Saturday, December 1, 2007

மஞ்சனக்காரரு மவன்; கேரக்டர் 6

‘வெவாரம்னு வந்துட்டப் பெறவு மாமென் மச்சாம்னு பாக்க முடியுமாவே?'

‘சர்தான்'

‘என்ன சர்தாங்கியோ? ஏல அவன தூண்ல புடிச்சு கட்டுங்க‘ -தலைவரு சொன்னதும் வாயபொத்தீட்டு இருந்த கொடுக்கு ராசு எந்திரிச்சாம்.

‘தூண்ல கட்டுத வேலலாம் வேண்டாம், பாத்துகிடுங்கோ.'

‘ஏம்ல, நீ குதிக்க?'ன்னாரு தலைவரு.

‘அது என்ன மொறவே. தூண இங்க எதுக்கு வச்சிருக்கு? பெரிய தப்பு செஞ்ச பயலுவோல கெட்டணும்னுதான்'

‘ஆமா. என்ன வந்தது இப்பம்?'

‘போன மாசம் அடுக்கூட்டா மவன், மாரியம்மா புள்ளய கைய புடிச்சு இழுத்தான். வெவாரத்துல என்ன சொன்னியோ... அது எவ்வளவு பெரிய தப்பு? அவனை புடிச்சு இதுல கெட்டுனீயளா? இது திருட்டு வெவாரம். இதுக்கு ஏம்யா கெட்டணும்ங்கியோ?'

‘அந்த வெவாரத்தை இப்பம் ஏம்ல இழுக்க?'

‘நாயம்னா எல்லாத்துக்கும் பொதுதாம்'

‘இப்பம் அதுக்கென்னல வந்தது?'

‘தூண்ல கெட்டுன்னு எப்டியா சொல்லலாம்...தலவரா இருந்தா கொம்பா மொளச்சிருக்கு...நீ வச்சதுக்கலாம் இங்க ஆட முடியாது'

அந்தாப்ல ஆரம்பிச்சுது சனி. இவனுக்கு ஆதரவா கொஞ்ச பேரு, தலைவருக்கு ஆதரவா கொஞ்ச பேருன்னு கிளம்பிட்டானுவோ. ஆளாளுக்கு முண்டுதானுவோ. ஒரே காட்டு சத்தமா இருக்கு. சங்காபீச சுத்தி பொம்பளைலுவோ வேற கூடிட்டாவோ. சும்மாவே வீரத்தையெல்லாம் இங்க வந்துதாம் காட்டுவானுவோ. பொம்பளைலுவோ வேற வந்துட்டாவுளா. கேக்காண்டாம். அவளுவ முன்னால சண்டித்தனத்த காட்டணும்னே குதிச்சாணுவோ. சும்மா இருக்குத பயல ஒருத்தம் மிதிக்காம். மிதிச்சவனை இன்னொருத்தம் குத்துதாம்னு எறச்சலா இருக்கு.

சங்காபீச புதுசா கட்டுன பெறவு மொத மொத நடக்குத வெவாரம் இது. இதுக்கு முன்னால என்னன்னா இங்ஙன, பெரிய வேப்ப மரமும், வாசமடக்கி மரமும் இருக்கும். கொஞ்சம் தள்ளி 3 புளியமரம். இந்த மரத்துலருந்து எலயோ விழுந்து கெடக்கும். மாடு கன்னு குட்டின்னு வேற மரத்து மூட்டுல கெட்டிட்டு போயிருவாவோ. சாணி, மூத்ரம்னு ஒரே நாத்தமா இருக்கும். மாசாமாசம் நடக்குத கூட்டத்தன்னைக்கு சாய்ந்தரம் தலைவரு வீட்டுக்காரி வந்து, சாணிய தொளிச்சு தூத்து கோலம் போட்டுட்டு போவா. என்னதாம் தூத்து தொளிச்சாலும் நாத்தம் மட்டும் போவாது. ஆடு மாடுவோளோட வாழுதவோளுக்கு இது என்ன பெரிய வெஷயமா? நாத்தம் ஒண்ணும் செய்யாது. அங்ஙனயே கூட்டம் நடக்கும்.

வாசமடக்கி மரத்துக்கு கீழ தலைவரு உக்காந்துகிடுவாரு. சுத்தி அங்கங்க எல்லாரும் உக்காந்துகிடணும். கூட்டம் இல்லாத நாளு சின்ன பயலுவோலும், மாட்டுக்கு போவுத பயலுவோளும் இங்ஙன கிடந்து சொரணாவிட்டே இருப்பானுவோ. எல்லா பட்றை (சாதி சங்கம்) யிலயும் புதுசா சங்காபீசு கட்டிட்டதை பாத்து இவங்களும் கெட்டுனாவோ. தலைகெட்டு வரி போட்டு இன்னா அன்னான்னு இழுத்து இழுத்துக் கெட்டுனது. உள்ள சின்னதா கிருஷ்ணரு செல வேற இருக்கு. கையில புல்லாங்கொழலை வச்சுக்கிட்டு ஊதுத மாதிரி செல. கொஞ்சம் தூரமா சொவத்துல அனுமாரு கையில பழத்தை வச்சுக்கிட்டிருக்குத மாதிரி சின்ன செல. சாமி இருக்கதால கூட்டத்துக்கு பொம்பளைலுவோ வர மாட்டோவோ. புதுசா இதை கெட்டி பாலுகாச்சுன பெறவு நடக்குது மொத கூட்டம் இதுதான்.

வெவாரம் என்னன்னா நம்ம மஞ்சனக்காரரு மவனப் பத்தி. பய சுழியன். பொழுதன்னைக்கும் எவன்ட்டயாவது வம்பு தும்புக்கு போவலனா மூதிக்கு தூக்கம் வராது. அப்பன் பேர கெடுக்கதுக்கு வந்த பய. மஞ்சனக்காரரு, ஊருல மானம், மருவாதி உள்ளவரு. எல்லா சாதி கோயிலுக்கும் போயி, அவர்தான் மஞ்சனம் பூசுவாரு. மஞ்சனம்னா நீங்க என்னமோன்னு நெனக்காதீய. குங்குமத்தையும் மஞ்சனத்தையும் ஒண்ணா கலந்து, அதுல ஆமணக்கு எண்ணெய விட்டு கலக்கிட்டா மஞ்சனம். இது சாமி சம்பந்தப்பட்ட வெஷயங்கறதால இதுக்காகவே பாதி நாள வெரதத்துல கழிப்பாரு மனுஷன்.
கோயில் பூடத்துல செப்பு வச்சு, சாமிய வீராவேசமா வரைவாவோ. அதுல மஞ்சனத்த வச்சுதான் வரையணும்.

இது மேலதான் சாமியோட கண்ணு, மூக்கு, வாய், மீசைன்னு வெள்ளில செஞ்சத ஒட்ட வப்பாவோ. இதப் பண்ணி முடிச்சதும் சாமியாடியளுக்கு மொகம், கை, நெஞ்சுனு இத பூசணும். பெறவு சாமிக்கு ஆங்காரம் வாரத பாக்க பயமா இருக்கும். ஊர்ல எல்லா கோயிலுக்கும் இவருதாம் அத செய்வாரு. எல்லாரும் மரியாதயாத்தாம் பேசுவாவோ. அவரும் தங்கமானவரு. சத்தம் போட்டுக்கூட பேசமாட்டாரு.

இவ்ளவு மருவாதயான மனுஷனுக்கு இப்படியரு கொள்ளி வந்து வாச்சிருக்கேன்னு பேசாதவோ கெடயாது. வாத்தியாரு புள்ள மக்குங்கத மாதிரி இப்டி வந்து வாச்சிருக்காம். திமுறுல இப்டி செய்தானா? இல்ல... புத்தி பெரண்டு போச்சான்னு ஒரு எழவும் புரியல. புத்தி பெரண்டு கோட்டியா அலையுத பய எவங்கிட்ட சரியா பேசமாட்டாம். ஆனா, இவந்தாம் சேக்காளிமார்ட்டயும் கடைகாட்டுலயும் நல்லாத்தான பேசிட்டு இருக்காம்?
பாதி பிரச்னைல மஞ்சனக்காரரு மூஞ்சுக்காவ, சின்ன தண்டனையா கொடுத்து விட்டுருவாவோ. ஆனா மறுநாளே இன்னொரு வில்லங்கத்தை இழுத்துட்டு வந்து நிப்பாம். கோட்டிக்கார பய. இந்த மாசத்துல மட்டும் இது நாலாவது வெவாரம்னா பாத்துக்கிடுங்கோ.

ரெண்டு வாரத்துக்கு முன்னால பெருமா கோயில்ல சொக்கப்பன வச்சிருந்தாவோ. கருக்கல்ல ஐயரு வந்து தீபாரண காட்டிட்டு வந்த பெறவு, தீய வப்பாவோ. ஊர்க்காரவயெல்லாம் கோயில்ல இருக்கும் போது, இந்த அர்தலி, சொக்கப்பன பக்கத்துல வந்து பீடி பத்த வச்சிருக்காம். பக்கத்துல ஆளுவோ இல்ல. சொக்கப்பனய பாத்துக்கிட்டு நின்னுருக்காம். பெறவு என்ன நெனச்சானோ தெரியல. டமார்னு யாருக்கும் தெரியாம அதுல தீய வச்சுட்டு, மயிரே போச்சுன்னு போயிட்டாம். விளையாண்டுட்டு இருந்த ஒரு சின்ன பய வந்து சொன்ன பெறவுதான் தெரிஞ்சுது. எல்லரும் ஓடி வந்து பாக்கதுக்குள்ள குப்புனு தீ பிடிச்சு கொழுந்துவிட்டு எரியுது.

பயல புடிச்சு வெவராம் வச்சாவோ. மஞ்சனக்காரரு வந்தாரு. எல்லாரு முன்னாலயும் கையெடுத்து கும்புட்டாரு. ‘இதோட சரி, இனும அந்த நாயீ, என்ன தப்பு செஞ்சாலும் எனக்கும் அவனுக்கும் சம்பந்தமில்ல. என்னய கூப்புடாதியோ‘ன்னு சொல்லிட்டாரு. அவரும் மனுஷன்தான. வர மொற வேண்டாம். இப்படியரு புள்ளய பெத்ததுக்கு பல நாளு கண்ணீரு விட்டிருக்காரு. பெறவு கோயிலுக்கு எண்ணெய் வாங்கி ஊத்த சொல்லிட்டு வெவராத்தை முடிஞ்சுட்டாவோ.

சொல்லுதேன்.

6 comments:

துளசி கோபால் said...

இப்படித்தான் வூட்டுக்கு ஒரு கோடாரிக்காம்புன்னு சில குடும்பங்களில் புள்ளைங்களாலே தொல்லைதான்(-:

ஆடுமாடு said...

வாங்க டீச்சர். பெரிய குடும்பத்துல இப்படிபட்ட புள்ளைகள் சகஜம்.

ESMN said...
This comment has been removed by the author.
ESMN said...

அண்ணாச்சி,
உங்க ஊரு சங்காபீசுல கிருஷ்ணர் படம் வைச்சிருக்காவோ..
சில இடத்தில சனியன் புடிக்க கூத்தாடிக படத்த வைச்சிருக்காவோ..
உங்க ஊரு சங்காபீசு எவ்வளவோ தேவலயா.

☼ வெயிலான் said...

ரெண்டு நா மேய்ச்சக் காட்டுப் பக்கம் வராம விட்டுட்டேன். மஞ்சனக்காரரு மவன் வந்துட்டாரே!

வாசமடக்கி மரம்னா எப்படி இருக்கும் அண்ணாச்சி?

மதுரயில மஞ்சனக்காரத் தெரு அப்படின்னே ஒரு தெரு இருக்குது.

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா
//வாசமடக்கி மரம்னா எப்படி இருக்கும் அண்ணாச்சி?//

அதுக்கு வாதமடக்கிதான் சரியான பெயரு. பேச்சு வழக்குல வாசமடக்கி ஆயி போச்சு. எல்லா ஊர்லயும் இந்த மரம் இருக்கு. பார்த்திருப்பீங்க.