Monday, October 24, 2016

ஆதலால் தோழர்களே 13

இதை எதிர்பார்க்கவில்லை கிருஷ்ணவேணி. தன் மீது பரமசிவம் வைத் திருக்கும் காதல், பொய்தானா என்று யோசிக்கத் தொடங்கியிருந்தாள். காதலித்த காலங்களில், அவன் கொடுத்த கடிதங்களில் எழுதப்பட்டி ருந்த கவிதை வரிகள் கண்முன் வந்து போயின. தன்னை வர்ணித்து,  தனக்காக எதையும் இழப்பேன் என்று சொன்ன வாய், வார்த்தை எல்லாம் பொய்யனெ உணரத் தொடங்கினாள்.

பாப்பாக்குடியில் இருந்து கிருஷ்ணவேணியைப் பெண் பார்த்துவிட்டு போனது தாமதமாகத் தெரிந்து, அவன் அம்மாவுடன் வீட்டுக்குள் வந்து பேசிய பேச்சுகள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. 'இஙகருங்க கிட்டுவ என்னைத்தவிர எவன் கெட்டுனாலும் உயிரோட வாழ முடியாது ஆமா. அவா எனக்குத்தான். என் பொண்டாட்டித்தான் அவா. கேட்டேளா எல்லாரும். சொல்லிட்டேன். எங்க ளுக்குத் தெரியாம, சொந்தக்காரனுக்கு கொடுக்கப்போறேன், அவனுக்கு கெட்டி வைக்கப் போறேன், இவனுக்கு கெட்டப்போறேன்னு சொன்னியோ, பெறவு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது' என்று வீராவேசம் பேசிய பரமசிவத்தின் வாக்கு இன்று எப்படிப் பொய்யானது? 

வீட்டு காம்பவுண்டுக்கு, கிழக்கு ஓரத்தில் வளர்ந்திருக்கும் முருங்கை மரத்தினடியில் குத்த வைத்து யோசிக்கத் தொடங்கினாள். அவள் முன் வெண்ணிற முருங்கைப் பூக்கள் சிதறிக் கிடந்தன. சாணம் பூசிய வெண் தரை முற்றம் அது. மரத்தின் மூட்டில் சிதறிக்கிடக்கிற குருணையைக் கொத்திக் கொண்டிருந்த கோழியைச் சுற்றி, குஞ்சுகள் தலையைத் தூக்கிப் பார்த்தும் குனிந்தும் சென்றுகொண்டிருந்தன. சிறகை அடிக்கிற அந்தக் குஞ்சுக் கோ ழிகளின் அழகை இப்போது அவளால் ரசிக்க முடி யாது. பொதுவாக இப்படிக் கோழிக்குஞ்சுகள் போனால், ஏதாவது ஒரு குஞ்சைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளங்கையில் குருணை யை வைத்து கொத்தித்திங்கக் கொடுப் பாள் கிருஷ்ணவேணி. இப்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தாள். முகம் திடீரென சிறுத்து கருத்து விட்டது போல பிரமை அவளுக்கு. எல்லாமே முடிந்துவிட்டதாகவும் தோன்றியது. பின்னர், அவளையறியாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. அது கோபமாகவும் மாறியது. 

சிரிச்சான் பொண்டாட்டியை வெட்டிவிட வேண்டும், அவளது தலை முடியை அறுத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த வைராக்கியம் மொத்தமாகக் குலைந்துப் போயிற்று. அவள் மீது பொறாமை வந்தது. பரமசிவத்தைக் கவர்ந்திழுக்கும் விஷயம், தன்னை விட அவளிடம் என்னவாக இருக்கும் என யோசிககத் தொடங்கினாள். 

தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் அழுகை, அவள் நினை வைக் கலைத்தது. போய் பார்த்தாள். சிறுநீர் கழித்திருந்தாள் அவள். தொட்டிலின் கீழே சிறுநீர் தேங்கியிருந்தது. குழந்தையைத் தூக்கினாள். அம்மாவின் முகம் பார்த்ததும் சிரித்தது. ஏதோ ஒரு சத்தத்தைக் கொடு த்தது. மெதுவாகக் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கியவள், ஜட்டியை கழற்றித் துடைத்துவிட்டு வேறு ஜட்டியை மாற்றிவிட்டாள். பிறகு தேங் கிய சிறுநீரை வாரியலால் தள்ளி, தண்ணீர் விட்டுப் பெருக்கினாள். பிறகு கொஞ்சம் தள்ளி கோரைப் பாயையும் அதன் மேல் சேலையையும் மடித்து விரித்து குழந்தையைக் கிடத்தினாள். அது கால்களை மேலும் கீழும் ஆட்டி சிரித்தபடி சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் கையில் ஒரு கிழுகிழுப்பையைக் கொடுத் துவிட்டு அதன் அருகில் சுவற்றில் சாய்ந்து குத்த வைத்து உட்கார்ந்தாள். 

அவள் கண்முன், சிரிச்சான் பொண்டாட்டி அடிக்கடி வந்து நின்று சிரித் தாள். அவளை மறக்க நினைத்து வேறொன்றின் மீது கவனம் செலுத்த முயன்றாள். முடியவில்லை. பரமசிவம் உடல் நலமில்லாமல் வீட்டில் படுத்திருந்தபோது, சிரிச்சான் பொண்டாட்டி வந்தது, சும்மாதான் வந் தேன் என்று அவள் சொன்னது எல்லாம் கணக்கு வழக்காக அவளுக்குத் தோன்றியது. இந்த நொடியில் தன் மீதே அவளுக்கு வெறுப்பாக வந்தது. 

சிமிழ் பெருத்த கோயில் மாடாக, கிருஷ்ணவேணி தெருவில் அலைந் ததென்ன, எதிரில் இவள் வருகிறாளென்றால், 'ஆத்தாடி இவாட்ட வா யை கொடுக்கக் கூடாது' என கண்டுகொள்ளாமல் போகிற பெண்களெல்லாம் முக த்துக்கு நேராக காறித் துப்புவது போல தோன்றியது. 

'தெருவுல என்னா பேச்சு பேசின, எல்லாரையும். ஒன் நெலமைய பாத்தி யாட்டி' என்று ஏளனம் பேசுவதாக இருந்தது. மீண்டும் அவளையறியா மலேயே கண்ணீர் வடிந்தது.

'ஏட்டி கிட்டு...' என்று வெளியில் இருந்து யாரோ அழைத்தார்கள். இவள் சத்தம் கொடுக்கவில்லை.

'ஏட்டி, .எங்க போயிட்டா இவா' என்று மீண்டும் அந்தக் குரல் வந்ததும் அது பரமசிவத்தின் அம்மா என்பது புரிந்தது. அவளுடன் இருந்த பெரிய மகள் ஜான்சி, வீட்டுக்குள் ஓடி வந்து, 'அம்மா ஆச்சி கூப்பிடுதா' என்று அவள் சேலையை இழுத்தது.

உணர்வு வந்தவளாக எழுந்த கிருஷ்ணவேணி, 'என்ன?' என்று வெறுப் பாக கேட்டுவிட்டு எழுந்து வாசலுக்குப் போனாள்.

'கூப்ட்டா பதிலு பேச மாட்டியோ'

'பேசணும். சொல்லுங்க என்னன்னு?'

'அவன எங்கெ?'

'தெரியல'

'தெரியலயா"

'ஆமா. ஒங்க மவன் எங்கிட்ட எழுதிட்டுத்தான போறாவோ?'

'செரி, வந்தாம்னா. வீட்டுக்கு வரச்சொல்லு'

'ஏம்?'

'அவன் அத்தான் வந்திருக்காரு'

'ஏன், இங்க வர மாட்டோரோ அவரு'

'ஆங்... கேட்டுட்டு வந்து சொல்ந்தம்ட்டி, வருவாரா மாட்டாரான்னு... சொன்ன தை கேப்பியா, எதித்தெதுத்து பேசிட்டு கொழுப்பெடுத்தச் செரிக்கி...'

'வந்தா சொல்லுதேம்' என்று கூறிவிட்டு வீட்டுக்குள் வந்தாள்.

ஜான்சி, 'ஆச்சி எனக்கு முட்டாயி வாங்கித் தந்தாளே' என்று கையில் வைத்தி ருந்த இரண்டு தேன் முட்டாயை அம்மாவிடம் காட்டிச் சிரித்தது.

அதற்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு மீண்டும் போய் உட்கார்ந்தாள் கிருஷ் ணவேணி. 

நடந்த சம்பவம் தாமதமாகத்தான், பரமசிவத்தின் அம்பாசமுத்திரம் அத்தானுக் குத் தெரிந்திருக்கும் என நினைத்துக்கொண்டாள் கிருஷ்ணவேணி. கடந்த சில வருடங்களாக ஊருக்கு வருவதை குறைத்துக் கொண்டார் அவர். அதற்கு காரணம் பரமசிவம்தான் என்பது கிருஷ் ணவேணிக்கும் தெரியும்.

'என்னய நம்ப வச்சு ஏமாத்திட்டிய. ஒன்னய எங்க வச்சி பாக்கணும்னு நெனச்சேன். இப்படி கட்சியில சேருதம், கூட்டத்துல பேசுதமனு என்னைய மட்டுமல்லாம, ஒன்னையும்லா ஏமாத்திட்டிருக்கே. ஒம் மூஞ்சில முழிக்கக் கூடாதுன்னு நினைச்சிட்டிருந்தேன். சரி, கல்யாணத்துக்கு வரலன்னா, நல் லாருக்காதுன்னு வந்தேன்'

-பரமசிவம்- கிருஷ்ணவேணி திருமணத்தின்போது, அவரது அத்தான் பேசிய வார்த்தைகள் இது. அதற்கு பிறகு இப்போதுதான் ஊருக்கு வந்திருக்கிறார்.

செருப்படிபட்ட விஷயம் கேள்விபட்டுத்தான் அவர் வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாள், அவள். இந்தப் போதை நிலையில் பரமசிவத்தைப் பார்த்தால், அவரது கோபம் இன்னும் அதிகமாகும் என நினைத்தாள். 

'ஊருல செருப்படிபட்டது போதாதுன்னு இப்ப குடிகார பயலாவும் ஆயிட் டியோல. ச்சீ ஒம் மூஞ்யில முழிக்க வந்தேன் பாரு. ஆக்கங்கெட்ட நாயி. த்தூ' என்று துப்பிவிட்டு கோபத்தில் அவர் செல்லலாம் என நினைத்தாள். இது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு மேலும்  நடக்கலாம். போதையில் பரமசிவமும் அவரைத் திட்டவும் வாய்ப்பிருக்கிறது. 

வெளியூர் போயிருக்கிறார் என பொய்ச் சொல்லியிருக்கலாமோ என தோன்றியது அவளுக்கு. 

பிறகு திடீரென எழுந்து தொழுவுக்கு நடந்தாள். பரமசிவம் உள்ளிட்ட மூன்று பேரும் வேட்டி விலகி, அலங்கோலமாக போதையில் தூங்கிக் கொண்டிரு ந்தார்கள். பழனி பெரும் சத்தமாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். பரமசிவத்தின் கால், ஆறுமுகத்தில் முதுகில் கிடந்தது. இவள் கொடுத்திருந்த மீன் துண்டுகளை பூனை ஒன்று மெதுவாகத் தின்று கொண்டிருந்தது.

அவர்கள் இப்போது எழுவதற்கு வாய்ப்பில்லை. தொழுவத்தின் கதவை இழுத்து வெளிப்பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டாள். அப்போதுதான் கீரைத் தோட்ட ஆச்சி, அம்பாசமுத்திரம் அத்தானுடன் வந்துகொண்டிருந்தாள். இதை எதிர்பார்க்கவில்லை கிருஷ்ணவேணி.

தொழுவத்துக்குள் இருந்தபடி குடித்துக்கொண்டிருந்ததைச் சொல்லியிருப் பாளோ என நினைத்தாள். சொல்லியிருந்தால் இன்று ஏதும் நடக்கலாம் என உடல் படபடக்கும்போதே அருகில் வந்துவிட்டார்கள் ஆச்சியும் அம்பை அத் தானும்.

'வாங்க. நல்லாருக்கேளா?' என்றாள் கிருஷ்ணவேணி. உடலில் சின்ன பதட்டம் அவளுக்கு.

'ம்ம். இருக்கேன். எங்கெ அவன?'

'வெளியூர் போறன்னு சொல்லிட்டு போனாவோ'

'எந்தூருக்கு?'

'தெரியல. யாரோ, ரெண்டு பேரு கூட்டிட்டு போனாவோ'

'எப்பம் வருவாம்?'

'பொழுதடைஞ்சுதான் வருவாவோன்னு நெனக்கேன்'

'நான் வந்து, ஏசிட்டு போனம்னு சொல்லு' என்று சொல்லிவிட்டு 'வாரம் மா' என்று கீரைத் தோட்ட ஆச்சியைப் பார்த்தார். 

'செரிய்யா' என்று கீரைத்தோட்ட ஆச்சி சொன்னதும் பேரூந்து நிறுத்தம் நோக்கி நடக்கத் தொடங்கினார் அவர். ஆச்சி, தொழுவத்தைப் பார்த்தாள். அது வெளிபக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. 

(தொடர்கிறேன்)

No comments: