Wednesday, October 29, 2014

கொடை 3

3

காலையில், முப்பிடாதி தூங்கி எழுந்தபோது, மேற்கே ஒரே கூப்பாடாகக் கேட்டது. வீட்டின் வாசலுக்கு மேல்பக்கம் தொங்கிக் கொண்டிருந்த டப்பாவில் இருந்து பல் தேய்க்க உமிக்கரியை அள்ளினான். அதில் கொஞ்சம் சிதறி கீழே ஆட்டுரலில் விழுந்தது. 'தெனமும் ஒனக்கு இது ஒரு வேல? ஏழு கழுத வயசாயும் சிந்தாம எடுக்கத் தெரியல?' என்ற ஆண்டாளின் பேச்சைக் கண்டுகொள்ளாமல் சோம்பல் முறித்தான்.

இன்னும் முழுவதுமாக விடியவில்லை. குஞ்சுகளோடு இரைத் தேட துவங்கிவிட்ட கோழி, இவனைப் பார்த்து கொக் கொக் என்று கொக் கரித்துவிட்டு ஆடுகளுக்குத் தண்ணீர் வைக்கும் தொட்டியின் மேல், லேசாகப் பறந்து நின்றது. குஞ்சுகள் ஏற முடியாமல் கோழியையேப் பார்த்துவிட்டு முருங்கை மரம் நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கின.

'இங்ஙனயே நின்னு மேயணும் பாத்துக்க. வெளிய போனனா கள்ளப் பிராந்து தூக்கிட்டுப் போயிரும் ஒன் குஞ்சுவள, கேட்டியா? நீயாவது, நான் சொல்லுததெ கேளு' என்ற ஆண்டாள், வாசலில் சின்ன பலகை ஒன்றைப்போட்டு அதில் உட்கார்ந்துகொண்டு, பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

பாம்புக் கடித்த காலில் தண்ணீர் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தக் காலை மட்டும் ஸ்டூலில் உயரமாக இருக்கட்டும் என்று தூக்கி வைத்துக்கொண்டு பாத்திரங்களைத் தேய்த்தாள். அங்கு சிதறியிருந்தச் சோற்றுப் பருக்கைகளைக் கொத்த கழுத்தைச் சாய்த்துக் கொண்டு இரண்டு காக்கைகள் அருகருகே நின்றன. அவற்றைக் கண்டு கோழிக் குஞ்சுகள் பயந்து ஓடின.

கட்டப்பட்டிருந்த ஆடுகள் சத்தம் கொடுக்கத் தொடங்கவிட்டன. வீட்டுக்கு கீழ்பக்கம், ஆற்றுக்குக் குளிக்கப் போகும் சமைஞ்சப் பிள்ளைகளின் பேச்சொலி கேட்டது. அவர்களை எட்டிப்பார்த்தான் முப்பிடாதி. அவர்களுடன் சிலுப்பட்டை போகிறாளா என்று கூர்ந்துப் பார்த்தான். அவள் இல்லை. இருந்திருந்தால் அங்கு நின்று சும்மா கனைத்துக் கொண்டோ, அல்லது சத்தமாகப் பேசியோ இவனது கவனத்தை அவள்  பக்கம் இழுப்பாள். அப்படி ஏதும் செய்யவில்லை என்பதால் அவர்களில் அவள் இல்லை என்று நினைத்தான். அவன் பார்வையை எதிர்கொண்ட ஒருத்தி, மெதுவாக அவர்களுடன் பேசிவிட்டு பெரிதாகச் சிரித்தாள்.

முப்பிடாதி அதைக் கண்டுகொள்ளாமல், பல்லைத் தேய்த்துவிட்டு முகத்தைக் கழுவினான். மேற்கே சத்தம் இன்னும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. கணேச மாமாவின் சத்தம்தான் அதிகமாகக் கேட் டது. அவர், கோழிகள் வளர்த்து விற்கிறவர். அவ்வப்போது யாராவது அதைத் திருடிச் செல்வதுண்டு. அந்த நேரங்களில் எல்லாம் மாமாவின் சத்தம் இப்படித்தான் கேட்கும்.
இன்றும் அதுதான் பிரச்னையோ என்னவோ? என்று நினைத்த முப்பிடாதி, 'கேட்டியா, மாமா சத்தம் மாதிரி இருக்குழா?' என்றான் ஆண் டாளிடம்.

'அவென் ஏம் சத்தம் போடப்போறான்?' என்ற ஆண்டாள் கழுவுவதை கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு மேற்கே இருந்து வரும் சத்தத்தைக் கவனித்தாள். 'ஆமா, கணேசன் சத்தம் மாதிரிதான் இருக்கு. என்னனு பாத்துட்டு வால. எவெனும் கோழியளத் தூக்கிட்டுப் போயிருப்பானுவோ?' என்றவள் பாத்திரம் கழுவுவதைத் தொடர்ந்தாள்.

அடுக்களைக்குள் ஈயச்சட்டியில் இருந்த நீத்தண்ணியைப் போணியில் ஊற்றினான். உரித்து வைக்கப்பட்டிருந்த நான்கைந்து ஈராய்ங்கத்தைக் கடித்து வாயில் போட்டுக்கொண்டு குடித்தான். நாக்கு விர்ரென்று இருந்தது. நேற்று அரைத்துத் தின்றது போக, மிச்சமிருந்த புளியங்காய்த் துவையலைக் கொஞ்சம் எடுத்து நாக்கில் இழுவினான். புளிப்பு கண்களை இறுக, மூட வைத்தன. பின், முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

சத்தம் இப்போது தெளிவாகக் கேட்டது. இது கோழி திருட்டுக்கான சண்டையில்லை என்பது புரிந்தது. கோயிலின் கீழ்ப்பக்கம் இருக்கிற தாஸ் சைக்கிள் கடை திண்ணையில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர்களுக்கு எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற சைக்கிளில் உட்கார்ந்து மாமாதான் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பக்கத்தில் சிறு கூட்டம். எல்லாரும் தெருக்காரர்கள்தான்.

'இவ்ளவு நாளா சொல்லிட்டிருக்கேன். வெளக்கை கோயிலுக்கு வெளி யில தொங்க விடாதீயேன்னு, இன்னைக்கு நடந்து போச்சுல்லா'

'காலையில கடைக்கு பால் கொண்டு போவும்போது பாத்திருக்கேன். அதுக்குள்ள எந்த செரிக்குள்ள தூக்கியிருப்பான்?'.

'இது வெளியூர்க்காரென் வேலயாதாம்ல இருக்கும்' என்று பேசிக் கொண்டிருக்கும்போதே, சுடலி ஆச்சி வேகமாக வந்து ஒவ்வொருவரையும் பார்த்தாள்.

'ஏல வாசத் தொளிச்சுட்டு வச்சிருந்த சருவ சட்டிய காணும், யாரும் கண்டேளா?' என்று கேட்டாள்.

'சருவ சட்டியா? கோயிலு வெளக்க காங்கலன்னு பேசிட்டிருக்கோம். நீ சருவ சட்டிங்கெ?' என்றார் மாமா.

'இன்னா, தூத்து தெளிச்சுட்டு வாசல்ல வச்சுட்டு கொள்ளைக்குப் போ யிட்டென். வந்து பாத்தா, காணல'

சைக்கிள்கடை தாஸ், 'ஏல இப்பம்தான் களவாண்டுருக்கானுவோ. கண்டிப்பா வெளியூர்க்காரனதான் இருக்கணும். இங்ஙனக்குள்ளதான் எங்கயும் நிப்பாம்ல' என்றார்.

கணேச மாமா சைக்கிளில் இருந்து குதித்து, 'ஏலெ சரிதான். தாசுண்ணே நீ வண்டிய எடு. ஏல சுடலை உங்க அண்ணன கூட்டியா? எல்லாரும் ரயில்வே டேஷனுக்கு வாங்க, னா. இப்பம் தான் களவாண்டிருக்காம்னா, எட்டரை ரயிலுக்குப் போலாம்னு பிளான் பண்ணிதான் செஞ்சிருப்பானுவோ. வாங்கல போயி பாப்பம்' என்று சைக்கிளை அழுத்தினார்கள்.

பூதத்தார் கோயிலில் அடுத்த வெள்ளிக்கிழமை கால்நாட்டு. சாமி கொண்டாடியான கசமுத்து, இந்த வெள்ளிக்கிழமையே சுத்த பத்தம் பார்த்து விரதம் இருக்கத் தொடங்கிவிட்டதால், சாமி பொருட்களைப் பாதுகாக்கும் அரங்கு வீட்டுக்குள் இருந்து முதலில் விளக்கை எடுத்து, சாமி பூடத்தின் முன் வைத்து விளக்கேற்றினார். தெருக்காரர்கள் சாமி கும்பிட்டுவிட்டு, கொடை விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.

வெண்கலத்தால் செய்யப்பட்ட ஓர் ஆள் உயர பழங்கால விளக்கு அது. அந்த மாதிரியான வேலைப்பாடுகளுடன் கூடிய விளக்கு இப்போது கிடைப்பதில்லை. தங்கம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சுப்பையா ஆசாரி நேர்த்திக் கடனாகவோ அல்லது அன்பளிப்பாகவோ, எந்த காலத்திலோ செய்து கொடுத்திருந்த விளக்கு இது. அதில் அவரது பெயர் அடிமட்டத்தில் வளைந்து செதுக்கப்பட்டிருக்கிறது. நான்கு பகுதிகளைக் கொண்ட விளக்கில், லேசாக புளி வைத்து தேய்த்தாலே இப்போதும் புதியது மாதிரி தோன்றும்.

நேற்று வைக்கப்பட்ட விளக்கு, இன்று காலையில் மாயமாகியிருந்தது. அதாவது டீக்கடைக்குப் பால் ஊற்றப்போகும் செல்லையா, சிறிது நேரத்துக்கு முன் விளக்கைப் பார்த்திருக்கிறான். காய்ந்த பூமாலைகளைத் தின்று கொண்டிருந்த அவனது வெள்ளாட்டங்குட்டியைத் தற்செயலாகப் பார்க்கும்போது, விளக்கு அங்கிருந்திருக்கிறது. பிறகு தான் அது மாயமாகியிருக்கிறது.

'கோயில்லயே ஒரு பய கைய வைய்க்காம்னா, எஞ்சாமி பூதத்தாரு சும்மா விட்டுருவாரா? அவென என்ன நெலக்கி கொண்டு போவப் போறாரு பாரு, செரிக்குள்ளேலுக்குப் பயம் விட்டுப்போச்சு, கேட்டியா?' என்று டீயை ஆற்றிக்கொண்டிருக்கும் அப்பதத்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சாமிகொண்டாடி கசமுத்து.

தன் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கும் அவர், கசமுத்து சொல்வதைக் கேட்டும் கேட்காமலும் 'ம்ம்' என்று மட்டும் சொன்னார்.

 'களவாண்ட பயலை ஒங்க சாமி அங்ஙனயே சங்குல மிதிச்சிருக் கலாம்லா?' என்று 'டிப்டாப்' செல்வம், கிண்டலாகச் சொன்னான் கசமுத்துவிடம்.

பம்பாய் சென்றுவிட்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வந்திருப்பவன் 'டிப்டாப்" செல்வம். அங்கு சென்று வந்த பிறகு திடீர் நாத்திகவாதி ஆகியிருந்தான் அவன். பம்பாயில் யாரைச் சந்தித்து ஞானோதயம் பெற்று வந்தானோ தெரியவில்லை. சில படிக்கும் மாணவர்கள் அவனது கருத்துகளுக்குள் ஆட்பட்டு அவன் பின்னால் அலைந்து கொண்டிருந்தார்கள்.

செல்வம், ஊரில் 'மாணவன் டெய்லர்' கடையை ஆரம்பித்திருப்பவன். பம்பாயில், தான் பார்த்த அல்லது கற்ற நாகரீகத்தின் வெளிப்பாடாக எப்போதும் 'டிப்டாப்பா இருக்கணும்ல' என்ற வார்த்தையை உள்ளூரில் தெருக்காரர்களிடமும் சின்னப்பயல்களிடமும் அடிக்கடிப் பயன்படுத்துவதன் பொருட்டு, 'டிப்டாப்' செல்வம் ஆகியிருந்தான். செல்வம், பம்பாய் செல்வதற்கான காரணம் ஒரு காதல்.

ஆழ்வார்க்குறிச்சி பரமகல்யாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு கல்லூரிக்குப் போகாமல் விவசாயம் என்ற பெயரில் ஊர்ச்சுற்றும் வேலையை நண்பர்களுடன் செய்துகொண்டிருந்தான் செல்வம்.

'உண்டானவனுக்கே வேலை இல்லங்காம். இதுல இன்னும் காலேஜ்ல போயி என்னத்த படிக்கச் சொல்லுத' என்று அவனின் அப்பாவிடம் திமிராகச் சொல்லிவிட்டு, ஊரின் கீழ்பக்கம் இருக்கிற பேரூந்து நிறுத்ததில் காலை ஒன்பதரை மணி வரையும் அங்கிருந்து ஊரின் நடுவில் இருக்கிற பிள்ளையார் கோயில் வாசலில் அதற்கடுத்த இரண்டு மணி நேரத்தையும் பிறகு வீட்டில் போய் சாப்பிட்டு படுத்து விட்டு, மாலையில் ஆழ்வாரிக்குறிச்சி லைப்ரரிக்கு சைக்கில் பயணம். ஏழு, எட்டுமணி வாக்கில் அங்கிருந்து ஊருக்குத் திரும்பி பஞ்சாயத்து போர்ட் திண்டில் அமர்ந்து உள்ளூர் மற்றும் அக்கம் பக்கத்து ஊர் காதல் கதைகள், கள்ளக்காதல் கதைகள் மற்றும் சினிமா விஷயங்களைச் பேசிவிட்டு இரவு நித்திரைக்குக் கிளம்புவான்.  இதுதான் செல்வத்தின் தினசரி அட்டவணையாக இருந்தாலும் இந்த அட்டவணைக்குள் சிக்காமல் ஒரு காதலும் இருந்தது. அது அதிகாலை காதல்.

ஏகப்பட்ட சொத்துபத்துகளும் பங்களா போன்ற வீடும் கொண்ட பரம்பரை பணக்காரராக ஊரில் சொல்லப்பட்டு வருகிற கணக்குப் பிள்ளை சங்கரலிங்கத்தின் பேத்தி சுந்தரவள்ளியை, தன் காதல் வலையில் வீழ்த்தியிருந்தான் செல்வம்.

சுந்தரவள்ளி, அம்மன் சிலைக்கு ஒப்பானவளாக ஊர் இளசுகள் மத்தியில் கருதப்பட்டாள். ஏகப்பட்ட மல்லிகைப்பூவைத் தலையில் சூடிக் கொண்டு, மஞ்சள் முகத்தில் இன்னும் பவுடர் அப்பி, குனிந்த தலை யுடன் ஓரக்கண்ணால், கருவேலப்பறை படிகளில் யாரும் அமர்ந்திருக் கிறார்களா என்று பார்த்தபடி செல்லும்போது அந்தப் பார்வை ஓராயிரம் ஈட்டிக்கொண்டு தாக்குவதாக இருக்கும்.

ஒரே நொடியில் உயிர் அசைந்து இன்னுமொருமுறைப் பார்க்க மாட்டாளா என்று ஏங்க வைக்கும். இந்த தாக்குதல்களையோ தவிப்பையோ ஏதும் அறியாதவளாக அவள் சென்றுகொண்டிருப்பாள்.

இப்போதும் சுடுமண்ணால் செய்யப்பட்டிருக்கிற அவள் உருவம் அம்மன் கோயிலில் இருக்கிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள், வடக்குவா செல்வி அம்மன் கோயிலுக்கு உருவம் செய்து வைத்தால் உடல் நலம் சீராகும் என்பது நம்பிக்கை. அதன் பொருட்டு பல பேர் உருவம் செய்து அம்மனுக்கு நேர்ந்திருக்கிறார்கள். அம்மன் கோயில் கொடையின் போது, சப்பரத்துடன் அந்த உருவங்கள் ஊர் சுற்றும். பிறகு பூஜை முடிந்து, அம்மன் கோயிலின் உள்ளே இருக்கிற, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கீழ்ப்பக்கக் கற்தூண்களின் அருகே வைக்கப்படும். இப்போதும் பத்து பதினைந்து உருவங்கள் அங்கே இருக்கின்றன. இந்த உருவங்களைச் சுடு மண்ணால் செய்கிறவர்கள் அருகில் இருக்கிற தாட்டாம்பட்டியில் இருக்கிறார்கள். அவர்களிடம் கொடைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லி விட்டால், ஆளின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வேலையை ஆரம்பிப்பார்கள். ஆண்கள் என்றால் அங்கு செல்வார்கள். பெண்கள் என்றால் வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு போய் உருவம் செய்வார்கள்.

இதில் சிலருக்கு மட்டுமே அவர்களின் முகம்  உருவத்தில் அப்படியே பொருந்தி இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கொஞ்சம் வேறுபாட்டுடன் இருக்கும். சுந்தரவள்ளிக்கு ஒருமுறை அம்மன் போட்டு, முக மெல்லாம் புண்களாகி, கரும்புள்ளி குத்தியதுபோல ஆகிவிட்டது.  பெண் ணுக்கு முகம் முக்கியம். அழகான முகம் அதை விட முக்கியமென நினைக்கிற காலகட்டத்தில், அதை நினைத்து அழுது துடித்தாள் சுந்தரவள்ளி. அப்போதுதான் அம்மனுக்கு உருவம் விட சொன்னார்கள் சில பெரியவர்கள். அப்போது செய்யப்பட்ட உருவம் இப்போதும் அம் மன் கோவிலில் இருக்கிறது. அங்கிருக்கிற அனைத்து உருவங்களி லும் பளிச்சென எல்லோரையும் வசீகரிக்கிற, அச்சு அசலான உருவமாக அது இருக்கிறது.

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அவள் வருவாள் என்பதற்காகவே கோயிலுக்கு வருவான் செல்வம். அவள் வராத நாட்களில் கோயிலில் இருக்கிற உருவத்தைப் பார்த்து திருப்திப்பட்டுக்கொள்வான்.
ஊரில், தெருவில் படித்த மற்றும் சொத்துபத்து அதிகம் கொண்ட அழகான குமாரர்கள் ஏராளமாக இருந்தும் கணக்குப்பிள்ளை பேத்தி இவனை காதலித்தது, அவன் கூட்டாளிகளுக்கு அதிசயமாகத்தான் இருந்தது.

'அந்த பிள்ள, ஒன்னய லவ்வு பண்ணுதுன்னா, அவளுக்கு கண்டிப்பா ஏதோ சிக்கலுதாம்ல'- என்பார்கள் நண்பர்கள்.

'சிக்கல்னா'

'அதுக்கு ஏதும் நோயி இருக்கும்னு நெனக்கேன். இல்லனா, அது ஏன் ஒன்னய லவ் பண்ண போவுது?' என்றதும் அவனுக்கு கோபம் தலைக் கேறும்.
இப்படியான இவர்களின் காதல், அவளது வீட்டுக்குத் தெரியவரும் வரை பிரச்னை இல்லாமல்தான் இருந்தது.

அந்த புதன்கிழமை சுந்தரவள்ளியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு,  உறவினர் வீட்டு விசேஷத்துக்காக, ஆழ்வார்குறிச்சிச் சென்றது குடும்பம்.
வீட்டிலிருந்து தெரு தெரிகிற ஜன்னல் அருகே, கதை புத்தகத்தை வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கியிருந்தாள் சுந்தரவள்ளி. பொறி அரிசியை கொறித்துக்கொண்டும் வெளியில் செல்பவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் வாசித்துக்கொண்டிருக்கும்போதுதான் செல்வம் வந்தான். தற்செயலாக ஜன்னலைப் பார்த்தவனுக்கு ஆனந்தம். அவள் சைகையால் வீட்டுக்குள் அழைத்தாள் அவனை. எதிர் பார்க்கவில்லை அவன். கை, கால்கள் படபடக்க யாரும் பார்க்கிறார்களா என்று அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு அவள் வீட்டின் வாசல் பக்கம் நகர்ந்தான். எதிரில் அவனது சித்தப்பா மாட்டு வண்டியில் வந்து கொண் டிருந்தார். வண்டியில் மணல் இருந்தது. இவனுக்கு தர்மசங்கடமாகியது.

'நேரங்கெட்ட நேரத்துல வந்து தொலையுதத பாரென்' என்று மனதுள் நினைத்துக்கொண்டான்.  சரியாக அவன் அருகில் வந்ததும், 'என்னல இங்ஙன நிக்கெ' என்று கேட்டார் சித்தப்பா. கீரைத்தோட்டத்துக்குப் போறேன் என்று பொய் சொன்னார். அந்த வண்டி சென்றதும் தெருவில் இருந்து இடதுபக்கம் செல்லும் கீரைத்தோட்ட வழியில் இறங்கினான். அங்கே மாட்டுக்கு பால் கறந்துவிட்டு வரும் அவனது மாமாவும் வட்டிக்கு பணம் கொடுக்கும் செல்லாத்தாவும் பேசிக் கொண்டிருந்தார் கள். மாமாவுக்கு கண் சரியாகத் தெரியாது என்றாலும் செல்லாத்தா பார்த்துவிட்டால் சிக்கல்.

'இந்த பயலுக்கு இங்க என்ன சோலி' என்று நினைத்தால் வேறு வேறு விஷயங்களை யோசிக்க வைத்துவிடும். ஏற்கனவே, நாளைக்கு வரும் வம்பை இன்றே இழுக்கிறவள் அவள். நெஞ்சு படபடத்தது. சின்ன பயம் மனதுள் எழுந்து அடங்கியது. எதிரில் அவர்கள் பேச்சு சுவாரஸ் யத்தில் இருந்தார்கள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சும்மா செல்வது போல் தலையைக் குனிந்துகொண்டு நடந்தான். கதவை மெதுவாகத் திறந்து வைத்துக் கொண்டு அவள் இவனைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள். வேகமாக வீட்டுக்குள் ஓடியதும் அவள் கதவை சாத்தினாள். எல்லாம் ஒரே நொடியில் நடந்தது. யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. வீட்டுக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் வேப்பமரமும் புளியமரமும் பெரிதாக வளர்ந்து நிற்கின்றன. புளியமரத்தின் கிளைகள் வாசலின் கீழ்பகுதியை மூடியிருப்பது போல வே தோன்றும். அங்கிருந்து இங்கு யாரும் பார்த்தாலும் மரங்கள் மறைத்துவிடும்.

உள்ளே போனவள், அவளைக் கட்டியணைத்தான். அவள் வீட்டின் உள்ளே அவனை இழுத்துக்கொண்டு ஓடினாள். அவன் அவளை நெஞ்சோடு அழுக்கு முத்தம் கொடுத்தான். இதற்காகத்தான் காத்திருந் தவள் போல அவளும் இருக்க, ரெண்டு பேரும் கட்டித் தழுவிக் கொண் டிருந்தார்கள்.

'உன்னபார்க்காம இருக்க முடியல' என்று அவளும், 'உங்கூடவே எப்பவும் இருக்கணும் போல இருக்கு' என்று அவனும் சொல்லியபடி கட்டியணைத்து தங்களை மறந்துகொண்டிருந்தனர். அவன் அவளை அப்படியே தரையில் கிடத்தி விட நினைத்தபோது, ஒரு சொம்பு ஒன்று, நங் என்று அவன் முதுகில் விழுந்து துள்ளியது. அவன் வலி க்கும் முதுகை தடவியபடி, கீழே குத்தவைக்க, எதிரில் பெரிய வெண் மீசையை கொண்ட தாத்தா, வேகமாக வந்துகொண்டிருந்தார். சுந்தரவள்ளிக்கு திகைப்பு. அதற்குள் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று. அவளது அம்மா, 'கெடுத்துட்டாளே, செரிக்கி. எங்குடியை கெடுக்க வந்த வளே' என்று அவளது கன்னத்தில் அறைந்து இழுத்துக்கொண்டு போனாள். தாத்தா, இடுப்பு பெல்ட்டை அவிழுத்து படார் படார் என செல் வத்தை சாத்தினார்.

'அடிக்காதியும் தாத்தா, வலிக்கு' என்றான் செல்வம், அவர் பெல்ட்டை பிடித்தபடி. 'யாரல தாத்தாங்கெ? எச்சிக்கல பயல' என்றவர் மீண்டும் முகத்தில் குத்தினார். என்ன செய்வதென்று தெரியாத செல்வம், ஒரு கட்டத்துக்கு மேல், பொறுக்க முடியாமல், அவரைப் பிடித்து கீழே தள்ளினான். அவரது மண்டை தரையில் பட்டு சத்தம் எழும்பியது. மண்டை உடைந்து ரத்தம் வந்திருக்கலாம். ஒரு வேளை மண்டையை போட்டிருக்கலாம் என்று நினைத்து பதட்டத்தோடு வெளியே ஓடினான். தெருவில் யாருமில்லை. அவனது வீட்டுக்கு ஓடினான். இனி இங்கிருந்தால் கொலைச் குற்றச்சாட்டில் அல்லது கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்படலாம்  என்று நினைத்தான். கணக்குப் பிள்ளைக்கு எங்கும் ஆட்கள் இருக்கிறது. அவரோ அவர் குடும்பத்தாரோ நினைத்தால் எதுவும் சாத்தியம்தான். வீட்டுக்குப் போனவன், அரிசிப் பானையில் அவன் அம்மா வைத்திருந்த ஆயிரத்து எழுநூறு ரூபாயை எடுத்துக் கொண்டு ஓடினான். ஓடினான் என்றால் எங்கு செல்வது என்கிற திட்டம் ஏதுமற்ற ஓட்டம். ஊரில் நேர் வழியில் போனால் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று சிவன் கோயில் தெருவழியாக பேரூந்து நிறுத்தத்துக்கு ஓடினான். போகும் வழியில் எதிர்பட்ட நண்பன் குட்டி யிடம், ஊரை விட்டுப் போவதாக அம்மாவிடம் சொல்ல சொன்னான். அன்று ஓடிப் போனவன் ஒரு வாரத்துக்குப் பிறகு மும்பையில் இருப்ப தாகக் கடிதம் வழித் தெரிவித்தான் வீட்டுக்கு.

கணக்குப்பிள்ளை சாகவில்லை என்றும் இலேசான காயம் ஏற்பட் டதாகவும் காதல் விவகாரம் ஊரில் ஏதும் கசியவில்லை என்றும் நண்பர்கள் சொன்னதை அடுத்து, அவனுக்கு கொஞ்சம் நிம்மதி. அந்த விஷயம் வெளியே தெரிந்தால் சுந்தரவள்ளிக்கு மாப்பிள்ளைக் கிடைப் பதில் சிக்கல் வந்துவிடும் என்று நினைத்திருப்பார்கள் போல. அதனால் செல்வம் ஊரை விட்டு ஓடியது வெகுசிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவன் வேலைக்கு சென்றதாகவே நினைத்துக் கொண்டார்கள். சம்பவம் நடந்த அடுத்த சில மாதங்களிலேயே சுந்தர வள்ளி, பாளையங்கோட்டையில் செய்யது பீடி கம்பெனியில் வேலை பார்க்கும் சுவாமிநாதனுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டாள்.
இதுதான் செல்வம் பம்பாய் சென்ற வரலாறு.

'கொஞ்ச நாளு வெளியூரு போயிட்டு வந்தன்னா, சாமியவே கேள்வி கேப்பியோல?' என்றார் கசமுத்து. அவருக்கு இவன் சொல்லியது மானப் பிரச்னையாகிவிட்டது. காரணம் மற்ற சாமிகளை விட இவர் குடும்பத்து பூதத்தார், அதிக சக்தியானர் என்ற நம்பிக்கையை கொண் டிருந்தவர். அதுமட்டுமல்லாமல் கடைக்கு வெளியே கீழத்தெரு பெண் ணொருத்தி தூக்குச் சட்டியில் காபி வாங்கிக் கொண்டிருக்கும் போது அவள் முன், டிப்டாப் இப்படிச் சொன்னது, அவரது கவுரவத்துக்கு இழுக்கு என்பதாகப் பட்டது.
க்சமுத்துவுக்குச் செல்வம் மச்சினன் முறை என்பதாலும் கிண்டல் செய் வதற்குத் தனக்குப் பெருவாரியான உரிமை இருக்கிறது என்று நினைத் ததாலும் செல்வம் இன்னும் கேலி பண்ண ஆரம்பித்தான்.

'செரிய்யா, இப்பம் உங்க சாமியெ கேள்வி கேட்டுட்டம்லா. இன் னைக்கு ராத்திரிக்குள்ள ஒங்க சாமி என் கைகாலை வெளாங்காம பண்ண ட்டுமெ' என்ற செல்வம், உழுந்த வடையை எடுத்து பிய்த்தான்.

கசமுத்துவுக்குப் பொறுக்க முடியவில்லை. இதற்குச் சரியானப் பதிலை சொல்லவில்லையென்றால் டீக்கடை அப்பதத்தா கூட மதிக்க மாட்டான் என்று நினைத்தவர், 'இங்க பாருல. ஆணவத்துல பேசாத. அப்டி பேசுனவம்லாம் என்ன ஆனாம்னு ஊருக்குத் தெரியும். ஏஞ்சாமி யாருன்னு இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஒனக்குத் தெரியும்ல, பாரு, யாருகிட்ட பேசுத?' என்று சொல்லிவிட்டு, 'சில்றைய பெறவு தாரென்டே' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகன்றார்.

தொடரும்

2 comments:

paul vannan said...

kodai - very interesting ....

ஆடுமாடு said...

Thank u sir