Monday, December 3, 2007

மஞ்சனக்காரரு மவன் 2: கேரக்டர் 6

இவ்வளவு வெவாரம் நடந்திருக்கே... எதுலயாவது நான் பண்ணல, எனக்கு அதுக்கும் சம்பந்தமில்லன்னு சொல்லிருப்பானா இந்தப் பய. துணிஞ்சு ஒத்துக்கிடுவாம் பாத்துக்கிடுங்கோ. அதுலயெல்லாம் நல்ல பயதான். செய்தது தப்புன்னு உணருவானோ மாட்டோனா? என்ன நடந்தாலும் உம்முனு மூஞ்சிய வச்சுக்கிட்டு உக்காந்துக்கிடுவாம். யாராவது கோவத்துல அடிச்சாவோன்னு வையுங்களேன், அதை வாங்கிக்கிட்டு மரம் மாதிரி நிப்பாம்.

கொஞ்ச நாளா வீட்டு பக்கம் போறதில்ல. அவ அம்மக்காரி மட்டும் ராத்திரி போல எங்கயாது இருந்தாம்னா தேடி கூட்டிட்டு வந்து, கஞ்சிதண்ணி கொடுப்பா. பகல்ல வீட்டுக்கு வந்துட்டாம்னா மஞ்சனக்காரரு வெளியில போயிருவாரு. அம்மாக்காரி என்னவெல்லாமோ சொல்லி பாத்துட்டா. ரொம்ப கேவலமா இருக்குல. ஒழுங்கா கொத்த வேலைக்கு போ. உருப்டியா வேலை ஏதாவது செய்யுன்னு சொல்வா. கேக்குதப் பயலா இவன்? எல்லாத்துக்கு ம் தாம் பதிலு. கல்லுளி மங்கம் மாதிரி இருப்பாம். அவன் சிரிக்கதும் கெடயாது. அழுததும் கெடயாது. அப்டியொரு பய.

மஞ்சனக்காரரு கல்யாணம் காட்சின்னு வெளியூருக்குப் போனா ‘உம்ம மவன் இப்ப என்னவே பண்ணுதாம்’னு கேட்டா மானம் போயிரும். என்ன சொல்லுததுன்னு தெரியாம சமாளிப்பாரு. ‘ஊர சுத்துதாம்’னு சொல்ல முடியுமா? வயக்காட்டைத்தாம் பாத்துக்கிட்டிருக்காம்பாரு. ஆனா, இந்தப் பய ஊருகாரம் தோப்பு, தொரவுன்னு அலைவான தவிர சொந்த வயலுக்கு இதுவர போனது கெடயாது.

‘புதுக்குடில உம்ம தங்கச்சி மவா இருக்காலவே, கல்யாணத்த பண்ணி வச்சாயென்னா? நாலு நாளு அவ சேல பின்னால கெடந்தாம்னா, தன்னால திருந்திருவாம்யா’ன்னு புத்திமதி வேற வரும். அவருக்கு அவமானமா போவும். ஊருக்கெல்லாம் புத்தி சொல்லுதவருட்ட போயி, இப்டி ஒருத்தம் சொன்னா எப்டி இருக்கும்?

ஆனா மஞ்சனக்காராரு அதுல மட்டும் கரீட்டா இருந்தாரு. இவன நம்பி இன்னொரு பொண்ணு புள்ளைய கெடுக்க விரும்பலன்னு மனசுக்குள்ளேயே சொல்லிட்டு இருப்பாரு. அவரு பொண்டாட்டியும் கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்வா. ‘கோட்டிக்காரியாட்டி நீ. இவனே தெனமும் ஒவ்வொரு கூத்தப் பண்ணிட்டு வாராம். இதுல இன்னொருத்திய கெட்டிவச்சு கேவலப்படணுமா’ம்பாரு.

இப்படியரு கொரங்கு பயல எங்கயாவது பாத்திருக்கேளாயா?

வெவாரம் பேசிட்டே இருக்கும் போது, பொந்தன் கந்தயா, மஞ்சனக்காரரு மவன, குறுக்கோட மிதிச்சாரு. அவரும் அவனுக்கு வேற யாருமில்ல. சொந்தந்தாம். அந்தானி, கடுக்கான் வந்தாம், அவன் ரெண்டு மிதி. உடன எல்லாரும் வந்து புடிச்சாவோ. அதுக்குள்ள சங்காபீச சுத்தி பொம்பளைளுவோ சத்தம் போட்டாவோ. ஏய்ய்யா... அடிக்காத, அடிக்காதன்னு கத்துதாவோ.

சங்காபீசுக்கும், மஞ்சனக்காரு வீட்டுக்கும் ரொம்ப தூரமில்ல. இங்கயிருந்து பொம்பளைளுவோ சத்தம் போட்டது அவரு காதுக்கும் கேட்டுது. அந்த பய, அம்மாக்காரி மனசு கேட்காம, சங்காபீசுக்கு ஓடி வர போனா. மஞ்சனக்காரு, ‘அங்க போனா, வீட்டுக்குள்ள நடையேற கூடாது’ன்னு பொண்டாட்டிய சொன்னாரு. அவா நெஞ்சு நெஞ்சுன்னு அடிச்சுட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா.

‘இப்டி போட்டு ஆளாளுக்கு மிதிக்கவாடா இங்க வெவாரத்துக்கு வந்திருக்கோம்’னு தலைவரு சொன்னதும், பாதி பேரு அவங்களை பிரிச்சாங்க. விடிய விடிய வெவாரம் நடக்கு. இன்னைக்கு ஒரு முடிவு தெரியாம விடக்கூடாதுன்னு இருக்காவோ. விடிய விடிய இந்த மாதிரி கூட்டம் நடந்தா அங்ஙனயே கருப்பட்டி காப்பிக்கு ஏற்பாடு நடக்கும். நடு ராத்திரில கணபதியா பிள்ள கடய தெறக்க சொல்லி, கருப்பட்டியும், தூளும் வாங்கிட்டு வந்தானுவோ. கொஞ்சமா பொறிகடலயும். காபிய போட்டு குடிச்சுட்டு வெவாரம் நடக்கு, முடிஞ்ச பாடில்ல.

விடிஞ்சு போச்சு. தென்காசில இருந்து வார மொத பஸ்சு வந்துட்டு. பஸ்லயிருந்து இறங்கி வந்த நடுத்தெரு பொனமால, நேரா சங்காபீசுக்கு வந்தாம். வெவாரம் நடந்துட்டு இருக்கத பாத்துட்டு தலைய வெளிய இழுத்துட்டாம். தலைவரு இத பாத்துட்டு, ‘ஏய், வாடா’ன்னாரு. அவன், ‘நீரு இங்க வாரும்’ன்னான்.

வெளிய போனாரு.

என்னாமோ தலைவரு காதுல சொன்னாம்.

அவருக்கு மொகம் ஒரு மாதிரியாயிட்டு. உடனே, ‘வெவாரத்த பெறவு பேசலாம்ல, எல்லாரும் எங்கூட வாங்க’ன்னு கூப்டாரு. என்ன ஏதுன்னு தெரியாம எல்லாரும் அவரு பின்னாலயே ஓடுதாவோ. தலைவரு, வயசானவங்கிட்ட மட்டும் ஏதோ குசுகுசுன்னு சொல்லுதாரு. மத்தவங்கயெல்லாம் என்ன என்னன்னு கேட்டுட்டே வாரனுவோ. இவனுவ கூட ஒண்ணும் நடக்காத மாதிரி மஞ்சனக்காரரு மவனும் ஓரமா வாராம். சின்ன வாய்க்கா பாலம் தாண்டி, ஆத்தை பாத்து நடக்காவோ. இன்னும் நல்லா விடியல. பால் கொண்டு போற பாவூர்ச்சத்திரத்தானுவோ சைக்கிளு அங்க இங்கயும் பறந்துட்டு இருக்கு.

ஆத்துகிட்ட வந்த பெறவுதான் கொஞ்சம் புடிபட்டுது. ஆமா. சுடுகாட்டுல ஒரு ஆளு...

‘ஏல அது யாரு’ன்னு கேட்டுட்டு எளவட்ட பயலுவோல்லாம் கிட்டத்துல ஓடுதானுவோ.

போய் பாத்தா... திக்குனு ஆயி போச்சு!

சுடுகாட்டுல இருந்த வேப்ப மரத்துல, வேட்டிய அவுத்து தூக்கு போட்டு தொங்கிட்டிருந்தாரு மஞ்சனக்காரரு!

மொதமொதலா அவரு மவன் அழுதத, அப்பதான் எல்லாரும் பாத்தாவோ.

அவ்வளவுதான்.

12 comments:

☼ வெயிலான் said...

அண்ணாச்சி! என்ன 'பொசுக்'னு முடிச்சுப்புட்டிய!

மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குது அண்ணாச்சி மஞ்சனக்காரர நெனச்சு!

தங்ஸ் said...
This comment has been removed by the author.
தங்ஸ் said...

இன்னைக்குத்தாங்க உங்க பதிவுகளப் பாத்தேன்...ஒரே மூச்சுல எல்லாத்தையும் படிச்சிட்டேன்..கதாபாத்திரங்கள ரொம்ப நல்லா கொண்டு வந்திருக்கீங்க..பழைய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்....

தங்ஸ் said...

மனசு கனத்துப்போச்சுங்க..இந்த மாதிரி மகன் எங்க கிராமத்துலயும் ஒருத்தன் இருக்கான்..அவரு அப்பா ரொம்ப தங்கமான ஆளு..தருமவான். அவர் பேரைக் கெடுக்கவே வந்து பொறந்திருக்கான்..

துளசி கோபால் said...

ப்ச்............குடும்பத்தைக் குலைக்க வந்தக் கோடாரிக்காம்புன்ரது சரியாத்தான் போச்சு(-:

பாவம், அவனோட அம்மா.

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா, வணக்கம். அடுத்தாப்ல ஒரு பய வாராம்லா. இவன் வேற மாதிரி பய.

ஆடுமாடு said...

வாங்க தங்ஸ்(எப்படி உச்சரிக்கணும்?).

//பழைய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்...//

நெசமாவா?

ஆடுமாடு said...

துளசி டீச்சர் வருகைக்கு நன்றி. அடுத்த கேரக்டரை சீக்கிரம் கொண்டு வாரேன்.

தங்ஸ் said...

//நெசமாவா?//
நெசமாத்தாங்க...நானும் வெவசாயக்குடும்பந்தான்...மாடு,எருமையெல்லாம் நல்லா மேச்சிருக்கேன்..அந்த வாசனை இன்னும் இருக்கு...உங்க பதிவுகள் அந்த வாசனைய நல்லா கிளப்பி விட்டுடுச்சு...நான் கோயமுத்தூர் பக்கம்..ஆனாலும்,உங்க ஊர் பேச்சு வழக்க அனுபவிக்க முடியுது உங்க எழுத்துக்கள்-ல

ESMN said...

அண்ணாச்சி,
இப்படி சோகமா முடிச்சிட்டீங்களே....

ஆடுமாடு said...

தங்ஸ் தேங்க்ஸ். வருகைக்கு நன்றி

ஆடுமாடு said...

எருமை மாடு அண்ணாச்சி, நான் ஒண்ணும் அப்படி முடிக்கலை. இது நிஜக்கதை.