அடுத்த மூணு நாளுல கையும் களவுமா புடிச்சுட்டு வந்து பகல்லயே வெவாரம். என்னன்னா... ஆண்டிக்கோன் வீட்டு மாட்டுல விடியுத முன்னாலயே யாரோ ஒரு பய, பால கறந்துட்டு போயிடுதாம்னு பேச்சு. பல நாளா நடந்திருக்கு. கண்ணி வச்சு அமுக்குத மாதிரி அமுக்கிட்டாவோ.
ராமரு கோயிலுக்கு பின்னால ஆண்டிக்கோன் வீடு. வீட்டுக்குப் பொறவாசல்ல தொழுவு. பேருதான் தொழுவு. ஆனா சுத்தி கருவ முள்ளுக்காடு. பாம்பு, பல்லின்னு அலைஞ்சுட்டிருக்குத ஏரியா. ராத்திரியானா லைட்டு கெடயாது. கும்முனு இருட்டா இருக்கும். அதுக்குள்ள போவவே பயமா இருக்கும். பயத்துக்கு காரணம் என்னன்னா தொழுவுக்கு பின்னால இருக்குத ரோட்டுல கருநாகம் கடிச்சு மேலத்தொரு பொன்னம்மாக்கா செத்துப்போனா. இதனால அந்தப் பக்கம் ராத்திரியானா யாருமே போவமாட்டாவோ. இதுவுமில்லா பக்கத்துல எசக்கி அம்மன் பூடமிருக்கு. கோவக்கார அம்மன்.
வீட்டுக்காரவோ விடியதுக்கு முன்னாலயே பாலு கறக்க சிம்னி வெளக்க தூக்கிட்டு போவவோ.
இந்தப் பய என்ன பண்ணிருக்காம்னா, பால ஒரு சொம்புல கறந்துட்டு, நொர பொங்கி பொங்கி வரும்லா, அப்டியே சூட்டோட மடக் மடக்குனு குடிச்சிட்டு, கன்னுட்டிய அவுத்து விட்டுட்டு போயிருக்காம். பெறவு எப்டி பாலு இருக்கும். ஆண்டிக்கோன் பொண்டாட்டி பாலு கரக்க உக்காந்தான்னா ஒரு மண்ணும் இருக்காது. செல மாடுவோ தெரியாத ஆளுவோ கறந்தா பாலு தராது. இது பசு வெருவாகெட்டது. மடுவுல யாரு கைய வச்சாலும் வாய அசச்சுட்டு செவனேன்னு இருக்கும்.
கறந்த பால சூட்டோட குடிச்சா பலந்தான். அதுக்கு இப்டியா களவாங்கணும்? தெனமும் இப்டி ஆவதால, ஐயமாரு வீட்டுக்கு பதிவு பால் கொடுக்குதவளால முடியல. பாவூர்சத்திரத்துக்காரன்கிட்ட துட்டு கொடுத்து வாங்கி, ஐயமாரு வீட்டுக்கு கொடுத்துக்கிட்டிருக்கா. அன்னைக்கு ஆண்டிக்கோன் பொண்டாட்டி தற்செயலா ஒண்ணுக்கு வந்திருக்குன்னு பின்னால வந்திருக்கா.
தொழுவுல யாரோ நடமாடுத சத்தம் கேக்குதேன்னுட்டு பாத்திருக்கா. புடிபடல. வீட்டுக்காரனை எழுப்புனா. அந்த வீட்டுக்கு கீழ வீடுதாம் ஆண்டிக்கோன் தம்பி வீடு. அவனையும் சத்தம் போடாம எழுப்பிட்டு பூனை மாதிரி பின்னால வந்து, மொதுவா முள்ளு மறைவுல உக்காந்தாவோ. இந்தப் பய, சுத்தி சுத்திப் பாத்துட்டு மாட்டு மடுவுக்கு கீழ உக்காந்தாம் பாருங்கோ... ஆண்டிக்கோன் பச்ச மட்டைய எடுத்து, நடு மண்டையிலயே போட்டாம். எந்திரிச்சு ஓடப்போனவை அவரு தம்பி விடல. கைய கெட்டி வச்சுக்கிட்டு வெளக்குல மூஞ்சிய பாத்தா இந்தப் பய.
அந்தானி, ஆண்டிக்கோனும் அவன் பொண்டாட்டியும் வந்த கோவத்துல சமட்டி எடுத்துட்டாவோ. விடியதுக்குள்ள ஊருல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. ஆண்டிக்கோன் வீட்டுக்கு முன்னால இருக்குத வேப்ப மரத்துல அவனை கெட்டிப்போட்டிருந்தாம்.
இதுதான் மஞ்சனக்காரருக்கு அவமானமா போச்சு. என்னதாம் தப்பு பண்ணிருந்தாலும் பெத்த புள்ளய, ஊராம் பய அடிக்கதுக்கு மனசு வருமா சொல்லுங்கோ? வெஷயத்தை கேள்வி பட்டு கண்ணீர் விட்டாராம் மஞ்சனக்காரரு.
இதுக்கும் வெவராம் வச்சாவோ. முடிவுல சாதிக்காரனுவோ எல்லாரு கால்லயும் விழந்து கும்புடணும்னு. கும்புட்டான் அந்தப் பய.
புத்தி வந்ததா?
இந்தா அடுத்த வெவாரம் வந்தாச்சு.
இது என்ன பிரச்னைன்னா...
பொந்தன் கந்தயா, வாழ போட்டுருந்தாம் வயல்ல. வாழ கொலயெல்லாம் வித்துட்டாம். வாங்குனவனுவோளும் பறிச்சுட்டு போயிட்டாம். ஒரு நாலு கொல மட்டும் மரத்துல பழுக்கட்டும்னு விட்டு வச்சிருந்தாம். என்னதான் பழம்னாலும் தானா பழுத்தா ருசியே தனிதான. அதுக்காக போட்டுருந்தாம். இத எப்டியோ கண்டுகிட்ட இந்த பய, நாலு கொலயையும் வெட்டி, அரவமில்லாம, நடு ராத்திரி பொட்டலுபுதூர் சந்தக்கு கொண்டு போயிருக்காம்.
இங்கயிருந்து அங்க போவ அர மணி நேரமாவும். ராத்திரிபூரா அங்ஙனயே சுத்திட்டு விடிய கருக்கல்ல வித்துட்டு வந்துட்டாம். இத, சுரண்டைக்கு சுண்டக்கா வெத வித்துட்டு மாட்டு வண்டில திரும்புன மஞ்சப்புளிசேரிக்காரன், தற்செயலா பாத்திருக்காம். இவன் வயலும் கந்தய்யா வயலும் பக்கத்து பக்கத்துல.
மறுநாளு காலைல வயலுக்கு வந்த கந்தையாவுக்கு திக்குனு ஆயிபோச்சு. கொலகள காணும். எவனோ களாவாண்டுட்டு போயிட்டானன்னு கண்டமேனிக்கு ஏசிட்டு இருந்திருக்காம். அந்தாப்ல மஞ்சபுளிச்சேரிக்காரன் வந்திருக்காம் பாருங்க. அவனுக்குப் புடிபட்டுபோச்சு. பொட்டல்புதூர்ல பாத்த விஷயத்தை சொல்லியிருக்காம். இந்தா... ஆள அமுக்கி வெவாரம் வச்சாச்சு.
இன்னும் சொல்லுதேன்.
6 comments:
அடத் திருட்டுப்பயலே......
ஊரான் சொத்துக்கு இப்படி அலைஞ்சா?
வாங்க டீச்சர். கேடு கெட்ட பயலாக்கும்.
அண்ணாச்சி,
இப்படி தான் எங்க ஊரு வயககாட்டுல வந்து கசக்கி போயிருவானுக....
அடுத்த நாளு காலைல பார்த்தா நெல்லெல்லாம் பதரா நிக்கும்....
எருமை அண்ணாச்சி வாங்க. நம்மூர்காடுவோல்ல இதுதான தொல்லை.
நல்ல வேல தான் பாக்காம், மஞ்சனக்காரரு மவன். அடுத்து பொந்தன் கந்தயா வருவாரோ?
வாங்க வெயிலான் ஐயா.
Post a Comment