Sunday, November 23, 2014

கொடை 9


முப்பிடாதிக்கு டிப்டாபைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. ஊரில் எல்லோரும் சொல்வது போல இருவரும் காதலர்கள்தான் என்று முப்பிடாதியும் சந்தேகம் கொண்டிருந்தான். அதை நிரூபிப் பது போல இப்போது கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார்கள். டிப்டாப் ஊரை ஏமாற்றுவது தெரிந்துவிட்டது. இப்போது எங்கும் அவன் தப்பிக்க முடியாது. கண்முன்னாலேயே மாட்டிக் கொண் டான். காதலித்தால் அதை சொல்லித்தொலைக்க வேண்டியது தா னே? மற்றவர்களை விடுங்கள். தன்னிடமாவது சொல்லியிருக் கலாமே? என நினைத்தான் முப்பிடாதி.

 'நட்புன்னு சொல்லுதென். அத போயி காதலுங்கெ. கேவலப்படுத் தாதியல?' என்று டிப்டாப் சொன்னது மனசுக்குள் வந்து எரிச்சல் தந்து போனது. மகேஸ்வரியை இங்கு அழைத்து வந்ததன் நோக் கம் என்னவாக இருக்கும்? என்று யோசித்த முப்பிடாதி, அவர்கள், அருகில் வருவதைப் பார்த்தான். சாலையில் இருந்து இறங்கி, பேரூந்து நிறுத்தம் நோக்கித்தான் வருகிறார்கள். ஆட்கள் யாரு மற்ற அந்தப் பேரூந்து நிறுத்தத்தில் கல்லால் செய்யப்பட்ட ஒரே ஒரு பெஞ்ச் மட்டும் இருக்கிறது. அதில், மரங்களில் இருந்து விழுந்த காய்ந்த இலைகளும் பறவைகளின் எச்சங்களும் சிதறி கிடந்தன. தரை முழுவதும் மரங்களின் நிழல்களால் மூடப் பட்டிருந்தது. வெயில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சம் கொஞ்சம் ஒளியை தரையில் சிதறி இருந்தாலும் கூராந்த நிலையில்தான் சீதோஷ்ணம் இருந்தது. அவர்கள் வருகின்ற பேரூந்து நிறுத்தத் துக்கும் இவன் இருக்கின்ற இடத்துக்கும் அதிக தூரமில்லை. குறைந்தது இருபது இருபத்தைந்து அடிகள்தான் இருக்கும். வரும் போது அவர்கள் பார்த்தாலே சரியாகத் தெரிந்துவிடும் இடத்தில் தான் இருந்தான் முப்பிடாதி.

அவர்களைக் கவனிக்காதது மாதிரி வீட்டுக்குள் சென்றுவிடலாமா என்று முதலில் யோசித்தான். அல்லது மறைந்து நிற்கலாமா என் றும் நினைத்தான். அடுத்து பேரூந்து வர எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்தான். பாபநாசத்துக்கு 12 மணிக்கு வரும் பேரூந்து இங்கு வர பனிரெண்டரை, ஒரு மணி ஆகலாம். இப்போது மணி பதினொன்றுதான் ஆனது. அதுவரை அவர்கள் என்ன செய்வார் கள்?
 
நினைத்த மாதிரியே அவர்கள் அந்த பெஞ்சில் உட்கார்ந்தார்கள். பந்தலுக்குள் முகம் மறைத்து அமர்ந்து கொண்டான் முப்பிடாதி. இங்கிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.    கொஞ்சம் இடைவெளிவிட்டே அவர்கள் அமர்ந்திருந்தார்கள். கை களை அங்கும் இங்கும் ஆட்டி, எதையோ சொல்லிக்கொண்டிருந் தான் டிப்டாப். அவள் ஆச்சரியம் தாங்கிக் கேட்டுக்கொண்டிருந் தாள். அப்படி என்ன கதையை அவன் சொல்லிவிட போகிறான்? என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது முதுகைத் தட்டினான் ராஜா. அவனிடம் இவர்கள் பற்றி சொல்லவா வேண்டாமா என்று நினைக்கையில் அவனே ஆரம்பித்தான்.

மெதுவாகக் குனிந்து முப்பிடாதியின் காதில், 'பாத்தியா டிப்டாப் பையும் மகேஸையும். ரெண்டேரும் லவ்வுதான் பண்ணுதாவோ. நான் சொல்லும்போது நீயும் நம்பலலா? இப்பம் பாரு' என்று அவர்களை நோக்கி கைகாட்டினான் ராஜா. இவனுக்குத் தெரிந் தால் ஊருக்கே தெரிந்த மாதிரி. ஊருக்குள் இன்னும் சில நாட்கள் இந்தச் சம்பவம்தான் பேச்சுப் பொருளாக இருக்கப் போகிறது என் று நினைத்துக்கொண்டான் முப்பிடாதி.

இதுவரை அமைதியாக இருந்த வீட்டில் ஒற்றைக் கொட்டு சத்தம் மெதுவாக அதிரத் தொடங்கியது. காட்டின் அமைதியில் அந்தச் சத்தம் மெதுவாக விரிந்துகொண்டே சென்று கொண்டிருந்தது. பட்டுப்புடவை அணிந்த பெண்கள் அங்கும் இங்கும் ஏதோ பரபரப் பில் இருந்தார்கள். வெளியில் பெரிய மீசை கொண்டும் கழுத்தில் தொங்கும் தங்கச்சங்கிலி வெளியெ தெரியும்படி வெள்ளை சட்டையின் முன் பட்டன்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டும் காலை விரித்து அமர்ந்திருக்கிற அந்த ஆள், ஒவ்வொரு பெண்ணையாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். உறவினராக இருக்கலாம். சிலரிடம் மட்டும், 'எப்படிம்மா இருக்கெ?' என்று விசாரணை. இவரைப் போல முப்பிடாதியின் வீட்டுக்கு நான்கை ந்து வீடு தள்ளி, ஒருவர் இருக்கிறார். அவர் கண்ணுத்தேவர். எந்த விசேஷ வீட்டிலும் முன் வந்து அமர்ந்துகொள்கிற அவருக்கு பெண்களை நோட்டமிடுவதே முதல் வேலை. அதில் ஒரு சந் தோஷம். பார்வை தருகின்ற அல்லது பேச்சு தருகின்ற கிளர்ச்சி யை அனுபவிப்பவராக இருப்பவர் இவர். அவருக்கும் இவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அவர் அணிந்திருக்கிற செயின், இவர் அணிந்திருப்பதை விட அதிக எடை கொண்டது என்பதே வித்தியாசம்.

அவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சின் அருகில் இரண்டு அணில்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. அவர்கள் இப்போது கொட்டு சத்தம் வந்த வீட்டைப் பார்த்தார்கள். அந்த பெரிய மீசைக்காரர் டிப்டாப்பையும் மகேஸையும் சடங்கு வீட்டுக்கு வந்தவர்களாக நினைத்து உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். முப்பிடாதி அவர்கள் இங்கே பார்ப்பதைக் கவனித்துவிட்டு ராஜாவையும் இழுத்துக்கொண்டு அவர்கள் அருகே சென்றான்.

இவர்களைப் பார்த்ததும் அவன் பதட்டமடைவான் என்று நினைத் தார்கள் இருவரும். அப்படி ஏதும் இல்லை. வழக்கமான அதே பேச்சு, அதே பார்வை.

'என்னடெ முப்பி இங்கெ. காலேஜு கட்டா?' என்றான் டிப்டாப்.

மகேஸ், இருவரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, 'என்ன ராஜா இங்கெ?' என்று கேட்டாள் அவனிடம். விஷயத்தைச் சொன்னான். பிறகு அவள் ஆரம்பித்தாள். குடும்பத்துடன் சொரிமுத்தய்யன் கோயிலுக்கு வந்ததாகவும் வந்த வேன் டயர் பஞ்சராகி விட்ட தாகவும் குடும்பம் கோயில் காத்திருக்க, இருவரும் அணையைப் பார்க்க வந்ததாகவும் சொன்னாள். வேன் ரெடியாகி விட்டால் இந்த இடத்துக்கு கொண்டு வரச் சொல்லியிருப்பதாகவும் சொன் னாள்.
தனது சிறுவயதில் இங்கு சைக்கிளில் வந்ததாகவும் பாணதீர்த்த அருவியில் பலமுறை குளித்திருப்பதாகவும் சொன்னான் டிப்டாப்.
பிறகு கீரை விற்க வரும் செல்லையா மாமாவுடன் நான்கைந் துமுறை இங்கு வந்திருப்பதாகவும் அப்போது இங்கு இரண்டே இரண்டு வீடுகள் மட்டுமே இருந்ததாகவும் சொன்னான். அதில் ஒரு வீட்டில்தான் மஞ்சள் காமாலைக்கு பாட்டி ஒருத்தி மருந்து தரு வாள் என்றும் சொன்னான் டிப்டாப்.

'இப்பமும் அந்த பாட்டி வீடுதான் இருக்கெ?'என்றான் முப்பிடாதி.

'ஆமா. அன்னா இருக்குல்லா?' என்று கைக்காட்டினான் அந்த வீட் டை நோக்கி. அங்கு இளம் பெண் ஒருத்தி வாசலில் உட்கார்ந்து கொண்டு கிண்ணத்தில் எதையோ வைத்தபடி தின்று கொண் டிருந்தாள்.

'அந்தா ஒக்காந்திருக்குலா அதுதான் அவா பேத்தி. பாட்டிக்கு இப்பம் வயசாயிட்டுல்லா. அதான்' என்ற டிப்டாப்பைப் பார்த்த முப் பிடாதி, 'ஏன் தேவையில்லாமல் எதையோ பேசிக்கொண்டிருக்கி றோம்' என நினைத்தான்.

 பிறகு அவனுக்கு மனதுள் குழம்பம் அதிகரித்தது. இருவரும் நண்பர்கள்தானா? காதலர்கள் இல்லையா? என்று தோன்றியது. தான் தான் தவறாக நினைத்துவிட்டோமோ என்று வருந்திக் கொண்டான். அவர்கள் பேசப் பேச ராஜா, முப்பிடாதியின் பக்கம் மெதுவாகத் திரும்பி கண்ணடித்தான். அந்த கண்ணடிப்பு, 'பிராடு பய சொல்லுத கதய கேளுல' என்கிற அர்த்தத்தைக் கொண்டது. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் வந்த வேன் வந்து விட்டது. வேனை, மேலத்தெரு மாரியப்பன் ஓட்டி வந்தான். உள்ளே மகேஸின் அப்பாவும் அம்மாவும் தம்பியும் இருந்தார்கள்.
ராஜாவைப் பார்த்துவிட்டு மகேஸின் அப்பா, 'டீச்சர் மவன் தானெ அது. இங்க என்ன பண்றான்?' என்று கேட்டார். ராஜா, சிரித்து விட் டு, 'இங்க ஒரு விசேஷ வீடு, அதுக்கு வந்திருக்கோம்' என்றான்.

டிப்டாப், வேனின் முன்பகுதியில் ஓட்டுனருக்கு இடதுபக்கம் ஏறி அமர்ந்துகொண்டான். மகேஸ், வேனின் பின்பக்கம் ஏறிக் கொண் டாள். ராஜாவுக்கு இதே ஏமாற்றமாக இருந்தது. ஏன் இருவரும் வேனின் உள்ளே அருகருகே அமர்ந்துகொள்ளவில்லை என்று நினைத்தான்.

இவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு வேன் கிளம்பியது. 'ஏய் முப்பி. சாயங்காலமா கடைக்கு வா' என்று டிப்டாப் உள்ளிருந்து கத்திய படி சொன்னான். வேன் இவர்களை கடந்து திருப்பதில் வளைநது செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜா, முப்பிடாதியின் தோ ளில் கையைப் போட்டுவிட்டு சொன்னான்.

'டிப்டாப்பு அவளதாம் கல்யாணம் பண்ணப் போறாம்னு நெனைக் கேன்'.

'எப்டி சொல்லுதெ?'

'அவ்வோ குடும்பத்தோட கோயிலுக்கு வாராவோன்னா இவனெ எதுக்கு கூட்டிட்டு வரணும்?'

'தொணக்கி?'

'ஆமா. அவ்வோ பச்ச மண்ணுலா? இவன தொணக்கி கூட்டியார துக்கு? அவ்வோ சொந்தக்காரவுளே நெறய பேர் இருக்காவோ. அவ்வோளலாம் விட்டுட்டு இவன கூப்டணும்னா காரணமில்லா மலா?'

'என்னதாம் சொல்லுதெ?'

'மகேஸு வீட்டுலயும் இதுக்கு சம்மதம்தான் போலுக்கு'

-ராஜா தன் கற்பனைக்கேற்றவாறு சொல்லிக்கொண்டிருந்தான். வேறு வழியின்றிக் கேட்டுக்கொண்டிருந்தான் முப்பிடாதி.


ஊர்க்கூட்டத்தில் இளைஞர் அணியின் பெருமை பேசப்பட்டது.

தெற்குத் தெரு, தங்கம்மன் கோயில் கொடை முடிந்த மூன்றாவது நாள் அன்று. நன்றாக வெயில் அடித்துகொண்டிருந்த நிலையில் திடீரென்று வானம் நிறம் மாறி  மழையை பொழிந்தது. சட சடவென்று பெய்த ஒரு நொடியில் வேகமெடுத்தது. ஆற்றுக்கு அடுத்த கரையின் மேலே களை எடுத்துவிட்டு திரும்பிய பிரமாச்சியின் வீட்டுக்காரி மீனாட்சி, ஆற்றுக்குள் இருந்த, இறந்தவர்களுக்கு காரியம் நடத்தும் மண்டபத்துக்குள் ஒதுங்கி நின்றபோது, அவளை கையைப் பிடித்து இழுத்துவிட்டான் ஒருவன். அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே இழுத்தவனிடம் இருந்து திமிறி ஆற்றுக்கு வெளியே மூச்சி ரைக்க ஓடி, வரப்பில் எறினாள் மீனாட்சி. உடல் பதட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தது. எதையேச்சையாக, வயலில் போடப்பட்டிருந்த சிறு குடிசைக்குள் இருந்த வன்னிய நம்பி, அவளைப் பார்த்தான். 'ஏன் சித்தி இப்படி ஓடியார?' என்றதும் அழுதுவிட்டாள் அவள். பின்னால் எவனோ ஒருவன் நின்றான். நம்பியைப் பார்த்ததும் அவன் ஓட, விரட் டினான். ஓடிப் போய் அவன் குறுக்கில் ஒரு மிதி. அவன் திரும்பி இவனை அடிக்க வர, அரிவாளின் பின்பகுதியை வைத்து நங்கென்று  முதுகில் போட்டான். அவன் அப்படியே விழுந்துகிடக்க, அதற்குள் வரப்பின் மேல்பக்கம் இருந்தவர்கள் சிலர் ஓடி வந்தார்கள். அவனைப் பிடித்து துண்டால் கையைப் பின் பக்கம் கட்டி இழுத்துவந்து விட்டார்கள் ஊருக்கு. அவன் பட்சி என்கிற பட்சிராஜன். ஆழ்வார்க் குறிச்சியில் கோயாவை வெட்டி விட்டு ஜெயில் இருந்து வந்திருந் தான்.

'தாயோளி, எவனா வேணா இருக்கட்டும். செரிக்குள்ள, எங்க வந்து பொம்பள மேல கைய வைய்க்காம்' என்று மேலும் ஒரு மிதி. ஆளா ளுக்கு அடித்தார்கள். எல்லோரையும் முறைத்துப் பார்த்துக் கொணடு, 'எவ்ளவு வேணுனாலும் அடிங்கல. ஆனா, எங்கையால நாலுபேராது வெட்டுப்பட்டு சாவப்போறியோ, இன்னைக்கில்லனாலும் என்னைக் காது நடக்கா இல்லயானு மட்டும் பாருங்கெ' என்று சொல்லிக் கொண் டிருந்தான். ராமசாமியும் நம்பியும் அவனை பஜனைமடத் தூணில் கட்டி வைத்தார்கள். அவன் ஊரில் இருந்து சொந்த பந்தங் களுடன் ஒரு கூட்டம் வந்தது.

அவனுக்காக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அப்படியே அம்மன் கோயில் வழியாக, ஆழ்வார்க்குறிச்சிக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். இந்த சம்பவம் அக்கம்பக்கத்து ஊரில் 'கொலகார பயலயே நச்சு எடுத்துட்டானுவோன்னா பாரேன்' என்பதாகப் பேசப் பட்டது.

 இந்த விவகாரம் மற்றும் பெருமாள் கோயில் வசந்த அழைப்பில் பன் னீர் ஏலம் எடுத்து அதில் சங்கத்துக்கு கணிசமான லாபம் கொடுத்தது என இளைஞர் அணியின் நல்வரலாறுகள் கூட்டத்தில் பேசப்பட்டன.

'ச்சே, பயலுவோ தீயா இருக்கானுவல்லா. இன்னக்கி காலத்துலலாம் இப்டி இல்லாட்டா, மதிக்க மாட்டானுவடா?'

'கோயிலு கொடையையும் அவனுவ பொறுப்புல விட்டுருவம்' என்பதாகப் பேசி முடித்தார்கள். கொடை நடத்துவது என்பது சாதாரண மில்லை. அது பெரும்வேலை.

'இங்கருங்கெ. எல்லாஞ்சரி, நாளைக்கு சின்னப் பயலுவோட்ட கொடுத் தா இப்டிதான் ஆவுங்கத மாதிரி எவனும் சொல்லிரக்கூடாது, ஆமா. இது பெரிய பொறுப்புப்பா. பாத்துக்கிடுங்கெ' என்ற எச்சரிக்கையுடன் பொறுப்பை இளைஞர் அணியிடம் ஒப்படைப்பது என முடிவெடுக்கப் பட்டது.

ராசுவைத் தவிர வேறு யாருக்கும் பிரச்னையில்லை. அவரும் தன் எதிர்ப்பை நேரடியாகக் காட்டாமல், 'கோயிலு வெவாரம். கணக்கு வழக்குலாம் சரியா இருக்கணும் பாத்துக்கிடுங்கெ. நாளைக்கு ஒண் ணுன்னா, நம்ம சாமி பொல்லாதது, எதையாது பண்ணிரும்டெ' என்ற பயங்காட்டலுடன் முடித்துக்கொண்டார்.

'அதெல்லாம் சரியா பாத்துக்கிடுவோம்' என்று ராமசாமியும் வன்னிய நம்பியும் உறுதியளித்ததும் அவர்களுடன் முப்பிடாதியும் சேர்ந்து கொண்டான். யாருக்கு என்ன வேலை என்று பிரித்துக் கொடுக்கப் பட்டது.

(தொடரும்)


No comments: