ரெண்டு நாளா மாந்தோப்பு பக்கத்துல அரசன், படையோட இருக்காம். எங்கயோ போவ வேண்டியவன் இங்க எதுக்கு இருக்காம்னு புரியல. எதுக்கு என்னன்னு ஊர்லயும் யாருக்கும் தெரியல. இதை போய் அரசன்கிட்ட கேக்கவா முடியும்? போற வாரவோயெல்லாம் அவன் கோவத்துல இருக்காங்கத மட்டும் சொல்லுதாவோ. கீழ்ப் பக்கத்துல ஏழெட்டு யானையோ. மேல் பக்கம் குதிரைகளா இருக்கு. வீரர்கள்லாம் வேல் கம்பை வச்சுக்கிட்டு கூட்டமா இருக்காவோ. ஊர் பூரா என்ன ஏதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காவோ.
வழக்கமா மேக்கு பத்துக்கு மாடு மேய்க்க போற பண்டார அண்ணாச்சி, இங்க என்ன நடக்குன்னு தெரியணுங்கறதுக்காக, இவங்க இருக்குத பக்கமா மாடு மேய்க்க போனாரு. ஊர்க்காரனுவோ முழுசா விசாரிச்சுட்டு வாடேன்னு வேற சொல்லிட்டானுவோ. சரின்னு கௌம்பிட்டாரு.
மாந்தோப்புக்கு உள்ள மாட்டை பத்திவுட்டுட்டு, இவங்க என்ன பண்ணுதாவோன்னு தூரத்துல நின்னுக்கிட்டு பார்த்தாரு. ஒரு யானை, கீழப் படுத்துக்கிடக்கு தும்பிக்கைய அங்க இங்கன்னு ஆட்டிக்கிட்டு. பக்கத்துல அரசன் உக்கார்ந்திருக்காரு. ஒரு ஆளு கையில பெரிய பெட்டிய வச்சுக்கிட்டு யானை கால்ல தடவி தடவி விடுதாரு. கால்ல கையை வச்சா யானை உதறுது. அந்தாளு யோசிச்சுட்டு நிக்கான்.
இவருக்கு ஒண்ணுமே புரியலை. அரசனுக்கு கோவம். பண்டாரத்துக்கு அங்க போவலாமா வேண்டாமான்னு குழப்பம். போனா அரசன் இங்க என்ன ஜோலின்னு கேட்டுட்டாம்னா?. அந்தானி பாத்துட்டே இருந்தாரு. ஒண்ணும் விளங்குத மாதிரி தெரியல. மனசுல தெரியத்தை வச்சுக்கிட்டு மெதுவா அரசன் இருக்குத பக்கம் போனாரு. இவரு வாரத பார்த்து நாலஞ்சு வீரனுவோ ஓடி வந்து தடுத்தானுவோ. இதை பாத்த அரசன், 'அவனை வர விடு'ன்னான். போனாரு பண்டாரம்.
'என்ன?'ன்னாரு அரசன்.
‘நான் மாடு மேய்க்கவன். எங்க ஊர்ல ரெண்டு நாளா இருக்கியோ. என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் இங்க வந்தேன்'னு சொன்னாரு பண்டாரம்.
அரசன் மேலயும் கீழயும் பாத்தாரு.
‘இங்க படுத்து கெடக்கு பாரு யானை. இது மேலதான் வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் திடீர்னு படுத்துக்கிட்டு. என்னன்னு தெரியலை. யானையை எழுப்ப பக்கத்தூர்லயிருந்தெல்லாம் வைத்தியருங்க வந்தாங்க. முடியல. அதான் இருக்கோம்'ன்னாரு அரசன்.
‘இவ்வளவுதானா? நான் வேற ஏதோன்னு நினைச்சேன். நான் வேணா யானைய எழுப்பட்டுமா?'ன்னாரு பண்டாரம்.
‘நீ என்ன வைத்தியனா'ன்னு கேட்டாரு அரசன். இல்லைன்னான்.
‘பெறவு எப்படி எழுப்புவே'ன்னாரு.
‘இப்ப பாருங்க'ன்னு யானை பக்கத்துல போனாரு பண்டாரம்.
பக்கத்துல இருந்த வைத்தியன், ‘நானே போராடி பாத்துட்டேன். நீ என்னத்த பண்ணிருவே'ன்னாரு.
இவரு ஒண்ணும் சொல்லலை. பேசாம, யானையோட காலை பாத்தாரு. காலு கொஞ்சமா வீங்கி இருந்துச்சு. அந்த காலு இருக்குத பக்கத்துல ஆழமா குழி தோண்ட சொன்னாரு அரசன்கிட்ட. வீரர்கள் வந்து தோண்டுனாவோ. அந்தானி பெரிய கயிறை கொண்டு வந்து, யானை கால்ல கட்டுனாரு பண்டாரம். கயிறோட ஒரு நுனியில பாறாங்கல்லை கட்டி குழிக்குள்ள போட்டாரு. யானையோட காலு புழுக்குன்னு குழிக்குள்ள போச்சு. டக்குன்னு சின்ன சத்தம். சரியா போச்சு. கயித்தை அவுத்துவிட்டாரு பண்டாரம். யானை கெந்தி கெந்தி எந்திரிச்சுட்டு.
அரசனுக்கு சந்தோஷம் தாங்க முடியலை.
‘என்ன பண்ணுன"ன்னு பண்டாரத்துக்கிட்ட கேட்டாம் அரசன்.
‘மாடுவோ கால்ல சுளுக்கு வந்துச்சுன்னா இப்படி படுத்துக்கிடும் பாத்துக்கிடுங்கோ. அதுக்கு பண்ணுததைதான் இதுக்கு பண்ணுனேன்'ன்னாரு பண்டாரம்.
‘யானைக்கு சுளுக்கா?'
ஆமான்னாரு பண்டாரம்.
சந்தோஷம் தாங்காத அரசன், ‘இந்தா இந்த இடம் பூராத்தையும் நீயே வச்சுக்கோ'ன்னு சுத்தி தெரிஞ்ச இடத்தையெல்லாம் இவனுக்கு கொடுத்துட்டாரு.
விஷயத்தை ஊர்ல வந்து சொன்னாரு பண்டாரம். எல்லாரும் அந்த இடத்தை பாக்கதுக்கு வந்தாவோ. வந்து பாத்தா குழி தோண்டுன இடத்துல ஊத்து பொங்கி தண்ணி வருது!
எல்லாருக்கும் ஆச்சரியம். குடிச்சு பார்த்தா அவ்வளவு ருசி. பெறவு பக்கத்துல சத்திரம் மாதிரி கெட்டுனாவோ. அன்னையில இருந்து இந்த இடத்துக்கு யானைக்கு சுளுக்கெடுத்த மடம் பேரு. இப்பம் பக்கத்துல கருப்பசாமி பூடம் வந்துபோச்சு.
இன்னைக்கும் பண்டாரம் குடும்பத்து ஆளுவோ ஒவ்வொரு சித்திரை விசுவுக்கும் இங்க ஐநூறு பேருக்காவது அன்னதானம் போடுதாவோ.
...................
அடுத்து (திருடி அம்மன்)
28 comments:
கதை நன்றாக இருந்தது.வாழ்த்துகள்
யானைக் கதை அருமை ஆடுமாடு ;)
கி. ரா. வின் தொடர்ச்சியாகத் தமிழில் எவரும் இல்லையோ என்ற வருத்தம் அவ்வப்போது எழுவதுண்டு.
இக்கதையை வாசித்ததும் அந்த இடத்தை எடுக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக ஒரு மகிழ்ச்சி.
உங்களுடைய மற்ற முயற்சியோடு (வெண்ணிலாக்கள் பூக்கும் தெரு) ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது நன்றாக வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. தொடர்ந்து இதில் பயணித்துப் பாருங்களேன் :)
வாழ்த்துக்கள்.
அன்புடன் ...
வளர் ...
வளர் நன்றி,
என் பயணம் கிராமம் தொடர்பானதுதான்.
//கி. ரா. வின் தொடர்ச்சியாகத் தமிழில் எவரும் இல்லையோ என்ற வருத்தம் அவ்வப்போது எழுவதுண்டு
இக்கதையை வாசித்ததும் அந்த இடத்தை எடுக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக ஒரு மகிழ்ச்சி//
நெசமாவா?
வேளராசி (?!) நல்ல பெயர்.
நன்றி
நெசமாத்தான் அன்பரே :)
எனினும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு புள்ளியையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (உங்களுடைய “சாமி” கதையை இப்போதுதான் வாசித்தேன். அதிலிருந்து எழும் குறிப்புகள் இவை எனக் கொள்ளலாம். அக்கதை குறித்து அங்கும் சற்று விரிவாகப் பகிர முயற்சிக்கிறேன் ... நேரம் வாய்க்கும்பொது)
கி. ரா. வின் கதைகளில் உள்ள சுவாரசியமும் எள்ளலும் 'நமது' நாட்டுப்புறக் கதை சொல்லல் மரபில் இருந்து எழுந்தவை என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
அவருடைய கதைகளில் சுவாரசியத்தையும் மீறி, வாசகரை(இரு பாலரையும் கொள்க) ”முகம் சுளிக்க” வைப்பவை அம்மக்கள் வாழ்வில் உள்ள ஈவிரக்கமற்ற கேலிகள்.
ஊரில் யாரும் அறியாத ரகசியம் ஏதும் இருக்க முடியாது. சரியான தருணங்களில் ஒரு நபரின் “ஒளிவட்டத்தை” புறணிப்பேச்சாக உலவி வரும் இந்த ‘ரகசியங்கள்' அவரது முகத்திற்கு நேராக வீசப்பட்டு அவரது பெருமிதங்கள் அனைத்தும் கீழிறக்கி வைக்கப்பட்டுவிடும். இது கிராமங்களில் இருந்த/இருக்கும் வாழ்வுண்மை.
கி. ரா. இந்த அம்சத்தை தமது கதைகளில் மிக நன்றாகக் கையாண்டிருப்பார்.
ஆனால், அவர் வெளிக்கொண்டு வராமல் விட்ட (விரும்பாத என்றும் கேள்விப்பட்டதுண்டு) வாழ்வின் இன்னும் “அறையும் உண்மைகள்” சில இருப்பதாகப் படுகிறது.
ஒன்று, பெண்களின் நோக்கில் பாலியல் உறவுகள்.
இரண்டு, தாம் பிறந்த/பிறக்க நேர்ந்த சாதியின் வழமைகளை வெளியே நின்று (வேறு வகையில் சொல்வதென்றால் ... ஒடுக்கப்பட்ட மக்கள், தலித்துகள் அதே வழக்குகளை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதுகூட சற்று மிகையான கோரிக்கையாக இருக்கலாம் ... விமர்சனக் கண்கொண்டு கேலி செய்யாமல் விட்டது.
மூன்றாவதாக, மேற்சொன்ன புள்ளியை மீண்டும் பெண்களின் நோக்கில் இருந்து தர முயற்சித்தல்.
இப்படியெல்லாம் பார்ப்பது, படைப்பாளியின் வேலையல்ல என்று ஆயாசப்படுபவர்கள் உண்டு என்பதைத் தாங்களும் அறிவீர்கள்.
அந்த ஆயாசத்திலிருந்து ஒரு படைப்பாளி வெளியேற முடிந்தால், நிச்சயம் மிகச்சிறந்த் படைப்புகள் உருவாகும் என்பது எனது நம்பிக்கை.
அன்புடன் ...
வளர் ...
நல்லாயிருக்குங்க...... கொஞ்சநாளைக்கு முன்னாடி குமுதத்திலே கி.ரா கதைகள் வந்துச்சு.. அதெய்யலாம் ஞாபகப்படுத்திட்டிங்க.. :)
யானைக் கதை அருமை. தொடருங்கள் . அன்புடன், ஜெயக்குமார்
//அடுத்து (திருடி அம்மன்)
Posted by ஆடுமாடு at 2:56 AM 4 comments Links to this post
Labels: நம்பிக்கை கதைகள் //
இதென்ன முன்னோட்டமா ??? நல்லாத்தான் இருக்கு.. ஆர்வத்தைத்தூண்டரமாதிரி
ஒரு கிராமத்து பெரியவர் அந்த ஊர் சொல் வழக்கில் கதை சொல்லக் கேட்டது போல் ஓர் உணர்வு. அருமையான நடை.
திருடி அம்மன் தரிசனம் எப்போது?
என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?
சொகமா இருக்கீங்களா?
யானைக்கு என்னமோ எதோன்னு பதறிக்கிட்டு ஓடியாந்தேன்.
நல்லாத்தான் சுளுக்கெடுத்தாரு:-)))))
ஆமா, இது உண்மைக் கதையா?
ரொம்பவும் அருமை.
திரும்பவும் இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
வளர்,
நன்றி.
கிராமத்தில் எனக்கு நேர்ந்த/ அல்லது கேள்விபட்ட அனுபவங்களை மட்டுமே எழுதி வருகிறேன். அதில் கொஞ்சம் கற்பனை இருக்கலாம்.
நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி 'அறையும் உண்மைகள்' சில அல்ல அதிகமாகவே இருக்கிறது. கொண்டு வர முயற்சிக்கிறேன்.
நன்றி வளர்
ராம், கானகம் நன்றி
நல்லா வந்திருக்குங்க.
ராமலட்சுமி நன்றி.
//திருடி அம்மன் தரிசனம் எப்போது?//
கொஞ்சம் கதையில சந்தேகம் இருக்கு. விசாரிச்சு முடிஞ்சதும்.
//என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?
சொகமா இருக்கீங்களா?//
துளசி டீச்சர், கொஞ்சம் ஊர் சுத்திட்டு இருந்துட்டேன். இனும இதுலதான்.
நன்றி டீச்சர்.
//ஆமா, இது உண்மைக் கதையா?//
வெயிலான் ஆமா,
வி.கே புரத்துலயிருந்து தென்காசி போறதுக்கு ஒரு வழி இருக்கு. டானா வழின்னு சொல்லுவாங்க. அதுலயிருந்து ஏழு கி.மீட்டர்தூரம்தான். தாட்டாம்பட்டின்னு ஒரு கிராமம். அதை தாண்டுனதும் இந்த மடம் ரோட்டோரமாவே இருக்கு.
பாழடைஞ்ச மண்டபம் மாதிரி இருக்கும்.
ஊருக்கு போனிங்கன்னா போயிட்டு வாங்க.
நன்றிஜி.
சுந்தர்ஜி நன்றி
http://www.keetru.com/vanam/sep07/babanasaperumal.php
http://www.keetru.com/vanam/sep07/babanasaperumal.php
நல்லாருக்கு ஆடுமாடு.. தொடர்ந்து எழுதுங்கள்... அப்பறம் ஒரு சின்ன விசனம்.. இந்த வரிங்களை கொஞ்சம் மாத்தி எழுதினா நல்லாருக்குமோன்னு தோனுது.. ===மேல் பக்கம் குதிரைகளா இருக்கு. வீரர்கள்லாம் வேல் கம்பை வச்சுக்கிட்டு கூட்டமா இருக்காவோ. ஊர் பூரா என்ன ஏதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காவோ.
" மேல் பக்கம் குதிரைங்களா இருக்கு, வீரங்கல்லாம்".... அந்த நடைக்குப்பொருத்தமானதா இருக்கும்னுதான்.. தப்பா எடுத்துக்கிடாதீய...
நல்ல கதைங்க . .. தலைப்புகளும் வித்தியாசமாக வாசிக்க தூண்டுவதாக இருக்கிறது...
கிருத்திகா நன்றி.
உங்க கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றிங்கக்கா...
//தலைப்புகளும் வித்தியாசமாக வாசிக்க தூண்டுவதாக இருக்கிறது...//
நன்றி முத்துலட்சுமி
படிக்க நன்றாக இருந்தது.
நல்லா இருக்கு, குறிப்பா எழுதின நடை& மொழி. வளர்மதியின் பின்னூட்டத்தை மனதில் கொள்க.
அடுத்த கதைக்கு தவறாமல் வருவேன். :)
/// ஊருக்கு போனிங்கன்னா போயிட்டு வாங்க ///
கண்டிப்பா பாத்துட்டு வர்றேன். நன்றி!
மிகவும் ஆர்வமாகப் படிக்க வைக்கிறீர்கள்.
Post a Comment