஒரு அக்கா. அவா பேரு கல்யாணி. கடையத்துல இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்துல இருக்குத சிவசைலம்தான் இவா ஊரு. சொத்து சொகம்னு இருக்குத ரெண்டு பேருக்குள்ளயும் சின்ன மனச்சடவு. என்னன்னா கல்யாணிக்கு பிள்ளைலு இல்லை. நித்ய கல்யாணிக்கு நாலு பிள்ளைலு.

பொம்பளைக்கு பிள்ளைலுவோ இல்லைனா அது பெரிய மன வருத்தமாத்தான இருக்கும். இருந்தாலும் தங்கச்சி பிள்ளைலுவோளை அவ பிள்ளை மாதிரிதான் பார்த்துக்கிடுவா. தூக்கி வச்சு கொஞ்சுதது, சாப்பாடு கொடுக்கதுன்னு இருந்தா.
ரெண்டு பேரு ஊருக்கும் ஏழு கி.மீட்டருதானே தூரம். இருந்தாலும் ஏகப்பட்ட வேலை இருந்ததால தங்கச்சி பிள்ளைல பாக்க முடியலை.

ரொம்ப நாளு கழிச்சு, நித்யகல்யாணி இருக்குத கடையத்துக்கு தங்கச்சிய பாக்க வந்தா. இவ வாரத கேள்விபட்ட நித்ய கல்யாணி, நம்ம குழந்தைகளை பாத்தான்னா என்னமும் நினைப்பாளோன்னு யோசிச்சுட்டு, குழந்தைகளை ஒரு ரூமுக்குள்ள போட்டு பூட்டிட்டா. ரெண்டுபேரும் அம்மனுவோ. இந்த விஷயம் கல்யாணிக்கு தெரியாம இருக்குமா? தெரிஞ்சு போச்சு.

தங்கச்சிக்காரிட்ட, ‘என்னைய இப்படி நினைச்சுட்டியே சண்டாளி, ஒன் குழந்தைகள்லாம் கருகி போவும்’னு சாபம் விட்டுட்டு போயிட்டா.
நித்ய கல்யாணி பதறி போயி, குழந்தைகளை அடைச்சு வச்சிருந்த ரூமை திறந்து பாத்தா. அவ்வளவுதான். அவளுக்கு மூச்சு பேச்சில்லை. சாபம் விட்ட மாதிரியே குழந்தைகள்லாம் கருகி போச்சு.

பதறியடிச்சுட்டு அக்காட்ட ஓடுனா நித்ய கல்யாணி. அவா காலை புடிச்சுட்டு, ‘என்னை மன்னிச்சுக்கோ; தெரியாம நடந்து போச்சு. என் கொழந்தைகளை காப்பாத்து’ன்னு கதறினா. என்னத்த இருந்தாலும் தங்கச்சியில்லையா? சரின்னு கொழந்தைகளை காப்பாத்திட்டா.

அந்தானி சொன்னா;
‘இனும நீயும் நானும் பாத்துக்கிடவே வேண்டாம். உன் மூஞ்சியிலயே முழிக்கவே மாட்டேன். இங்கியிருந்து பார்த்தா உன் வீட்டுல விளக்கெறியது தெரியும். நீ அங்கயிருந்து பாத்தா இங்க வெளக்கு எரியது தெரியும். இனும அது தெரியாது’ன்னு சொல்லிட்டு கொஞ்சூண்டு மண்ணை நுள்ளி வீசுனா, அது பொத்தையா வளந்து நின்னுச்சு.

இப்பவும் கோயிந்தபேரி பக்கத்துல இந்த மலை இருக்கு. நுள்ளி வீசுனதால இதுக்கு இந்தப் பெயரு. அது வழக்கு மாறி மாறி, இப்ப ‘முள்ளி மலை பொத்தை’ன்னு ஆயிப்போச்சு.

23 comments:

Anonymous said...

ஏம்ப்பா, தெக்கருந்து இன்னொரு கி.ராவா?

ambi said...

//கடையத்துல இருக்குத நித்ய கல்யாணி அம்மனுக்கு //

இந்த கதை கேள்விபட்ருக்கேன். ஆனா கடையம் இல்ல, ஆழ்வார்குறிச்சினு கேள்வி.
ஆ-குறிச்சில தானே ஒரு கோவில் இருக்கு.

எதுக்கும் விசாரிச்சுட்டு திரும்ப வாரேன். :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்துகிட்டு இருக்கு ஆடுமாடு. வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சில சமயம் ஒரு விதமான கிலி வந்துடும் சில கதையில் ..அதுமாதிரி இதுல வந்தது..

வல்லிசிம்ஹன் said...

ஏம்ப்பா, தெக்கருந்து இன்னொரு கி.ராவா?//

அதானே:)
பொருள் வேண்டும்,
முள்ளி?

ஆடுமாடு said...

அனானி நன்றி.

அம்பி,

ஆழ்வார்க்குறிச்சியில இருக்கறது பரம கல்யாணி அம்மன்.

ஆடுமாடு said...

சுந்தர் நன்றி

நா. கணேசன் said...

நாட்டார் தெய்வங்கள் மற்றும் பிற
கதைகளை நன்கு பதிவு செய்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!

அன்பொடு,
நா. கணேசன்

manjoorraja said...

முள்ளி என்றொரு கிராமமும் முள்ளிமலை என்றொரு கிராமமும் நீலகிரியில் இருக்கின்றன.

அந்த முள்ளிமலையைதான் சொல்றீங்களோன்னு நினெச்சு வந்தேன்.

கதை நல்லாத்தான் இருக்குது

வாழ்த்துகள்

Anonymous said...

இதே பொத்தை மலையில ஒரு குகைக்குள்ள அமைஞ்சிருக்கற 2 இஸ்லாமிய சமாதிகளுக்கு முன்னால உக்காந்து ஒரு இந்து பெண்மணி சனிக்கிழமைகள்ல அருள்வாக்கு சொல்றதுண்டு..

ஆடுமாடு said...

நன்றி கயல்விழி.

ஆடுமாடு said...

//பொருள் வேண்டும்,
முள்ளி?//

வல்லிம்மா,
சின்ன புள்ளைங்க 'என்னை கிள்ளாட்டான்..' சொல்றாங்கள்ல. அதான். கொஞ்சமா மண்ணை கிள்ளி அம்மான் போட்டா. கிள்ளி என்பதை எங்க ஊர்ல நுள்ளிட்டான்/முள்ளிட்டான்னு சொல்வோம்.

சரியா?

ஆடுமாடு said...

//நாட்டார் தெய்வங்கள் மற்றும் பிற
கதைகளை நன்கு பதிவு செய்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்//


நன்றி கணேசன் ஐயா.

கிருஷ்ணா said...

//ஆழ்வார்க்குறிச்சியில இருக்கறது பரம கல்யாணி அம்மன்.//

ஆழ்வார்க்குறிச்சியில பரம கல்யாணி அம்மன் கோவில் இருக்கா?சிவசைலத்துல தானே இருக்கு.

நம்ம ஊரைச்சுற்றியுள்ள கதைகளை தெரிந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.

அடையாபாழை பற்றி ஊரிலும் கேட்டேன்

ஆடுமாடு said...

//அந்த முள்ளிமலையைதான் சொல்றீங்களோன்னு நினெச்சு வந்தேன்//

மஞ்சூர் ராசா சாரிங்க. இது வேற முள்ளி மலை

ஆடுமாடு said...

//இஸ்லாமிய சமாதிகளுக்கு முன்னால உக்காந்து ஒரு இந்து பெண்மணி சனிக்கிழமைகள்ல அருள்வாக்கு சொல்றதுண்டு...//

ம்ம்ம்?

நனறி அனானி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"நுள்ளிட்டான்" ரொம்ப நாளாச்சு இந்த வார்த்தையை மறந்து இன்னைக்கு போய் வீட்டுல பசங்க கிட்ட சொல்லனும். அவங்களுக்கு இப்பெல்லாம் தமிழ் வார்த்தைக்கு கூட ஆங்கிலத்தில் தான் விளக்கம் சொல்ல வேண்டிய தலையெழுத்துல இத இரசிப்பாங்களா??? தெரியல ஆனா நம்ம ஆத்தாமைக்கு சொல்லித்தானே ஆவனும்....
நன்றி ஆடுமாடு... தொடர்ந்து எழுதுங்கள்.

anujanya said...

வாய் மொழிக் கதைகள் எல்லாமே மிக அருமையாக கி.ரா. வை நினைவு படுத்துகிறது. நல்ல சரளமான நடை. ஆயினும் வளர்மதி சொல்லியுள்ளதை எப்போதும் நினைவு கூறுங்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

அனுஜன்யா

ஆடுமாடு said...

//ஆழ்வார்க்குறிச்சியில பரம கல்யாணி அம்மன் கோவில் இருக்கா?சிவசைலத்துல தானே இருக்கு//

கிருஷ்ணா, தேரோட்டமெல்லாம் நடக்குமே... அந்த கோயில்.

ஆடுமாடு said...

//'நுள்ளிட்டான்" ரொம்ப நாளாச்சு இந்த வார்த்தையை மறந்து...//

கொஞ்ச நாள்ல எல்லாருமே மறந்துருவோம்னு நினைக்கிறேன்.

இன்னைக்கு கிராமங்கள் டவுண் ஆகிட்டு வருதுலா.

ஆடுமாடு said...

அனுஜன்யா நன்றி

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நன்றிப்பா.
முள்ளங்கிப் பொத்தை மாதிரினு நினைச்சுட்டென்:)

kumar said...

கடையம் நித்தியகல்யாணி -ஆழ்வார்க்குறிச்சி சிவசைலம் - பரமகல்யாணி இரண்டும் ஓர் நேர் கோட்டுல இருக்கு Satellite mapla பாருங்கள் வரலாறு புரியும்