Friday, November 28, 2014

'மழைப்பாடலி'ல் நனைந்த ஷேர் ஆட்டோ!

ஓர் உத்வேகத்துடன்தான் 'மழைப்பாடலை' வாசிக்க ஆரம்பித்தேன். இதற்கு முன் ஜெயமோகனின் எழுத்து தந்திருக்கிற ஆச்சரியத்தையும் பேராச்சரியத்தையும் இதிலும் தேட முயலும் உத்வேகம்தான் அது. செம்பதிப்பின் வடிவமும் நேர்த்தியும் ஷண்முகவேலின் ஓவியமும் நூலை அழகாக்கும் விஷயங்கள் என்றாலும் நூலின் கணம்தான் என் தோள்களை வலிக்கச் செய்தது.

ஒரு டைரி, ஒரு புத்தகம், சாப்பாட்டு பை, இவற்றுக்கிடையில் மெகா சைஸ் மழைப்பாடல். இந்தக் கூட்டத்தைத் தாங்க முடியாமல் என் தோள்பை கதறினாலும் அதனுள் திணித்து, தினமும் தூக்கிக்கொண்டு அலுவலகம் செல்கிறவனாகத்தான் இருந்திருக்கிறேன்.

மகன்களை ஸ்கூலில் விட்டுவிட்டு கே.கே.நகரில் இருந்து ஷேர் ஆட்டோவின் ஏதாவது ஒரு ஓரத்தைப் பிடித்து உட்கார்ந்தால் 'மழைப்பாடல்' விரியும். ஓரத்து இருக்கை கிடைக்காவிட்டால் புத்தகத்தை விரிக்க முடியாது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இருக்கிறவர்கள் அப்படியொரு மிதி, இப்படியொரு இடி என நெருக்கியடித்தால் வாசிக் கும் மனம் போய், எரிச்சலே பிரதானமாக இருக்கும். இதற்காகவே ஆட்கள் அதிகமில்லாமல் வருகிற ஷேர் ஆட்டோவில் ஏறி ஓரமாக உட்கார்ந்துகொண்டால் நிம்மதி.இல்லையென்றால் அசோக்பில்லர் வரை காத்திருந்து அங்கு யாராவது இறங்கினால்- கண்டிப்பாக இறங்குவார்கள்- ஓரத்து இடத்தைப் பிடித்து வாசிக்க வேண்டும்.

கே.கே.நகரில் இருந்து மைலாப்பூருக்கு அந்த ஆட்டோ போய் சேர்கையில் மற்ற புத்தகங்கள் என்றால் குறைந்தது பதினைந்து பக்கம் வாசித்திருப்பேன். ஆனால், மழைப்பாடல் தினமும் இருப்பத்தியிரண்டு, இருபத்தைந்து பக்கங்களுக்குச் சென்றது.

 காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிற அல்லது கேட்கப்பட்டு வருகிற கதைதான் என்றாலும் ஜெயமோகனின் எழுத்தில் அதை நாவலாக வாசிக்கும் அனுபவம் அலாதியானது.

மந்திரமூர்த்தி சாமி, பூதத்தார், சுடலைமாடன் போன்றோரின் வில்லுப் பாட்டு கதைகளைக் கேட்ட அளவு கூட மகாபாரதக் கதைகளை முழுமையாகக் கேட்டதில்லை, வாசித்ததில்லை. திருதராஷ்டிரன், பீஷ்மர், சகுனி, காந்தாரி, கர்ணன், கிருஷ்ணன், அர்ஜுனன் ஆகியோரின் துண்டு துண்டான கதைகள் எனக்குள் கொடுத்திருக்கிற பிம்பத்தை ஜெயமோகனின் வெண்முரசு மாற்றும் அல்லது மேம்படுத்தும் என்ற அளவிலேயே அதை வாசிக்கத் தொடங்கினேன்.

பீஷமர், திருதராஷ்டிரன், காந்தாரி, விதுரன், சகுனி என கதாபாத்திரங்களின் வழி நம் கண்முன் விரிகிற காட்சிகள் அபாரம். ஆனால் இந்த எல்லா பாத்திரங்களுமே ஜெயமோகனாக, அவரது வார்த்தைகளைப் பேசுபவர்களாகவே தெரிவது எனக்கு மட்டும்தானா? எல்லாருக்குமா?

மெயின் கதைகளுக்கு இடையிடையே வருகிற சிறு சிறு கதைகளும் அதனுள் இருக்கும் நுட்பமும் வியப்பிற்குரியது. உதாரணமாக, அத்ரியின் அறத் துணைவி அனசூயை பற்றிய கதை.

நாவல்களின் வழி விரிகிற நிலபரப்புகளும் குதிரைகளின் குழம்படி சத்தமும் அங்கேயே அவர்களுடேனேயே தங்கியிருக்கிற அல்லது வாழ்கிற உணர்வை தருகிறது. காந்தாரி அரசியாக, அஸ்தினபுரி வருகையில் கொட்டுகிற பெரும்மழையும் அதில் தெறிக்கிற சாரலும் நம் முகத்திலும் வந்து விழுவதை தடுக்க முடியவில்லை. வியந்து படிக்கவும் படித்து வியக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது இதில்.

ஜெயமோகனின் வேகத்துக்கு முடியாவிட்டாலும் முழுவதையும் வாசித்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தை தந்திருப்பதே வெண்முரசின் வெற்றிதான். அதைத்தவிர்த்து நடக்கிற பேச்சுக்களும் ஏச்சுகளும் ஜெமோவுக்கும் வாசகர்களுக்கும் புதிதில்லை தானே.

No comments: