Sunday, January 4, 2015

நினைவுகளைத் தாக்கும் மணிகள்


கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது, 'கெடை காடு'க்கான விமர்சனக் கூட்டம். படி அமைப்பும் யாவரும்.காம் இணையதளமும் இணைந்து நடத்திய இந்தக்கூட்டம் டிஸ்கவரி அரங்கில் நடந்தது. அன்று மட்டுமே நான்கைந்து புத்தக வெளியீட்டு விழாக்கள் இருந்ததால் இங்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடையில் அமர்ந்திருந்தேன்.

கல்லூரி காலத்தோடு போய்விட்டது மேடை பேச்சுகளும் கூட்டங்களும். கடந்த சில வருடங்களுக்கு முன் மேடையேறிய போது உடலில் கொஞ்சம் நடுக்கத்தைக் கண்டேன். பேச நினைத்தது மறந்து போயிருந்தது. இன்றும் அப்படியொரு பயம் இருக்குமென்று நினைத்தேன். ஏதுமில்லை.


பேராசிரியர் ராமன், நண்பர்கள் வேல் கண்ணன், சுகன் கலாபன் ஆகியோர் பேசினார்கள். எல்லாருமே கெடை காட்டின் அனுபவத்தை அணு அணுவாக ரசித்துச் சொன்னார்கள். அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் அல்லாதவர்கள் என்றாலும் அதை ரசித்துப் பேசியதும் அந்த வழக்கை கொண்டாடியதும் எனக்கே புதிதாக இருந்தது. கலாபன், காட்டில் கெடை போடுவதை இப்போதுதான் கேள்விபடுகிறேன் என்றார். வேல் கண்ணன், இதை வழக்கமான நாவல் வகைக்குள் அடக்கிவிட முடியாது என்றார்.

பேராசிரியர் ராமன், நாவலைப் பற்றி ஆழமாகவே பேசினார். அதற்குள் இருக்கும் சொலவடைகளில் இருந்து என்னை அறியாமல் வந்து விழுந்திருக் கிற கவிதைத்தனமான வரிகளையும் சுட்டிக் காட்டினார். இந்த நாவலைப் படித்துவிட்டு தூங்கினால், உங்கள் நெஞ்சில் மாட்டு மணிகளின் ஓசைகள் விழுந்துகொண்டிருப்பதை சில நாட்கள் கேட்கலாம் என்றார். ஆடுமாடு வளர்ப்பவர்களைப் பற்றிய நாவல்கள் வந்திருந்தாலும் அவர்களின் பிரச்னையை பேசிய நாவலாக எதுவும் இல்லை என குறைபட்டார். ஏற்புரை (அது ஏற்புரையாங்கும்) வழங்கிய நான், 'அடுத்த தலைமுறைக்கு இப்படியொரு விஷயம் இருந்தது என்பதை சொல்லத்தான் இதை நாவலாக்கினேன். இந்தந்த வரையறைக்குள் நாவல் இருக்க வேண்டும் என்கிற வகைமுறை ஏதுமின்றி எழுதியதாகச் சொன்னேன்.

படி அமைப்பின் நெய்வேலி பாலு வரவேற்றார். நண்பர்கள் சுந்தரபுத்தன், முருகன் மந்திரன், குணா, இயக்குனர்கள் ஜி.விஜய பத்மா, கீரா, முத்துராம லிங்கன்  உட்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.

1 comment:

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி....