Tuesday, February 3, 2015

கொடை 17


'கோயிலுக்குள்ள வந்தா என்னல பண்ண?' என்றான் ராமசாமி. 

'போனா போட்டும், தடுக்காண்டாம், வரி கொடுக்கலன்னா என்ன, அவனுக்கும் கோயிலு சொந்தந்தானல' என்ற முப்பிடாதி, அவர் களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடைக்கப்பட்டிருக்கிற குட்டியின் பலசரக்கு கடை வாச லில், பல்லிமுருகனைப் பிடித்துக்கொண்டார்கள் அவன் மனைவியும் சொம்பு தங்கமும். அவனை ஒருவரும் அவனது அரிவாளை ஒருவருமாகப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் அவன் முன் நின்று மறித்தார்கள். 

'ஏய் ஏய், என்னை விடு, என்னைய எங்க தள்ளுத' என்று அவயம் போட்டுக் கொண்டே எகிறினான் பல்லி முருகன். கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் அங்குமிங்குமாகத் திமிறிய அவனது சத்தம் கேட்டு, கடைக்குப் பின்பக்க வீட்டு மரகத ஆச்சி எட்டிப்பார்த்தாள். பிறகு ஏதோ நினைத்தவளாக, வீட்டுக் குள் ஓடிவிட்டாள். அவள் வீட் டை அடுத்து இருக்கிற ராசுவின் மனைவியும் மகள்களும் வெளியே வந்து பார்த்தார்கள். சுவர் ஓரமாக நின்று கொண்ட அவர்கள் சத்தம் போடாமல் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மகள்களில் ஒரு த்தி அப்பாவை அழைத்துவரப் போனாள். ஊரில் இருந்து வந்திருந்த சொந்தக் காரர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர், துண்டை போட்டுக் கொண்டு வெளி யே வந்தார். அவருக்குப் பல்லிமுருகனின் சத்தம் கேட்டது. கோயிலில் சாமி யாடும்போதும் இப்படித்தான் சத்தம் கொடுப்பான். பொண்டாட்டிப் பிள்ளை களைத் தாண்டி தெருவுக்கு வந்துப் பார்த்தார். அவர் நின்ற இடத்தில் எப்போ தும் எரியும் தெரு விளக்கு இன்று எரியவில்லை என்பதால் இவர்கள் நிற்பது, பல்லி முருகன் வகையறாக்களுக்குத் தெரியவில்லை. 

பற்களைக் கடித்தபடி கோயிலை நோக்கி ஓடும் விதமாக இருந்த பல்லி முரு கனை குடும்பத்தினர் பிடித்து தடுத்தார்கள். 

'சாமி வீட்டுக்குள்ள இருக்க விடலைன்னா வர வேண்டிய தான கோயிலுக்கு. மூதிக்கு இடும்ப பாரென்' என்று ராசு அவன் பொண்டா ட்டியிடம் சொன்னான்.
'அவன் அண்ணன் தம்பியில இருந்து பொண்டாட்டி பிள்ளேலுவரைக்குலா இருக்கு இடும்பு. பரம்பரையில இருந்து வந்ததோ என்னமோ' என்று பொண் டாட்டிக்காரி சொன்னதும், கோபம் வந்தது ராசுவுக்கு. பரம்பரை என்பதில் அவ னும் அடக்கம் என்பதால், 'சரி நீ வாயப் பொத்திட்டு வா. இத என்னத்த வேடிக் கைப் பார்க்க' என்றவன் வீட்டுக்குத் திரும்பினான்.

பல்லிமுருகன், சிறிது நேரத்தில் ஆங்காரம் குறைந்தவனாகக் கோயிலையே பார்த்துக் கொண்டு நின்றான்.  படுத்துக் கிடந்த நாய் ஒன்று அவர்களை நோக்கி குரைத்து ஓடியது. கிட்டே சென்றதும் தெரிந்த முகம் என்றதால் குரைத்தலை நிறுத்திவிட்டு வாலை ஆட்டிக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு சகஜ நிலைக்கு வந்து  தலையை உதறினான். அவனை அப்படியே வீட்டுக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள், குடும்பத்தினர்.

'வருவாம்னு பாத்தேன். போயிட்டானுவோ?' என்ற வன்னிய நம்பி யிடம், 'வந்திருந்தா ஒரு பிரச்னைய முடிச்சிருக்கலாம். வராம போயிட்டாம்லா, இனு ம வில்லங்கம்தான்' என்ற முப்பிடாதி, 'இனும என்ன நெல நிய்க்க போறானு வளோ' என்றான்.

 'பிரச்னய முடிச்சிருக்கலாம்னா எப்டி?' என்றான் ராமசாமி.

'கோயிலுக்குள்ள வந்தாம்னா கொடை முடிஞ்சாவது வரிய வாங்கிர லாம். 'சாமிய நீ வேண்டாம்னாலும் அது ஒம்ம விடலையவே'ன்னு சொல்லி ஊருக் குள்ள இழுத்திருக்கலாம். சாமி வேண்டாம், ஊரு வேண்டாம்னு சொல்லிருக் கமாட்டாம். இப்பம் போயிட்டாம்லா. நாளைக்கு நடக்குத சாமக் கொடைக்கும் இப்டித் துள்ளிட்டு வர வாய்ப்பிருக்கு. அப்டி கோயிலுக்குள்ள வந்தா, நல்லது. இல்லனா, மூஞ்சி யையும் மோறயையும் தூக்கிட்டு எல்லா ரும் மொறச்சிட்டு அலைய வேண்டியதாம்' என்றான் முப் பிடாதி.

'அப்பம் சாமக்கொடைக்கு பாப்போம், என்ன நடக்குன்னு' என்றபடி ட்யூப் லைட் வெளிச்சத்தில் நடந்தார்கள் கோயிலை நோக்கி. 

வில்லுப்பாட்டுக்காரகள் உட்கார்ந்து வில்லடிப்பதற்காகப் பள்ளிக் கூடத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட ஏழெட்டு பென்ச்கள் ஓரமாக வைக்கப்பட்டிருந்தன. அதைப் பூதத்தார் பூடத்துக்கு முன் தயார் செய்தார்கள். புலவர் உடலெல்லாம் சந்தனம் தடவி, சாமியைக் கும்பிட்டு விட்டு திருநீறு பூசி மேடையில் அமர்ந் தார். பக்கப் பாட்டுக்காரர்கள் மற்றும் பின்பக்கமிருந்து சால்ரா போடுபவர்கள் என அனைவரும் சவு கரியமாக அமர்ந்துகொண்டார்கள்.

புலவருக்கு அடிக்கடி நாக்கு வறண்டு விடும் என்பதால் அவருக்காக ஏழெட்டு  கருப்பெட்டிச் சில்லுகள் சிறியதாக உடைக்கப்பட்டு ஒரு பையில் வைத்து கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு சிறு குடத்தில் குடிதண்ணீரும் வில்லடிப்பவர் களின் பின்பக்கம் வைக்கப்பட்டிருந்தது. பூதத்தார் கதையைத் தனது கணீர் குர லில் பாட ஆரம்பித்தார் புலவர்.

0 கொடைக்கு கல்லூரி நண்பர்களைப் பேச்சுக்கு அழைத்திருந்தான் முப்பிடாதி. அவர்கள் இப்படி திடு திப்பென்று வந்து நிற்பார்கள் என நினைக்கவில்லை. ராத்திரி முழுவதும் கோயிலில் முழித்துக் கொண் டிருந்த அசதி, கண்களில் தெரிந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டே வீட்டின் வாசலுக்கு வந்தான். அங்கு குத்தாலத்துடன் ஜெஸிலா மேரி, ஆண்டனி, பிலோமி ஆகியோரும் நின்றிருந்தார்கள். டீச்சரின் தம்பி ராஜாதான் வீட்டுக்கு அழைத்து வந்திரு ந்தான்.

'வாங்க வாங்க' என்று வீட்டுக்குள் அழைத்தான் எல்லாரையும். உள்ளே பெஞ்சில் உட்காரவைத்தான். முப்பிடாதியின் அம்மா, எல் லோரையும், 'வாங்க' என்று சொல்லிவிட்டு புதிய ஆட்களைப் பார்த்தாள். பிறகு, 'இருங்க வாரென்' என்று சொல்லிவிட்டுப் போனாள். ஜெஸிலா வாசலுக்குள் நுழையும்போது வாசல் நிலை அவளின் முன் மண்டையில் டப்பென்று இடித் தது.

'ஐயையோ, குனிஞ்சு வரணும்னு சொல்ல நெனச்சேன்' என்றவாறே அவளது நெற்றியைப் பிடித்து கையால் அரக்கினான் முப்பிடாதி. இது அவனையறியா மலேயே நடந்தது. இதைப் பார்த்த பிலோமினா, குத்தாலத்திடம் ஜாடை செய் தாள். அவன் சிரித்துவிட்டு, 'எய்யா அவ மண்டைய ரொம்ப தடவாதெ. ஒண் ணும் ஆயிராது' என்றான்.அப்போது தான் உணர்ந் தவனாக, 'ஸாரி' என்று சொல்லிவிட்டு கையை எடுத்தான் முப்பிடாதி. ஜெஸிலா சிரித்துவிட்டு இவர்களுடன் கட்டிலில் உட்கார்ந்தாள்.

கோயிலில் அடிக்கப்படும் மேளச்சத்தம் மைக் செட் குழாய் மூலமாகக் கேட் டுக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளுக்கு, ஊரில் இருந்து வந்திருக்கிற சொந்தக்கார இளம்பெண்களின் கொலுசு சத்தம் வீட்டுக்குள் ஒலித்துக் கொண் டிருந்தன.

ஆண்டாள், கருப்பட்டி வாங்கி வந்திருந்தாள். 'காபி போடுதம் குடிங்க' என்ற வள் அடுப்பை ஊதத் தொடங்கினாள். புகை வீட்டுக்குள் பரவிக் கண்ணைக் கசக்க வேண்டியதாகிவிட்டது. புகைப்படத்தில் இருக்கும் அப்பாவை அவர் களுக்கு அறிமுகப்படுத்தினான் முப்பிடாதி. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆண்டாள் இடைபுகுந்து, 'ஏம்மா. ஒங்களுக்கு எந்த ஊரு?' என்று கேட்டாள்.

'வீ.கே.புரம்தான். ஒங்க மவன் கூடதாம் படிக்காவோ' என்றான் டீச்சர் தம்பி ராஜா. 'அதான் தெரியுமே. கொடைக்கு கூப்ட்ருக்காம்னா வேற யாரை கூப்ட போறாம்?' என்ற ஆண்டாளிடம் 'பெறவு கேட்க?' என்ற ராஜா, 'அவங்கள்லாம் பெரிய இடத்து ஆளுவோ' என்றான் மெதுவாக. இதை கேட்டுக்கொண்டிருந்த பிலோமினா, 'ஏம் இப்டிலாம் சொல்லுத. நாங்க என்ன பெரிய இடம்? எல்லாருக்கும் ஒரே இடம்தான்' என்றாள் செல்லமாகக் கோபம் கொண்டு.

அதைக் கவனிக்காத ஆண்டாள், 'ஏம்மா. இவென் ஒரே ஒரு நோட்டை மட்டும் தூக்கிட்டு காலேஜுக்கு போறேங்காம். ஒழுங்கா படிக்கானம்மா?' என்றாள் அவர்களிடம். இதை முப்பிடாதி எதிர்பார்க்கவில்லை. 

'நீட்டா டிரெஸு பண்ணணும்னு நெனய்க்கான். புது சட்டை பேண்டு வாங்க லாம்னா, கடைக்காரனுவோ நெறய துட்டு கேக்கானுவோ. நாங்க எங்க போவ, அவ்ளவு துட்டுக்கு? நீங்களாது புத்தி சொல்லுங்க' என்ற ஆண்டாளை, பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்தான் முப்பிடாதி. அவனுக்கு எரிச்சலாக வந்தது. இவர்கள் முன் தன் நிலையைச் சொல்லி அவமானப்படுத்துகிறாளே என்று நினைத்தான். 

அதைப் புரிந்துகொண்டவளாக பிலோமினா, 'அதெல்லாம் ஒங்க மவன் சூப்பரா படிக்காம். வாத்தியாரெல்லாம் நல்லா பாராட்டுவாங்க ஒங்க மவன' என்றாள்.

ஜெஸிலா கிண்டலாக, 'நீங்க ஏன் பேண்டு, சட்டைலாம் எடுத்துக் கொடுக்கீங்க. வேட்டி, சட்டையே போதும்' என்றாள் குத்தாலத்தைப் பார்த்து. அவனும், 'ஆமா. நாங்கூட தெனமும் வேட்டிக் கட்டிட்டுதான் காலேஜூக்குப் போறேன்' என்றான் பக்கப்பாட்டுக்கு.

'ஏம்மா. நீ மொதல்ல எல்லாத்துக்கும் காபிய குடு. வாய வச்சுகிட்டு சும்மா கெடக்க மாட்டியா?' என்ற முப்பிடாதியை, 'அம்மாவ அப்டிலாம் பேசாத' என் றான் ஆண்டனி.

திடீர் திடீர் என்று எல்லாரும் ஆலோசனை சொல்பவர்களாகவும் நல்ல வர்களாகவும் ஆகிவிடுவதை நினைத்து கடுப்பானான் முப்பிடாதி. காபியை கொடுத்தாள் ஆண்டாள். 'காபிக்குள்ள முறுக்க போட்டு திங்கேளா?'  என்ற வளை, 'ஏம்மா, நீ கொஞ்ச நேரம் வாயப் பொத்திட்டு இருழா, காபிக்குள்ள முறுக்கை போடுதியா, முருங்கைக் காய போடுதியான்னுட்டு' என்றான்.

'ஏம், அவ்வோ ஊர்ல அப்டி திங்க மாட்டாவுளோ?'

'திம்போம். மிச்சரு, முறுக்கு, இல்லனா பொறி அரிசியலாம் கூட போட்டு திம்போம்' என்றாள் ஜெஸிலா. 

'அப்பம் தரவா தாயி' என்ற ஆண்டாள், பொரி கடலையை எடுத்து வந்து நீட்டினாள்.

'இல்ல இப்பம் வேண்டாம்' என்றார்கள். ராஜா சிரித்தான்.

இவர்களைக் கோயிலுக்குக் கூட்டிச் செல்லலாமா? இவர்களைப் பார்த்தால் சாமிகொண்டாடிகள் ஏதும் தவறாக நினைப்பார்களோ? என்று மனதுள் நினைத்துக் கொண்டிருந்தான் முப்பிடாதி. இப்படி இளம் பெண்களுடன் ஓர் ஆண் சுற்றுவதை ஏற்க கூடியவர்கள் அல்ல இவர் கள். சும்மாவே, டிப்டாபை கொன்று எடுக்கிறவர்கள் நம்மையும் அப்படிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தபோது, ஆண்டனி தான் சொன்னான்.

'முப்பு, இன்னைக்கு உங்க கொடையை சாக்கா வச்சு, நாங்க கெளம்பி வந்து ட்டோம். ஆனா, கொடைக்கு வரல. இப்பம் எல்லாரும் குத்தாலம் போறோம், வழியில கடையம் ஹேமந்து, ஜீப்புல வெயிட் பண்ணுதாம். வாரியா?' என்ற தும் முப்பிடாதிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. போனால் ஜெஸிலாவு டன் கொஞ்சம் சுற்றலாம் என்ற ஆசை இருந்தாலும் கொடை வேலைகள் அதற்கு இடம் கொடுக்க வில்லை.

'நா வர முடியாதெ. கொடை வேலை' என்றதும் சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் ராஜா, 'ஆண்டாளக்கா இது தான் ஜெஸிலா. நல்லா பாத்துக்கெ. ஒன் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் இவா மண்டையில நிலை இடிச்சு...' என்று சொல்லிவிட்டு முப்பிடாதியைப் பார்த்துக் கண்ணடித்தான். ஜெஸிலா ஒரு மாதிரி தவித்தாள். 'ஐயைய எப்பம் இது' என்ற ஆண்டாள், 'எம்மா கொண்டா தலைய அரக்கி விடுதன்' என்று த லையைப் பார்த்தாள்.அந்த இடத்தில் கொஞ்சம் வீங்கி இருந்தது. 'வேண்டாம். பரவா யில்லை' என்றாள் ஜெஸிலா. 

'கொஞ்சம் எண்ணெயாவது தடவிட்டு போ' என்ற ஆண்டாள், தேங் காய் எண்ணெய் எடுத்துவந்து காயம்பட்ட இடத்தில் தடவினாள்.

பிலோமினா, முப்பிடாதியைப் பார்த்து, 'மாமியாரை கவுக்குதா பாரு' என்று கிசுகிசுத்தாள். அவன், சத்தம் போடாதீங்க என்பது மாதிரி கையை வாயில் வைத்தான்.

'பாத்து வரப்புடாதா' என்ற ஆண்டாளிடம் இருந்து அவர்கள் விடை பெற் றார்கள். முப்பிடாதிக்கு இருக்க முடியவில்லை. அவர்களுடன் சென்று விடத் துடித்தான். சூழல் இடம் கொடுக்கவில்லை. பேரூந்து நிறுத்தம் வரை அவர் களுடன் சென்றான். டீக்கடையைத் தவிர ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. உட்கார்வதற்காக கட்டப்பட்டிருந்த இடத்தில் ஒரு எருமைமாடு படுத்துக்கிடந்தது. அதை விரட்டிவிட்டு அவர்களை உட்காரச் சொன்னான் முப் பிடாதி. எதிரில் இருக்கிற வயதான புளியமரத்தில் இருந்து முறிந்து தொங்கிக் கொண்டிருந்த கிளை ஆடிகொண்டிருந்தது.

 ராஜா அவனது டிவி.எஸ். அம்பதில் குத்தாலத்துடன் செல்வதாகத் திட்டம். மற்றவர்கள் பேரூந்தில் கடையம் வரை சென்று அங்கிருந்து ஜீப்பில் செல்ல முடிவெடுத்திருந்தார்கள்.

அவர்களுக்கான பேரூந்து வர நேரம் ஆனது. அதுவரை பேசிக் கொண் டிருந்தான் முப்பிடாதி. இப்போது ஆண்டனி, பிலோமினாவின் அருகில் உட்கார்ந்திருந்தான், மிகநெருக்கமாக. அவள்தான் கொஞ்சம் கூச்சப்பட்டு நகன்றாள். அவர்களை கண்டுகொள்ளாத முப்பிடாதி, ஜெஸிலாவின் அழகை ரசிக்கத் தொடங்கினாள். ஒருகட்டத்தில் அதை அறிந்துகொண்ட ஜெஸிலா, வெட்கத்தில் சிரித்தாள்.

பேரூந்து வந்துவிட்டது. ஏறினார்கள். பிலோமினாவும் ஆண்டனியும் கை காட் டினார்கள். ஜெஸிலாவின் பார்வை மட்டும் அவனை ஏதோ செய்து கொண் டிருந்தது.

(தொடரும்)

1 comment:

துபாய் ராஜா said...

கொடைன்னாலே கொண்டாட்டம்தான்.. இதுலே கூட்டாளிகளோடு,குமரிகளும் வீட்டுக்கு வந்தா முப்பிடாதி பயலை கைல பிடிக்கமுடியுமா...ச்