Wednesday, October 26, 2016

பிரதிஷ்டை

'சும்மா தங்கு தங்குன்னு குதிக்காதீரும். இதுல நான் ஒண்ணும் செய்ய முடி யாது, கேட்டேளா? இது கவர்மென்ட் வெவாரமாங்கும்'

-மேலத்தெரு செவனு மகன், வண்டி மந்திரத்திடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்ததை அவர் கேட்கத் தயாரில்லை. வாக்கு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

'என்னய யாருன்னுல நெனச்ச? நான் இங்க நின்னு சாமியாடுனம்னா, ஒங் கப்பன் எங்கால்ல விழுந்து திருநாறு பூசிட்டு போவான். நீ எம் மாத்திரப்பய, எம்பேச்சை எதுக்க?' என்று ஆவேசமாகிக் கொண்டிருந்தார்.

'ஏ, பலாச மாமா. இவர்ட்ட என்னால பேச முடியாது. நீரு வெவரமா சொல்லும். இல்லனா, எனக்கென்னன்னு நான் பாட்டுக்கு போயிரு வேன், பாத்துக்கெ? நாளைக்கு வேற ஊருக்காரனுவ வந்தாம்னா, இப்படிலாம் சொல்லிட்டிருக்க முடியாது, ஆமா?'

'நீ என்னடே இப்படி கோவப்படுத. கொஞ்சம் பொறேன்?'

'என்னத்த பொறுக்க சொல்லுதே. காலைலயிருந்து சொன்னதையே சொல்லிட்டிருந்தா, நான் என்ன செய்ய முடியும்? இது என் வேலை யாங்கும். சும்மா இங்கலாம் வந்து நான் சொந்தம் பந்தம்னு பாத்து ட்டிருக்க முடியாது. ஆபிசரு வந்து போலீஸ்ல சொன்னாம்னா, பெறவு உள்ளதாம் போவணும்?'

'ஏல, யார்ட்ட என்ன பேசுதல? அப்படி வச்சுருவானோ உள்ள? ஒங்கப்பனுக் காவத்தான் பாத்துட்டிருக்கேன். இல்லனா, சங்கைக் கடிச்சுத் துப்பிறுவேன், வெறுவா கெட்ட பயல' என்று எகிறிக் கொண்டு வந்த வண்டி மந்திரத்தை, நான்கைந்து பேர் பிடித்துக் கொண்டார்கள்.

'எடுத்தோம் கவுத்தோம்னு பேசுவியோல, பெரிய மனுஷன்ட்ட' என்று செவனு மவனை சிலர் ஏசினார்கள். 

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எல்லார் முதுகிலும் சட்டைக் குள் வியர்வை ஓடைபோல வடிந்து கொண்டிருந்தது. வண்டி மந்திர மும் இன்னும் சிலரும் துண்டைத் தலையில் கட்டியிருந்தார்கள். செவனு மகன் கை குட் டையால் அடிக்கடி முகத்தைத் துடைத்துக் கொண்டான். அவனுடன் வந்தி ருந்த அளவையாளர்கள் ரெண்டு பேர் பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தக் கூரைக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்கள். 

'ஏல, சொன்னதும் கேட்டுக்கிடுத ஆளா அவரு? இதெல்லாம் மெது வாதான் சொல்லிப் புரிய வைக்க முடியும். அதுக்குன்னு  நீ இப்படியா தொண்டைய போடுவ?' என்று செவனு மகன் காதில் சொல்லிவிட்டு பரமசிவன் போனதும், அவனும் பேருந்து நிறுத்தக் கூரைக்குள் போய் உட்கார்ந்து கொண்டான்.

வண்டி மந்திரத்தின் சொந்தங்களும் தெரிந்தவர்களும் அவருடன் அயன் திருவாலீஸ்வரம் விலக்கில் கூடியிருந்தனர். அயன் திருவாலீஸ் வரத்துக்கு சைக்கிளில் சென்றவர்கள், ஏதோ பிரச்னை என்று வண்டி மந்திரத்துக்கு ஆதரவாகச் சேர்ந்து கொண்டார்கள். ஊரில், மந்திரம் என்ற பெயரில் பலர் இருப்பதால், வண்டி ஓட்டிப் பிழைப்பு நடத்தும் இவர், வண்டி மந்திரம் ஆனார் என பெயர்க் காரணம் கொள்க.

தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் கீழாம் பூரை அடுத்து இருக்கிறது இந்த விலக்கு. கீழாம்பூரில் இருந்து வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், ஆங்கில எஸ் எழுத்து போன்று வளைந்து திரும்பி, மீண்டும் வளையும் இடத்தில் எதிர்பாராமல் இருக்கும் இவ்விலக்கில் டவுண் பஸ்கள் மட்டுமே நின்று போகும். இந்த முக்கில் ஆண்டாண்டு காலமாக சிறு கல் ஒன்றில், குல தெய் வமாக இருந்து ஊரையும் தம்குல மக்களையும் காத்து வருகிறார் பட்றையன். 

நீங்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது உங்கள் கண்ணில் படமா ட்டார் பட்றையன். ஏனென்றால் அவருக்குக் கோயில் என்று எது வுமில்லை. சாலையின் ஓரத்தில் செல்லும் சிறு ஓடையின் மேலே கருநிற கல்லில் அழுக் கடைந்த மஞ்சள் வேட்டிக் கட்டிய நிலையில், எண்ணெய், மஞ்சனம் பூசிய வாறு புழுதி படிந்தபடிக் காட்சியளிப் பவர் அவர். அவரை இன்னாரென்று அவர் தம் சொந்தங்கள் மட்டுமே அறிய முடியும். மற்ற எவருக்கும் அவர் ஏதோ ஒரு சாமியென்றோ அல்லது பழங்கால வழிகாட்டி கல் என்றோதான் அடை யாளப்படுத்த முடியும்.

வண்டி மந்திரத்தின் மூதாதையர்கள் வைத்த பட்றையன் கல் இது  என்பதால் அதற்கடுத்து வந்த தலைமுறைகள் அதற்கொரு பீடமோ, சிறு கோயிலோ கட்டியிருக்கவில்லை. அவர்கள் செய்த வழிமுறையை நாம் எப்படி மாற்றுவது என்று நினைத்திருக்கலாம். ஆனால், மற்ற சாமிகளைப் போல பட்றையனும் குடும்பத் தலைவர் அல்லது தலைவி யாரேனும் ஒருவர் கனவில் தோன்றி, 'எனக் கொரு பூடம் செஞ்சுக் கொடுப்பியா?' என்று உரிமையோடு கேட்டி ருந்தால் இந்தச் சாலையின் ஓரத்தில் அவர் கோயிலாகி இருந்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வ ளவு ஒன்றும் பேராசைக்காரர் இல்லை. அவரது ஆசை யெல்லாம், நான்கைந்து கோழிகள், இல்லையென்றால் ஒன்றிரண்டு ஆடுக ளோடு சமைக்கப்படும் படைப்புச் சோறோடு முடிந்து போகிறது. சாப்பாடு தாண்டி ஏதும் சிந்திக்காதவராக இருக்கும் பட்றையன், வருடம் ஒரு முறை சிறு கொடையை மட்டும் கண்டிப்பாக எதிர்பார்த்து விடுகிறார். 

ஒவ்வொரு ஆடி முதல் செவ்வாய், பட்றையனுக்கானது. இது தொன் று தொட்டு வரும் வழக்கம். ஒரே ஒரு முறை வண்டி மந்திரம் குடும்ப சண்டை யின் காரணமாக, உலகத்தைவிட்டே செல்லும் பொருட்டு மருந்தை குடித் துவிட்டதால், ஐகிரவுண்டு மருத்துவமனையில் பிழைப்பாரா, மாட்டாரா என்ற நிலையில் இருந்ததால் கொடை கொடுக்கவில்லை. அந்தக் கோபத்தை அடுத்த செவ்வாயன்றே காட்டிவிட்டார் பட் றையன். 

வண்டி மந்திரத்தின் சின்ன தம்பி, இதே இடத்தில் மாட்டு வண்டியில் திரும் பும்போது, அச்சு முறிந்து, கவிழ்ந்துவிட்டது வண்டி. மூக்கணாங் கயிறு இழுத் து, இடது பக்க செவளைக்கு மூக்கு கிழிந்து விட்டது. வண்டி மந்திரத்தின் தம்பிக்கு கால், கைகளில் வெண் எலும்பு தெரியும் அளவில் சிராய்ப்பு. சம்பவம் நடந்த இடம் பட்றையன் இருக்கும் இடத்துக்கு எதிரில் என்பதால், இது அவரது வேலைதான் என்பதை குடும்பம் உடனடியாகப் புரிந்துகொண்டது. விளைவு, நான்காவது செவ்வாயன்று அவருக்குக் கொடுக்கப்பட்டது பெருங்கொடை. 

குலசாமியான பட்றையனுக்கு இப்போது ஆடுபவர் வண்டி மந்திரம். குலசாமி என்பதால், அவரது அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா குடும்பங்கள் மட்டுமே இங்கு வழிபாடுகளைச் செய்து வருகிறது. ஆனால், வண்டி மந்திரத் தின் அடுத்த தம்பி சடையப்பன், மந்திர மூர்த் தி கோயிலில், தளவாய் மாட சாமிக்கு ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இங்கு பட்றையனை குலதெய்வமாகக் கும்பிடும் அவர், அங்கு தளவாய் மாடசாமிக்கு ஆடுவது எப்படி என்கிற கேள்விக்குள் சென்றால், அந்த கணக்கு வழக்கு கடும் சிக்க லானதாக இருக்கும்  என்ப தால் அந்த ஆராய்சிக்குள் இறங்க வேண்டாம்.

பட்றையன், குற்றேவல் சாமிகளுள் ஒருவர். அதாவது, சின்ன பயல் களிடம், 'ஏல அப்பாவுக்கு வெத்தலை வாங்கிட்டு வா', 'பீடி கட்டு ஒண்ணு வாங்கிட்டு வாடே' என்று ஏவுவது போல, சக்தி கொண்ட சாமிகள்  ஏவிவிட்டால் செய்யக் கூடியவர் என்கிறார்கள். பெரும் பாலான கோயில்களில் ஏதோ ஒரு ஓரத்தில் பட்றையனுக்கும் பீடம் இருக்கிறது. அப்படிச் செய்து வரும் பட்றை யன், இங்கு எப்படி வந்தார் என்பதற்கும் கதை சொல்கிறது வண்டி மந்திரம் குடும்பம். 

'எப்பவோ ஒரு காலத்துல இந்த இடம்லாம் ஒரே காடு. நம்ம கூட்டம் இந்த பகுதியில வேட்டையாடி கிடைக்கத தின்னுட்டு பொழச்சிருந் திருக்கு. கிழக்க அயன் திருவாலீஸ்வரர் கோயில் இருந்திருக்கு. கோயி லுக்குள்ள போவ நமக் குலாம் அனுமதியில்ல. அங்க போற வாறவ ங்களுக்கு ஏதும் உதவின்னா செய்வோமாம். இப்படி வேட்டையா டிட்டு இருக்கும்போது, சாமி பூஜைக்கு கொண்டு போன பிரசாதத்தை, என்னன்னு தெரியாம, நம்ம ஆளுவோ, புடிங்கி எச்சில் பண்ணிட் டாவோளாம். 'சாமிக்கு கொண்டு போறத பிடுங்கி எச்சில் பண் ணிட்டேளே'ன்னு அந்த பக்தன், சாமியை நினைச்சுட்டு கோபத்துல சாபம் விட்டுட்டானாம். 'நீங்கலாம் பெருங்கஷ்டத்தை அனுபவிக்கணும்'னு. அவரு சாபம் பழிச்சுட்டு. என்னன்னு தெரியாத நோயி, வந்து ஒவ்வொ ருத்தரையா காலி பண்ணிட்டிருக்கு. சனமெல்லாம் பரிதவிக்குவோ. அப்பதான் முன்ன பின்ன தெரியாத வயசான ஒருத்தரு அந்த வழியா வந்திருக்காரு.

நடந்த விஷயத்தை அவர்ட்ட சொல்லுதாவோ. இப்படி ஒரு சாபத் துக்கு ஆளாயிட்டோம். எங்கள எப்படிக் காப்பத்தன்னு தெரியலை, அப்படின்னு கண்ணீர் விட்டு அழுதாவோ. அவங்கள சமாதானப் படுத்துன அந்த வயசானவரு, 'ஒங்க சனம் இன்னும் உயிரோட இருக் கணும்னா, நான் சொல் லுத மாரி செய்யுங்க'ன்னு ஒரு விஷயம் சொல் லியிருக்காரு. அதாவது இந்த ஓரத்துல பட்றையன் சாமி இருக்காரு. அவரு இருக்குத இடத்தை தேடிக் கண்டுபிடிச்சு, நீங்க ஏழு பவுர்ணமி வழிபடணும். அப்படி செஞ்சா, எட்டாவது பவுர்ணமியில இருந்து ஒங்க சனங்க செழிப்பா தழைப்பாங்க., சாமி குத்தத்தை அவர் துடைச்சு எறிவாருன்னும் சொல்லுதாரு. அதுவரை, எத்தனை பேரு உயிரோட இருப்போம்னு தெரியலையேன்னு, அந்த ஆளுகிட்ட கேக்காவோ. அவரு, அதுக்கெல்லாம் பயப்பட வேண்டாம். பட்றையன் பாத்துக்கி டுவாம்'னு சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம். அவருதான் பட்றையன் சாமின்னு பெறவு தான் தெரிஞ்சுதாம். அவர் மறைஞ்ச இடம்தான் சாமி இருக்குத இடம்னு அங்ங னயே ஒரு கல்லை வச்சு, வழிபட ஆரம்பிச்சாவோ. பெறவுதான், கொலம் தழைச்சது. அந்த இடம்தான் இது' என்று வண்டி மந்திரத்தின் அப்பா, யாரிடமோ இந்த சாமி வரலாறைச் சொல் லக் கேட்டிருக்கிறார்கள். இதில் உண்மை எவ்வளவென அறிய, யாரிருக்கிறார்கள்? அதை பட்றையனே வந்து சொன் னால்தான் உண்டு என்ப தால் அப்படியே நம்பி வந்தது கூட்டம்.

இப்படியொரு வரலாறைக் கொண்டிருக்கிற பட்றையனை, இப்போ து  சாலை விரிவாக்க வேலை இருக்கிறது என்று சொல்லி, 'சாமியை தூர தூக்கி வேற எடத்துல நீங்க வைக்கேலா? நாங்க எங்கயாவது கொண்டு வைக்கவா?' என்று கேட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? அதற்காக குலம் காக்கும் சாமியை அம்போவென விட்டு விட முடியு மா என்ன?

சாயந்திரம் ஊர்க் கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள். விஷயம் ஊர் முழு வதும் தெரிந்துவிட்டதால் ஆளாளுக்கு ஒரு கருத்தை ஏற்கனவே திணித் திருந்தார் கள் வண்டி மந்திரத்திடம். அவர் முகம் கருத்து, சிறுத்துப் போயிருந்தது. அரசு விவகாரம் என்பதால், ஊரில் பெரிய மனிதர் என நினைக்கப்படும் அல்லது 'நாலு வெஷயம் தெரிஞ்சவரு' என நம் பப் படும் தென்னக ரயில்வேயில் பணி யாற்றி ஓய்வுப்பெற்ற ராமசாமி ஐயர், கூட் டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் அக்ரஹாரத்தில் இருந்து இன்னும் சிலரும் வந்திருந்தனர். 

ராமசாமி ஐயர், விஷயத்தைத் தெளிவாகக் கேட்டார். பிறகு, 'கவர்ன் மென்டை பகைச்சுண்டு ஏதும் பண்ண முடியாது. இது பெரிய கோவி லா இருந்தா, மனு போடலாம். உம்ம சாமி, சின்ன சாமிதானே, வண்டி மந்திரம். அதை எடுத்து, பிரதிஷ்டை பண்ணி தனியா அங்கயே வேறொரு இடத்துல வச்சுடு. அதுதான் நல்லது. இதைத் தவிர வேற வழி தெரியல' என்றார்.

ராமசாமி ஐயர் சொன்ன, 'பெரிய கோவிலா இருந்தா மனு போடலாம்' என்கிற வார்த்தை கூட பரவாயில்லை. ஆனால் தனது சாமியை, 'சின்ன சாமிதானே' என்று சின்னத்தனமாகச் சொல்லி விட்டாரே என்கிற கடுப்பு, வண்டி மந்திரத் துக்குள் எழுந்து அடங்கியது. பட்றையனின் ஆங்காரம் பற்றி ஐயர்வாள் அறிந் திருக்கவில்லை என நினைத்துக் கொண்டார். இது பட்றை யனின் காதுக்குச் சென்றால், பெரும் விளை வை ஏற்படுத்திவிடுவான் என்கிற பயமும் அவருக் கு இருந்தது.

'கவர்ன்மென்டை பகைக்கக் கூடாதுதான் சாமி. அதுக்காவ, ஆண் டாண்டு காலமா கும்பிட்டுட்டு வார சாமிய, அங்கயிருந்து எப்படி தூக்கச் சொல்லு தியோ, அதாம் மனசு கேக்கல'

'நேக்கு புரியறது. அந்த சாமி ஒங்க குடும்பத்துக்கு மட்டும்தானே வண்டி மந்திரம். ரோடு போட்டா, ஏகப்பட்ட வண்டி போகும், வரும், எத்தனை மக்கள் பயன்படுத்துவா. அதை நெனச்சுப் பாத்தியா? அது மட்டுமில்லாம, இதுல நாம வேற ஒண்ணும் பண்ணவும் முடியாது. ஊருக்கே பொதுவான பிரச்னையா இருந்தா கூட நாம வேற ஏதாவது யோசிக்கலாம். இது அப்படியில்லையே. சாமிய தள்ளி வைக்க மாட் டேன்னு நீ சொன்னா, நாளைக்கே அவாலாம் புல்டோசர் வச்சு இடிச் சுண்டு போயிட்டே இருப்பா' என்றார் ஐயர்.

பிறகு வேறு வழியில்லாததால், ஒரு மனதாக, பட்றையனை வேறு  இடத்தில் வைக்க முடிவெடுத்தார் வண்டி மந்திரம். கூட்டம் முடிந்து விட்டது.

'மந்திரம். எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுண்டு பண்ணு. பட்றையன் ஒன்ன நல்லா பாத்துப்பாம்' என்று ஆசி வழங்கிவிட்டுப் போனார்  ஐயர். 

மறுநாள் சொந்த பந்தங்களுடன் விலக்குக்குச் சென்றார் வண்டி மந்தி ரம். இப்போது சாமியை வைப்பதற்கான இடம் பார்க்கப்பட்டது. விலக்குக்கு வடப் பக்கத்தில் மன்னார்கோவில்காரரின் விளை இருக் கிறது. அதன் வேலிக்கு அருகில் வைக்கலாம். வைத்தால் மன்னார் கோவில்காரர் என்ன சொல் வாரோ? தெற்கு பக்கம் வைக்கலாமென்றால் அருகில், முஸ்லீம்கள் அடக்கம் செய்யப்படும் மையபாடி இருக் கிறது. அதனால் அந்த இடம் வேண்டாம். இப்போது சாமி இருக்கிற இடத்துக்கு எதிரில் பொத்தைகள் சூழ்ந்த இடத்தில் வைத்தால் கேள்வி கேட்க ஆளில்லை என நினைத்தார்கள். அது புறம்போக்கு இடம் என்ப தால் வண்டி மந்திரமும் அது சரியென முடிவு செய்தார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை பட்டரை அழைத்துவந்து பட்றையனுக் கு பூஜை செய்தார்கள். பட்றையன் வெறும் இரண்டரை அடி உயர கரடு முரடான கல்லுக்குள் இருந்தார் என்பதால், பக்கத்து ஓடையில் இருந்து கொண்டு வரப் பட்ட மூன்று தோண்டி தண்ணீரில் நன்றாகக் குளிப் பாட்டப்பட்டார். சாலை யின் மொத்த புழுதியும் அவர் மேல் இருந்த தால், மூன்று தோண்டி தண்ணீர், ஐந்து தோண்டி ஆகியிருந்தது. கரு நிறத்தில் இருந்த பட்றையன் இப்போது பளிச்சென்று மாறியிருந்தார். பிறகு சந்தனம் தடவப்பட்டு நெற்றிப் பகுதியில் குங்குமம் வைக்கப் பட்டது. பழைய அழுக்கு வேட்டிக்குப் பதிலாக, புது, சாமி வேட்டி கட்டப் பட்டது. கதலிப் பழங்களின் மீது குத்தி வைக்கப்பட்ட பத்தியில் இருந்து வெளியாகும் வாசனை, அந்த அதிகாலை நேரத்தை இன்னும் சுகமாக் கியது. ஜிலு ஜிலுவென குளிர்ந்த காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. 

அம்பையில் இருந்து கடையம் செல்லும் முதல் டவுண் பஸ், விலக்கில் நின்று சென்றது. பஸ்சில் இருந்தவர்கள், பூஜை செய்து கொண்டிருந்த வர்களை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். அம்பைக்குப் பால் கொண்டு போகிறவர்களின் சைக்கிள் சத்தமும் பேச்சு சத்தமும் துல்லியமாக வந்து கொண்டிருந்தது. வண்டி மந்திரம் வகையறாவினர், பயபக்தியுடன் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு நின்று கொண் டிருந்தனர்.

அந்த நேரத்தில்தான், ஊருக்குப் புதிதாக வந்திருக்கிற, எப்போதும் வெள்ளையும் சுள்ளையுமாக அலைகிற சக்திவேல், சைக்கிளை நிறுத்தி விட்டு இவர்கள் பக்கம் வந்தான். வண்டிமந்திரத்தின் மகனிடம், சாமியை எங்கே பிரதிஷ்டைச் செய்யப் போகிறார்கள் என்கிற விவரத் தைக் கேட்டுக் கொண்டான். பிறகு அவன் மட்டும் தனியாக நடந்து, சாமியை பிரதிஷ்டை செய்யப்போகும் இடத்தைப் பார்த்தான். அந்த இடத்தில் நின்று கொண்டு, நான்கு திசைகளையும் திரும்பிப் பார்த் தான். மேலே வானத்தைப் பார்த்தான். எதிரில் பார்த்தான். அங்கங்கே திரும்பி, நின்று மாறி மாறி பார்த்துக் கொண்டு ஏதோ காற்றில் விரல் களால் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.

எதேச்சையாக அவனைப் பார்த்த வண்டி மந்திரம், 'இந்தக் கோட்டிக்காரன் இங்க எங்கல வந்தாம்?' என்று கேட்டார் பக்கத்தில் நின்ற வனிடம்.

'யாரு கண்டா?' என்று பதில் வந்தது.

'அங்க என்ன செய்தாம்?'

'வாஸ்து பாக்காம், மூதி'

'ஏதும் புது எழவை இழுத்து வச்சிராமல'

'என்ன சொல்லுதாம், பாப்போம்' 

-வண்டி மந்திரத்தின் சொந்தபந்தம் தாண்டி, ஊர்க்காரர்களும் நிறைய பேர் பூஜைக்கு வந்திருந்தார்கள். வேகவேகமாக விடிந்துகொண்டிருந் தது.  ஒரு கையால், சிறு மணி கொண்டு ஒலியெழுப்பி, மறுகையால் சூடன்தட்டை, தென் வடலாகச் சுற்றி சாமிக்குக் காட்டினார் பட்டர். எல்லாரும் இரு கைகளையும் ஒன்றாக்கி சாமி கும்பிடத் தொடங்கினர். 

சாமி, பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தில் இருந்து வேகமாக வந்தான் சக்திவேல். கூட்டத்தைப் பிளந்து தலைக்கு மேல் கைகளைக் குவித்து, சாமியை வணங்கினான். பிறகு சத்தமாக இறுமினான். திருநீறு எடுத்து நெற்றி நிறைய பூசினான். வண்டி மந்திரத்தின் அருகில் வந்து, 'கொஞ் சம் தனியா வாங்க. ஒரு வெஷயம் சொல்லணும்' என்று அழைத்தான். 

இப்படி ஏதாவது செய்வான் என்று அவரும் எதிர்பார்த்திருந்தார் என்ப தால், கிழக்குப் பக்கம் போனார் அவனுடன்.

'நான் சொல்றேன்னு தப்பா நெனக்காதீரும், வாஸ்து சரியில்லை. அந்த இடத்துல சாமியை வைச்சா, குடும்பத்துக்கு நல்லதில்லை, ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிரும்' என்று ஒரே போடாகப் போட்டான். 

ஏற்கனவே எல்லா பிரச்னையையும் முடித்து பட்றையனுக்கு ஒரு வழி பண்ணியாகிவிட்டது என்று நினைக்கையில் இவன் இப்படிச்  சொல்கி றானே என்று கவலை. அவன் சொன்னதைத் தவிர்த்துவிடவும் முடியவில்லை. குடும் பத்துக்கு ஆகாது என்று சொல்லிவிட்டானே? இருந்தாலும் விடவி ல்லை வண்டிமந்திரம், 'இத்தன வருஷத்துக்கு முன்னால வாஸ்து பாத்தா, சாமிய இங்க வச்சு நாங்க கும்பிட்டுட்டு இருக்கோம். புதுசா வந்து ஒரு கதைய சொ ல்லிட்டிருக்கே, வாஸ்து, சாஸ்துன்னு. ஒன் சோலிய பாத்துட்டு போடே. தேவையில்லாம கிண்டி கெளறிட்டு இருக்காத' என்றார்.

'நீங்க ஒரு பெரிய மனுஷன்னு நெனச்சு, ஒங்க நல்லதுக்கு சொன்னா, இப்படி ஒரே வார்த்தையில, 'ஒம் சோலிய பாத்துட்டு போ'ன்னு சொல்லிட்டீரே' என்று திரும்ப திரும்ப  சொல்லிக் கொண்டலைந்தான் சக்திவேல். 

இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, 'என்ன ரகசியம் பேசுதி யோ' என்று இன்னும் சிலர் வந்தார்கள். சக்திவேல் வாஸ்து விவகாரத்தைச் சொன்னான். பட்டருக்கு இவன் இப்படி ஏதாவது செய்வான் என்று தெரியும் என்பதால், 'யோவ் சக்திவேலு. எந்த ஊருல வாஸ்து பார்த்து சாமிய வச்சாவோ? சொல்லேன். பேசாம வாயை பொத்திட்டு இரு. தேவையில்லாம இங்க கெடந்து சொரணாவிட்டு இருக்காத' என்றார். ஊரில், சாமிக ளுக்கான பூஜை மற்றும் அது தொடர்பான வேலைகள் பட்டருக்கானது என்பதால், அதில் இன்னொருவரின் தலையீட்டை அவர் விரும்பவில்லை. 

'வாஸ்த்தைப் பாத்து நீ வீடு கட்டி நல்லாருடே. சாமிய வாஸ்துபடி வையிங்கன்னு சொல்லிட்டிருக்காத, கூறுகெட்டாப்ல' என்று ஒரு சிலர் அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இப்படியொரு திடீர் எதிர்ப்பை சக்திவேல் எதிர்பார்க்கவில்லை. இந்த சாமி விஷயத்தில், வண்டிமந்திரத்தை சம்மதிக்க வைத்து விட்டால், அக்கம் பக்கத்து ஊர்களில் இதை வைத்தே பிழைப்பு நடத்தி விடலாம் என நினைத் தான் சக்திவேல். 

'நான் என்னமோ ஒன்னுந்தெரியாதவம் மாதிரி பேசாதிங்க. ஆழ் வாரிச்சுல ரெண்டு புது கோயிலு, இடைகாலுல ஒன்னு, ஊர்க் காட்டுல ஒன்னு, மணி முத்தாறுல ஒன்னு, கல்லிடகுறிச்சுல ரெண்டு சாமியள வாஸ்துப்படி வைக்கச் சொன்னவன். நான் என்னலாம் நடக்கும்னு சொன்னேனோ, அதெல் லாம் அங்க நடந்திருக்கு. எந்த சாமிய எந்த தெசையில வைக்கணும்னே இங்க பாதி பேருக்குத் தெரியலை. அதையும் சொன்னவன் நான் தான். நீங்க என்னடான் னா, கேவலமா பேசுதியோ'

இதைக் கேள்விபட்டதும் வண்டி மந்திரத்துக்கு ஒரு மாதிரியாகி விட்ட து. ஒரு வேளை, சாமியை தவறாக வைத்துவிட்டால், குடும்பத்துக்கு ஏதும் ஆகிவிடு மோ என்கிற அவரது பயம் அதிகரித்திருந்தது. ஆனாலும் வெளிக் காட்ட வில்லை.  

சக்திவேலு தொடர்ந்தான்.

'இவ்வளவு நாளு பட்றையனை நீங்க எந்த திசையில வச்சு கும்பிட்டி ருக்கியோன்னு தெரியுமா? தெக்கப் பாத்து வச்சு கும்பிட்டிருக்கியோ. யாராது பட்றையனை தெக்கு திசையில வைப்பாவுளா?' என்று சொல் லிவிட்டு எல்லாரையும் பார்த்தான்.

'ஏம், எல்லா கோயில்லயும் சிவன் கெழக்கப் பாத்துதான் இருக்காரு. ஆனா, சிவசைலத்துல மேக்கப் பாத்துதானே இருக்காரு. அது மாதிரி எல்லா சாமியளுக்கும் ஒரு காரணம் இருக்கும். இது தெக்க பாத்து இருக்கதுக்கும் காரணமிருக்கும்' என்றார் பட்டர்.

'என்ன பட்டரே, சிவனும் பட்றையனும் ஒண்ணா. இது குற்றேவல் சாமி. இது கெழக்கப் பார்த்துதான் இருக்கணும்'

சாமியை பிரதிஷ்டை பண்ணுவதற்கான அனைத்துப் பொருட்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் சாமியை தோண்டி எடுத்து, மாற்று இடத்தில் வைப்பதற்கான வேலைகளைத் தொடங்கி இருந்தார் பட்டர். இந்த நேரத்தில் இப்படியொரு பிரச்னை யை சக்திவேலு கொண்டு வந்திருக் கிறான். நன்றாக விடிந்துவிட்டது. நல்ல நேரம் முடிய இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறது. பட்டர், வண்டி மந்திரத்தின் பெரிய மகனை அழைத்தார்.

'ஏய், புள்ளிக்காரன் தேவையில்லாம புது சிக்கலை இழுக்கான். பாத்துக்க' என்று கண்ணைக் காட்டினார். புரிந்துவிட்டது அவனுக்கு.

சக்திவேலுவின் பேச்சை எதிர்த்து வேறு யாரும் பேசவில்லை என்ப தால் அவனது குரல் இப்போது இன்னும் அதிகரித்தது. தனது முயற் சிக்குப் பாதி வெற்றி கிடைத்துவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் முழு வெற்றி கிடைக்கும் என நினைத்தான் அவன். 

'ஏண்ணே, நீ பேசுதது சரிதாம். வந்து பேசிக்கிடுவோம். கெழக்க வரை வா. நம்ம பாபநாச மாமா தோப்புல இளநி பறிச்சுட்டு வரும். வாண் ணே, ஆளுக்கு ரெண்டை குடிச்சுட்டு, இங்க ரெண்ட கொண்டு வரு வோம்' என்று சக்திவேலை அழைத்தான் வண்டிமந்திரத்தின் பெரிய மகனும் குமாரும். 

'நான் எதுக்கு அங்கெ' என்று முதலில் மறுத்த சக்திவேலிடம், 'இங்க எப்படியும் நேரமாவும். இங்க கெடந்து சலம்பதுக்கு எளநீ குடிச்சுட்டு தெம்பா வா' என்று பக்கத்தில் நின்றவர்களும் சொல்ல, அவர்களுடன் சென்றான். அவர்கள் சென்றதைப் பார்த்துவிட்டு, பின்னால் இன்னும் நான்கைந்து பேர் மெதுவாக கிழக்கு நோக்கி நடந்தார்கள்.

'சாமி வெவாரத்துல எனக்கு தெரியாததாடா. நான் சொன்னா சரியா இருக்கும் பாத்துக்கெ. அதுவும் நான் நம்ம நல்லதுக்குத்தான் சொல் லுதேன். வேற யாரும்னா நான் சொல்வனா?' என்று பேசிக்கொண்டே செல்லும் சக்திவேலின் குரல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போனது.

அதற்குள் சாமியை எடுத்து, இவர்கள் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த இடத் தில் வைத்தார்கள். அதற்கான வேலைகளை பட்டர் ஆரம்பித்தார். 

'முறையா பண்ணணும்னா, ஐயரை கூட்டுட்டு வந்து, கும்பாபிஷேகம் பண் ணுத மாதிரி பண்ணணும். அதுக்குலாம் லட்சம் லட்சமா செலவாவும். அதனா ல பட்டரை வச்சு சிம்பிளா முடிக்காவோ' என்று மெதுவாகப் பேசிக் கொண்டா ர்கள் கூட்டத்தில்.

பட்டர், பூஜையை முடித்துவிட்டு கிழக்குத் திசையில் வானம் பார்த்து கும்பிட்டார். பிறகு எல்லாரும் சாமியை கும்பிடத் தொடங்கினார்கள்.

'பட்றையா, எல்லாரையும் காப்பாத்துப்பா' என்று வண்டிமந்திரம் முதலில் விழுந்து கும்பிடவும். அவரது குடும்பத்துப் பெண்களும் விழுந்து வணங் கினார் கள். 

கிழக்கில் இருந்து, 'எய்யா, விட்டிருங்க. நான் சொல்ல மாட்டேன், மாட்டேன்' என்ற கதறல் மெதுவாகக் கேட்கத் தொடங்கியது. 

நன்றி: தினகரன் தீபாவளி மலர்

2 comments:

paul vannan said...

very nice ...

visualize all scenes while reading ... really enjoyed .

ஆடுமாடு said...

நன்றி சார்