Sunday, February 10, 2008

உடுக்கை

'உங்க குடும்பத்துல கன்னி பொண்ணு யாரோ செத்து போயிருக்காளேம்மா.. அவளுக்குப் பூசை செஞ்சு கும்புட்டாத்தான் உன் குடும்பம் வெலங்கும் '

இசக்கிஅம்மன் கோயில் பூசாரி உடுக்கையடித்துச்சொன்னதிலிருந்து லட்சுமி தலையைப் பிய்த்துக்கொண்டு அலைந்தாள். சாமி சொன்ன வாக்கு. லேசில் விட்டுவிடவும் முடியாது.
நம்ம குடும்பத்துல யாரு கன்னியா செத்துப்போயிருக்கா ? வீட்டுக்காரரு கூடப் பிறந்தது நாலு பேரு. அதுல மூணு பேரு ஆம்பளை. ஒரு பொண்ணு. அவளும் கல்லு மாதிரி குத்துக் கல் வலசையில இருக்காளே. பெறவு யாரா இருக்கும் ? ஒரு வேளை சாமி, தெரியாம சொல்லியிருக்குமோ ? இசக்கியம்மன் பொய்யா சொல்லும் ? சொல்லாது. அதும் அருள் வந்து உடுக்கை அடிச்சுச் சொல்லியிருக்கு.கொடைக்கு மொத நாளே போயிருந்தா இன்னும் நெறைய சொல்லியிருக்கும்.

வீ.கே. புரத்திலிருந்து கீழாம்பூர் ஏழு கிலோமீட்டர்தான். ஏகப்பட்ட பஸ் வசதி இருக்கு. நேத்தே வந்திருக்கலாம்னா வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை. அவரப் போட்டுட்டு வர முடியுமா ? முடியாது. அவருக்கும் சாமிக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு அவருக்கு கொஞ்சம் பரவாயில்லை.

வருஷத்துக்கு ஒரு தடவை அம்மனுக்குக் கொடை கொடுக்காவோ. வரி முழுசா நூத்தம்பது ருவா கொடுத்துட்டு கோயிலுக்குப் போவாம இருக்கது நல்லாவா இருக்கு ? அதான் வந்தேன். வந்த இடத்துல சாமிகிட்ட திருநாறு பூசலாம்னா... அருள் வந்து குறி சொல்லிட்டு.
எசக்கி அம்மனுக்கு ஆடுத, ஆறுமாச்சி, நாலு மாசத்துக்கு முன்னால செத்து போயிட்டா. இப்ப ஆடுதவரு புதுசு. பாப்பாக்குடியிலருந்து வந்திருக்காராம். தெரிஞ்சு சொன்னாரோ தெரியாம சொன்னாரோ ? கண்ணுல ஆத்தா காட்டியிருக்கதை சொல்லியிருப்பாரு.
ஒரு வேளை எங் குடும்பத்துல யாரும்... ?

எங்கூட பிறந்தது மூணு பேருதான். மூணு பேருமே உயிரோடத்தான் இருக்கோம்.
ஆங்... சின்ன வயசுல எனக்கொரு தம்பி இருந்தான். தென்னரசுன்னு பேரு.தெப்பக்குளத்துல இந்த கரையில இருந்து அந்தக் கரைக்கு எருமை மாட்டு மேல உட்காந்து தெனமும் போவான். ஒரு நாள் ஆழத்துல விழுந்து செத்துப்போயிட்டான். சாமி அவனை சொல்லுதாரோ என்னமோ. இல்லையே. கன்னி பொண்ணுன்னுலா சொன்னாரு ?

கோயிலின் ஒரத்தில் அம்மனுக்கான சாமான்கள் இருக்கும் கருவேலப்பறையின் திண்டில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தவளை உலுப்பினாள் பேச்சி.

'ஏட்டி என்ன இங்க உக்கந்துட்ட ? '

'ஏ சித்தி எப்படி இருக்க ? '

'நல்லாதான் இருக்கேன் '

'வீட்டுல நல்லா இருக்காவோளா ? '

' இருக்காவோ,

'உன் வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லையாமே. இப்ப பரவாயில்லையா ?'

'ஆங்...இப்ப சும்மா இருக்காவோ '

' வீட்டுக்கு வந்துட்டுப் போயேன் '

'இல்லத்தா சீக்கிரம் போவணும். உன் பேரன், பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்துருவான் '
'உன் மைனி மவ சமைஞ்சிருக்காளாமே ? '

'அது ரெண்டு மாசமாச்சே '

'ஏன் சடங்கு நடத்தலை ? '

'அவ்வோ பொண்டாட்டி புருஷனுக்குள்ள சடவு. சரி உங்கிட்ட கேக்கணும்னு இருந்தேன் '
'என்னத்த ? '

'எசக்கியம்மனுக்கு ஆடுதவருட்ட திருநாரு பூசுனேன்... '

' யாருன்னு தெரியலையோ '

'ம் ? '

'உங்க அடையங்கருங்குளத்தா இருக்காலா...அவளுக்கு மாமன் மவன். '

'அப்படியா ? யாரு கண்டா ? நம்ம அவ்வோ குடும்பத்துகூட அவ்வளவு பழகல. நான் என்ன சொல்ல வந்தம்னா...திருநாரு பூச போனேன். பூசிட்டு இருக்கும் போதே அவருக்கு அருள் வந்துட்டு. சாமிய பாத்து உருமிக்கிட்டு, உடுக்கைய அடிச்சாரு.உங்க குடும்பத்துல ஒரு பொண்ணு கன்னி கழியாம செத்து போயிருக்கு .அதுக்குப் பூசை செஞ்சு கும்பிட்டாத்தான் குடும்பம் தழைக்கும்னு சொன்னாரு. எனக்கு வெவரம் தெரிஞ்சு எங்க குடும்பத்துல யாரும் கன்னிப்பொண்ணு செத்துப் போனதில்லை. என்ன இப்படி சொல்லிட்டாருன்னு ஒரே கவலையா இருக்கு. '

'அப்படியா ? எனக்குத் தெரிஞ்சு யாரும் செத்து போனதா தெரியலையே, நீ ஒம் மாமியாட்ட வேணா கேளு '

'அதான் ரோசனையா இருக்கு. ஏற்கனவே வீட்டுல யாருக்காவது ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டுதான் இருக்கு. மாமனாருக்கு நெஞ்சுவலி வந்து இருவது நாள் ஆவலை. அதுக்குள்ள இவ்வோ படுத்துட்டாவோ. அதுக்கு முன்னால உன் பேரன் காலை முறிச்சுட்டு வந்தான்.இவரு சொல்லுதத பாத்தா நம்ப முடியாமலும் இருக்க முடியல. '

'உங்க மாமனாருக்கு மொத தாரம் ஒருத்தி இருந்தா. வயல்ல களையெடுக்கும்போது இடிவிழுந்து செத்துபோயிட்டா. அவளுக்கு கண்டா புள்ளைலு இருந்திருக்குமா தெரியலை. நீ எதுக்கும் உன் மாமியாட்ட கேளு '

'அவளுக்குப் புள்ளை இல்லைன்னுலா சொன்னாவோ '

'நம்ம கயிறுமொடைஞ்சாம் மவா ஒரு புள்ளை, நாண்டுக்கிட்டு நின்னு செத்து போயிருக்கு. ஆனா அவன் உனக்கு நெருங்குன சொந்தம் இல்லையே '

'சொந்தமா இருந்தாலும், அவ மவளுக்கு அவம்லா செஞ்சு கும்புடணும் '
லட்சுமியின் மூளை இதையே சுற்றிக்கொண்டிருந்தது. கோயில் தாண்டி பஸ் நிறுத்தத்துக்கு வந்தாள். தென்காசி ரூட்டில் வரும் பேருந்துகள் வலது பக்கம் திரும்பினால் பாபநாசம் ,விக்ரமசிங்கபுரம் செல்லும். நேராக சென்றால் அம்பாசமுத்திரம். லெட்சுமி வல பக்கம் திரும்பி நின்றாள். பெரும்பாலும் இந்த இடத்தில் பஸ்கள் நிற்பதில்லை. கை காட்டினால் கருணையுள்ள டிரைவர்கள் நிறுத்தலாம்.கோயிலில் கொடுத்த தேங்காய் முறி, திருநீறு, குங்குமம் போன்றவற்றை ஒரு உறைப்பையில் போட்டு அதை மடித்து கையில் வைத்திருந்தாள்.
மனது முழுவதும், முகம் தெரியாமல் செத்துப்போன கன்னியின் மீது அலைந்து கொண்டிருந்தது. பேருந்து, கோவன்குளம் ரயிலடி தாண்டி, தாட்டாம் பட்டி போகும் போதுதான் அவளுக்கு பயணச் சீட்டு வாங்காதது ஞாபகத்துக்கு வந்தது. நடத்துனர் மனதுக்குள் முனகிக்கொண்டே சீட்டைக்கொடுத்தார்.

அந்த வழி தடத்தில் ஆங்காங்கே இருந்த அனைத்து சாமிகளையும் பேரூந்தில் இருந்தவாறே கையெடுத்துக் கும்பிட்டாள். செத்தும்கெடுத்த அந்தக் கன்னி மீது கோபம்கோபமாக வந்தது. செத்துப் போன கன்னிகள் பெரும்பாலும் வெள்ளையுடையுடுத்தி மற்றவர்களைப் பழிவாங்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். மாடத்திக்கிழவி ஒரு முறை சொல்லியிருக்கிறாள். கன்னிகள் செத்துப்போனால் மனசு நிறைவில்லாமல் ஒவ்வொருவராக தேடி அலைவார்கள் என்றும் யாரைப் பிடித்திருக்கிறதோ அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறாள். கருக்கலில் மல்லிகை பூவைத்துக்கொண்டு தனியாகச் செல்லும் கன்னிகளையே இது முக்கியமாக கன்னிவைத்து பிடிக்குமாம். தமது ஆசைகளை, பிடித்திருக்கிற கன்னிகளின் மூலமாக தீர்த்துக் கொள்ளுமாம்.

லட்சுமிக்கு, ஊரில் பேய் பிடித்தவர்கள் எல்லாம் மனதில் வந்து போனார்கள். பெருமாளாச்சி மகள் கல்யாணிக்கு ஒரு முறை பேய் பிடித்து, பெரியசாமி மந்திரக்கோனாரை அழைத்திருந்தார்கள் குலையடிக்க. அவர் வேப்பங்குலையை பிடித்துகொண்டு பேய் வந்த கல்யாணி மீதுஅடிக்க அடிக்க, திமிராக பதில் சொல்லியது பேய். 'என்ன வெரட்டாத, நான் போவ மாட்டேன். போன மாசம் செத்துபோன ஆண்டாளுதான் நான். நான் என் மைனியதான் புடிச்சிருக்கேன். என்னைய வெரட்டாத. ' மிரட்டியது பேய். பிறகு, 'தெரு முனையில எனக்கு பூசை வை ' என்றது. இந்த பூசைக்குப் பிறகு அந்தப் பேய் வரவில்லை. இது மாதிரிதான் நம்ம குடும்பத்தில் செத்துப்போனதாகச் சொல்லப்படும் கன்னியும் கேட்பாளோ ?

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, அத்தையைத் தேடினாள்.தொழுவத்தில் மாடுகளுக்குப் புண்ணாக்கு வைத்துக்கொண்டிருந்த அத்தையானவள்,இதைக் கேட்டதும் ஆச்சர்யப்பட்டுப் போனாள்.

'நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எனக்குத் தங்கச்சி ஒருத்தி நாண்டுகிட்டு நின்னு செத்துப்போனா, அவ செத்து வருஷம் என்னாச்சு, அவளுக்கு எப்படி வச்சு கும்புட முடியும் ? '

'வேற யாராவது, ? '

'எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லை '

' மாமாட்ட கேளேன் '

புருஷனிடம் சொன்னாள்.

' இந்த மாதிரி அவன் சொன்னான் இவன் சொன்னாம்னுலாம் எங்கிட்ட சொல்லாத, எனக்கு ஊருபட்ட வேலை கெடக்கு. அதுல இது வேறயா ? சாமியாரு சொன்னாராம்னு வந்து கேக்கா பாரு. ஊரு உலகத்துல தெனமும் ஆயிரம் பேரு கன்னியாவே செத்து தொலையுதுவோ, எல்லாத்துக்கும் பூசை புண்ணாக்குன்னா செஞ்சுக்கிட்டு இருக்கானுவோ. இனும இந்தப் பேச்சை எங்கிட்ட பேசாத, சாமி, சாத்தான்னுட்டு. '

கோவமாக வந்தது லட்சுமிக்கு. எசக்கி அம்மனை போயி இப்படி சொல்லுதாரே என்று. சாமிக்கும் அவருக்கும் ரொம்ப தூரம்தான் என்றாலும் இந்த விஷ்யத்தில் காது கொடுத்துக்கேட்பார் என்று நினைத்தாள்.போய் தொலையட்டும். மாமனாரிடம் கேட்கலாம் என்று போனாள்.வாசல் திண்ணையில் உட்கார்ந்து இளநீர் உறித்துக்கொண்டிருந்தார் அவர்.
'எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லையே,எந்த சாமியாரு சொன்னாரு '

' எசக்கியம்மன் கோயில்ல '

'ஆறுமுத்துக்கு பெறவு இப்ப யாரு சாமியாடுதா '

'அடையகருங்குளத்தா மாமன் மவனாம் '

'அவனுக்கும் இந்தச் சாமிக்கும் சம்பந்தமே இல்லையே, அவனுக்கு எப்படி அருள் வருது ? '

'தெரியலை '

' அவன் ஆள் தெரியாம சொல்லிருப்பான், நீ ஒண்ணும் பெருசா நெனைக்காண்டாம் '

'ஆங்.. '

மனசு கேட்கவில்லை. சாமி சொன்னது எப்படி தப்பாக இருக்கும் ? அவர் சொல்லியும், பூசை எதுவும் பண்ணவில்லையென்றால் குடும்பத்தில் தொடர்ந்து நோய் நொடிகள் வந்து தொலைக்குமோ என்று பயந்தாள். இது பற்றி வேறு யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தாள்.
கடையத்தில் சின்ன மாமனார் இருக்கிறார். அவர் சொல்லமாடனுக்கு ஆடுதவர். சாமி கொண்டாடி. அவர் சொன்னால் சரியாக இருக்கும் . இது பற்றி அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன ?

நாளைக்கு முதல் பேருந்தில் சென்று விட வேண்டும் என முடிவெடுத்தாள். பேய் விரட்டும் உடுக்கை சத்தமும், வேப்பங்குலையும் சம்பந்தமில்லாமல் கண் முன் வந்து போனது.

-திண்ணையில் வெளியான கதை.

15 comments:

குசும்பன் said...

கிராமத்து வட்டாரவழக்கில் அருமையாக இருக்கிறது கதை!

ஆடுமாடு said...

வணக்கம் குசும்பு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

துளசி கோபால் said...

வட்டாரவழக்கு அருமையா இருக்கு.

ஆனா எனக்கொரு சந்தேகம்.

கதை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கோ?

(போச்சுரா..எழுத்தாளனுக்கு இதைவிடக் கொடுமையை யாராவது செய்யமுடியுமா?)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்கு சிறுகதை.

ஆடுமாடு said...

//கதை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கோ?//

இல்லை. இவ்ளோதான் டீச்சர்.

ஆடுமாடு said...

சுந்தர், கொஞ்சம் பழைய கதைதான். எழுதி ரொம்ப வருஷமாச்சு.

Anonymous said...

திரையரங்குகளிலே புதுப்படப் பெட்டி கிடைக்கலைன்னா, தூக்கு தூக்கி, சவாலே சமாளி, துணிவே துணை ன்னு பழைய படப்பெட்டி கொண்டு வந்து படம் ஓட்டுற மாதிரி இருக்குது அண்ணாச்சி!!!

Anonymous said...

வி.கே.புரம், கீழாம்பூர் போயிட்டு வந்தமாதிரி ரொம்ப நல்லா இருக்குது.

தப்பா எடுத்துக்கிடாதீங்க.
உங்க பழைய கதைகள்ல இருக்குற மண்வாசனை, வட்டார வழக்குகளின் ஆளுமை இப்ப வர்ற கதைகள்ல குறைஞ்ச மாதிரி எனக்கு தெரியுது.

சென்னையின் பாதிப்பா இருக்குமோ அண்ணாச்சி?

பாச மலர் / Paasa Malar said...

வட்டார வழக்கு நன்றாக வந்துள்ளது..

//கதை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கோ?//

இல்லை..இது போன்ற தேவையற்ற தேடுதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதுதான் முடிவு..

இது என் புரிதல்..சரியா?

இதைப் படித்ததும் சிறு வயதில் கேள்விப்பட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது..இது போலத்தான் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த, இறந்த கன்னிப்பெண் சாபம் உள்ளது என்று குறி பார்ப்பவர் சொல்லியிருக்கிறார்.

வீட்டில் யாரும் கன்னிப்பெண்கள் அப்படி இல்லயே என்ற நிலைமையில், ..வீட்டு ஆண்களுக்குச் சின்ன வீடு, அவர்கள் வாரிசுகள் என்று சந்தேகம் கொண்டு தேடியதாகச் சொன்ன கதை நினவுக்கு வந்தது...

ஆடுமாடு said...

//உங்க பழைய கதைகள்ல இருக்குற மண்வாசனை, வட்டார வழக்குகளின் ஆளுமை இப்ப வர்ற கதைகள்ல குறைஞ்ச மாதிரி எனக்கு தெரியுது.

சென்னையின் பாதிப்பா இருக்குமோ//

நெசம்தான். இன்னொன்னு என்னன்னா...உக்காந்து எழுதும்போது ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு. இங்க வந்தும் வருஷம் ஆயிபோச்சுல்லா.

நன்றி வெயிலான் சார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஈழத்தில் நாம் கேட்டறியா? கிராமியத் தமிழ்...நல்ல நடை.
இக்கதைகள் இன்னும் குக்கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது; அதாவது ஏமாற்றுக்கள்;
ஏமாறுவதில் படித்தவர்கள்;படிக்காதவர்கள்; பட்டணம் கிராமம் எனப் பாகுபாடு இன்றி நடப்பது; நமது நாடுகளில் அதிகம்.

ஆடுமாடு said...

பாசமலர்,

//இது என் புரிதல்..சரியா?//

சரிதான்.


//இதைப் படித்ததும் சிறு வயதில் கேள்விப்பட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது//

இதுமாதிரி கதைகள் சகஜம்தான். இது கூட என் குடும்பத்து அனுபவம்தான்.
நன்றி பாசமலர்.

ஆடுமாடு said...

//இக்கதைகள் இன்னும் குக்கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது//

யோகன் நிஜம்தான். வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்லா இருக்கு கதை.. வாணதீர்தத்தின் சாரல் இன்னும் அடிச்சிகிட்டே இருக்கு என்ன செய்ய சென்ற தடவை போன போது குடித்த பானை பதனியை நினைத்தபடி கண்மூடி அனுபவிக்கத்தான் முடியும், வாழ்த்துக்கள்

ஆடுமாடு said...

//வாணதீர்தத்தின் சாரல் இன்னும் அடிச்சிகிட்டே இருக்கு//

அது வாணதீர்த்தமில்லை.
பாணதீர்த்தம்.

நன்றி கிருத்திகா.