Thursday, December 6, 2007

கூனயன்

இன்னும் மழை நிற்கவில்லை. கூனயன் பனை மரத்தின் கீழ் பக்கம் சாய்ந்துகொண்டு ஒரு தட்டியை தலையில் வைத்துக்கொண்டிருந்தான். தட்டியைத் தாண்டியும் மழை அவனை நனைத்துக் கொண்டிருந்தது. நனைதல் அவனுக்குப் புதிதல்ல. ஆடுகள், ஒதுங்க இடம் தேடிக்கொண்டிருந்தன. எதிரில் குடில் இருக்கிறது. பனவோலைகளால் வேயப்பட்ட குடில். அந்த சின்னக் குடிலுக்குள் ஆடுகள் முண்டியடித்துக் கொண்டிருந்தன. நீண்ட கொம்பை கொண்ட கெடா ஒன்று குட்டிகளை முட்டுவதாக மிரட்டிக் கொண்டிருந்தது.

‘க்கியே... பய ஆடு... என்ன எடக்கா? சொட்டைய நொரிச்சுருவேன்’

கூனையன் இங்கிருந்து சத்தம் போட்டான். தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்த வேட்டி நனைந்து கொண்டிருந்தது. இடுப்பில் வைத்திருந்த பீடிகட்டும் தீப்பெட்டியும் இன்னும் சில நிமிடத்தில் நனையக்கூடும். ஒரு கையால் தட்டியைப் பிடித்துக்கொண்டே, பீடியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். ஒரு பீடியை மட்டும் பற்ற வைத்தான். நெஞ்சுக்குள் உழன்று வெளியே வந்தது புகை. இப்போது அவனுக்கு இதமாக இருந்தது.

மழைநேரத்தில் குடிப்பதும் பிடிப்பதும் சுகமானவை.

குட்டிகளில் பாதி குடிலின் உள்ளேயும் வெளியேயும் நின்று கொண்டிருந்தன.
அந்த குடிலுக்குப் போனால் கூனையன் நனையாமல் இருக்கலாம். ‘ஏன் போகணும்?’ என்று கேட்டுக்கொண்டான். அது கோயிந்தபேரியானின் குடில். இந்தப் பனைமரக்காட்டை கொத்தகைக்கு எடுத்திருப்பவன்.

கூனையனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இங்குதான் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். சொந்த ஆட்டை மேய்ப்பவனுக்கும், அதை குழந்தைகளாக பாவிப்பவனுக்கும் மேய்த்தல் என்பது தொழிலல்ல. அது ஆதர்சம். மனிதனோடு பேசுவது மாதிரி அவனால் ஆடுகளுடன் பேச முடியும். அவன் அதன் சுக துக்கங்களை தோளில் சுமப்பவன். சிறு வாய் திறந்து ‘ம்மே...’ என்று ஒரு குட்டி கத்தும்போது அவன் தந்தையாக உணர்கிறான்.
காலையில் எழுந்து ஆட்டைத் திறந்துவிட்டதும் யார் அனுமதி இன்றியும் நேராக இந்தக் காட்டுக்கு வர அவை பழகியிருந்தன.

அவன் முதலில் ஆடு மேய்க்க வந்த போது சுப்பையா கோனார் இந்த காட்டை வைத்திருந்தார். காட்டின் ஒரு பகுதியில் கடலை, ஈராய்ங்கம், மிளகாய் போன்றவற்றை பயிரிட்டிருந்தார். மற்றப்பகுதிகள் அவரது ஆடுமாடுகள் மேய்க்கப்பட வேண்டும் என்பதற்காக கோரை புற்களை வளர்த்திருந்தார். இங்கு ஊரிலுள்ள எவரும் ஆடுமாடு மேய்த்துக்கொள்ள அனுமதி. அவரது ஒரே கோரிக்கை பயிர்க்காட்டுக்குள் மேய்த்துவிடக்கூடாது என்பது.

சுப்பையாவின் மூன்றவது மகன் பரமசிவத்துடன் சேர்ந்து கூனையன் ஆடு மேய்ப்பான். காட்டின் கீழ்ப்புறம் இருக்கும் புளிய மரத்தின் ஒரு கிளையில் மர ஊஞ்சல் இருக்கும். ஆடுகளை விட்டுவிட்டு இங்குதான் அவன் பொழுது கழியும். கட்டுப்பாட்டுக்குள் அடங்காத அந்த சிறுபிராய பொழுதுகள் அவனை சுகமாக்கவே செய்தன. எல்லாரும் பைக்கட்டை தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போகும்போது இந்த ஊஞ்சல் தான் அவனை ஆடு மேய்க்க தூண்டியது. இதற்காகவே ஆடு மேய்க்க ஆரம்பித்தான் என்று சொல்வது கொஞ்சம் அதிகம்தான்.

சுப்பையா கோனாருக்குப் பிறகு அதை சோமுதேவர் வாங்கியிருந்தார். பெரும்பண்ணை சோமுதேவருக்கு இந்தக் காடு ஒரு பொருட்டல்ல என்பதால் சு.கோ. கொடுத்து வைத்திருந்த ஆடு மேய்க்கும் அதே அனுமதியை எல்லோரும் பெற்றிருந்தனர். பரமசிவன் மட்டும் சொந்த நில பாசம் துக்கம் தருவதால் மேய்க்கும் இடத்தை மாற்றினான். எப்போதாவது கூனையனுடன் மேய்க்க வேண்டுமென்றால் மட்டும் இங்கு வருவான். ஒரு முறை வந்தபோது கூனையன் அந்த யோசனையை சொன்னான்.

‘ஏல கோங்கு கன்னு வைப்பமா?’

மலைக்குத் தேன் எடுக்கச் சென்றிருந்த மீசைக்காரன் கோங்கு மர கன்று ஒன்றைக் கொண்டுவந்திருந்தான். அவன் வீட்டைச் சுற்றி மரம் இருந்ததால் கூனையனிடம் கொடுத்திருந்தான். கூனையனுக்கு மரம் வைப்பதில் ஆர்வமோ ஆசையோ இல்லாததால் இந்தக் காட்டில் வைக்க ஆசைப்பட்டான்.

பரமசிவனும் கூனையனும் சேர்ந்து அதை நட்டார்கள். கூடவே அதற்கு ஒரு வேலி. அங்கு மட்டும் எந்த ஆடும் வராமல் பார்த்துக்கொண்டான்.
இப்போது கோங்கு பெரும் மரமாகியிருந்தது, கூனையன் வயதாகி இருந்ததைப் போல. சோமுத்தேவரின் இறப்புக்கு பிறகு காடு கை மாறியது. உள்ளே இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. முதன்முதலாக வெட்டப்பட்டது கோங்கு. கூனையனுக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை. வீட்டுக்குப் போனதும்தான் துக்கமாக தெரிந்தது. கண்களை கசக்கி கசக்கி அழுதான். இப்படியரு அழுகையை அவன் அம்மா இறந்த போதுகூட அவன் அழவில்லை. இதையெல்லாம் தாண்டி கோயிந்தபேரியான் சொன்னான்.

‘ஏலே இந்த மாசத்தோட இங்க மேய்ச்சலை விட்டுக்கோ. அடுத்த மாசம் ஆடு வந்ததுன்னா கறி வச்சிருவேன்’

அதிகாரம். கூனையன் ஒன்றும் சொல்லவில்லை.

மழை அதிகமாகி குளிர் வந்தது. மரத்தோடு சாய்ந்துகொண்டிருந்தான். லேசான நடுக்கம். எல்லா பக்கமும் மழையின் பொருட்டு இருட்டி இருந்தது. தலையை தவிர உடல் முழுவதும் நனைந்துவிட்டது. நடுக்கத்துடன் மழையிலேயே சென்றுவிடுவது என்று தீர்மானித்தான். குடிலுக்குள் நிற்கும் ஆடுகளை பத்தினான். நனைந்துகொண்டே நடந்தன ஆடுகள்.
கேட் தாண்டி வெளியே வந்ததும் காட்டைப் பார்த்தான். பந்தல் போடப்பட்டிருக்கிற துக்க வீடாக அவனுக்கு காட்சியளித்தது.

‘நாளை வேறு இடம் பார்க்க வேண்டும்’.

5 comments:

துளசி கோபால் said...

//மனிதனோடு பேசுவது மாதிரி அவனால் ஆடுகளுடன் பேச முடியும். அவன் அதன் சுக துக்கங்களை தோளில் சுமப்பவன். சிறு வாய் திறந்து ‘ம்மே...’ என்று ஒரு குட்டி கத்தும்போது அவன் தந்தையாக உணர்கிறான்//

இது...............

எல்லா மிருகங்களுக்கும் பொருந்தும்.

அதுங்க என்னமாப் 'பேசுதுங்க' தெரியுமா?

உணர்ந்து அனுபவிக்க மனம் வேணூம்.

கூனயன் பாவம்......(-:

தங்ஸ் said...

எங்க காளைகள் ரெண்டு ரொம்ப நாள் கழிச்சு விற்கும்போது, பொலபொலன்னு கண்ணீர் விட்டுதுக..வீட்டுல ஒரே அழுகை...

ஆடுமாடு said...

துளசி டீச்சர் நன்றி.

/எல்லா மிருகங்களுக்கும் பொருந்தும்/
நெசந்தான்.

ஆடுமாடு said...

தங்கஸ் பழகிட்டோம்னா அப்படித்தான்.

ஆடுமாடு said...

துளசி டீச்சர் நன்றி.

/எல்லா மிருகங்களுக்கும் பொருந்தும்/
நெசந்தான்.