கப்பைக் கொம்பு, ஊசிக்கொம்பு, மொட்டைக்கொம்பு என்பது உட்பட மாடுகளை வகைப்படுத்தும் கொம்பு பெயர்கள் அதிகம். வேறெந்த ஊருக்கோ மாடுகள் விற்கப்பட்டு, அதை எப்போதாவது பார்க்க நேர்ந்தால் கூட கொம்பின் பெயரிலேயே அவை அழைக்கப்படும். இப்படி அழைப்பது மாட்டுக் காரர்களுக்கான கவுரவம் சார்ந்த விஷயம். இந்தக் கொம்புகள் இல்லையென்றால் மாடுகள் எப்படி இருக்கும் என கற்பனை செய்திருக்கிறேன். கிளை இல்லாத மரம், வால் இல்லாத நாய், பயிர்கள் முளைக்காத கட்டாந்தரை போல இருக்குமென நினைத்திருக்கிறேன். முதுகில் சொரிய, கோபம் வந்தால் பயமுறுத்த, குஷியானால் தரையைக் குத்த என கொம்புகளுக்கு பல்வேறு அவசியம் இருக்கிறது. அவசியங்களின் அடிப்படையிலேயே ஆண்டவனின் படைப்பு.
நள்ளிரவின் அடர்ந்த இருட்டுக்குள், வீட்டின் வாசலில் உட்கார்ந்து யோசித்திருக்கிறீர்களா? அப்படியொன்றும் இது கட்டாயமான விஷயமில்லை. அடிக்கடி சந்தோஷம் இழந்து, மூளையின் உட்கிரகத்தில் கம்பளிப்பூச்சிகள் ஊறும் தருணங்களில் இப்படியான நள்ளிரவு விழிப்பு, எனக்கு ஏற்படும் சாபக்கேடு. இந்த சாபக்கேடான இரவுகளில் என்னை மாடாக்கிப் பார்த்திருக்கிறேன். எருமையா காளையா பசுவா என்பதை கணிக்க முடியவில்லை. இரண்டு கொம்புகளுக்குப் பதில் நான்கு கொம்புகள். கால்கள் நான்கிலும் கொலுசுகள். முகத்தில் அடர்ந்த மீசை. கழுத்தில் சங்கிலிகளுக்குப் பதிலாக எமனின் பாசக்கயிறு. என் கோபத்துக்குள்ளாகும் மனிதன் உள்ளிட்ட விலங்குகளை பாசக்கயிறால் இழுக்கிறேன். கறை படிந்த அனைத்துப் பற்களும் தெரிய அகோரமாகச் சிரிக்கிறேன். என் சிரிப்பைக் கேட்டு கிடையில் அடைந்து கிடக்கும் ஆடுகள், அன்போடு என்னை நோக்கி வருகின்றன. நான் சிரிக்கிறேன். அவை அழுகின்றன. சூழ்நிலை மாறுகிறது. நான் மனிதனாகிறேன். ஆடுகள் ஆண்டவனாகின்றன. மாடுகள்? இதுதான் என் சாபக்கேடான நள்ளிரவில் அடிக்கடி வரும் கனவு. கனவுகள் ஆழ்மன உணர்வின் வெளிப்பாடு என்ற ஃபிராய்டுவுடம் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க வேண்டும்.
இன்னும் சொல்வேன்.
1 comment:
தொடர்ந்து எழுதுங்கள்... அருமையாக இருக்கிறது அனைத்தும்...
Post a Comment