Monday, September 14, 2015

ஆங்காரம் நாவலுக்கு சுகாவின் அணிந்துரை


திருநவேலியில் தெருவுக்கொரு உச்சினிமாகாளி. திருநவேலியைச் சுற்றி பல ஊர்களில் இசக்கி, பேச்சி, முத்தாரம்மன், பேராத்துச் செல்வி, சுடலை மாடன், பூதத்தார் என பல கடவுள்கள். கடவுள்கள் என்றால் வீட்டுக்குள் பூசையறையில் ஓவியமோ, காலண்டர் புகைப் படமோ மாட்டி, செப்பு போல் சிறு விக்கிரகம் வைத்து செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை, ஆடி இறுதியில் முழுகாட்டி புதுத் துணி போட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, கற்பூரம் காட்டி சக்க ரைப் பொங்கல் வைத்து, விழுந்து வணங்கப்படும் சாமிகள் அல்ல. காக்கும் கடவுள்கள்தான் என்றாலும், இவர்களுக்கு வீட்டுக் குள் இடம் கிடையாது. சில சாமிகளுக்கு தெருவிலும், இன்னும் சில சாமிகளுக்கு ஊருக்கு வெளியேயும் கோயில்கள் உண்டு.

‘கும்பிடுத சாமின்னாலும் துடியான சாமியல்லா! அவ்வொள வீட்டுல வைக்க முடியுமா? நம்மதான் அவ்வொ இருக்கற எடத்துல போயிக்கும்பிடணும். பொறவு மனுசாளுக்கும், சாமிகளுக்கும் என்ன வே வித்தியாசம்? ‘

இவை போக குலதெய்வங்களுக்கு அசலூர்களில் கோயில் உண்டு. குலதெய்வக் கோயில்களான சாஸ்தா கோயில்களுக்கு எங்கிருந் தெல்லாமோ ஆட்கள் வருவதுண்டு. வத்தலகுண்டைச் சேர்ந்த குடும் பத்துக்கு குலசேகரன்பட்டணத்தில் சாஸ்தா கோயில் இருக்கும். மன் னார்குடிக்காரர்கள் தங்கள் சாஸ்தா கோயிலைத் தேடி, விக் கிரமசிங்கபுரத்துக்கு வருவர். பாபநாசம் சொரிமுத்து அய்யனாரைப் பார்க்க பிராமணர்களும் வருவதுண்டு. சித்தூர் தென்கரை மகராஜா கோயில் பூசாரியின் பெயர் சொரிமுத்தையர். புனலூர் மலையாளிகள் சித்தூர் தென்கரை மகராஜா கோயிலுக்கு வருவதன் அர்த்தம் பிடி படாத ஒன்று. சாஸ்தா கோயில் அறியாத, சாஸ்தா கோயில் தேவைப்படாத மனிதர்கள் தங்களுக்கான சாஸ்தாவை உள்ளூர்க் கோயில்களிலேயே வைத்திருப்பார்கள். அவருக்கோ, அவளுக்கோ பெயர்கள் மட்டும் ஊருக்கு ஊர் வேறாக இருக்கும். திருநவேலிக் காரனுக்கு உச்சிமாளி என்றால், செங்கோட்டைக் காரனுக்கு இசக்கி. சீவலப்பேரியில் சுடலைமாடனென்றால், கீழாம்பூருக்கு மந்திர மூர்த்தி. எதை மறந்தாலும் தங்களைக் காக்கும் சுடலைக்கும், காளிக்கும், இசக்கிக்கும் வருடா வருடம் கொடை நடத்தி அவர் தம் மனதைக் குளிர்விக்க அம்மக்கள் தவறுவதில்லை. ஊர் கூடி தேர் இழுப்பது போலத்தான், ஊர் கூடி கோயில் கொடை நடத்துவது. வருடத்தில் ஒருநாள் ஊர்மக்கள் ஒன்றாகக் கூடிக் கலந்து பொது காரியம் ஒன்றைச் செய்வதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த எப்போதோ இருந்த மனிதர்கள் செய்திருந்த ஏற்பாடாக இருக் கலாம். வருடம் முழுவதும் செய்த தப்பு தண்டாக்களை, கொடைக்கு உழைப் பதைப் பார்த்து சுடலைமாடனோ, பேச்சியம் மையோ மன்னித்து, பாவக் கணக்கிலிருந்துக் கழித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் மனிதர்கள் இழுத்துப் போட்டு கோயில் வேலைகளைச் செய்வது எல்லா சிற்றூர்களிலும் வழக்கமாக நடக்கும் ஒன்று. கொடைக்கு கால்  நட்டதிலிருந்து சுத்தபத்தமாக இருந்து, கொடையன்று பால் குடமோ, தீச்சட்டியோ எடுப்பதும் ஆங்காரம் வருவதும் எல்லாம் அவர்கள் கையில் இல்லை. சாமி கொண்டாடியென்றால் இன்னும் விசேஷம். சாமி கொண்டாடிகள் சாமியாடுவது என்பது கோயிலுக்குள் இருக்கும் இசக்கியும், பூதத்தாரும் வந்து இவர்கள் உடம்பில் புகுந்து ஆடுவது.
சாமிகொண்டாடி சொந்த தாய்மாமனாகவோ, சித்தப்பனாகவோ இருந்தாலும் கூட சாமியாடி குறி சொல்லும் போது அவர் இசக்கி, பேச்சி, சுடலை. கேட்கும் வரம் தரும். சில சமயம் தர மறுக்கும். இன் னும் சில சமயம் தவணை சொல்லும்.

‘வார ஐப்பசில ஒன் வீட்டு ஆம்பள திரும்பி வந்திருவான். நீ எனக்கு செவ்வா தோறும் செவ்வரளி சாத்து’.

முகத்தில் தண்ணி எறிந்து அடுத்த ஆளின் குறை கேட்டு குறி சொல் லும் சாமி.

'எனக்கு வல்லயம் செஞ்சு போடுவியா ?'
திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ?'
பட்றையனை கும்பிடும் போதெல்லாம்
கேட்கிறார் சாமிக்கொண்டாடி.
கோரிக்கை வைக்க போனவன்
கோரிக்கை எற்று திரும்புகிறேன்’

-என்கிற ஏக்நாத்தின் பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.ஒரு கிராமத்து கோயில் கொடை. அதை ஏற்று நடத்தும் வெவ்வேறு வகை மனிதர்கள். மாடு மேய்ப்பவர், கோழி வளர்ப்பவர், சைக்கிள் கடை நடத்துபவர், அரசியல்வாதி, கல்லூரி மாணவன், மைக்செட் காரர், வில்லிசைக் கலைஞர் என பல முகங்கள். கூடவே ஒரு பகுத்தறிவாளரும் உண்டு. இத்தனை கதாபாத்திரங்களுடன் ஒரு கோயில் கொடையை ‘ஆங்காரம்’ நாவல் மூலம் நமக்கு நடத்திக் காட்டியிருக்கிறார், ஏக்நாத். ஆட்டுப்புழுக்கை வாடையும், ஊதுபத்தி வாசனையும், பச்சைப் பிள்ளையின் பால் வாடையும் , கிராமத்து காப்பிக்கடை அடுப்பில் மிதக்கும் ஆம வடை வாசனையும், ஆட்டை அறுக்கும் ரத்த நெடியையும், அது கொதிக்கும்  குழம்பு வாசனை யுமாக கதை சொல்லியிருக்கிறார். நாஞ்சில் நாட்டின் சுடலையாண்டியை 'என்பிலதனை வெயில் காயும்' நாவலில் நமக்குக் காட்டியவர், நாஞ்சில் நாடனென்றால்  திருநவேலியின் முப்பிடாதியை ஆங்காரம் மூலம் நமக்குக் காட்டுகிறார் ஏக்நாத். இருவருமே வறுமையின் செம்மையோடு கல்லூரிக்குச் சென்ற இளைஞர்கள். ஆங்காரம் நாவலில் கல்லூரி மாணவன் முப்பிடாதி யை சாமியாடச் சொல்கிறார்கள்.

‘படிக்கிற பயல சாமியாடச் சொல்லலாமாவே?

‘'படிப்புக்கும் சாமிக்கும் என்னல சம்மந்தம் இருக்கு?கீழத்தெருவுல கொம்பையாத் தேவரு மவன் கரண்டு ஆபிசில என்ஜினீரா இருக்காம். இப்பவும் வந்து அவ்வோ வீட்டுகோயில்ல, ஒவ்வொரு கொடைக் கும் ஆடிட்டு தானல இருக்காம்'’

படித்து, பட்டம் பெற்று மும்பையிலோ, கொல்கத்தாவிலோ அடுக்கு மாடிக் கட்டிட அலுவலகத்தில், ஆங்கிலமும், ஹிந்தியும்பேசி, ரொட்டியும், சப்ஜியும் தின்று வேறோர் வாழ்க்கை வாழும் அய்யம் பெருமாளோ, நவநீத கிருஷ்ணனோ இன்றைக்கும் வருடத்துக்கு ஒரு முறை தங்கள் உச்சினிமாகாளி, இசக்கியம்மன் கோயில் கொடைக்கு விடுப்பு எடுத்து வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

சிறுமற்றும் பெருநகரவாசிகளுக்கு சிறுதெய்வங்கள் குறித்தோ, கோயில் கொடை பற்றியோ, வரி பிரிப்பதிலிருந்து அதன் சம்பிர தாயங்கள் மற்றும் சண்டைகள் வரை அனைத்துமே கற்பனையாகக் கூடத் தோன்றலாம். இன்றளவும் நடந்துவரும் அவை குறித்த பழைய நினைவுகளில், கொடைக்கு ஊருக்குப் போக முடியாத வருத்தத்தில் இருக்கும் இன்றைய உடலளவு நகரவாசிக்கு இந்த நாவல் ஒரு கொடை.


வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்ட ஆரம்பித்தேன் நான்.


கி.ரா. பாட்டையாவின் எழுத்துக்களில் மட்டுமே பார்க்க முடிகிற, நாவல் முழுவதும் விரவிக்கிடக்கிற, சற்றும் விகற்பம் தோன்றாத இயல்பான ஆண் பெண் சம்பாஷனைகள்.

'கொழுந்தபிள்ள வேட்டிய உதறும்போதுபாத்துட்டென்'

'மைனிமாரு எத்தனதடவ வேணாலும் பாக்கலாம். அடுத்தாப்ல பாக்க ணும்னா எங்கிட்டயே கேளுங்கெ'பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக் கொள்கிறார்கள்’

-என்கிற கவிதையை எழுதியவர்தான் ‘ஆங்காரம்’ நாவலை எழுத முடி யும்.

கிராமத்து பால்ய நினைவுகளை மீட்க நினைப்பவர்கள், தத்தம் கிராமங் களுக்குச் செல்லத் துடிப்பவர்கள், செல்ல இயலாதவர்கள், கிராமத்து வாழ்க்கையைப் பற்றி அறியாதவர்கள், அறிந்து கொள்ள விரும்புபவர்கள் எல்லோருக்கும்  ரத்தமும், சதையுமாக மனிதர் களைக் காட்டுகிறார், ஏக்நாத். நிறைய கிளைக்கதைகளுடன் அச்சு அச லான வட்டார வழக்குச் சொற்களுடன் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதில் ஒலிக்கிறது.


பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரியசாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?

கவிதை மூலம் இந்தக் கேள்வியைக் கேட்ட ஏக்நாத், ‘ஆங்காரம்’ நாவல் மூலம்  அதற்கான பதிலை சொல்லியிருக்கிறார்.

‘தோழர்’ என்ற சிறுகதை மூலமாகத்தான் ஏக்நாத் என்கிற பெயரை அறிய நேர்ந்தது. பிறகு ‘கெடைகாடு’ என்னும் தன்னுடைய  முதல் நாவலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டைச்சுற்றி காண்பித் தவர், இப்போது ‘ஆங்காரம்’ நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து வழக்கங்களையும், வெவ்வேறு மனிதர்களையும் கலப்பில்லாமல் சொல்லியிருக்கிறார். பால்ய காலத்தில் ஆழ்வார்குறிச்சி ஆச்சி, என்கண் முன்னே, கறந்த பசும் பாலைக் காய்ச்சி, வேல்சாமி காப்பித்தூள் போட்டு நுரை ததும்ப பெரிய தம்ளரில் காப்பிகொடுப்பாள். இப்போது ஆச்சி இல்லை. ஆழ் வார்க்குறிச்சியுடனான தொப்புள் கொடி உறவு அறுந்து போய் விட்டது. வேல்சாமி காப்பித்தூள் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஏக்நாத் இனி எழுத இருக்கும் மண்சார்ந்த எழுத் துகளுக்குள் ஆழ்வார்குறிச்சி ஆச்சியையும், அவளைப் போன்ற இன்னும் பல மனுஷிகளையும் பார்த்துவிடமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏக்நாத்தின் அசலான எழுத்தின் வலிமை யினால் வேல்சாமி காப்பியைக் கூட ருசித்துவிட முடியும் என்றுதான் தோன்றுகிறது.

10 comments:

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

ஆடுமாடு said...

நன்றி

maharajanm said...

உங்க பதிவ படிக்கும்போதே அந்த நாவல உடனே படிக்கணும் போல இருக்கு , எப்படியாவது இன்னும் ஒரு வாரத்துல படிச்சுருவேன்

Unknown said...

சுகாவின் முன்னுரையில் மறுபடியும் 'கெடாத்தொங்கு' படிச்சமாதிரி இருக்கு . . .

ஆடுமாடு said...

நன்றி மகாராஜன்.

கலாபன் நன்றி. இது 'கெடாத்தொங்கு' கவிதைகள் இல்ல. வேற, எழுதினது.

Anonymous said...

Thank you MR Eknath for your awesome writing. I always enjoy reading your narratives. It brings me back my childhood days in front of my eyes. Please continue your good work

Augustine

thamirabarani said...

வணக்கம் தோழர் வாசிக்க ஆர்வமாய் இருக்கிறேன் , வாசித்துவிட்டுவருகிறேன்அதுவும் சுகா அண்ணாச்சி வேற பட்டையை கிளப்புற மாதிரி முன்னுரை
வேற

ஆடுமாடு said...

Thank you Augustine sir.


Thamirabarani Nandri

சாந்தி மாரியப்பன் said...

என்னதான் உங்கள் தளத்தில் தொடராக வாசித்திருந்தாலும் புத்தகமாக வாசிப்பதன் ருசியே தனிதான். வெளியீட்டிற்கு இனிய வாழ்த்துகள்.

ஆடுமாடு said...

சாந்தி மேடம் நன்றி.